TNPSC Thervupettagam

தண்ணீர் தினம்

March 22 , 2019 2085 days 1509 0
  • உலக உயிரினங்களை வாழ வைக்கும் அமுதமாக தண்ணீர் விளங்குகிறது. இதனாலேயே நீரின்றி அமையாது உலகு என திருவள்ளுவர் கூறியுள்ளார். வறட்சி,  நீர் மாசு போன்ற காரணங்களால் உலகம் பாலைவனமாகிவிடும் நிலை உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இதை மனதில் கொண்டே, சந்திர கிரகணத்திலும், செவ்வாய் கிரகணத்திலும் தண்ணீர் உள்ளதா என்ற ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில்....
  • 2018-ஆம் ஆண்டில் போதிய அளவில் மழை இல்லாததால் தமிழகத்தின் 24 மாவட்டங்களை நீரியல் வறட்சி மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்து அரசாணையை அண்மையில் வெளியிட்டுள்ளது.  மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும் என்று பல காலமாகக் கூறப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் உலக தண்ணீர் விழிப்புணர்வு தினம் இன்று (மார்ச் 22) கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. தமிழகத்துக்கு, கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களுடனும், ஆந்திர- கர்நாடக மாநிலங்களுக்கிடையேயும், பஞ்சாப்- ஹரியாணா மாநிலங்களுக்கிடையேயும் தண்ணீரால் பிரச்னை இருந்து வருகிறது.
  • அதுபோல் நதி நீர்ப் பங்கீட்டில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும் இந்தியாவுக்கு பிரச்னை இருந்து வருகிறது. இதேபோல் பல நாடுகளுக்கிடையே தண்ணீர் பிரச்னை தொடர்கதையாக உள்ளது. உலகின் 79 சதவீதப் பகுதி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
  • நிலப்பரப்பிலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் உள்ளன. எனினும் உலகிலுள்ள மொத்த நீரின் அளவில் 5 சதவீதம் கடல் நீர்.
தண்ணீரின் தேவை
  • வெறும் 5 சதவீத தண்ணீரே நல்ல நீர் உள்ளது. அதிலும் மூன்றில் ஒரு பகுதியானது, துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகளாகவும், பனிப்பாறைகளாகவும் உள்ளது. அதுபோக உள்ள சொற்ப நீரே உலக உயிரினங்களின் தேவைக்குப் பயன்பட்டு வருகிறது.
  • தண்ணீரின் தேவையானது அனைத்துத் தரப்பினருக்கும் அவசியமானது என்றபோதிலும், அவை கிடைப்பதென்பது அனைத்துப் பகுதியினருக்கும் சமநிலையானதாக இல்லை. ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் கடலில் சென்று கலப்பது ஒருபுறம்; அதேசமயம் தண்ணீரே பார்க்காமல் வறண்டு போயுள்ள ஆறுகள் மறுபுறம்.
  • உலக நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 2025-ஆம் ஆண்டில்  தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது தேவையைவிட கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகளவில் இருக்கும். அதுவும் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும் கூறுகிறது.
  • நதிகளில் பாயும் தண்ணீரும், ஏரிகள், குளங்களில் தேக்கப்படும் நீரும் விவசாயம் மற்றும் மக்களின் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், 1970-ஆம் ஆண்டுகளில் பசுமைப்புரட்சி வந்த பின்பு, குளங்களைப் பயன்படுத்தி வந்த விவசாயிகள், கிணறு வெட்டியும், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தும் நிலத்தடி நீரை பயன்படுத்தத் தொடங்கினர். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறையத் தொடங்கியது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் குறைந்த அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் கிடைத்து வந்த நிலையில், தற்போது பல நூறு அடி ஆழத்துக்கு நிலத்தடி நீர் மட்டம் சென்று விட்டது.
நிலத்தடி நீர்
  • இந்தியாவின் வடமாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு அடி என்ற அளவில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நாசா செயற்கைக் கோள் மூலம் தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களில் நிலத்தடி நீர் எந்தளவில் உள்ளது என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதை உடனே நிவர்த்தி செய்யாவிட்டால், இப்பகுதிகளில் விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழகத்திலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களுடன் நதி நீர்ப் பங்கீட்டில் பிரச்னை உள்ள நிலையில்,  நிலத்தடி நீரையே நம்பித்தான் தமிழகம் உள்ளது. இந்த நிலையில் நிலத்தடி நீரைப்  பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் கடல் மட்டத்துக்குக் கீழே செல்லாத வகையில் நிலத்தடி நீர் இருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுவதால்,  நீர்மட்டம் குறையும்போது நிலத்தடி நீருடன் கடல் நீரும் கலந்து விடுகிறது. இதனால், குடிநீருக்கு உதவாத உவர்தன்மையை நீர் அடைகிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஒருபுறம் உள்ள நிலையில், முறையான நீர் மேலாண்மை கையாளப்படாததும், தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக அமைகிறது.
  • மழைக்காலங்களில் நிலத்தடி நீர் சேமிப்பை முறையாகக் கையாள்வதிலும் விழிப்புணர்வு இல்லாததால் நீரின்றி ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவை பயன்படுத்தப்படாமல் தூர்ந்துபோய்விட்டன. இதன் காரணமாக அவற்றின் ஆழம் குறைந்து தண்ணீர் சேமிப்பின் கொள்ளளவு குறைந்துவிட்டது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவோம், நீர் மாசுபடுவதைத் தடுப்போம், தண்ணீர் வீணாவதைத் தடுப்போம் என்பதே உலக தண்ணீர் விழிப்புணர்வு தினத்தின் நோக்கமாகும்.
  • ஆனால், அன்றைய தினம் மட்டும், தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், போட்டிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் சம்பிரதாய தினமாகவே இந்த நாள்  உள்ளது. இதனை ஆண்டு முழுவதும் கடைப்பிடிப்பதற்கான தொடர் நடவடிக்கையில் யாரும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீர் சிக்கனத்தையும், தண்ணீர் பாதுகாப்பையும் பொதுமக்கள் அனைவரும் சமூக அக்கறையுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories