ஜாதிகளை வைத்து அரசியல் நடத்துபவர்கள் ஜாதியின் மூலம் பஞ்சம் பிழைப்பவர்களைவிட அதிகம் என்பது ஊரறிந்த உண்மை. முதலில் அவை சிறிய அமைப்பாக மாறி பின் ஒரு கட்சியாக அரசியலில் தடம் பதிக்கும். சிறிது காலத்தில் அவை ஆளும் கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வளர்ந்து அரசியலில் வடம் பிடித்து ஆள்வார்கள்.
பொருளாதாரம்
சரி, இப்படி அரசியலுக்கு மட்டும் ஜாதிகள் வேலை பார்க்கவில்லை. மாறாக, பொருளாதாரத்தையும் கட்டமைத்துள்ளது, கட்டமைத்தும் வருகிறது. அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் பொருளாதார ரீதியாக பாரத மக்களின் தொழில், ஊக்கம், திறமை, வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை போன்ற காரணிகளைக் கொண்டு பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி ஆய்வு நடத்தியபோது ஜாதி அல்லது சமுதாய அமைப்புகள் நமது சமுதாய பொது மூலதனமாக (சோஷியல் கேபிட்டல்) இருந்து நாட்டின் பொருளாதாரம், உற்பத்தி மற்றும் தொழில் போன்றவற்றை அபிவிருத்தி அடையச் செய்தது என்கிறார்.
மேலும் அதற்காக அவர் பாரதத்தில் உள்ள சில சமூகத்தையும் உதாரணமாகக் கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தின் படேல் சமுதாயம் 70 சதவீதத்துக்கும் மேலானவற்றை உணவகங்களாக அமெரிக்காவின் நெடுஞ்சாலை ஓரங்களில் மோட்டல் என்கிற பெயரில் நடத்துகிறது. அங்கு அவர்கள் குடும்பமாகச் சேர்ந்து சமைப்பது முதல் மேஜை துடைப்பது வரை அவர்களே அதைச் செ ய்து குறைந்த விலையில் பண்டங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வியாபாரத்தை பெருக்கிக் கொண்டனர்.
சாதி
இப்படி ஜாதியத்தின் பொருளாதாரம்தான் தில்லியில் உள்ள அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த ஜாதவ் சமுதாயத்தை 5,000 சிறு தோல்பொருள் செய்யும் தொழில் நிறுவனங்களாக வளர்த்து 60,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்யை உருவாக்கித் தந்தது என்கிறார்.
ஒரு சமூகம் சார்ந்த அமைப்பானது, பொருளாதாரத்தில் மட்டுமின்றி மேலாண்மையிலும் சிறந்து விளங்கிவருகிறது என்பதற்கு மும்பையின் டப்பாவாலாக்கள் ஆகச்சிறந்த உதாரணம். பல தரப்பட்ட மும்பை வாசிகளுக்கு மதிய உணவை உணவு டப்பாக்கள் (டிபன் கேரியர்கள்) மூலம் ஒவ்வொருவரின் வீட்டில் இருந்தும் எடுத்துச் செல்வார்கள். அப்படி எடுத்துச் செல்வதை மாறாமல் உரியவர் இடத்தில் கொண்டு சேர்த்த உழைப்பின் பலனாய், அவர்களுக்கு தொழில் திறனை அளக்க வெளிநாட்டில் பயன்படுத்தப்படும் அளவுகோலான சிக்ஸ் சிக்மாவின் அங்கீகாரம் கிடைத்தது. (சிக்ஸ் சிக்மா என்பது பத்து லட்சத்தில் ஒரு தவறு மட்டுமே நடக்க வாய்ப்புள்ளதைக் குறிக்கும்.)
அதேபோல் கோழி முட்டை சார்ந்த உற்பத்தியில் தமிழகம் இன்றும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால் அங்கு கோழிப் பண்ணைத் தொழிலை பிரதானமாக நடத்தி வரும் கவுண்டர் சமூக மக்கள் ஒரு காரணம். அதேபோல் சமையலுக்கு இன்றும் பெயர் வாங்கி கொடுக்கும் செட்டி நாட்டு சமையல், அசைவத்துக்குப் பெயர்போன முனியாண்டி விலாஸ் என ஒவ்வொரு சமூகத்தின் பொருளாதார பங்களிப்பையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி பல சமூகங்களும் அவர்களின் வருமானத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தியது என்பதை ஒப்புக்கொள்ளும் நிலையில் ஒரு சில ஜாதி அமைப்புகள் மற்ற ஜாதியினரையும் அடிமைப்படுத்தியது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
பழங்காலமாக
நமது ஜாதி அமைப்பு முறையானது, 2,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஜாதி முறைகளின் நிலைப்படி தாழ்த்தப்பட்ட மக்களைச் சுரண்டுவது, பாரபட்சம் மற்றும் பாகுபாடு இழைப்பது என்று அவர்களை அடக்கி ஆளும் நிலைமை உண்டானது என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர் கைவான் முன்ஷி. மேலும், தாழ்த்தப்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக படிப்பறிவின்றி, குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்தனர் என்கிறார் அவர்.
எனினும் தேசிய பகுப்பாய்வு மாதிரிகளின் கணக்குப்படி கடந்த சில ஆண்டுகளாக மேல் ஜாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இடையில் கல்வி மற்றும் தொழில் போன்றவற்றில் ஒற்றுமை இருந்தது தெரியவருகிறது.
இவற்றுக்குக் காரணம் அரசாங்க ரீதியாக எடுத்த கொள்கை முடிவுகள்,
அதாவது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளித்ததே ஆகும்.
அதற்கு வித்திட்டது மண்டல் கமிஷன் என்பதை இந்த இடத்தில் குறிப்பிடலாம்.
இன்றும் வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும் ஜாதி சார்ந்த சமூகம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் சந்தையின் போக்கும் தெளிவற்ற நிலையில் உள்ளது. என்று சந்தையின் பொருளாதாரம் வலுப்பெறுகிறதோ, அன்று ஜாதியின் நடமாட்டம் இருக்காது.
ஜாதியின் அமைப்பை என்று வளர்ச்சி காணும் திட்டங்கள் முறியடிக்கிறதோ, அன்று கல்வி, தொழில் மற்றும் வசிப்பிட விருப்பம் போன்றவை இந்தியப் பொருளாதாரத்தில் வேறொரு நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்.
அன்று பாரதியின் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்னும் சொற்றொடருக்கு உயிர் பிறக்கும்!