TNPSC Thervupettagam

"சைபர்' யுத்தம் எனும் பேராபத்து

July 1 , 2019 2006 days 775 0
  • ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புகளை முடக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது "சைபர்' (இன்டர்நெட் மூலம்) யுத்தத்தைத் தொடங்கியிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நேரடியாக போரில் ஈடுபட்டால் பல நூறு அப்பாவி உயிர்கள் பலியாகும். எனவே, அத்தகைய போர் முறை தேவையில்லை.
  • அதே நேரத்தில் ஈரானின் அணு ஆயுதச் செயல்பாடுகளை முடக்குவது மிகவும் அவசியம். இதற்காக இன்டர்நெட் மூலம் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு நடவடிக்கைகளையும், ராக்கெட் ஏவுகணை அமைப்புகளையும் முடக்கும் வகையில் இந்த சைபர் யுத்தத்தைத் தொடங்கியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேம்போக்காக பார்க்கும்போது இது சிறப்பான நடவடிக்கை என்று தோன்றும்.
"சைபர்' போர் முறை
  • எனினும், இத்தகைய "சைபர்' போர் முறை என்பது எதிர்காலத்தில் நாம் கணிக்க முடியாத பேரழிவுகளுக்கு வழி வகுக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்றைய நவீன உலகில் கணினிகள், அறிதிறன் பேசிகள் ("ஸ்மார்ட் போன்கள்'), இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் எதுவுமே நடைபெற முடியாது என்ற நிலை உருவாகி வருகிறது. தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறதோ, அதற்கு இணையாக இன்டர்நெட் மூலம் நடக்கும் "சைபர்' குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. "சைபர்' குற்றங்களால் தனி நபர்கள் பாதிக்கப்பட்டனர்;
  • நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன என்ற நிலை மாறி நாட்டையே உலுக்கும் அளவுக்கு "சைபர் குற்றங்கள்' வளர்ந்து நிற்கின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை மகிழ்வுடன் அனுபவிக்கும் அதே தருணத்தில் இதுபோன்ற இணையதள சதிகாரர்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இது காலத்தின் கட்டாயம்.
  • தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது "சைபர் கிரைம்'. சர்வதேச அளவில் "சைபர்' யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை, பல ஆண்டுகளுக்கு முன்பே அழைப்பு விடுத்துள்ளதை வைத்தே பிரச்னை எந்த அளவுக்குத் தீவிரமடைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
  • இன்டர்நெட் மூலம் தொடுக்கப்படும் இத்தகைய "சைபர்' போரால் பொருளாதார இழப்புகளை மட்டுமின்றி பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்த முடியும் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.
எதிர்காலத்தில்…..
  • எதிர்காலத்தில் தாக்குதல்களை நடத்த வாகனத்தில் வெடிபொருள்களை நிரப்பியோ, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை வெடிக்கச் செய்தோ தாக்கவேண்டிய அவசியம் பயங்கரவாதிகளுக்கு இல்லை. அவை வழக்கொழிந்த ஆயுதங்கள் ஆகிவிடும். தங்களுக்கு வேண்டாத நாடுகளைத் தாக்க வல்லரசு நாடுகளுக்குப் போர் விமானங்களோ, அணுகுண்டுகளோ தேவைப்படாது. நமது அருகில் இருக்கும் கணினிகள் மூலமே நம் மீது தாக்குதல்கள் நடத்தப்படும். இதற்கு இன்டர்நெட் முக்கிய ஆயுதம் தாங்கும் கருவியாக இருக்கும். கணினி தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பிற நாடுகளின் பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட ரகசிய தகவல்களைத் திருடுவதும், இணையதளங்களை முடக்குவதும் பழங்கதையாகிவிடும்.
  • மின்சாரம், எரிசக்தி, அரசு நிர்வாகம், பாதுகாப்புத் துறை, பங்குச் சந்தைகள், ரயில், விமானப் போக்குவரத்து, அணுசக்தித் துறை, எரிபொருள், குடிநீர் விநியோகம் என அனைத்துமே இப்போது மேலைநாடுகளில் முற்றிலுமாக கணினிமயமாகி விட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக வேகமாக அனைத்துத் துறைகளும் கணினித் தொழில்நுட்பமாகி வருகின்றன
  • இதனால் "சைபர்' தாக்குதல் நடத்தத் திட்டமிடும் பயங்கரவாதிகளால், தகவல் தொழில்நுட்பத்திலும், கணினி வைரஸ்களை உருவாக்குவதிலும் கைதேர்ந்த ஒரு சிலரது உதவியுடன் நாட்டின் மின் இணைப்பை ஒரே நேரத்தில் முற்றிலுமாகத் துண்டிக்க முடியும். அரசு நிர்வாகம், பங்குச்சந்தை போன்றவற்றில் சில நொடிகளில் சீரழிவை ஏற்படுத்த முடியும். வங்கி, "ஏடிஎம்' செயல்பாடுகளை முடக்கி பணமின்றி மக்களை திண்டாட வைக்க முடியும். மின்சார ரயில்கள் அனைத்தையும் தடம்புரளச் செய்ய முடியும். வானில் பறந்து செல்லும் விமானங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நினைத்த இடத்தில் மோதச் செய்ய முடியும். எரிபொருள் குழாய் வழித்தடங்களில் கூடுதல் வெப்பத்தை உருவாக்கி அவற்றை வெடித்துச் சிதறடிக்க முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு
  • இவற்றுக்கெல்லாம் மேலாக, அணுமின் நிலைய கணினிகளுக்குள் இவர்கள் ஊடுருவினால் நாட்டையே சுடுகாடாக மாற்றிவிட முடியும். "இவற்றில் எதுவுமே மிகையான கற்பனையல்ல. எதிர்காலத்தில் நடக்க சாத்தியமுள்ளவை' என்று துறை சார்ந்த சர்வதேச வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
  • சர்வதேச அளவில் "சைபர்' தாக்குதல் என்பது ஒன்றும் புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்கியது "ஷமூன்' வைரஸ். இன்டர்நெட் மூலம் பரவிய இந்த வைரஸ், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினிகளைச் செயலிழக்க வைத்து அதிர்ச்சி அளித்தது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட அந்த நிறுவனங்களுக்கு ஒருவார காலம் பிடித்தது. இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட இழப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.
  • இதற்கு முன் ஈரானின் அணுசக்தி மையத்தை முடக்க அமெரிக்கா ஏவிவிட்ட "ஸ்டக்ஸ்நெட்' வைரஸ், மத்திய கிழக்கு நாடுகளை உளவு பார்க்க அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தயாரித்து பரவவிட்ட "ஃபிளேம்' வைரஸ் ஆகியவற்றால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த வைரஸ்கள் குறித்த தகவல் வெளிஉலகுக்குத் தெரியவந்தது. கணினியை முடக்கி பணம் கேட்டு மிரட்டும் "ரேன்சம்வேர்' வைரஸிடம் இருந்து இப்போது வரை முழுமையாக விடுபட முடியவில்லை. எனவே, இப்போது கண்ணுக்குத் தெரியாமல் நடைபெற்று வரும் இந்த "சைபர் யுத்தம்' எதிர்காலத்தில் மனித குலத்துக்கே பேராபத்தாக அமையும்.

நன்றி: தினமணி(01-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories