TNPSC Thervupettagam

தெருக் குழந்தைகளின் நரக வாழ்க்கை!

March 2 , 2019 2135 days 2396 0
  • உலகில் சுமார் 12 கோடி குழந்தைகள் வீடுகள் இன்றி தெருக்களில் வசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
  • உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தெருக் குழந்தைகள் வாழும் நாடு என்ற அவப்பெயரை இந்தியா பெற்றுள்ளது.
  • மும்பை, கொல்கத்தா, தில்லி, சென்னை, கான்பூர், ஹைதராபாத், பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் தெருக் குழந்தைகள் அதிகமாகக் காணப்படுகிறார்கள். தெருக் குழந்தைகள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் நடைபாதைகள்  மட்டுமல்லாமல், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், அங்காடிகள், மேம்பாலங்களின் கீழ், கோயில்கள், குருத்வாராக்கள் என்று பல பொது இடங்களை தங்கள் இருப்பிடமாகக் கொண்டுள்ளனர்.  கிராமங்களிலிருந்தும், சிறு ஊர்களிலிருந்தும்  ரயில் மூலம் பல குழந்தைகள் வீட்டை விட்டு ஓடி வந்து பெரு நகரங்களை வந்தடைகின்றனர்.
  • ஆண்டுதோறும் சுமார் 70,000 முதல் 1,20,000 குழந்தைகள் இந்தியாவின் 50 முக்கிய ரயில் நிலையங்களில் வந்திறங்குகின்றனர்.
  • தெருக் குழந்தைகளை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.
  • முதலாவது வகை, தங்கள் குடும்பத்துடன் நடைபாதைகள் போன்ற பொது இடங்களில் வசிக்கும் குழந்தைகள்; இவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்துடன்  நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நகரத்துக்குப் பிழைப்புத் தேடி புலம் பெயர்ந்தவர்களாக இருப்பார்கள்;
  • இரண்டாவது வகை,  தனியாகவோ அல்லது குழுக்களாகவோ தெருக்களில் வசிப்பவர்கள்; ஓரளவு தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பவர்கள்;
  • மூன்றாவது வகையைச் சார்ந்த குழந்தைகள், குடும்பத்தினருடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் அல்லது யாருமற்ற அநாதைகள்.
  • இந்த மூன்று வகையினரில், உணர்வுப்பூர்வமாகவும், உள ரீதியாகவும் குடும்பத்தினரின் ஆதரவு ஒன்றும் இல்லாமல் தன்னந்தனியாக இந்த உலகில் நீச்சல் போடும் மூன்றாவது வகையைச் சார்ந்த குழந்தை
  • களின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது.
  • குழந்தைகள் தெருக்களையே தங்கள் வாழ்விடமாகக் கொள்வதற்கு வறுமையே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டாலும், குடும்ப உறவுகளின் சிதைவு, குடும்ப வன்முறைகள் போன்ற பிரச்னைகளும் அவர்கள் நடைபாதைகளை நாடுவதற்குக் காரணமாகின்றன.
  • கல்வியில் நாட்டமின்மை, பெற்றோரின் மரணம், மாற்றாந்தாயின் கொடுமை, தந்தையின் குடிப்பழக்கம், பெற்றோரின் கண்டிப்பான கண்காணிப்பு, பெற்றோரிடம் அடி உதைக்கு ஆளாகுவது, குடும்ப உறவினர்கள் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகள் போன்றவை குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப் போவதற்கு முக்கியக் காரணங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  • நகர்ப்புற வாழ்க்கையின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, நகரங்களில் தங்களுக்கு வளமான எதிர்காலம் இருப்பதாக எண்ணி ஏமாந்து போகும் சிறார்கள் எண்ணிலடங்கா.இப்படி நகரங்களுக்கு வந்து சேரும் குழந்தைகள் எந்த வழியிலாவது பணம் சம்பாதித்து தங்களது வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப் படுகிறார்கள்.
  • பிச்சை எடுப்பது, போக்குவரத்து சிக்னல்களில் பொருள்கள் விற்பது, குப்பைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் பொருள்கள், இரும்பு சாமான்களைப் பொறுக்குவது, தெருவோரக் கடைகள், உணவகங்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறைகளில் எடுபிடி வேலை என இந்தக் குழந்தைகள் செய்யாத பணிகளே இல்லை. திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது, போதைப் பொருள்கள் கடத்துவது என்று சட்ட விரோதமான செயல்களுக்கும் இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
  • தெருக் குழந்தைகள் பலர் போதைப் பொருள்களைக் கடத்துவதுடன், தாங்களும் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
  • இந்தக் குழந்தைகள் தங்களது குழந்தைப் பருவத்தை இழக்கிறார்கள்; கல்வி பெறும் வாய்ப்பை இழக்கிறார்கள்.
  • திறந்த வெளியில் வாழும் இவர்கள் மழை, வெயில், கடும் குளிர் போன்ற பருவங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகிறார்கள். கழிப்பிடம், குளிப்பதற்கு மற்றும் குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் போன்ற வசதிகள் இன்றி அசுத்தமான சூழ்நிலையில் வாழும் இந்தக் குழந்தைகள், அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • அப்படி அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் தக்க மருத்துவ உதவி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை.
  • எந்த ஓர் அடையாளமும் இல்லாமல் வாழும் இந்தக் குழந்தைகளுக்கு அரசின் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
  • நடைபாதைகளில் படுத்துறங்கும் இந்தக் குழந்தைகள் சாலை விபத்துகளுக்குள்ளாவதும், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதும் சகஜம்.
  • இத்தகைய குழந்தைகளை பணிக்கு அமர்த்திக் கொள்ளும் முதலாளிகள், காவல் துறையினர் போன்றோர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தயங்குவதில்லை.
  • அடித்து உதைத்துச் சம்பாதிக்கும் சொற்பப் பணத்தைப் பறித்துக் கொள்வது, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவது, சட்ட விரோதமான செயல்களுக்குப் பயன்படுத்துவது என்று பலராலும் இவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
  • பல குழந்தைகள் பாதுகாப்பிற்காக தங்களைவிட வயதில் மூத்தவர்களுடன் ஒரு குழுவாகச் சேர்ந்து வாழ்வதும் உண்டு.
  • ஆனால், அந்த மூத்த தோழர்களே இவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் கொடுமையும் உண்டு.
  • இப்படிப் பெரு நகரங்களில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகளின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மத்திய அரசு தெருக்குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தி வருகிறது.
  • 2009-2010-ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் அந்தந்த நகரங்களில் வாழும் தெருக் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான வசதிகள் போன்றவற்றைப் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்வது,  24 மணி நேரமும் திறந்திருக்கும் உறைவிடங்கள் அமைத்துக் கொடுப்பது, இரவு நேர தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்வது, முறைசாரா கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அளித்தல்,  நோய்கள் வராமல் தடுப்பதற்கு வழிவகுத்தல், ஆறு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை அங்கன்வாடியில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய- மாநில அரசுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் நிதியுதவி அளிக்கிறது.  சலாம் பாலக் டிரஸ்ட், சேவ் தி சில்ரன், ரயில்வே சில்ரன், சேத்னா போன்ற தன்னார்வ நிறுவனங்கள் தெருக் குழந்தைகளுக்காகப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன.
  • இக்கட்டான நிலைமையில் உள்ள குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு 24 மணி நேரம் இயங்கும் சைல்டு லைன் வசதியை மத்திய அரசின் கீழ் இயங்கும்  சைல்டு லைன் ஃபவுன்டேஷன் என்னும் அமைப்பு வழங்குகிறது.
  • வீட்டை விட்டு ஓடி வந்து  பெருநகரங்களில் ரயிலில் வந்திறங்கும் குழந்தைகளை  மீட்டு மறுவாழ்வு அமைத்துக்கொடுக்கும் பணியை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தன்னார்வநிறுவனங்களின் துணையுடன் மேற்கொள்கின்றனர்.
  • முக்கியமான ரயில் நிலையங்களில் பணிபுரியும் இந்தப் படை, நிராதரவாக வந்திறங்கும் குழந்தைகளின் முகவரியைக் கேட்டறிந்து அவர்களைப் பெற்றோரிடம் சேர்க்க முயற்சிக்கின்றனர்.
  • அப்படி குடும்பத்தினரிடம் சேர்க்க முடியாத குழந்தைகளை, தன்னார்வ நிறுவனங்களில் ஒப்படைக்கின்றனர்.
  • எனினும்,  ரயில் நிலையங்களில் பிடிபட்டு திருப்பி அனுப்பப்படும் குழந்தைகள் பலரும் திரும்பி நகரத்திற்கே வந்து சேர்ந்து விடுகின்றனர்.
  • இதற்கு அந்தக் குழந்தைகளின் குடும்பச் சூழ்நிலை ஒரு காரணமாக இருந்தாலும், இந்தக் குழந்தைகள், தங்கள் இச்சைப்படி பெரியவர்களின் கண்காணிப்பு அல்லது கண்டிப்பு இல்லாமல் ஓரளவு  பொருளாதாரச் சுதந்திரத்துடன் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண்பதே முக்கியக் காரணம்.
  • 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகக் காணப்படும் ரயில் நிலையங்கள் இந்தக் குழந்தைகளுக்கு, பயணிகள் விட்டுப் போகும் பத்திரிகைகள், செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் புட்டிகள் சேகரிப்பது, சிறு சிறு பொருள்களை விற்பது போன்ற வாய்ப்புகளை வழங்குவதோடல்லாமல், உண்ண, உறங்க, நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இடமளிக்கிறது.
  • இந்தக் குழந்தைகளை மீட்டு அவர்களைப் பெற்றோரிடம் சேர்க்க முயற்சிப்பது என்பது எல்லா குழந்தைகளின் விஷயத்திலும் சரியான தீர்வாக இருக்க முடியாது என்று ரயில்வே துறையின் தொடர்பில் உள்ள குழந்தைகளின் உரிமைகளுக்காக அமைக்கப்பட்ட அகில இந்திய ஆய்வுக் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • தெருக் குழந்தைகளைப் பொருத்தவரை, அவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அடிப்படை உரிமைகளும் கிடைக்க வழிவகுக்கும் அணுகுமுறையே சிறந்தது என்று தற்போது கருதப்படுகிறது.
  • வீதிகளிலேயே தங்களது வாழ்க்கையைக் கழிக்கும் தெருக் குழந்தைகளின் அவல நிலையைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கவும், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் நாள் சர்வதேச தெருக் குழந்தைகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • எனவே, சமூகத்தின் விளிம்பில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கி, அவர்களை    நல்வழிப்படுத்தி அவர்கள் குற்றவாளிகளாக தலையெடுப்பதைத்  தடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories