TNPSC Thervupettagam

தேவை குறைந்தபட்ச வருமானம்

March 15 , 2019 2130 days 1835 0
  • தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மக்களுக்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்தி வருகின்றன. 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கான ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதரவு திட்டத்தை (பிஎம்-கிசான் சம்மான்) மத்திய அரசு தொடங்கிவைத்துள்ளது.
திட்டங்கள்
  • வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கிவைத்துள்ளது. இதேபோன்று, விவசாயிகளுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கும் ரைது பந்து திட்டத்தை தெலங்கானா அரசும், காலியா திட்டத்தை ஒடிஸா அரசும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
  • சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் பயனடையும் வகையிலான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வரும் அதே வேளையில், அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழத் தொடங்கியுள்ளது.
குறைந்தபட்ச வருமானம்
  • குறைந்தபட்ச வருமானம் என்பது நாட்டிலுள்ள அனைவருக்கும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி குறைந்தபட்சத் தொகையை அளிக்கும் திட்டமாகும். நாட்டிலுள்ள சுமார் 135 கோடி மக்களுக்கும் குறைந்தபட்ச வருமானத்தை எப்படி அளிப்பது? அந்தத் தொகையைத் தவறான வழிகளில் மக்கள் செலவிட மாட்டார்களா?
  • அரசே அனைவருக்கும் உதவித்தொகை வழங்கிவிட்டால், யாரும் வேலைக்குச் செல்ல விரும்பமாட்டார்கள் என்று இந்தத் திட்டத்துக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளும், கேள்விக் கணைகளும் தொடுக்கப்பட்டாலும், நாட்டில் வேலைவாய்ப்புகள் பெரிதும் குறைந்துள்ள நிலையிலும், மக்களிடையே காணப்படும் பொருளாதார சமத்துவமின்மையைக் களையும் நோக்கிலும், இந்தத் திட்டம் குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணம் தற்போது எழுந்துள்ளது.
  • பணிக்குச் செல்லும் 15 முதல் 59 வயதுடைய மக்களை அதிகம் கொண்டுள்ளது நம் நாடுதான். ஆனால், தற்போது இயந்திரமயமாதல் உள்ளிட்டவை காரணமாக வேலைவாய்ப்புகள் மிகப் பெரிய அளவில் உருவாகாத நிலையே நாட்டில் காணப்படுகிறது.
  • பட்டப்படிப்பு முடித்த பெரும்பாலோர் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்குச் செல்வதும், பலர் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருவதும் அதிகரித்து வருகிறது. அதிலும் நடுத்தரக் குடும்பங்களின் நிலை பரிதாபமான நிலையில் உள்ளது.
புள்ளிவிவரம்
  • கடந்த 2012-ஆம் ஆண்டு கணக்குப்படி, நாட்டில் சுமார் 22 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
  • இந்த நிலையைப் போக்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து குறைந்தபட்ச வருமானத்தை மக்களுக்கு வழங்க முயற்சி செய்ய வேண்டும். இந்தத் தொகையானது மிக அதிகபட்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
  • அவர்களின் அன்றாடத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் வகையில் இருந்தாலே போதுமானது.
  • அப்படி வழங்கினால், நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் பணி தேடுவோர் ஆகியோரின் அன்றாடத் தேவைகள் பூர்த்தி அடைந்து,  நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாமல் வளரும் சூழல் உருவாகும். குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் குறையும். அவர்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலத்தை அவர்களே திறம்படக் கவனித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பணி தேடுவோர் மிகுந்த நம்பிக்கையுடன் பணி தேட முயற்சி செய்வர்.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களுக்கு அளித்து வரும் மானியங்கள் நாளடைவில் குறைந்துவிடும். ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கான போஷான் அபியான் திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறையும்.
  • மக்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச வருமானத்தை அவர்கள் செலவிடும்போது காய்கறிகள், மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வோரின் வருவாய் அதிகரிக்கும். அந்தப் பொருள்களுக்கான தேவையும் அதிகரித்து, அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள், நிறுவனங்கள் உள்ளிட்டோரின் வருமானமும் அதிகரிக்கும்.இந்த வருமானத்தை அவர்கள் மேலும் முதலீடு செய்யும்போது, தொழில் வளர்ச்சி அடையும். இதனால், புதிய வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உருவாகும். மொத்தத்தில் பொருளாதாரம் உயர்ந்து நாடும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். இந்தத் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் சிலவும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைத் திறம்படக் களைய வேண்டியது அரசுகளின் கடமையாகும்.
அரசுப் பணி
  • நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் குறைந்தபட்ச வருமானத்தை வழங்குவது அரசுகளுக்கு இயலாத காரியம். எனவே, அரசுப் பணியில் இருப்போர், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோரைத் தவிர்த்துவிட்டு மற்றவர்களுக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசுகள் முயற்சி செய்யலாம்.
  • ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் தகுந்தாற்போன்று, மிகக் கவனமான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம். இந்தப் பணத்தைச் சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, அவற்றைத் தவிர்ப்பதற்காகக் குடும்பத்திலுள்ள பெண்களின் வங்கிக் கணக்குக்கு இந்தத் தொகையைச் செலுத்தலாம்.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முன் அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் உள்ளிட்டவற்றின் தரத்தை அதிகரிக்க வேண்டியது அரசுகளின் தலையாய பணியாகும். இல்லையேல், அரசு வழங்கும் குறைந்தபட்ச வருமானம், மருத்துவ சிகிச்சைக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் செலவிடப்பட்டு திட்டத்தின் நோக்கம் முழுப் பயனளிக்காமல் போய்விடும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பான செயல்திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம். அரசுக்கான வருமானத்தை அதிகரிக்கும் வழிகளையும், செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளையும் அரசுகள் முன்னெடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories