TNPSC Thervupettagam

தமிழுக்குத் தாழ்வு நிலை ஏன்?

June 12 , 2019 1984 days 1234 0
  • எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது முழக்கத்திலும், எங்கே தமிழ்? எதிலே தமிழ்? என்பது வழக்கத்திலும் இருக்கின்ற பரிதாப காலத்தில், தேசியக் கல்விக் கொள்கை வரைவில்  ஹிந்தி  பேசாத மாநிலங்களில் ஹிந்தியை விருப்பப் பாடமாக்குவது குறித்த அறிவிப்பு தமிழகத்தைக் கொதிகலனாக்கியது.
கட்டாய மொழி
  • மத்திய அரசு இந்த மாபெரும் எதிர்ப்பு கண்டு, கட்டாய ஹிந்தி முயற்சியைக் கைவிடுவதாக அறிவித்து, கொந்தளித்தத் தமிழகத்தின் கொதிநிலையைக் கொஞ்சமே அடக்கிய வேளையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தனது சுட்டுரையின் மூலம் கோரிக்கை வைத்தார்.
  • முதல்வரின் கட்டுரை மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக இருப்பதாக எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் விமர்சனத் துப்பாக்கிகளால் அந்தச் சுட்டுரையைச் சுட்டுப் பொசுக்க, அந்தப் பதிவையே நீக்கிவிட்டார் முதல்வர். மேலும், அறிஞர் அண்ணா வலியுறுத்திய இரு மொழிக் கொள்கையே இந்த அரசின் கொள்கை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
பிற மாநிலங்களில்
  • தமிழ் மொழியைப் பிற மாநிலங்களில் ஒரு விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் ஒரு கோரிக்கை வைத்தால் அது குற்றமா? ஏன் தமிழுணர்வாளர்கள் பதற வேண்டும்? அந்தப் பதற்றத்தில் நியாயம் இருப்பதாகக் கருதி ஏன் முதல்வர் அந்தப் பதிவை நீக்க வேண்டும்?
  • பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்ததை எதிர்த்தவர்கள் யாவரும் தமிழகத்துக்கு வெளியே தமிழ் எக்காரணத்தை முன்னிட்டும் பரவிவிடக் கூடாது என்ற கொள்கை உடையவர்கள் அல்லர்.
  • மாறாக, தமிழைப் பிற மாநிலங்களில் விருப்பப் பாடமாக்கும் சாக்கில், தமிழர்கள் தலையில் ஹிந்தியை மத்திய அரசு கட்டாயப்படுத்தி ஏற்றிவிடக் கூடாது என்ற அக்கறையுள்ளவர்கள். அதைப் புரிந்துகொண்டுதான் முதல்வரும் பதிவை நீக்கியுள்ளார் என்றே நல்லெண்ணம் கொள்வோம்.
  • இந்தியாவின் பெருமையாகவும், பீடுமிகு செம்மொழியாகவும், மனிதகுலப் பண்பாட்டு வளர்ச்சியின் மகத்தான ஆவணமாகவும் திகழ்கின்ற தமிழ் மொழிக்கு மத்திய அரசு செய்து வருகின்ற உதவிகள் ஏதேனும் உண்டா? செம்மொழியான தமிழ் மொழியை இந்தியத் தூதரகங்கள் வாயிலாக உலக நாடுகளில் பரப்புவதற்கோ, பயிற்றுவிப்பதற்கோ ஒரு துரும்பையாவது மத்திய அரசு கிள்ளிப் போடுகிறதா?
ஹிந்தி மொழி
  • ஹிந்தி மொழிக்கு ஹிந்தி பிரசார சபா எல்லா மாநிலங்களிலும் செயல்படுவது போல, தமிழுக்கு பரப்புரை அமைப்புகள் எதுவும் அரசின் ஆதரவில் செயல்படுகின்றனவா? முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்லர் தமிழர்கள். அதேநேரம், பிற மொழியை விடத் தமிழ் தாழ்வானது என்றால், அணுத்துகள் அளவும் அதைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
  • கஸ்தூரிரங்கன் குழு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவின் 11 அத்தியாயம்,  கல்வியில் மொழியும், பண்பாடும் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. விரும்பினால் ஐந்தாம் வகுப்பு வரை மாநில/உள்ளூர்/வட்டார/ மொழியை முதன்மைப் பாடமாகத் தேர்வு செய்யலாம். உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் ஹிந்தி உள்ளிட்ட ஒரு மொழியை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இருப்பது சர்ச்சையை உருவாக்கியது.
  • அதன் 5-ஆவது பிரிவு, இந்திய மொழிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் சம்ஸ்கிருத மொழியின் சிறப்பு முக்கியத்துவத்தையும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்துவமிக்க பங்களிப்பையும் கணக்கில் கொண்டு, பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருதம் பயிற்றுவிக்க ஏதுவான வசதிகள் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது. சம்ஸ்கிருதத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் இருப்பதாக தேசியக் கல்விக் கொள்கை குறிப்பிடுகிறது. இந்திய மொழிகளின் வளர்ச்சி, பண்பாட்டு ஒற்றுமை ஆகியவற்றில் சம்ஸ்கிருதம் தனித்துவமான பங்களிப்பைச் செய்திருப்பதாக மத்திய அரசின் கல்விக் கொள்கை வரைவு முன்மொழிகிறது. நல்லது.
  • சதுமறை ஆரியம் வரும் முன் சகம் முழுதும் நினதாயின் முதுமொழி நீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே என்று சம்ஸ்கிருதத்தை விடவும் காலத்தாலும், கருத்து வளத்தாலும் முந்தையது தமிழ் மொழியே என்கிறார் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை.
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம் என்றார் காசியில் பயின்று சம்ஸ்கிருதத்தைக் கரைத்துக் குடித்த மகாகவி பாரதியார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மானுடத்தை இணைக்கும் மகத்தான தமிழ் மொழியைப் பண்பாட்டு ஒற்றுமைக்குப் பங்களிக்கும் மொழியாக ஏன் மத்திய அரசால் பார்க்க முடியவில்லை?
ஆட்சி மொழி
  • ஹிந்தி என்ற கண்ணில் வெண்ணெய் வைப்பதில் தமிழர்களுக்கு ஒன்றும் வருத்தமில்லை. தமிழ் என்ற கண்ணில் சுண்ணாம்பு வைப்பது ஏன் என்பதுதான் தமிழ் மக்களின் கேள்வி. இந்தியாவின் ஆட்சி மொழி குறித்து அரசியல் நிர்ணய அவையில் நடைபெற்ற விவாதத்தில், நனிதொன்மையும், தனித்தன்மையும், இலக்கியச் செழுமையும் ஆட்சிகளை நடத்திய பான்மையும் கொண்ட, இன்றும் உயிரோடிருக்கின்ற தமிழ் மொழிக்கு இந்நாட்டின் ஆட்சி மொழியாகும் தகுதியுண்டு. அது என் தாய்மொழி என்பதில் பெருமை அடைகிறேன் என்று முழங்கினார் கண்ணியமிகு காயிதே மில்லத்.
  • இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஃபிஜி, மோரீஷஸ், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, டென்மார்க், செஷல்ஸ், நியூஸிலாந்து, வியத்நாம், ஸ்வீடன், கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளில் கணிசமான மக்களால் தமிழ் பேசப்படுகிறது.
  • இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழே தொன்மையாக உள்ளது என்ற கணக்கெடுப்பை கூகுள் நிறுவனம் 2017-ஆம் ஆண்டு  வெளியிட்டது.
  • உலகில் அதிகமான மக்களால் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்கள்தொகை அடிப்படையில் 18-ஆவது இடத்தில் தமிழ் உள்ளது. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றார் மகாகவி பாரதியார்.
  • உலகமெல்லாம் பரவியிருக்கிற, ஏன் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஆட்சிமொழிப் பட்டியலிலேயே இடம்பெற்றுள்ள தமிழ் மொழியை மத்திய அரசு மாற்றாந்தாய்ப் பிள்ளையாகவும், மாநில அரசு அநாதைப் பிள்ளையாகவும் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழ் ஆர்வலர்கள்
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் துறை சார்பில் தமிழர் வாழும் வெளிநாடுகளில் உள்ள தமிழாசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு மொழிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்தப் பணி போதுமானதாக இல்லை. ஹாங்காங்கில் கீழக்கரை, காயல்பட்டினம், நீடூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வைரக்கல் வணிகர்கள் கணிசமாக உள்ளனர். அவர்கள் தமது பிள்ளைகள் தமிழை மறந்துவிடக் கூடாது என்பதற்காக ஞாயிறுதோறும் தமிழ்ப் பள்ளியை நடத்தி வருகின்றனர்.
  • தமது பள்ளிகளில் படிக்க முடியாத, தமிழை, தமிழ்ப் பிள்ளைகள் தனியாகப் பயின்றாலும் தணியாத ஆர்வத்தோடு பயில்வதை நேரில் கண்டோம். அந்தப் பிள்ளைகளுக்கு ஒருநாள் தமிழ் பயிற்றுவித்தும் மகிழ்ந்தோம்.
  • தமிழர்கள் தொழிலதிபர்களாக இல்லாமல், தொழிலாளிகளாக அந்த நாட்டு அரசுகளின் நெருக்கடிகளில் வாழ்பவர்களாக உள்ள நாடுகளில்  தமிழைப் பயிற்றுவிக்கவும், பரப்பவும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
  • புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மொழிகளுக்கான துறைகளை அந்தந்த மொழி பேசும் நாட்டு அரசுகள் ஏற்படுத்தின.  தமிழுக்கான இருக்கை அமைக்க முழுப் பொறுப்பையும் மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தமிழக அரசின் பங்களிப்போடு, தமிழ் நேயம் கொண்ட தமிழர்களின் பங்களிப்போடுதான் அந்த இருக்கை அமைக்கப்பட்டது.
தமிழ் மாணவர்கள்
  • கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தமிழை மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் விகிதம் மிக மிகக் குறைவு. காரணம், வேலைவாய்ப்பின்மை. அனைத்துத் துறையின் கதவுகளும் அடைக்கப்பட்ட பிறகு, தமிழை வேண்டா வெறுப்போடு ஏற்பவர்களும், தலையில் வைத்துக் கட்டப்பட்டதாக உணர்பவர்களும் அதிகம்.
  • தமிழ் படிக்கும் மாணவர்கள் உரிய தகுதிகளோடு வென்றால், அவர்களை இந்தியாவின் இதர மாநிலங்களிலும், வெளிநாடுகளில் தமிழைப் பரப்பவும், பயிற்றுவிக்கவும் பணி வாய்ப்பளிப்பதாக தமிழக அரசு அறிவித்தால், தமிழை விரும்பிக் கற்போரின் விகிதம் உயரும். அதற்கேற்ற வகையில் பாடத் திட்டங்களும் வடிவமைக்கப்பட வேண்டும்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை கணிதம், கணிப் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு இரண்டாண்டுகள் அதாவது நான்கு பருவங்கள் மொழிப் பாடம் உண்டு. வணிகவியல் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மொழிப் பாடம் ஓராண்டு மட்டுமே. இவர்களால் முதுகலைத் தமிழ் பயில முடியாது. ஒரே பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த முரண்பாட்டைக் களைய அரசு முயற்சியெடுத்ததாகத் தெரியவில்லை.
  • தமிழைக் கற்ற ராபர்ட் கால்டுவெல், வீரமாமுனிவர், ஜி.யு.போப், சீகன்பால்கு உள்ளிட்டோர் தமிழில் தன்மயமாகித் தமிழராகவே மாறி, தமிழுக்கு ஏராள பங்களிப்பும் செய்தனர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோ, தம் தலையில் நிறைந்த தாழ்வு மனப்பான்மையால் தமிழுக்குப் பங்கம் செய்து வருகின்றனர். தமிழ் பயின்றோருக்கு சமூக மதிப்பு உயருமானால், தமிழின் நிலை தானே உயரும். அந்த நல்வாய்ப்பை உருவாக்கும் ஆற்றல் அரசுகளின் கையில் உள்ளது.
  • உலகெங்கும் தமிழைப் பரப்புவதற்கும், தமிழ் கற்ற தலைமுறையை உயர்த்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும். சிகாகோவில் வரும் ஜூலை 4 முதல் 6-ஆம் தேதி வரை  நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டிலும் இது எதிரொலிக்க வேண்டும்.

நன்றி: தினமணி (12-06-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories