TNPSC Thervupettagam

நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை எப்போது அதிகரிக்கும்?

April 1 , 2019 2112 days 1384 0
  • நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில், சுமார் 5 கோடி புதிய வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் முதன்முறையாக வாக்களிக்கவரும் வாக்காளர்கள், தங்கள் கனவுகளைப் பிரதிபலிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். இளம் தலைமுறைத் தலைவர்கள்தான் தங்கள் எதிர்பார்ப்புகளை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுவதில் வியப்பேதும் இல்லை. ஆனால், அரசியல் கட்சிகளின் கணக்குகளில், தலைவர்களின் வயதுகளுக்கு மட்டும் வரம்பே இருப்பதில்லை.
16 வது மக்களவைத் தேர்தல்
  • பதவிக்காலம் முடியும் 16-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 12 பேர் மட்டுமே 30 வயதுக்கும் குறைவானவர்கள். 204 பேரின் வயது 30 முதல் 55 வரை. 212 பேர் 56 முதல் 70 வயது வரையிலானவர்கள். 41 பேரின் வயது 70-க்கும் மேல். இந்திய மக்கள்தொகையில் 50%-க்கும் கீழே 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்னும்போது அதைப் பிரதிபலிக்கும் வகையில் வேட்பாளர்களின் வயதும் இருக்க வேண்டும். ஆனால், எத்தனைக் கட்சிகள் இதைக் கருத்தில் கொள்கின்றன என்பது கேள்விக்குறியே!இன்றைக்கு இளைய சமுதாயத்தினரில் 80% பேர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதன்மூலம் நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வதாக, சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. புதிய வாக்காளர்களில் 90%-க்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, இளைஞர்களுக்குப் போதிய வாய்ப்பு தருவதில்லை. அப்படியே தந்தாலும் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளுக்கே பெரும்பாலும் வாய்ப்புகள் சென்றடைகின்றன.
  • வயது முதிர்ந்த தலைவர்களின் அரசியல் அனுபவம் அவசியமானது என்றாலும் மூப்பின் காரணமாக எழும் உடல் உபாதைகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபடுவது சிரமம். சுற்றுப்பயணம் செய்ய முடியாது. நினைவாற்றல் குறையவும் வாய்ப்பு உண்டு. உடலுக்கும் மனதுக்கும் மூப்பு சோர்வைக் கொண்டுவந்துவிடுகிறது. எல்லா துறைகளிலும் ஓய்வுபெறும் வயதை 58 அல்லது 60 என்று நிர்ணயித்துவிட்டு அரசியலுக்கு மட்டும் ஓய்வுபெறும் வயது இல்லை என்பது விந்தைதான்.
மற்ற நாடுகளில்
  • அமெரிக்காவில் இருப்பதைப் போல நம் நாட்டிலும் இரண்டு முறை அல்லது பத்தாண்டுகளுக்கு மேல் யாரும் மத்திய, மாநில அமைச்சர்களாகவோ, முதல்வர்கள், பிரதமர்களாகவோ பதவி வகிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றுவதைக் குறித்தும் பரிசீலிக்கலாம். இதனால், குறைந்தபட்சமாக நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலாவது இளைஞர்கள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories