TNPSC Thervupettagam

ஜெகஜீவன் ராம்

March 26 , 2019 2081 days 1372 0
  • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அரசுகளிலும் முக்கியப் பங்கு வகித்தவர்; அரசியல் சட்ட நிர்ணய சபையிலும், பிரதமர் நேரு தலைமையிலான இடைக்கால அரசிலும் மிக இளம் வயதிலேயே இடம் பெற்றவர் எனும் பெருமைக்குரியவர் பாபு ஜெகஜீவன் ராம். 1908 மார்ச் 5-ல் பிஹாரின் சந்த்வா என்ற ஊரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தார்.
பள்ளிப் பருவம்
  • பள்ளியில் சாதிக் கொடுமைக்கு ஆளான ஜெகஜீவன் அதைத் துணிச்சலுடன் எதிர்த்தார். 1925-ல் பள்ளிக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பண்டிட் மதன் மோகன் மாளவியா, மாணவர் ஜெகஜீவனின் வரவேற்புரையைக் கேட்டு அசந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் டிவிஷனில் தேர்ச்சி பெற்று, பனாரஸ் பல்கலையில் சேர்ந்தார் ஜெகஜீவன். அங்கும் சாதிக் கொடுமைகளை எதிர்கொண்ட அவர், அந்தப் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.
  • காந்தி நடத்திய தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். ஒடுக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளை சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல பல கூட்டங்களை நடத்தினார். 1935-வது ஆண்டு சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்கும் நிலை வந்தபோது அவர் காங்கிரஸில் சேர்ந்தார். 1937-ல் பிஹார் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கங்களில் ஈடுபட்டார். இரண்டாவது உலகப் போரில் இந்தியாவை பிரிட்டன் ஈடுபடுத்துவதை எதிர்த்துப் பேசியதால் 1940-ல் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் சட்ட நிர்ணய சபையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்தார்.
1936 முதல் 1986 வரை
  • தொழிலாளர் நலன், வேளாண்மை, பாதுகாப்பு, போக்குவரத்து, ரயில்வே, தகவல் தொடர்பு என்று பல துறைகளை நிர்வகித்திருக்கிறார். ஜனதா ஆட்சியில் துணைப் பிரதமராக இருந்தார். அண்ணா, கருணாநிதி ஆகியோருக்கு வட இந்திய அரசியல் குறித்த ஆலோசகராக விளங்கினார். 1936 முதல் 1986 வரையில் இடைவெளி இல்லாமல், 50 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக ஜெகஜீவன்ராம் இருந்தது உலக சாதனை. காந்திக்குப் பிறகு வட இந்திய மக்களால் ‘பாபுஜி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட பெருமை அவருக்கு உண்டு!

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories