பூமிப்பந்தில் எந்தத் தேசமும் செய்யாத புரட்சியை முதல் பொதுத் தேர்தலிலேயே செய்த நாடு இந்தியா. மேற்கத்திய நாடுகளில்கூட சொத்துள்ள ஆண்களில் தொடங்கி தொழிலாளர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் படிப்படியாகவே வாக்குரிமை வழங்கப்பட்டது. 1952-இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் ஏழை, பணக்காரன், ஜாதி, மதம், இனம், மொழி, பாலினம், கல்வி பார்க்காமல் 21 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை விடாப்பிடியாக நின்று சாத்தியமாக்கினார் ஜவாஹர்லால் நேரு. நாடு குடியரசு ஆவதற்கு முன்பு, வரி செலுத்துவோருக்கு மட்டும்தான் வாக்குரிமை. ஆங்கிலேயர் நடத்திய தேர்தல்களில் எல்லோருக்கும் பங்கில்லை.
கல்வியறிவு
கல்வி அறிவு மேம்பட்ட நவீன யுகத்தில்கூட வாக்களிக்க வைப்பதற்கு தேர்தல் ஆணையம் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது என்றால், முதல்முறையாக தேர்தல் நடந்தபோது எப்படி இருந்திருக்கும்?
மொத்த வாக்காளர்கள் 17 கோடியே 60 லட்சம் பேர். இவர்களில் 85% பேர் கல்வி அறிவற்றவர்கள். பெண்கள் மட்டுமல்ல; ஆண்களில் பலரும்கூட பெயரைச் சொல்லவே தயங்கினர். குக்கிராமங்களில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கச் சென்றவர்களைப் பார்த்து நமக்கெதற்கு வம்பு என்று தலைதெறிக்க ஓடினர்.
இதனால், எல்லோரையும் சேர்த்து தேர்தல் நடத்துவது ஜவாஹர்லால் நேருவின் வேண்டாத வேலை என்று பலரும் கிண்டலடித்தனர்.
நிச்சயமாக இது நடக்காத காரியம் என்ற எண்ணம் ஏறத்தாழ அனைத்து அறிவுஜீவிகளிடமும் இருந்தது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்கூட, நாம் இருட்டில் தாவுகிறோமா? என்று கவலைப்பட்டார். பதவி போன கோபத்தில் இருந்த பழைய மன்னர் ஒருவர், இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஆனால், தேர்தல் நடந்து முடிந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவும் ஆகப் பெரிய ஜனநாயக சக்தியாக எழுந்து நின்றது. உலகிலேயே எங்கும் நடக்காத கேலிக்கூத்தாக இது ஆகிடுமோ என்று முதலில் சந்தேகித்த அமெரிக்கா, இந்தியர்களின் புத்திசாலித்தனத்தை படிப்பறிவை வைத்துச் சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என வாக்குப்பதிவுக்குப் பின்னர் அசடு வழிந்தது.
அதற்கு 36 ஆண்டுகள் கழித்து, ஜவாஹர்லால் நேருவின் பேரன் ராஜீவ் காந்தி வாக்குரிமைக்கான வயதை 18-ஆகக் குறைத்தபோது ஆதரவும், எதிர்ப்பும் இருக்கவே செய்தது. இந்த நாட்டின் இளைஞர்கள் மீது நாம் வைத்திருக்கும் முழு நம்பிக்கையின் வெளிப்பாடு என்று ராஜீவ் காந்தி அப்போது வர்ணித்தது ஒன்றும் வீண் போகவில்லை. இதோ 21-ஆம் நூற்றாண்டில் வல்லரசு கனவோடு நடைபோடுகிற இடத்தில் வந்து நிற்கிறோம்.
ஜனநாயகம்
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஜனநாயகத்தையும் அணையா விளக்காக கைகளில் ஏந்தியிருக்கிறோம். மகிழ்ச்சி. எனினும், வாக்களிப்பவருக்கு வயது மட்டுமே அடிப்படைத் தகுதி என்பதுபோல அதனைப் பெறுகிறவருக்கும் அந்தத் தகுதி ஒன்றே போதுமா என்று விவாதிக்க வேண்டிய நேரம் இது.
முதலில் வயது. தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது போலவே எல்லாப் பொறுப்புகளுக்கும் ஓய்வு வயது என்பதை முடிவு செய்வதும் அவசியம். மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரைப் போன்று வாழ்வின் கடைசி வரை பொதுவாழ்வில் இருப்பதையோ, மக்களுக்காக உழைப்பதையோ தடுக்க வேண்டியதில்லை.
தேர்தலில் போட்டியிட்டு பதவிகளுக்கு வருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு வைக்க வேண்டும். அது 60-ஆகவோ அல்லது 65-ஆகவோ இருக்கலாம். முதுமையில் ஏற்படும் உடலியல், உளவியல் பிரச்னைகள் என்பது அனைவருக்கும் பொதுவானவையே. அதனால்தான் அரசுப்பணிகளில் ஓய்வு பெறும் வயதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.
முன்பெல்லாம் இதில் அவ்வளவு உறுதியாக இல்லாத தனியார் நிறுவனங்களும் இப்போது ஓய்வு வயது வந்தவுடன் பலரை வீட்டுக்கு அனுப்புவதில் தெளிவாக இருக்கின்றன.
அதிகாரிகள், ஊழியர்களுக்கே இப்படி என்றால் அமைச்சர், முதல்வர், பிரதமர் போன்ற உயர் பதவி நிலையில் ஓய்வு வயதின் தேவை அதிகம்தானே. நாட்டின், மாநிலத்தின் நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் இவர்கள் எடுக்கும் முடிவுகளில் அடங்கியுள்ளது எனும்போது சரியான உடல், மனநிலையில் அவர்கள் அதனைச் செய்ய வேண்டுமல்லவா? இன்றைக்கு இந்தியா முழுக்க அரசியலில் கோலோச்சுபவர்களில் 90%க்கும் மேலானவர்கள் 60 வயதைத் தாண்டியவர்கள். எந்த வேலைக்கும் ஓய்வு வேண்டும். சாகும் வரை வேலை செய்ய முடியாது.
அவர்களின் அனுபவம் வீணாகிவிடுமே என்றால் அதைச் சொல்வதற்கு தனி ஆலோசனை அமைப்பை உருவாக்கலாம். அதில் தெரிவிக்கப்படும் கருத்துகளை ஆட்சியில் இருப்பவர்கள் முன்னுரிமை கொடுத்துப் பரிசீலிக்கலாம். மூத்தோர் சொல் வார்த்தையே அமிர்தம். அவர்களே நேரடியாகச் செய்ய வேண்டும் என்பதில்லை.
அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஓரங்கட்டுவதற்காக கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் பாஜகவில் 75 வயதுக்கும் மேற்பட்டோருக்கு பதவி இல்லை என்பது சிறந்த முன்னோட்டம். இருந்தாலும் 75 வயது என்பது மிகவும் அதிகம். அதனால் பெரிய பலன் விளையாது. கட்சிகளில் வயது வரம்பு கொண்டுவருவதைத் தாண்டி அதனைச் சட்டமாக்குவதே சரி.
வயதுக்கு அடுத்ததாக கல்வித் தகுதி. இதில் நிறைய எதிர் கருத்துகள் இருக்கக்கூடும். படிக்காத மேதைகளின் நல்லாட்சியையும், மெத்தப் படித்த மேதாவிகளின் ஊழலையும் நிர்வாகத் திறமையின்மையையும் பார்த்த நாடு இது. படிப்புக்கும் மக்கள் மீதான அக்கறைக்கும், அற்புதமான செயல்திறனுக்கும் தொடர்பில்லை. மாநில, மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்களை வாங்கி, டாக்டராவேன், விஞ்ஞானியாவேன் என்று பேட்டி கொடுத்தவர்களைவிட சத்தமே இல்லாமல் சாதித்தவர்களே அதிகம். வெறும் படிப்பு மட்டுமே தலைவராகும் தகுதியைப் பெற்றுத் தந்துவிடாது. அத்தனையும் சரிதான்.
விதிவிலக்குகள்
ஆனால், விதிவிலக்குகள் எப்போதும் விதியாகாது . வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற ஒரு தேசத்தின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாவது பெற்றிருப்பது காலத்தின் தேவை.18% கல்வி அறிவு பெற்ற நாடாக இருந்தபோது கொண்டுவந்த சட்டங்களையே இப்போதும் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. 2018-இன் இறுதியில் இந்தியா 74% பேர் கல்விஅறிவு பெற்ற நாடு. இதனை 100% ஆக்குவதற்கான அடிப்படைப் பணியை இங்கிருந்து ஆரம்பிக்கலாம். இதனால், ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. நிச்சயமாக குடியாட்சியை வலுப்படுத்தவே செய்யும்.
இதற்கான தொடக்கத்தை 2014-இல் ராஜஸ்தான் அரசு மேற்கொண்டது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆண்களுக்கு 10- ஆம் வகுப்பும், பெண்களுக்கு 8-ஆம் வகுப்பும் அடிப்படைத் தகுதி என சட்டமியற்றப்பட்டது. 2015-இல் ஹரியாணா மாநிலம், உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிட 10-ஆம் வகுப்பைக் கட்டாயமாக்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது முதலில் கவலை தெரிவித்த நீதிபதிகள், கல்விதான் நவீன யுகத்தில் நல்லது, கெட்டதுகளைப் பகுத்தறிகிற அறிவைத் தரும்; அதனால் இந்தச் சட்டம் செல்லும் என 2017-இல் தீர்ப்பளித்தனர்.
மகிழ்ச்சியடைந்த ஹரியாணா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளுக்கும் கல்வித் தகுதி நிர்ணயிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இப்படியோர் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதற்கான வேலைகளைத் தொடங்குவதற்குச் சரியான தருணம் இது. குறைந்தது ஒரு பட்டப்படிப்பு என்பதை உயர் பதவிகளுக்கு கட்டாயமாக்கலாம்.
சீர்திருத்தம், புரட்சி, வளர்ச்சி என்கிற வார்த்தைகளில் இத்தகைய முயற்சிகளும் அடங்கும். இதனால் மழைக்கும் பள்ளிக்கூடத்து பக்கம் ஒதுங்காத அரசியல்வாதிகளை ஐ.ஏ.எஸ். போன்ற உயர் அதிகாரிகள் தாழ்ந்து பணிந்து வணங்கி நிற்க வேண்டியிருக்கிறதே என்ற கிண்டலாவது நிற்கட்டுமே.
வயது, கல்வி என்கிற இரண்டு முக்கிய அம்சங்களில் எடுக்க வேண்டிய முடிவுகளைவிட, முக்கியமாக ஒருவர் ஒரு பதவியை இரண்டு முறைக்கு மேல் வகிக்கக் கூடாது என்று சட்டம் போடுவது அவசரத் தேவை. கெட்டவற்றுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளை உதாரணம் சொல்லும் நாம், அரசியலைக் கொஞ்சமேனும் தூய்மையாக்கி, அடுத்தடுத்த தலைமுறைகளின் கைகளில் ஒப்படைப்பதற்கு வழி செய்யும் இந்தப் பெரும் மாற்றத்தை ஏன் உடனே செய்யக் கூடாது?
இந்திய ஜனநாயகத்தை இன்னோர் உயரத்துக்கு எடுத்துச் செல்லும் இந்த மூன்று பெரும் மாற்றங்களையும் துணிந்து செய்வதற்கு ஜவாஹர்லால் நேருவைப் போன்ற துணிச்சலான, தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர் வேண்டுமே!