TNPSC Thervupettagam

தண்ணீர்ப் பஞ்சத்தால் தவிக்கும் தமிழகம்

May 14 , 2019 2072 days 1277 0
  • தண்ணீருக்காகத் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறது சென்னை. அடிபம்புகளின் ஓசையால் நிறைந்திருக்கின்றன பின்னிரவுப் பொழுதுகள். முன்னெப்போதும் சந்தித்திராத வகையில், மிகப் பெரும் தண்ணீர்ப் பஞ்சம்.
  • சென்னை மட்டுமல்ல; தமிழகத்தின் சிறுநகரங்களும் கிராமங்களும்கூட இந்த நெருக்கடியைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டன. போர்க்கால அடிப்படையில் திட்டங்களை வகுத்துச் செயல்படாவிட்டால், தமிழகம் ஓர் பேரழிவை நோக்கித் தள்ளப்படக்கூடும்.
தண்ணீர்த் தட்டுப்பாடு
  • சென்னையின் குடிநீர்த் தேவை நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர். தண்ணீர்த் தட்டுப்பாட்டையடுத்து தற்போது ஒரு நாளைக்கு 55 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுவருகிறது. ஏறக்குறைய 35% நீர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சில இடங்களில், நீரைப் பயன்படுத்த முடியாத வகையில் கழிவுநீரும் கலந்துவருகிறது. மாசுபட்ட நீரைப் பயன்படுத்துவதால் தோல் நோய்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.
  • குடிநீரை விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஏற்கெனவே தள்ளப்பட்டுவிட்ட நிலையில் தற்போது குளிக்கவும், துவைக்கவும், வீட்டுப் பயன்பாடுகளுக்காகவும்கூட விலைகொடுத்தாவது தண்ணீர் வாங்கிவிடப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
  • பகலில் வேலைக்குச் செல்பவர்கள் இரவில் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் தண்ணீர்க் குடங்களோடு தெருத்தெருவாய் அலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தனியாக வசிக்கும் முதியவர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
  • தண்ணீர் விநியோகிக்கப்படும் இடங்களில் குடங்களோடு காத்திருப்பவர்களுக்கு இடையே ஏற்படும் வாக்குவாதங்கள் சில சமயங்களில் சண்டையாக முடிகின்றன. தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதையே இத்தகைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
  • பெருநகர மாநகராட்சியான பிறகு சென்னையின் எல்லை விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குழாய்களின் வழியாகத் தண்ணீர் இணைப்பு, புதைசாக்கடை வசதிகளைச் செய்து தருவதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. பெருநகரப் பகுதிக்குள் இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்படவில்லை. ஏரிகள், குளங்கள் அனைத்தும் குப்பைமேடுகளாகவே காட்சியளிக்கின்றன.
  • கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு நீராதாரமாக இருக்கும் நான்கு ஏரிகளுமே தண்ணீர் இன்றி வறண்டுவிட்டன. பக்கத்து மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டியும் கல் குவாரிகளில் தேங்கிய நீரைச் சுத்திகரித்தும் தண்ணீர் விநியோகிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்கிறது சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியம். கடல்நீரைச் சுத்திகரித்து தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
  • ஆனால், இவை அனைத்துமே காலம் தப்பியவை. ஒரு பெரும் வெள்ளத்தைச் சந்தித்த பிறகும்கூட சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நான்கு ஏரிகளிலும் வண்டல் மண் தூர்வாருவதைப் பற்றி அரசு அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. நீர் மேலாண்மையில் காட்டப்பட்டுவரும் மெத்தனத்தை இனிமேலாவது தமிழக அரசு கைவிட்டுக் களத்தில் இறங்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை(14-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories