TNPSC Thervupettagam

ஜாதி ஒழிப்புக்குத் தீர்வு என்ன?

June 14 , 2019 2042 days 1500 0
  • இந்திய சமூக அமைப்பு உலகில் வேறெங்கும் இல்லாதபடி ஒரு குடும்பத்தில் பிறந்தவர் அந்தக் குடும்பத்திற்குரிய தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் எனவும், இன்ன தொழில் செய்வார் உயர் ஜாதியினர், இன்ன தொழில் செய்வார் அவரினும் கீழ் ஜாதியினர் என்பதுமான அடுக்குமுறை ஜாதி அமைப்பாகிறது. 18-ஆம் நூற்றாண்டு வரையும் சமூகத்தில் நிலவிய தொழில்கள் அனைத்தும் குல முறைப்படி செய்யத்தக்கனவாகவே அமைந்ததால் சிக்கல் ஏதும் எழவில்லை.
ஆங்கிலேயரின் ஆட்சி
  • 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆட்சி முறைமையால் குலமுறைப்படிச் செய்ய முடியாத அரசு அலுவல் என்னும் புதியதொரு தொழில் உருவாகி வேகமாக வளரத் தொடங்கியது. அரசு அலுவல் என்பது உடலுழைப்பு குறைவானதாகவும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அமைந்தது.
  • சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் அரசு அலுவல் வாய்ப்பும் அதற்கு ஆதாரமாகிற கல்வி வாய்ப்பும் தங்களுக்கும் வேண்டுமென்னும் ஆர்வம் கிளர்ந்தெழுந்ததன் விளைவே கல்வி, அரசு அலுவல் இரண்டுக்குமான இட ஒதுக்கீடு கோரிக்கை. அதாவது, ஜாதி அடிப்படையில் தொழில்களை ஒதுக்கீடு செய்ததன் மறுவிளைவுதான் கல்விக்கும், அரசு அலுவலுக்கும் ஜாதிவாரியான இட ஒதுக்கீடு கோட்பாடு.
  • அனைத்துப் பிரிவு இந்தியருக்கும் அரசு அலுவல் பகிர்ந்தளிக்கும் வகையில் சார்ட்டர் சட்டம் 1833 பிறப்பிக்கப்பட்டது. 1858-இல் விக்டோரியா மகாசாசனத்திலும், 1935-இல் இங்கிலாந்து அரசு இயற்றிய இந்திய அரசியல் சட்டத்திலும் அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்புகள் பகிர்ந்தளித்தல் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், அவை நடைமுறைக்கு வரவில்லை.
சாகுமகராஜ்
  • இதற்கிடையில், இன்றைய மராட்டிய மாநிலத்தின் கோலாப்பூர் என்னும் பகுதியை அரசாண்ட சாகுமகராஜ் 1902-இல் 50 சதவீத அரசுப் பதவிகளைச் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்க உத்தரவிட்டார்.
  • 1928-இல் அன்றைய சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி அரசு, ஒவ்வொரு பன்னிரண்டு இடங்களும் பார்ப்பனர் 2, பார்ப்பனரல்லாதார் 5,  முஸ்லிம்-2,  ஆங்கிலோ இந்தியர், கிறிஸ்தவர்-2, தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர்-1 எனத் திட்டமான ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தியது. 1947-இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒவ்வொரு பதினான்கு இடங்களும் பார்ப்பனர்-2, பார்ப்பனரல்லாத உயர் ஜாதியினர்-6, பிற்படுத்தப்பட்டோர்-2, தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர்-2, கிறிஸ்தவர்-1, முஸ்லிம்-1 என மாற்றி அமைக்கப்பட்டது.
  • புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950-இல், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெறாத மாணவியொருவர் சார்பாக, அரசியல் சட்டவரைவுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி, புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்யும் 14-ஆவது பிரிவின்படி, ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு செல்லாது எனத் தொடுத்த வழக்கின் பேரில் இந்திய உச்சநீதிமன்றம் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பளித்தது.
சிறப்பு ஏற்பாடு
  • தமிழகத்தில் எழுந்த கடும் கொந்தளிப்பின் விளைவாக 1951-இல் சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் நலனுக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செல்லுபடியாக்கும் விதியொன்று அரசியலமைப்புச் சட்டம் 15-ஆவது பிரிவில் நான்காவது உட்பிரிவாகச் சேர்க்கப்பட்டது. அதனையடுத்து 1951-இல், பிற்படுத்தப்பட்டோர் 25 சதவீதம், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர்-16 சதவீதம், பொதுப் போட்டி-59 சதவீதம் என ஒதுக்கீடு முறை மாற்றப்பட்டது.
  • 1963-இல் பார்ப்பனரல்லாதார் அனைவருக்குமான ஒதுக்கீடு-68 சதவீதம், பொதுப் போட்டி-32 சதவீதம் என கர்நாடக அரசு அறிவித்தபோது, அது தொடர்பான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேற்படலாகாது என அளித்த தீர்ப்பு இன்றளவும் நிலையாணையாகிறது.
  • ஆனாலும், தமிழக அளவில் 1972-இல் பிற்படுத்தப்பட்டோர்-31 சதவீதம், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர்-18 சதவீதம், பொதுப் போட்டி-51 சதவீதம் எனவும், 1980-இல் பிற்படுத்தப்பட்டோர்-50 சதவீதம், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர்-18 சதவீதம், பொதுப் போட்டி-32 சதவீதம் எனவும், 1991-இல், பிற்படுத்தப்பட்டோர்-30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-20 சதவீதம், தாழ்த்தப்பட்டோர்-18 சதவீதம், பழங்குடியினர்-1 சதவீதம், பொதுப் போட்டி-31 சதவீதம் எனவும் மாற்றம் பெற்றன.
  • அதுவரையும் அரசு ஆணை மூலம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதற்கு மாற்றாக, 1993-இல் சட்டப்பேரவையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு, நீதிமன்றம் தலையிட முடியாத வகையில் அரசியல் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும் தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • அது தொடர்பான வழக்கில், ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத்தில் தலையிட முடியாத உச்சநீதிமன்றம் ஒதுக்கீடு-69 சதவீதம், பொதுப் போட்டி-31 சதவீதம் என நிறைவு செய்தது; எனினும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு (இந்திய அளவில் 50 சதவீத இட ஒதுக்கீடு) காரணமாக பாதிக்கப்படும் பொதுப் பிரிவினருக்கு உரிய எண்ணிக்கையில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி.பி.மண்டல் தலைமையிலான குழு
  • 1978-இல் அமைக்கப்பட்ட பி.பி.மண்டல் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில்  பிற்படுத்தப்பட்டோர் 27, தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர்-22 எனச் செய்த பரிந்துரை, 1990-இல் வி.பி.சிங் ஆட்சியில் சட்டமாக்கப்பட்டு, 1991-இல் நரசிம்மராவ் ஆட்சியில் நடைமுறையாக்கப்பட்டது. அதே சமயம், பொதுப் போட்டியில் 10 சதவீத வருமான வரம்பு அடிப்படையில் வழங்கும் ஆணையைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டில் வருமான வரம்பை நிர்ணயித்தது. தற்போது மீண்டும் பொதுப் போட்டியிலும் வருமான வரம்பு புகுத்தப்படுகிறது.
  • முதலாவது, நம்முன் உள்ள பிரச்னை அரசுக் கருவூலத்தில் குவிந்திருக்கும் தங்கக் கட்டிகளை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதல்ல. பகிர்ந்தளிக்கப்பட வேண்டியவை கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்புமாவதால் அவற்றில் பின்தங்கியோருக்கு முன்னுரிமையளித்தலே முறைமையாகும். இரண்டாவது, பொருளாதார வரம்பில், ஊதியப் பட்டியலில் கையெழுத்திட்டு மாத ஊதியம் வாங்குவோர் மட்டுமே சிக்குவர்.
  • வேறு வகையில் கூடுதலான வருமானம் ஈட்டுவோர், அரசு குறிப்பிடும் வருமானத்துக்கு உட்பட்டவராக வருமானச் சான்று காட்டுதல் ஆகாத செயல் அல்ல. அதாவது, சட்டப்பூர்வமான வருமானம் பெறுவோரின் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை அவரினும் கூடுதலாக வேறு வகையில் பொருள் குவிப்போரின் பிள்ளைகள் தட்டிப் பறிப்பதற்கே வருமான வரம்பு பயன்படும்.
  • இன்னொன்று, சமூகத்தின் உயர்நிலை ஜாதியைச் சேர்ந்தவர்களில், எத்தனை பேர் ஏழ்மையின் காரணமாக விவசாயக் கூலித் தொழிலாளியாக, கட்டுமானச் சிற்றாளாக, துப்புரவுத் தொழிலாளியாக பிழைப்பு நடத்துகின்றனர் என்பதை நினைவில் கொண்டால் ஜாதி அடிப்படையாயினும், பொருளாதார அடிப்படையாயினும் தனி நபரை-தனி நபருக்கான குடும்பத்தை ஓர் அலகாகக் கொள்ளுதல் முற்றிலும் தவறு என்பது புலனாகும். மூன்றாவது, ஜாதிவாரி ஒதுக்கீட்டினால் தகுதி-திறமை பாதிக்கப்படுகிறது எனக் கூறுவோர், பொருளாதார அடிப்படையிலும், அதே சிக்கல் ஏற்படுவதை மறைப்பதேன்?
  • நான்காவது, இட ஒதுக்கீட்டு முறையில், கல்லூரி சேர்க்கைக்கும், அரசுப் பணிகளுக்கும் உரிய கல்வித் தகுதியில் எந்தச் சலுகையும் காட்டப்படுவதில்லை. கூடுதல் மதிப்பெண் என்பது மனப்பாடத் திறமையின் வெளிப்பாடன்றி சுய சிந்தனையும், சுய செயல்திறனுமாகிற தகுதி-திறமையின் வெளிப்பாடல்லவே? பாதி நிலையில் இடிந்து விழுந்த பக்ரா நங்கல் அணைக்கட்டுமானப் பொறியாளர் இட ஒதுக்கீட்டு முறையில் நியமிக்கப்பட்டவரல்ல. இவ்வாறான எடுத்துக்காட்டுகள் பல உண்டு.
இடஒதுக்கீடு
  • இன்னொன்று, இடஒதுக்கீட்டால் தங்கள் வகுப்பு பாதிக்கப்படுவதாகக் கருதுவோர், ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவரவர் மக்கள்தொகை சதவீதத்துக்கு ஏற்ப  இடஒதுக்கீடு பெறும் ஆலோசனையை எதிர்ப்பானேன்? இனி, ஜாதி அடிப்படையில் வாய்ப்புகளைப் பகிர்ந்தளித்தல் ஜாதிப் பிரிவுகள் மறைவதற்குப் பதில் நீடிப்பதற்குத் துணையாதல் தகுமா என்பதும் ஒரு வாதமாகிறது.
  • ஜாதிவாரி இடஒதுக்கீட்டை எடுத்துவிட்டால் ஜாதிப் பிரிவுகள் மறைந்து விடுமா? நிச்சயம் மறையாது. சரி, என்னதான் வழி? மக்கள்தொகை கணக்கெடுப்பைச் ஜாதிவாரியாக நடத்தி, அனைத்து ஜாதியினருக்கும் அவரவர் மக்கள்தொகை சதவீதத்துக்கு ஏற்ப வாய்ப்புகளை பகிர்ந்தளிக்கும்போதும், கலப்பு மணத் தம்பதியரையும் அவர்களின் வாரிசுகளையும் தனிப் பிரிவாகக் கொண்டு அவர்களுக்கெனதனி ஒதுக்கீடும், அதற்கும் மேலாகத் தாராளமான சலுகைகளும் வழங்குவதன் வழியாக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் கலப்புத் திருமணங்கள் பெருகச் செய்தலே ஜாதி ஒழிப்புக்குச் சரியான தீர்வாகும்.
  • அதை விடுத்து, ஜாதிவாரி ஒதுக்கீட்டைத் தடுத்தலும், வருமான வரம்பைப் புகுத்துதலும் சமூக நீதியைச் சிதைக்கும் அநீதியன்றி வேறு அல்ல.

நன்றி: தினமணி (14-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories