TNPSC Thervupettagam

நாம் தண்ணீர்க் காவலர்களாக மாற வேண்டிய தருணம்

May 17 , 2019 2050 days 1392 0
  • ஒவ்வொரு கோடையின்போதும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதைத் தமிழ்நாடு இயல்பாக்கிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. வெளியிலிருந்து வரும் ஒருவர் தலைநகர் சென்னையில் இரவில் உள்புறமாகப் பயணித்தால், தெருக்களை அடைத்துக்கொண்டு தண்ணீருக்காக நிற்கும் பெண்களின் வரிசையையும் அவர்கள் படும் பாட்டையும் பார்த்து அதிர்ச்சியும் கலக்கமும் அடையக்கூடும். உள்ளூரில் அது பெரிய சலனங்கள் எதையும் உருவாக்கவில்லை; இது சகஜம் என்பதுபோலவே கடக்க முனைகிறார்கள். நம்ப முடிகிறதா? சென்னையில் மாதம் ரூ.5,000 வரை தண்ணீருக்காகச் செலவிடுகின்றன பல நடுத்தரக் குடும்பங்கள். கொடுமை என்னவென்றால், மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையில் இது எள் முனையளவும் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை.
  • சென்னை மட்டும் அல்ல; தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் அல்லாடுகின்றன. அச்சுறுத்தும் விஷயமாக நிலத்தடி நீர்மட்டம் வீழ்ந்திருக்கிறது. பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்த ஒரு ஆண்டுக்குள் மட்டும் பெரம்பலூரில் 5 மீட்டர்; திருவண்ணாமலையில் 4.55 மீட்டர்; வேலூரில் 3.27 மீட்டர்; தர்மபுரியில் 3.13 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் கீழே போயிருக்கிறது.
அரசின் கண்கள் திறந்திருக்கின்றனவா?
  • மிகுந்த கவலையளிக்கும் ஒரு விவகாரத்தைத் தமிழ்நாடு அரசு கையாண்டுவரும் அணுகுமுறை இந்த அரசுக்குக் கண்கள் திறந்துதான் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. சென்ற பத்தாண்டுகளை எடுத்துக்கொண்டால், தண்ணீர்த் தட்டுப்பாடு நாளுக்கு நாள் உக்கிரமடைந்துவரும் ஒரு பிரச்சினை என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அரசு ஒவ்வொரு ஆண்டும் அதை அவ்வப்போதைய ஒரு பிரச்சினையைப் போலவே அணுகிவருகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு தன்னுடைய நிர்வாகத்தின் தோல்வி என்பதையும் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
  • மக்களும், ‘நமக்குத் தேவையான தண்ணீர் எங்கிருந்து வந்தால் என்ன; இன்றைய தேவைக்கு நம் வீட்டுக்குத் தண்ணீர் வந்ததா; அடுத்த வேலையைப் பார்!’ என்ற மனோபாவமே பொதுவில் வெளிப்படுகிறது. சென்னையையே எடுத்துக்கொண்டால் சென்னை வாசிகள் இன்று பயன்படுத்தும் தண்ணீரில் ஆகப் பெரும்பான்மையான நீர் வெளியூர்களிலிருந்து வருவது; நமது சொந்த நீராதாரம் அற்றுப்போய்க் கொண்டிருக்கிறதே; இரவல் தண்ணீர் ஒரு நிரந்தரத் தீர்வா என்ற கேள்வியும் வெளிப்படவில்லை.
  • சமீபத்தில், உலகின் கவனத்தை ஈர்த்த தென்னாப்பிரிக்க நகரமான கேப் டவுன் எதிர்கொண்ட தண்ணீர்ப் பஞ்சத்தை அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாத நிலையை நோக்கி நகரம் செல்லக்கூடும் என்ற அபாயகரமான சூழலை அந்நகரம் எதிர்கொண்டிருந்தது. அதை எப்படி எதிர்கொண்டன தென்னாப்பிரிக்க அரசும் சமூகமும்?
  • தேசியப் பேரிடராக அதைக் கருதியது அரசு. ஒருபுறம், அப்படியான வறட்சி ஏற்பட்டால் தண்ணீருக்காக செயற்கை மழை வழியே தண்ணீரை அறுவடை செய்வது, அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை இழுத்துவருவது என்றெல்லாம் யோசித்தவர்கள், மறுபுறம் கையில் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதில் பெரும் சிக்கன முறைமையை மக்களிடம் கொண்டுவந்தார்கள்.
  • கலிஃபோர்னியாவின் குடிமகன் ஒரு நாளைக்கு சராசாரியாக 321 லிட்டர் தண்ணீரை உபயோகப்படுத்திக்கொண்டிருந்த நாட்களில், கேப் டவுன்வாசிகளுக்கான ஒரு நாளைக்கான தண்ணீர் ரேஷன் 50 லிட்டர் என்று வரையறுத்தது அரசு. இது ஒரு தொடக்கப்புள்ளிதான். முக்கியமான திருப்பம், மக்களிடம் தண்ணீர்ப் பயன்பாடு தொடர்பில் ஒரு விழிப்புநிலை உண்டானது.
ஒட்டுமொத்த சமூக விழிப்பு
  • ஏழை, பணக்காரார்கள் என வேறுபாடு பாராது எல்லாம் இணைந்த தண்ணீர் சேமிப்பு இயக்கம் தொடங்கியது. தண்ணீர் வீணாகக் காரணமாகும் ஒழுகும் குழாய்களைச் சீரமைத்தார்கள். ஷவர் குளியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். பாத்திரம் கழுவும்போது குழாயிலிருந்து நேரடியாகத் தண்ணீரைத் திறந்துவிட்டபடி கழுவாமல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிறைத்து, அதைக் கொண்டு பயன்படுத்தினார்கள். நீளமான முடி இருந்தால் குளிக்கையில் அதிகமாகத் தண்ணீர் செலவாகும் என்று முடியை வெட்டிக்கொள்ளத் துணிய பெண்கள் தலைப்பட்டார்கள்.
  • ஒட்டுமொத்த சமூகமும் விழித்துக்கொள்வது என்பது இதுதான். ஒரு நொடிக்கு ஒரு துளி ஒழுகும் ஒரு தண்ணீர்க் குழாயால் ஒரு நாளைக்கு 86,400 துளிகள் வீணாகின்றன. வாழ்வில் எத்தனை குழாய்களிலிருந்து தண்ணீர் தேவையின்றி கொட்டிக்கொண்டேயிருப்பதை எவ்விதக் குற்றவுணர்மின்றிக் கடக்கிறோம்? கேப் டவுன்வாசிகளின் சமூக விழிப்பானது அந்த வருடத் தண்ணீர்ப் பற்றாக்குறையை மட்டும் எதிர்கொள்ளப் பயன்பட்டதோடு முடிவுக்கு வந்துவிடவில்லை. ஒரு பண்பாட்டு மாற்றமாகவே அது நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.
யார் விலை கொடுக்கிறார்கள்?
  • சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் பகுதிகளில் மூன்று இரவுகள் சுற்றினேன். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கியபோது கிடைத்த கதைகள் அதிரவைப்பதாக இருந்தன. ஒரு குடம் தண்ணீருக்காக இரவு தூக்கத்தைப் பறிகொடுத்து நள்ளிரவில் வரும் லாரிக்காகக் காத்திருக்கும் பெண்கள், இந்த வியர்வைக் கொடுமைக்கு மத்தியிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாகக் குளிக்காமல் நிற்கும் குழந்தைகள், ஒரே துணியை மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டிய நிலையில் வேலைக்குச் சென்று திரும்பும் ஆண்கள் – இவையெல்லாம் சிக்கன நடவடிக்கைகள் அல்ல – ஏழை எளியவர்களை அந்த இடத்துக்குத் தள்ளித்தான் நமது தட்டுப்பாட்டை நாம் சமாளிக்கிறோம். எப்படியும் தட்டுப்பாட்டுக்கு ஒவ்வொரு சமூகத்திலும் யாரோ விலை கொடுத்து ஆக வேண்டிதான் இருக்கிறது. ஆனால், யார் விலை கொடுக்கிறார்கள் என்பதே தெரியாமல்தான் நகரின் மேட்டுக்குடிச் சமூகம் உறங்கிக்கொண்டிருக்கிறது.
  • இந்தத் தண்ணீர்ப் பஞ்சம் சென்னையின் நட்சத்திர விடுதிகளில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்ன? கோல்ஃப் மைதானங்களில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்ன? ஒரு சமூகம் தன்னைத்தானே இத்தகைய கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். தார்மீகத்தைத் தண்ணீரில் கரையவிட முடியாது!

நன்றி: இந்து தமிழ் திசை (17-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories