தண்ணீர்த் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கப்போகிறோம்?
April 15 , 2019 2039 days 1289 0
இந்தியாவில் ஏறக்குறைய நூறு கோடி பேர் ஆண்டின் ஒரு பகுதியிலேனும் தண்ணீர்ப் பற்றாக்குறையோடுதான் வாழ்ந்துவருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன்னரே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது.
‘தண்ணீர்ப் பிரச்சினையை இந்தியா மட்டும் அல்ல; உலகம் முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறையின் விளிம்பில்தான் நின்றுகொண்டிருக்கிறது’ என்கிறது ‘வாட்டர்எய்டு இந்தியா’ அமைப்பின் 2019-ம் ஆண்டுக் கான அறிக்கை. உலகம் முழுவதும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் அரசுசாரா அமைப்பு இது.
தண்ணீர் நிலவரம்
உலகம் முழுவதும் 400 கோடி மக்களுக்கும் மேலாகத் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் வசித்துவருகிறார்கள். 4 கோடி மக்கள் தங்களது வீடுகளின் அருகே சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றிருக்கவில்லை. உலகளவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பயன்படுத்தியதைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாகத் தண்ணீரைப் பயன்படுத்திவருகிறோம். ஆனால், தண்ணீரைப் பாதுகாப்பதற்கான அமைப்பை இன்னும்கூட நாம் உருவாக்கவில்லை.
‘தரையின் அடியில்: உலகளாவிய தண்ணீர் நிலவரம்’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, தண்ணீர்ப் பற்றாக்குறையோடு அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நாடுகள்; மிதமிஞ்சி அதிகரித்துவரும் பயன்பாட்டுத் தேவைகளானது வறுமைநிலையில் வாழ்பவர்களும் பெருமளவிலான விளிம்புநிலை மக்களும் தண்ணீர் பெறுவதை எப்படியெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது; உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்துத் தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் அறிவார்ந்த மாற்று முறைகளை எப்படி உருவாக்குவது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது.
எந்தவொரு கணத்திலும் இந்தப் பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், தண்ணீரைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது எப்படி என்றும் அடிக்கடி நாம் எச்சரிக்கப்பட்டுவருகிறோம். ஆனாலும், அதன் பாதிப்பு நம்மைத் தாக்காத வரைக்கும் அது குறித்து அலட்சியம் காட்டியே வருகிறோம். சென்னையில் இன்று எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வேகமாக ஒரு நடை போய்வாருங்கள். ஒவ்வொரு மூன்றாவது வீட்டிலும் ஆழ்துளைக் கிணறு தோண்டப்படுவதைப் பார்ப்பீர்கள்.
நீர்மட்டம் நாளுக்கு நாள் கீழிறங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், நீருக்கான வேட்டை மட்டுமே தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் 75% வீடுகள் தங்கள் குடியிருப்புப் பகுதியிலேயே குடிநீர் வசதியைக் கொண்டிருக்கவில்லை. 70% குடிநீர் சுத்தமானதாக இல்லை.
நிதி ஆயோக் அறிக்கை
60 கோடி இந்தியர்கள் தீவிரமான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்றும், பாதுகாப்பான குடிநீர் போதுமான அளவில் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்றும் நிதி ஆயோக்கின் 2018 அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. இதுவும்கூட போதுமான எச்சரிக்கை மணி இல்லையென்று எண்ணினால், அதே அறிக்கை மேலும் கூறுவதையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள 70% குடிநீர் சுத்தமானதல்ல. 122 நாடுகளுக்கு இடையிலான தண்ணீர் தரக் குறியீடுகளில், நாம் 120-வது இடத்தில் இருக்கிறோம்.
‘2030 ஆண்டுவாக்கில், இந்தியாவின் தண்ணீர்த் தேவை தற்போது விநியோகிக்கப்படுவதைக் காட்டிலும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், பல லட்சம் மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. இதன் விளைவாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பு ஏற்படும்’ என்கிறது நிதி ஆயோக்கின் அறிக்கை.
என்னென்ன செய்யலாம்?
பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் என்பது மனித உரிமைகளில் ஒன்று. மதிப்புக்குரிய நீர்வளத்தைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் உதவ முடியும் என்று சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில:
தண்ணீர் கசியும் குழாய்களை மாற்றும் வேலைகளை உடனடியாகத் தொடங்கியாக வேண்டும்; தண்ணீர் கசியும் ஒரு குழாயில் நாளொன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. வீட்டிலும் அலுவலகத்திலும் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். சமையலறையில் பயன்படுத்திய நீரையும் தரையைத் துடைக்கப் பயன்படுத்திய நீரையும் தோட்டத்துக்கு மறுபடியும் பயன்படுத்த வேண்டும். மிகவும் குறைவான தண்ணீர் தேவைப்படும் கழிப்பறை அமைப்புகளையும் குளியலறை அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். குறைவான தண்ணீர் தேவைப்படும் சலவை இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
தண்ணீரில் வளரும் செடிகளுக்குக் காலையில் நீர் ஊற்றும்போது கொஞ்சம் குறைவாகவே ஊற்றுங்கள். உணவுகளை வீணாக்க வேண்டாம். ஒரு பழத்தின் பாதியை எறிந்துவிட்டு இன்னொரு பழத்தை வாங்கப்போகிறீர்கள் என்றால் 500 லிட்டர் தண்ணீரை நீங்கள் வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஆடையிலும் சிக்கனம்
இவையெல்லாம் ‘வாட்டர்எய்டு இந்தியா’ அமைப்பின் பரிந்துரைகள். இவற்றோடு மேலும் ஒன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 90 கோடி ஜீன்ஸ் ஆடைகள் விற்கப்படுகின்றன. இந்த ஆடைகளைத் தயாரிப்பதற்கு ஏறக்குறைய 360 கோடி லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுகிறது. ஒவ்வொரு அமெரிக்கரும் ஏற்கெனவே ஏழு ஜோடி ஜீன்ஸ் ஆடைகள் வைத்திருக்கிறார்கள். அமெரிக்க உதாரணம் நமக்கும் பொருந்தும். நீங்கள் கடைக்குச் செல்வதற்கு முன்னால் கொஞ்சம் யோசியுங்கள். மேலும் மேலும் ஆடைகள் வாங்கிக் குவிப்பதையும்கூடக் குறைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர்ப் பாதுகாப்புக் கொள்கையைப் பின்பற்றுகிற, அதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிற நிறுவனங்களிடமிருந்தே ஆடைகள் வாங்க வேண்டும்.