TNPSC Thervupettagam

தெற்காசியாவின் சமநிலை!

February 25 , 2019 2146 days 1597 0
  • புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு பரவலான ஆதரவு ஏற்பட்டிருக்கிறது.
  • அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொடுத்திருக்கும் அழுத்தத்தின் காரணமாகத்தான் ஜெய்ஷ் ஏ- முகமது இயக்கத்தின் தலைமையகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது பாகிஸ்தான் அரசு.
  • இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீரில் நிலவும் பதற்றத்தையும் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாத இயக்கங்களின் செயல்களையும் எதிர்கொள்வதுதான் இந்திய அரசு கையாள வேண்டிய ராஜதந்திரம்.
  • சர்வதேச அளவிலான ராஜீய உறவுகள் ஒருபுறம் இருக்க, நம்மைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் மத்தியில் இந்தியா தன்னுடைய நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தி, தெற்காசியாவின் அமைதியான சூழலுக்கு வழிகோல முடியும்.
  • அண்டை நாடான பாகிஸ்தான் மீது படையெடுத்து அடக்கவோ அல்லது பாகிஸ்தானின் அணுகுமுறையை மாற்றவோ இயலாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அண்டை நாட்டை அகன்று போகச் சொல்லவோ, நாம் இன்னொரு பகுதிக்கு இடம் பெயரவோ முடியாது என்கிற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டால், பாகிஸ்தான் பிரச்னை எந்த அளவுக்குச் சிக்கலானது என்பதை உணர முடியும். இந்தியாவை சுற்றியிருக்கும் எல்லா அண்டை நாடுகளுமே ஏதாவதொரு வகையில் சீனாவுக்கு கடன் பட்டவை.
  • "இந்தியா பெரியண்ணன் மனோபாவத்துடன்' செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டுடன் நம்முடன் ஒருவிதத் தயக்கத்துடன்தான் உறவு வைத்துக் கொண்டிருக்கின்றன.
  • பாகிஸ்தான் மட்டுமல்லாமல், நேபாளமும்கூட இந்தியாவைவிட சீனாவுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இருக்கிறது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
  • வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் இப்போதிருக்கும் அரசுகள், சீனாவுடன் தொடர்பு வைத்து இருக்கின்றன.
  • இந்தப் பின்னணியில்தான் நாம் பூடானுடனான நமது உறவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
  • 2007 வரை இந்தியாவின் முழுப் பாதுகாப்பில் இருந்து வந்த இமயமலையிலுள்ள பூடான், அரசமைப்புச் சட்டத்துடன் இயங்கும் மன்னராட்சி முறைக்கு மாறியது முதல், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது.
  • மன்னராட்சி முறையின் கீழ் இயங்கிவந்த பூடான், நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாறியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் வெளியுறவு அணுகுமுறையில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
  • ஆனாலும்கூட, பூடானின் இந்தியச் சார்பு கணிசமாகவே தொடர்கிறது.
  • கடந்த ஆண்டு பூடானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
  • அதனால் இந்திய - பூடான் உறவில் காணப்பட்ட நெருக்கம் குறையக்கூடும் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டது.
  • இந்தப் பின்னணியில்தான் இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவுக்கு வந்த புதிய பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்கின் அரசுமுறைப் பயணம் முக்கியத்துவம் பெற்றது.
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் நடத்தியப் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே இருந்த ஐயப்பாடுகளையும், மனக்கசப்புகளையும் ஓரளவுக்கு அகற்றிவிட்டது எனலாம்.
  • காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, பூடானுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது உள்ளிட்ட சில தவறான கொள்கை முடிவுகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி, பூடானை சீனாவின் நட்புறவை நாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளின.
  • ஆனாலும்கூட, பூடான் பிரதமராகப் பதவியேற்ற பிறகு லோட்டே ஷெரிங்கின் முதல் அரசுமுறைப் பயணம் தில்லியாகத்தான் இருந்தது.
  • தனது வெளியுறவுக்  கொள்கை, உள்நாட்டுக் கொள்கை, தேர்தல் நடத்துதல் ஆகியவற்றில் தன்னிச்சையாக செயல்படும் உரிமையை பூடான், இந்தியாவைச் சாராமல் செயல்படுத்தத் தொடங்கியிருப்பதில் குற்றம் காண வேண்டிய அவசியம் இல்லை.
  • தன்னுடைய பொருளாதார சமநிலைக்கும் இறக்குமதிகளுக்கும் "சார்க்' வரைமுறைகளுக்கு உள்பட்டு இந்தியாவைச் சார்ந்து பூடான் செயல்படுவது, இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு மிகப்பெரிய வலுசேர்க்கிறது என்பதால் பூடானின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
  • பிரதமர் ஷெரிங்கின் இந்திய விஜயத்தின்போது, பூடானின் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு இந்தியா ரூ.4,500 கோடி வழங்க முற்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • அதன்மூலம் இந்தியா - பூடான் என்கிற இரண்டு நாடுகளும் பொருளாதார வளர்ச்சியில் கைகோத்து செயல்பட வழிகோலப்பட்டிருக்கிறது.
  • இதே அடிப்படையில் ஏனைய "சார்க்' நாடுகளுடன் இரு நாட்டு உறவுகளை இந்தியா பலப்படுத்திக் கொள்வதற்கு பூடானுடனான ஒப்பந்தம் வழிகோலுகிறது.
  • டோக்காலாம் பகுதியில் சீனா ஊடுருவ எடுத்துக்கொள்ளும் முயற்சிகளின் பின்னணியில் இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையேயான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை நாம் பார்க்க வேண்டும்.
  • சீனாவுடன் நேபாளம் மிகவும் நெருக்கமாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவுடன் நெருக்கமாக பூடான் செயல்படுவது தெற்காசியாவில் சமநிலையை பாதுகாக்க உதவும்.
  • பூடான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுடனான நமது நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே, தெற்காசியாவில் இந்தியாவின் பாதுகாப்பும், வளர்ச்சியும், தலைமையும் உறுதிப்படும்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories