TNPSC Thervupettagam

ஜாலியன்வாலா பாக் சுவடுகள்!

April 12 , 2019 2118 days 2045 0
  • ஜாலியன்வாலா பாக். அந்த இடம் அமிர்தசரஸ் பொற்கோயிலிலிருந்து அதிகத் தொலைவில் இல்லை. அங்கே, கூடியிருந்த கூட்டத்தைச் சுடும்படி ரெஜினல் டையர் என்ற பெயருடைய பிரிட்டிஷ் பிரிகேடியர்-ஜெனரல் ஒருவர் தனது துருப்புகளுக்கு 1919 ஏப்ரல் 13 அன்று — சரியாக இப்போதிலிருந்து நூறாவது ஆண்டு — ஆணையிட்டார். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள். அங்குள்ளவர்களோ ஆயிரம் பேர் அல்லது இன்னும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக நம்புகின்றனர். இது ஒரு கொடூரமான கொலை. ஏனெனில், சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நிராயுதபாணிகள் என்பதோடு முழுக்க முழுக்க அமைதிவழியிலானவர்கள். டையரின் வெறித்தனத்துக்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வெறித்தனத்தை அதிகப்படுத்தியது பஞ்சாபின் சர்வாதிகார லெஃப்டினென்ட் கவர்னரான மைக்கேல் ஓ’ட்வையரின் நடவடிக்கைகள்தான்.
  • ஜாலியன்வாலா பாகில் நடைபெற்ற படுகொலைக்கு பிரிட்டிஷ் வரலாற்றிலும் சரி, இந்திய தேசியத்தின் வரலாற்றிலும் சரி முக்கியமான இடம் உண்டு. இதுகுறித்து எண்ணிலடங்காத புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்கள் தீவிரத்தன்மையும் ஆய்வுத்தன்மையும் கொண்டவை, மற்றவை உணர்ச்சிகரமாகவும் இலக்கியரீதியிலும் இருப்பவை. இந்த இரண்டு வகையிலும் வரக்கூடிய புத்தகத் தொகுப்பொன்று வெளியாகியிருக்கிறது. ‘விடுதலைக்குச் செய்யப்பட்ட தியாகம்: ஜாலியன்வாலா பாகின் 100 ஆண்டுகள்’ (Martyrdom to Freedom: 100 Years of Jallianwala Bagh) என்பது அத்தொகுப்பின் பெயர். பஞ்சாபின் மிகவும் பழமையானதும் மிகவும் மதிப்புக்குரியதுமான ‘தி ட்ரிப்யூன்’ பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் ராஜேஷ் ராமச்சந்திரன்தான் இப்புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்.
டையரின் நடவடிக்கைகளின் பின்னணி
  • புத்தகத்தின் முதல் பகுதி இத்தொகுப்புக்கென்றே (இந்தக் கட்டுரையாசிரியர் உட்பட) ஆய்வறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கியது. அதில் நடுநாயகமாக விளங்குவது மூத்த வரலாற்றாசிரியரான வி.என்.தத்தாவின் நேர்காணல். நேர்காணல் கண்டவர் அவரது மகளும் நன்கு அறியப்பட்ட அறிஞருமான நோனிகா தத்தா. அமிர்தரசரஸில் படுகொலைக்குச் சில ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் வி.என்.தத்தா. ஜாலியன்வாலா பாகிலிருந்து பத்து நிமிடத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவில்தான் அவர் தன் இளமைப் பருவத்தைக் கழித்தார். ஜாலியன்வாலா பாக் என்பது 1919 ஏப்ரல் வாக்கில் உண்மையில் தோட்டமாக (பாக்) அல்ல, குப்பை கொட்டும் இடமாகத்தான் இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
  • உரிய காலத்தில் தத்தா அந்தப் படுகொலையின் மிக முக்கியமான வரலாற்றாசிரியராக உருவெடுத்தார். அந்த நேர்காணலில் அவர் இப்படிச் சொல்கிறார், “டையரின் நடவடிக்கைகளின் பின்னணியை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். முதலாம் உலகப் போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பிரிட்டிஷாரின் தன்னம்பிக்கை உச்சத்துக்கே சென்றது. தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற அளவுக்குத் துணிவுபெற்றிருந்தனர். நினைவில் கொள்ளுங்கள், டெல்லியில் ஒரு கலவரத்தை டையர் ஏற்கெனவே கலைத்திருக்கிறார், வடகிழக்குப் பிராந்தியத்தில் அவர் பெற்றிருந்த பயிற்சியும் அவர் வசமிருந்தது… [ஜாலியன்வாலா பாகில்] டையர் அந்தத் துருப்புகளைக் குறுக்கும் நெடுக்குமாக, நேராக, வலமும் இடமுமாக, கிணற்றுக்கு அருகாக என்றெல்லாம் உத்தரவிட்டுச் செலுத்தினார். தான் என்ன செய்கிறோம் என்பது குறித்த முழுமையான புரிதல் அவருக்கு இருந்தது.”
  • ஒரு எரிமலையின் வெடிப்பைத் தூண்டிவிட்ட நிகழ்வாகவே இந்தப் படுகொலைச் சம்பவத்தைப் பற்றி ஒருவகையில் சொல்லலாம் என்கிறார் வி.என்.தத்தா. ஏனெனில், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் ஆட்சியை இனிமேலும் சட்டபூர்வமானதாகக் கருத முடியாது என்ற எண்ணத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலை ஏற்படுத்தியது. அந்தப் படுகொலைக்குப் பிறகுதான், ‘இனவெறியைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையும் டையர்தனமும் ஓ’ட்வையர்தனமும் எவ்வகையிலாவது போய்த்தொலைந்தாக வேண்டும் என்றும் இந்தியர்கள் உணர்ந்தார்கள். நாகரிகச் சமூகத்தில் அந்த இருவருக்கும் எந்த இடமும் இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இறுதி வீழ்ச்சிக்கு இப்படுகொலைதான் வித்திட்டது. மாறாக, தேசிய அளவில் காந்தி புதிய தலைவராக உருவெடுத்தார்.” அல்லது, கவிஞராகிய வி.என்.தத்தாவின் தந்தையின் சொற்களில் சொல்வதானால் அந்தப் படுகொலைக்குப் பிறகு இந்தியர்களுக்கு எது நல்லது என்றும் எது கெட்டது என்றும் தெரிந்தது, கூடவே அவர்கள் அதற்கு மேலும் ஆமாம்சாமிகளாக இருக்க மாட்டார்கள்.
  • இந்நூலின் இரண்டாவது பகுதி ‘தி ட்ரிப்யூன்’ இதழின் பக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்நாட்களில் அந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் காளிநாத் ராய் என்ற வங்காளி. அவரைப் பற்றி அவரது சமகாலத்தவர் ஒருவர் சொல்லும்போது, “கம்பளிக் குல்லாய் அணிந்த குள்ளமான மனிதர். அவர் அணிந்திருந்த கம்பளி ஆடையின் பெரும்பாலான கம்பளி நூல் பல ஆண்டுகளுக்கு முன்பே உதிர்ந்துபோய்விட்டது. மீன் குழம்பு, பால் டம்ளர்கள், ரசகுல்லா, பருப்பு போன்றவற்றை மறதியுடன் கையாளும்போது அவரிடம் காணப்பட்ட தடுமாற்றங்களை அப்படியே அந்தக் கம்பளி ஆடை சுமந்திருக்கும். கண்ணாடியின் தடிமனான லென்ஸுக்குப் பின்னால் அவரது கண்கள் ஒளிந்திருக்கும். கண்ணாடியானது இரும்பு வளையத்தைக் கொண்டதாக, அது குறைந்தபட்சம் மூன்று இடங்களில் நூலால் தாங்கிப்பிடிக்கப்பட்டிருப்பதாக இருக்கும். அவர் பேசுவதோ வெகு அரிது.”
உண்மையை வெளிக்கொண்டுவந்த தி ட்ரிபியூன்இதழ்
  • கூச்ச சுபாவமும் கவர்ந்திழுக்காத தோற்றமும் கொண்டிருந்தாலும்கூடத் துணிவும் நெஞ்சுரமும் மிக்கவராக இருந்தார் காளிநாத் ராய். மிகவும் சிரமமான அந்நாட்களில் அவரது இந்தப் பண்புகளெல்லாம் ‘தி ட்ரிபியூன்’ இதழை அவர் எப்படியெல்லாம் வழிநடத்தினார் என்பதிலேயே நமக்குத் தெரிகிறது.
  • அந்த இதழிலிருந்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் தலையங்கங்கள், கட்டுரைகள் போன்றவற்றை வாசிக்கும்போது அந்தச் சம்பவங்கள் நம் கண் முன் அப்படியே விரிகின்றன, பல இடங்களில் மிகவும் நெகிழவும் வைக்கின்றன. பஞ்சாபில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் வித்திட்ட ரௌலட் சட்டத்தைப் பற்றி ‘தி ட்ரிப்யூன்’ இப்படிச் சொல்கிறது: “ஏற்கெனவே கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மக்களுடைய உரிமைகளெல்லாம் இச்சட்டத்தின் அமலாக்கத்தால் முற்றிலும் பொருளற்றுப்போகின்றன. கூடவே, ஆள்வோரின் எதேச்சாதிகாரமும் பூரணமாகிறது.” ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை வழிநடத்திய சுதந்திர வேட்கை கொண்ட தேசப்பற்றாளரைப் பற்றி அந்த இதழ் இப்படி எழுதியது: “காந்தியைப் பற்றி கோகலே ஒருமுறை இப்படிச் சொன்னார்: காந்தியிடத்தில் இந்தியர்களின் மனிதநேயம் அதன் பூரணத்தன்மையை அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட காந்தி தன் மக்களைப் பற்றி மிகவும் ஆழமாக அறிந்துவைத்திருக்கிறார், இந்தியத் தலைவர்களிலேயே மிகவும் புனிதத்தன்மை கொண்டிருப்பதுடன் மிகவும் பிரபலமான தலைவரும் அவரே…”.
  • காந்தியைப் பற்றிய மேற்கண்ட குறிப்பு வெளியானது 1919, ஏப்ரல் 6, ஞாயிறு அன்று. அடுத்த ஞாயிற்றுக்கிழமைதான் படுகொலை நிகழ்த்தப்பட்ட தினம். ராணுவச் சட்டம் அமலில் இருந்ததால் அந்தப் படுகொலையைப் பற்றிய செய்திகளும் வெளியாகவில்லை. பத்திரிகைகள் மீதிருந்த தணிக்கை விலக்கப்பட்ட பிறகே, இந்த ஒட்டுமொத்த அநியாயத்தைப் பற்றியும் விசாரிப்பதற்கு ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட ஹன்ட்டர் கமிஷனின் விசாரணைகளை ‘தி ட்ரிப்யூன்’ கூர்ந்து கவனித்து தினமும் எழுதியது.
நியாயமான கேள்விகளைக் கேட்கத் தவறியது ஏன்?
  • கமிஷனின் முன்பு ஜெனரல் டையர் ஆஜரானபோது, அந்த இதழ் தங்கள் பக்கங்களில் நேரடியாக ஐந்து கேள்விகளை டையரிடம் முன்வைத்தது.
  • கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்கு டையர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
  • எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் சுட்டதற்கு என்ன நியாயம் கூறுவார்?
  • துப்பாக்கிச்சூடு தொடங்கியவுடனே கூட்டம் கலைந்தோட ஆரம்பித்தும்கூடத் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தாததன் காரணம் என்ன?
  • தோட்டாக்கள் தீரும் நிலையிலும் ஏற்கெனவே ஐநூறு பேர் கொல்லப்பட்ட நிலையிலும்கூட நிறுத்தாதது ஏன்?
  • காயப்பட்டவர்களை நிர்க்கதியாக விட்டுச்சென்றது ஏன்?
  • ஆனால், இதுபோன்ற நேரடியான தொனியில் இதுபோன்ற கேள்விகளை டையரிடம் ஹன்ட்டர் கமிஷன் முன்வைக்காமல் போனதுதான் துயரம்.
  • இறுதியில், ‘அமிர்தசரஸின் கசாப்புக்காரர்’ வெறுமனே பணிநீக்கம் செய்யப்படுகிறார். இதைப் பற்றிச் சொல்லும்போது தண்டனை ‘போதாதென்று அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று ‘தி ட்ரிப்யூன்’ எழுதியது. இதற்கிடையே, டையரின் கொடூரமான மேலதிகாரியான மைக்கேல் ஓ’ட்வையர் சிறு தண்டனைகூட இன்றித் தப்புகிறார். ஆகவே, ‘கண்துடைப்பு ஆவணம்’ என்று ஹன்ட்டர் அறிக்கை குறித்து காளிநாத் ராய் குறிப்பிட்டதில் வியப்பொன்றும் இல்லை.
  • இப்புத்தகத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிடம் பற்றிய வேறு சில முக்கியமான தகவல்களும் கிடைக்கின்றன. தியாகிகளின் ரத்தம் சிந்தப்பட்டதால் புனிதத்துவம் பெற்ற மண்ணைத் தாங்கிய நிலத்தை இந்திய தேசிய காங்கிரஸ் வாங்கி, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய தேசத்தின் சொத்தாக மாற்றியது. இந்த நினைவிடத்துக்காக நிதி திரட்டியவர்களில் முக்கியப் பங்கு வகித்தவர்கள்: காந்தி, டாக்டர் சைஃபுதீன் கிச்லூ, பண்டிட் மதன்மோகன் மாளவியா, சுவாமி ஷ்ரத்தானந்தா.
ஒற்றுமையின் தேசியச் சின்னம்
  • இன்று விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வைக்கப்படும் நினைவிடங்கள் எண்ணிலடங்காது; தேர்தல் நெருங்கும் சமயத்திலெல்லாம் பேராசை கொண்ட அரசியல்வாதிகளால் அப்படிப்பட்ட நினைவிடங்கள் திறந்துவைக்கப்படுகின்றன; அவற்றுக்கான நிதியும் தனியார் நிறுவனங்களிடமிருந்தோ பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தோ வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது. ஆனால், ஜாலியன்வாலா பாக் நினைவிடம்தான் இந்திய வரலாற்றில் மிகவும் ஜனநாயகபூர்வமாக நிதி திரட்டப்பட்டு முதன்முதலில் கட்டப்பட்ட நினைவிடம். அந்த நினைவிடத்துக்கான நிதியானது பஞ்சாபிலும் இந்தியா முழுவதிலும் உள்ள மக்களிடமிருந்தும் திரட்டப்பட்டது. லூதியானாவைச் சேர்ந்த மக்கள் ரூ.7,000; வார்தா மக்கள் ரூ. 7,500; பம்பாய் மக்கள் ரூ 20,000; கல்கத்தா மக்கள் ரூ.26,000 என்று அள்ளியள்ளிக் கொடுத்தார்கள். (இந்தத் தொகையெல்லாம் அன்று மிகவும் அதிகம். மேலும், இன்றைய பணமதிப்பைவிட அன்றைய பணமதிப்பு மிகவும் அதிகம் என்பதையும் கணக்கில் கொண்டு பார்க்க வேண்டும்).
  • தனது ‘யங் இந்தியா’ இதழில் இந்த நிதித்திரட்டலைப் பற்றி எழுதும்போது காந்தி இப்படிக் கூறுகிறார், ‘இறந்துபோன அப்பாவிகளைப் பற்றிய நினைவுதான் புனிதமான அறக்கட்டளையாகக் கருதப்பட வேண்டியது. மேலும், உயிர் பிழைத்த உறவினர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காகத் தேசத்திடம் கேட்கும் உரிமையும் பெற வேண்டும். இந்த நினைவிடத்தின் முக்கியமான அர்த்தம் இதுதான்.’
  • மேலும், அவர் எழுதினார்: ‘முஸ்லிமின் ரத்தம் இந்துவின் ரத்தத்தோடு கலந்துவிடவில்லையா? சீக்கியரின் ரத்தம் சனாதனியின் ரத்தத்துடனும் சமாஜத்தினரின் ரத்தத்துடனும் கலக்கவில்லையா? இந்த நினைவிடமானது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடைவதற்கான நேர்மையான, நீடித்த முயற்சியின் தேசியச் சின்னமாக இருக்கட்டும்.’
  • இப்படி எல்லோரையும் ஒருங்கிணைக்கக்கூடிய, பன்மைத்துவம்கொண்டதாக காந்தி எதிர்நோக்கிய பேருணர்ச்சியானது தேசப் பிரிவினையின்போது பஞ்சாபில் சுக்குநூறாக உடைத்து நொறுக்கப்பட்டது. அப்படி உடைத்து நொறுக்கப்பட்டதை, ‘தி ட்ரிப்யூன்’ இதழின் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் மீட்டுருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்போல!
எண்ணிக்கை அல்ல, ரத்த வரலாறு!
  • இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் கொடூரமான அத்தியாயம் ஜாலியன்வாலா பாக் படுகொலை. அப்படுகொலையின் துல்லியமான தரவுகள் நம்மிடம் இல்லை. காங்கிரஸ் குழுவினர், ஸேவா ஸமிதி என்ற அமைப்பினர், ஆங்கிலேயர் அமைத்த ஹன்ட்டர் கமிஷன், தனிநபர்கள் என்று வெவ்வேறு குழுக்கள் இப்படுகொலையை விசாரணை செய்தன. காங்கிரஸ் குழுவும் ஸேவா சமிதியும் ஆயிரம் பேராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றது. ஹன்ட்டர் கமிஷன் சுமார் முந்நூறு பேர் என்றது. ஜெனரல் டையரின் கணக்கின்படி துப்பாக்கித் தோட்டாக்கள் 1,650 ரவுண்டுகள் சுடப்பட்டிருந்தன.
துப்பாக்கி நீட்டப்படும் முன்னே
  • இந்தியாவில் ‘தீவிரவாதச் செயல்கள்’ அதிகரித்துவிட்டன என்று இந்தியர்களின் பேச்சுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ஒடுக்கும் ரௌலட் சட்டம்தான் ஜாலியன்வாலா பாக் படுகொலையின் முதல் நெருப்பைப் பற்றவைத்தது எனலாம். இந்தியர்களால் கருப்புச் சட்டம் என்று அன்று அழைக்கப்பட்ட இச்சட்டத்தைப் பெரும்பாலானவர்கள் அமைதி வழியிலேயே எதிர்த்தார்கள். சத்யாகிரகிகளான சத்ய பால், சைபுதீன் கிச்லூ போன்றவர்களுடன் காந்தியும் கைதுசெய்யப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்களின் கைதையும் ரௌலட் சட்டத்தையும் எதிர்த்து ஜாலியன்வாலா பாகில் நடந்த கூட்டத்தில்தான் இப்படி ஒரு கொலைவெறித் தாண்டவத்தை ஜெனரல் டையர் நிகழ்த்தினார்.
விமானத்தைப் பறக்கவிட்ட டையர்
  • ஜாலியன்வாலா பாகில் கூடியிருந்த போராட்டக்காரர்களெல்லாம் சத்யாகிரகிகள் என்பதால் அவர்கள் நிராயுதபாணிகள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பெருங்கொடுமை என்னவென்றால் அங்கு கூடியிருந்தவர்களில் போராட்டக்காரர்கள் மட்டுமல்ல, பக்கத்திலுள்ள பொற்கோயிலுக்குச் சென்றுவிட்டுவந்த ஏதுமறியாத பக்தர்களும்கூட. ஏப்ரல் 13, 1919 அன்று சீக்கியர்களின் புத்தாண்டான வைசாகி என்பதால் அப்படியொரு கூட்டம். எவ்வளவு பேர் கூடியிருந்தார்கள் என்பதைக் கணிப்பதற்காக ஜெனரல் டையர் ஒரு விமானத்தையே மேலே பறக்கவிட்டிருக்கிறார். ஜெனரல் டையர் துப்பாக்கிச்சூட்டை நடத்திய தருணத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
படுகொலைக்குப் பிறகு
  • ஜாலியன்வாலா பாக் படுகொலை நடைபெறும்வரை இந்திய மக்களும் சரி இந்தியத் தலைவர்களும் சரி தங்களை பிரிட்டிஷ் பிரஜைகளாகவே பெரும்பாலும் கருதிவந்தார்கள். ஆனால், ஜாலியன்வாலா பாக் இந்தியர்களின் கண்ணைத் திறந்தது. நாம் யாருக்கும் அடிமை அல்ல, இந்தியா சுதந்திரமடைய வேண்டும் என்ற கோஷங்களை அதற்குப் பிறகுதான் முழு மூச்சில் கேட்க முடிந்தது. ஹன்ட்டர் கமிஷனின் விசாரணையில் ஏதாவது நியாயம் கிடைக்கும் என்று காந்தி நம்பினார். ஆனால், அந்த கமிஷனின் அறிக்கை ஒரு ஏமாற்றுவேலை என்று அறிந்ததும், ‘தான் இனி பிரிட்டிஷ் பிரஜை இல்லை’ என்பதை உலகறியச் செய்தார். ரவீந்திரநாத் தாகூர் பிரிட்டிஷாரிடம் பெற்ற ‘சர்’ பட்டத்தைத் துறந்தார். ஜாலியன்வாலா பாக் சம்பவத்தால்தான் பகத் சிங் என்ற புரட்சியாளர் பிறப்பெடுத்தார்.
ஒரு மாதம் கழித்தே உலகம் அறிந்தது
  • தங்கள் அடித்தளத்தைப் பெயர்த்துவிடும் செய்திகளை மறைக்கப் பார்ப்பதே அன்று முதல் இன்று வரை ஆட்சியாளர்களின் செயல்பாடு. இதற்கு ஜாலியன்வாலா பாக் விதிவிலக்கல்ல. அப்போது ராணுவச் சட்டம், அதன் காரணமாகக் கடுமையான பத்திரிகை தணிக்கை போன்றவை அமலில் இருந்ததால் படுகொலைச் சம்பவத்தை வெளியுலகுக்குத் தெரியாமலேயே குறிப்பிட்ட காலம் வரை மறைத்துவிட்டார்கள். செய்திகள் வெளியிட்ட பத்திரிகையாளர்களைக் கைதுசெய்வதெல்லாம் நடந்திருக்கிறது. ஒரு மாதம் கழித்தே காந்தியின் காதுகளுக்கு விஷயம் சென்றிருக்கிறது. சம்பவத்தின் தீவிரம் அதை உண்மையா, பொய்யா என்று யோசிக்குமளவுக்கு அவரைக் கொண்டுசென்றிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories