TNPSC Thervupettagam

தேர்தலுக்குப் பின்னர்...

May 28 , 2019 2040 days 1167 0
  • அண்மையில் நிறைவடைந்த மக்களவைத் தேர்தல் குறித்து கணக்கு- வழக்கு பார்க்க வேண்டியது அவசியம். தேர்தல் குறித்த நிதர்சனமான, கட்சி சாயமற்ற அலசல் அவசியம்.
வாக்குரிமை
  • ஐந்து ஆண்டுகளுக்கு  ஒரு முறை  தேர்தலை நடத்தி முடிப்பதே ஒரு பெரும் சாதனையாகும். வலிமை வாய்ந்த வாக்குரிமையின் மூலம்  அரசுகளை சாமானிய இந்தியர்கள் தேர்வு செய்வது பெருமைக்குரியதாகும். ஆனால், உடனடியாக சீர்செய்யப்பட வேண்டிய ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. தேர்தலுக்கு முந்தைய நாள் வரை ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருந்த அரசியல் கட்சிகள், எவ்விதக் கொள்கை சார்ந்த கோட்பாடுகளின்றி, கைகோர்த்துக் கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிக்கத் துணிகின்றன. குற்றப் பின்னணி உடையவர்கள், எவ்விதக் கூச்சமும் இன்றி அரசியல் கட்சிகளால் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்.
  • இனி, சாமானிய மனிதன் தேர்தலில் நிற்பது என்பதையே நினைத்துப் பார்க்க முடியாதபடி வேட்பாளர்கள் பெரும் தொகையைச் செலவிடுகின்றனர். சாதாரண மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய தலைவர்கள், ஒருவரை ஒருவர், தரம் தாழ்ந்து அநாகரிகமாக விமர்சித்து, மக்களிடம் வாக்கு கேட்டனர். மேலும், மக்களிடையே ஜாதி, மத, இன, மொழி, கலாசார பேதங்களை பெரிதுபடுத்தும் வகையில்  சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவை எல்லாவற்றிலும் மோசமாக, வாக்காளர்களை அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அணுகி பணம் கொடுத்து வாக்கு கேட்பது என்ற நிலை மாறி,  அரசியல் கட்சி தொண்டர்களை வாக்காளர்கள் அணுகி எவ்வளவு பணம் தரப்படும்? எப்போது விநியோகம் நடைபெறும் என்று கேட்டதையும் சில இடங்களில் பார்க்க முடிந்தது.
நடுவுநிலைமை
  • வீட்டுக்கு வீடு சென்று பணம் விநியோகம் செய்வது என்ற நிலை மட்டுமின்றி,  டோக்கன் கொடுத்து கடைகளில் பொருள்கள் வாங்கிக்கொள்ளவும், மது வாங்கி கொள்ளவும், சில இடங்களில் பள்ளிக்கூடங்களில் பெற்றோர் சார்பாக கட்டணம் கட்டுவது என்பது வரை நூதனமான வழிகளில் வாக்குகளுக்கு பணம் தரப்படுவது எனப் பல்வேறு விஷயங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.
  • தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுவது ஒரு பெரும் கரும்புள்ளியாகும். பெரியநிலப்பரப்பு, கோடிக்கணக்கான வாக்காளர்கள், ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள், எப்போது வன்முறை வெடிக்குமோ என்ற இறுக்கமான சூழல், அரசியல் கட்சிகளின் போதுமான ஒத்துழைப்பின்மை எனப் பல சவால்களுக்கிடையே தேர்தலை ஆணையம் செயல்படும்போது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுவது தவிர்க்க முடியாதது.
  • ஆனாலும்,  தேர்தலை நடுநிலையுடன் தேர்தல் ஆணையம் நடத்துவது மட்டும் போதாது; நடுநிலையுடன் செயல்படுகிறது என்ற நம்பிக்கையான  தோற்றத்தை உறுதி செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஆணையத்தின் சுணக்கம்  குறித்து, உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டும் அளவுக்கு அதன் நடவடிக்கை  இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
உடனடி நடவடிக்கை
  • தேர்தல் அட்டவணை  தொடங்கி புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பது வரை, அனைத்துக் கட்சியினருடன் நெருங்கி  ஒருங்கிணைந்து  செயல்பட்டிருந்தால் குற்றச்சாட்டுக்களைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. தேர்தல் ஆணையத்துக்கு வரும் புகார்களை விரைந்து  தீர்க்கும் வகையில், தேர்தலின்போது மட்டுமாவது  நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய  குழுக்களை  அமைக்கலாம். மேலும்  சில கேள்விகளும் எழுகின்றன. இந்தியக் குடிமகனைவிட அதிக உரிமைகள் பெற்றவையாக அரசியல் கட்சிகள் இருப்பது அவசியமா?
  • உதாரணமாக, தனது வருவாய் குறித்த தகவல்களை சாமானிய மனிதன் சரிவரத் தெரிவிக்க வேண்டியது கடமையாகும்; ஆனால், அரசியல் கட்சிகள் தங்களது நிதி ஆதாரத்தை  மறைக்க போதுமான ஓட்டைகளைக் கொண்ட விதிமுறைகள் உள்ளன; மேலும், பெருநிறுவனங்கள் கட்சிகளுக்குத்  தரும் நிதி குறித்த வெளிப்படைத்தன்மை அற்ற நிலை ஏன்  எழுபது ஆண்டுகளுக்கு  பின்னரும் நிலவுகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
நீண்ட கால பிரச்சனை
  • தேர்தல் நேரத்தில் பிரசாரத்துக்குச் சாதகமான சூழலை  ஆளும் கட்சியினர் ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு, இந்தத் தேர்தலில் மட்டுமல்லாது நீண்ட காலமாக உள்ள ஒன்று. இதே போன்று பிரதமருக்கு சிறப்புச் சலுகைகள் மற்றும் உரிமைகள் தேர்தலின்போது அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், இவற்றுக்கான  மாற்று இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. தேர்தல் சமயத்தில் குறுகிய காலத்துக்கு குடியரசுத் தலைவர், நீதிபதிகள், அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழுவின் மூலம்  காபந்து அரசு நடத்தலாம்  என்ற  யோசனைகூட  வெகு காலத்துக்கு முன்னரே வைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை கவனிக்கப்படாத ஒன்றாகும்.
  • தேர்தல் நடைமுறை குறித்த குற்றச்சாட்டுக்களும்,அவற்றுக்கான மாற்று யோசனைகளும், தேர்தல் நடந்து முடிந்த சில காலத்துக்குள்  மறக்கப்படுவதும், பின்னர் அடுத்த தேர்தலின்போது தூசி தட்டி எடுக்கப்படுவதும் வழக்கமாகி விட்டது. இந்த முறையாவது அரசியல் கட்சிகளின் நிதி குறித்த வெளிப்படைத்தன்மை, வாக்குக்குப் பணம் அளித்தால் கடும் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் ஆலோசிக்கப்பட்டு அடுத்த தேர்தலிலாவது  நடைமுறைக்கு வரும் என நம்பிக்கை கொள்வோம்.
  • மேலும், தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்கு இடையே இருந்த வெறுப்புச் சூழல் மாறும் வகையில்  விரிசல்கள் சரி செய்யப்பட்டு, இணக்கம் வலுப்பெற புதிய அரசு முயற்சிக்க வேண்டும்.
  • தேர்தல்கள் வரும்-போகும்; அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வரும்-போகும்; ஆனால், மக்களிடையே இருக்கும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் அழிந்துவிடக் கூடாது.

நன்றி: தினமணி (28-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories