- 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. வரையறுக்கப்பட்ட காலஇடைவெளியில் தவறாமல் தேர்தல்கள் நடத்தப்படுவதுதான் ஜனநாயகத் தேர்தல் முறையின் அடிப்படை. தற்போது நடந்து முடிந்திருக்கும் 17-ஆவது மக்களவைத் தேர்தல் வரையில், தேர்தல் மூலம் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் ஆட்சி மாற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடிந்திருக்கிறது.
தேர்தல் – போட்டி
- தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி பெரும்பாலான தொகுதிகளில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்க்க முடியும் என்பதையும், ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியினரும் தங்களது கருத்துகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து அதன் அடிப்படையில் போட்டியிட முடியும் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. இதற்குப் பெயர்தானே ஜனநாயகம்.
- அதே நேரத்தில் தரம் குறைந்த தாக்குதல்கள், முகம் சுளிக்க வைக்கும் பரப்புரைகள் ஆகியவற்றால் ஜனநாயக நாகரிகத்தை தேர்தல் பிரசாரம் குலைத்ததையும் சந்தித்தோம். மத ரீதியிலான, ஜாதி ரீதியிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்த்தோம்.
மக்களின் பிரச்சனைகள்
- வேலையில்லாத் திண்டாட்டம், வேளாண் இடர், வேளாண்மை சார்ந்த சமூகத்திலிருந்து தொழில் துறை சார்ந்த சமூகமாக மாறிவரும் போக்கு, நகரமயமாதல் உள்ளிட்டவை பிரசாரத்தில் முக்கியத்துவம் பெறாமல் போனதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
- முன்னெப்போதும் இல்லாத வகையில் 17-ஆவது மக்களவைக்கான தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு விமர்சிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பு என்கிற மரியாதை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. தேர்தல் ஆணையத்தின் சில முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தது போன்ற தோற்றத்தைத் தவிர்த்திருக்க வேண்டும். ஏழு கட்டங்களாக மக்களவைக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டதும், முக்கியமாக உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பலகட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டதும் பிரதமரின் பிரசாரத்துக்கு உதவுவதாக அமைந்தது என்கிற குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போதெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் குறைபாடு குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில செயல்பாட்டுக் குறைகள் காணப்பட்டனவே தவிர, பெரும்பாலான இயந்திரங்கள் குறித்து பரவலான குற்றச்சாட்டு எதுவும் எழவில்லை.
ஒப்புகைச் சீட்டு
- ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. அவை உடனடியாக மாற்றப்பட்டன. விரல் விட்டு எண்ணும் அளவிலான வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு செயல்படவில்லை. அந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு ஆணையம் உத்தரவிட்டது. 4 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது அவற்றில் சில செயல்படாமல் இருப்பதைக் குறை கூறுவது தவறு.
- ஏழு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில்தான், எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த அச்சத்தை எழுப்ப முற்பட்டிருக்கின்றன. அதுவும்கூட, வாக்குக் கணிப்பு முடிவுகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக வெளிவந்தது முதல், எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முன்னிறுத்தி விமர்சிக்க முற்பட்டிருப்பது நியாயமான அச்சத்தாலா அல்லது தோல்வி பயத்தின் வெளிப்பாடா?
தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஒப்புகைச் சீட்டுகளை எண்ணிய பிறகே, ஏனைய வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை
நடத்தப்பட வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்திருக்கிறது. இதுபோன்ற நிர்வாக நடைமுறைகளில் முடிவெடுக்கும் உரிமை ஆணையத்திடம் இருப்பதுதான் சரியாக இருக்கும்.
- தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதும், அது ஊடக வெளிச்சம் பெற்றிருப்பதும் இந்திய ஜனநாயகத்துக்கு வலு சேர்ப்பதாக இல்லை. தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் கருத்து வேறுபாடு தெரிவிப்பதில் தவறும் இல்லை, வியப்பும் இல்லை. ஒருவர் மட்டுமே தேர்தல் ஆணையராக இருந்த நிலைமையை மாற்றி, தலைமைத் தேர்தல் ஆணையரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருப்பதே, கருத்து வேறுபாடுகள் விவாதிக்கப்பட்டு பெரும்பான்மை முடிவின்படி முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
விதிமுறை மீறல்
- பிரதமர் குறித்த தேர்தல் நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மை முடிவின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா முடிவெடுத்திருக்கிறார். இந்த நிர்வாக முடிவு குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்வி எழுப்பி மாற்றுக் கருத்து குறித்துத் தெரிந்துகொள்ள முடியும்.
- தேர்தல் ஆணையம் எடுக்கும் ஒவ்வொரு நிர்வாக முடிவிலும், ஆணையர்களுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளை ஊடகங்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை அது குலைக்கக்கூடும்.
தேர்தல் முடிவுகள் ஒருபுறமிருக்க, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்தும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருப்பது இந்தியஜனநாயகத்துக்கு வலு சேர்க்காது.
நன்றி: தினமணி (23-05-2019)