TNPSC Thervupettagam

தமிழ் மண்ணில் அறிவியல் விதைகள்!

February 28 , 2019 2137 days 1921 0
  • அறிவியல் சார்ந்ததாக நமது சமுதாயத்தை முதலில் அமைத்தல் வேண்டும். அதாவது, அறிவியலை நமது அன்றாட வாழ்க்கையோடு இணைத்து இழுத்துச் செல்லத் தயாராக வேண்டும்.
  • தமிழோடு அறிவியலைப் பிணைத்தாக வேண்டும்.
  • அறிவியல் வளர்ச்சிகள், அவற்றைப் பற்றிய உண்மைகள், தெளிவுகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டிய கட்டுப்பாடு ஏதுமில்லை.
  • அன்றாடம் ஒருவர் பயன்படுத்தும் ஒரு கருவி பற்றிய உண்மைகளை அவர் நாள் முழுதும் பேசும் மொழியில் கிடைக்கச் செய்தால் அது பயனுடையதாக அமையும் என்று அறிவியல் துறையில் ஆழத்தடம் பதித்த கல்வியாளர் பி.கே.பொன்னுசாமி தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார்.
  • அரசியல், ஆன்மிகம், இலக்கியம், இதழியல் தொழிற்சங்கம் ஆகிய துறைகளில் மூழ்கி முத்தெடுத்த திரு.வி.க., நாட்டின் ஜனத்தொகை நாளுக்குநாள் பெருகிச் செல்கிறது. அதற்கேற்றவாறு விளைவு பெருகுகிறதா? இல்லை.
  • இதனால் நாட்டிடைப் பலதிறத் தொல்லைகள் தோன்றியுள்ளன.
  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த ஏற்றங்கொண்டு இறைத்தோமோ அதே ஏற்றங்கொண்டு இப்போதும் இறைக்கிறோம்.
  • எந்த ஏர் பற்றி உழுதோமோ அதே ஏர் பற்றி இப்போதும் உழுகிறோம்.
  • இந்த நிலையில் ஜனத்தொகைக்கேற்ற அளவில் தொழில் முறைகளும் பெருகுதல் வேண்டும்.
  • இதற்குத் துணை புரிதற்கென்றே விஞ்ஞானம் ஏற்பட்டது.
  • மழை, அரிசி, பழம் முதலியவற்றை விஞ்ஞானத்தாலுண்டு பண்ணுங் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
  • இந்தக் காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி மீது கவலை செலுத்தாதிருப்பது தவறு.
  • கிராமம் விஞ்ஞானமயமாதல் வேண்டும் என்று அறிவியலின் அவசியம் பற்றி அழுத்தம் திருத்தமான கருத்தை வெளியிட்டார் திரு.வி.க.
  • இந்தக் கருத்தை அவர் தெரிவித்த காலச் சூழலில் தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சி எந்த அளவு இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
  • தமிழ் மண்ணில் பலநூற்றாண்டுகளுக்கு முன்பே நிலவிய சுதேசிய அறிவியல் சிந்தனையும் அவற்றின் பயனாக இன்றளவும் உலகம் வியக்கும் வண்ணம் நின்று நிலைத்துவிட்ட சாதனைகளும் கருத்தில் கொள்ளத்தக்கவையாகும்.
  • தஞ்சாவூர், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் கோயில்கள் அன்றைய ஆன்மிக நாட்டத்தை மட்டும் நிலைநாட்டுவதாக அமையவில்லை.
  • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணின் மைந்தர்களிடத்தில் பொதிந்து கிடந்த அறிவியல் சிந்தனைகளையும் சேர்த்தே அவை பறைசாற்றுகின்றன.
  • கரிகாலன் கட்டிய கல்லணைதான் தனது பொறியியல் சிந்தனைக்குப் புத்துயிரூட்டியதாக தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலேய தலைமைப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தனது வாழ்க்கைக் குறிப்பில் தெரிவித்துள்ளார். கல்லணைச் சூத்திரம்தான், பிற்காலத்தில் தான் நிகழ்த்திய அத்தனை அறிவியல் மற்றும் நீர்ப் பாசனச் சாதனைகளுக்கும் அடிப்படையென்று பல இடங்களில் பதிவு செய்துள்ளார் சர் ஆர்தர் காட்டன்.
  • நதிநீர் இணைப்பின் முன்னோடியாக விளங்கும் காலிங்கராயன் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே பன்னிரண்டு ஆண்டுகள் முயன்று பவானி, நொய்யல் ஆறுகளை இணைத்தது உலக வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகும்.
  • கடல் நீர் மட்டத்திற்கு மிக உயரமாகத் திகழும் பவானியாற்றிலிருந்து மிகக் குறைவான உயரமுள்ள நொய்யலாற்றுக்கு இடையில் கால்வாய் வெட்டியபோது நேராக வெட்டினால் தண்ணீர் அதிவேகத்தில் சென்று நிமிஷங்களுக்குள் நொய்யலாற்றில் சங்கமித்து கங்குகரை காணாத கடலில் கலந்து விடும் என்பதை உணர்ந்து பாம்புபோல வளைந்து வளைந்து செல்லுமாறு கால்வாயை வெட்டினான் காலிங்கராயன்.
  • தண்ணீர் நின்று நிதானித்துச் சென்றதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன பூமியாக மாறி வீரியம் மிக்க விளைச்சலைக் கொடுத்தது.
  • நேராக 36 மைல்கள் வெட்டினால் போதும் என்றிருந்த கால்வாயை வளைத்து வளைத்து 56 மைல்கள் வெட்டினான் காலிங்கராயன்.
  • சீறிப்பாயும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி, வளைத்து நெளித்துக்கொண்டு செல்ல காலிங்கராயன் பயன்படுத்திய அறிவியல் உத்திகளையும் தொழில்நுட்பங்களையும் அறிந்தவர்கள் வியந்து வியந்து பாராட்டுகின்றனர்.
  • அத்தகைய அறிவியல் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இடையில் அறுபட்டுப் போகாமல் தொடர்ந்தும் விரிந்தும் வளர்ந்தும் வியாபித்தும் விளங்கியிருந்தால் தமிழ் மண் அறிவியல் விளையும் பூமியாகப் பரிணாமம் பெற்றிருக்கும்.
  • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களிலும் அடங்கிக் கிடக்கும் அறிவியல் விந்தைகளை அணுஅணுவாக அடுத்த தலைமுறைக்குப் புரியவைத்து அவர்களிடம் அறிவியல் சிந்தனைகளைத் தூண்டி மிளிரவைக்க பரிபூரண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்று கேட்டால், இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.
  • கரிகாலன், காலிங்கராயன் போன்றவர்களின் வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்ட அளவுக்கு அவர்களிடம் சுடர் விட்டுப் பிரகாசித்த சுதேசி அறிவியல் முயற்சிகளை அடுத்த தலைமுறையினர் முழுக்கப் புரிந்துகொண்டு விழிப்புணர்வு பெற்று அவரவர் காலத்திற்கேற்ற அறிவியல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு செய்யப்பட்டனவா என்ற கேள்விக்கும் இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.
  • இத்தகைய இமாலய அறிவியல் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தியவர்களோ, அவ்வாறு நிகழ்த்தப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த வல்லுனர்களோ எத்தகைய அறிவியல் கண்ணோட்டத்தோடும் கருவிகளோடும் திட்டங்களோடும் இத்தகைய அறிவியல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்பதைத் துல்லியமாக ஆவணப்படுத்தப்படாத குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
  • ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இத்தகைய சுதேசிய அறிவியல் முயற்சிகள் ஏறத்தாழ முடக்கம் பெற்றுவிட்டன.
  • அத்தகைய அறிவியல் புறக்கணிப்புக் காலத்தில் அன்றைய முக்கிய அரசியல் தலைவர் ம.சிங்காரவேலர் அறிவியல் கருத்துகளைப் பரப்புவதில் முனைப்புக் காட்டினார்.
  • கோபர்நிகஸ், கலிலீயோ, புரூனோ, டார்வின் போன்ற அறிவியலாளர்களைப் பற்றியும் அவர்கள் அறிவியல் துறைக்கு ஆற்றிய அரும்பணி குறித்தும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட தியாக வாழ்கையை விளக்கியும் பல இடங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார் சிங்காரவேலர்.
  • விஞ்ஞானச் செய்திகளை அறிவிப்பது மட்டும் விஞ்ஞானத்தின் நோக்கம் என்று நினைப்பது தவறு. சிறுவர்-சிறுமிகளின் மனநிலையைத் திருத்தும், சீரான முடிவுகளை எடுக்கும் திறமையை  விஞ்ஞானம் அளிக்கும்.
  • கவனத்தைத் தூண்டிச் சுறுசுறுப்பாக்கும். இயற்கை விதிகளுக்கு அடங்கி நடக்கச் செய்யும்.
  • உண்மையில், சிறுவர்-சிறுமிகளுக்குப் பண்பாடு அளிப்பதற்கு விஞ்ஞானமே சிறந்த வழி என்று அறிவியல் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் ராஜாஜி.
  • பெரியாரும் அவரின் அடியொற்றிவந்த பலரும் அறிவியல் கருத்துகளை அள்ளித் தெளிப்பதை தமது கடமையாகக் கருதிச் செயல்பட்டனர்.
  • பெரியாரைப் பின்பற்றிய பலர் தங்களது தமிழ்க் குழந்தைகளுக்கு எடிசன், ஆம்ஸ்ட்ராங், வாலன்டினா என்று அறிவியலாளர்களின் பெயர்களைச் சூட்டினர்.
  • அறிவியலறிஞர் ஜி.டி.நாயுடு மேற்கொண்ட அறிவியல் முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் தமிழக அளவில் வலுவான அறிவியல் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களிடையே அறிவியலறிவை மேம்படுத்த வேண்டுமென கங்கனம் கட்டிக் களத்தில் இறங்கியதோடு, அதற்காகவே தன்வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்த பெருந்தகை பெ.நா.அப்புசாமி என்றால் மிகையில்லை.
  • 1917-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை எழுபதாண்டுகளில் பெ.நா.அப்புசாமி எழுதி வெளியான கட்டுரைகளின் எண்ணிக்கை 5,000. இவற்றுள் சுமார் 3,000 கட்டுரைகள்  அறிவியல் கட்டுரைகளாகும்.
  • 200-க்கும் மேற்பட்ட தரமான ஆங்கில அறிவியல் நூல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • இவற்றோடு 25-க்கும் மேற்பட்ட அறிவியல் மூல நூல்களை அப்புசாமி எழுதியுள்ளார்.
  • அடிப்படையில் வழக்குரைஞராகத் திகழ்ந்த இவர், அறிவியல் துறைக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை.
  • எழுத்தாளர் வெ.சாமிநாத சர்மா எழுதிய சார்லஸ் டார்வின், ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், ஜகதீச சந்திரபோஸ், சர் சி.வி.ராமன் ஆகிய அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் தமிழ் வாசகர்களிடையே பரவலான தாக்கத்தை உண்டாக்கின.
  • அவ்வாறே தமிழறிஞராக விளங்கிய மணவை முஸ்தபா அறிவியல் கலைக் களஞ்சியத்தையே உருவாக்கினார்.
  • இவர்களும் இத்தகையோர் பலரும் அறிவியல் தமிழுக்கு வித்திட்டவர்களாக விளங்குகின்றனர்.
  • அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பது போலவே இந்த மண்ணில் அறிவியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி அரசியல் தலைவர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலறிஞர்கள், கல்வியாளர்கள் எனப் பலர் பல்வகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
  • இத்தகைய நீண்ட, நெடிய வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றைய காலகட்டத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப அறம் சார்ந்த அறிவியல் சிந்தனைகளும் கருத்துகளும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படுவது அவசியமாகும்.
  • இன்று தேசிய அறிவியல் தினம்

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories