TNPSC Thervupettagam

நிரந்தரத் தீர்வு

February 7 , 2019 2138 days 1955 0
  • "நீரின் றமையா துலகு...' என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நீர்
  • கடலில்  ஏற்படுகின்ற காற்று சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு பகுதி, புயல் போன்ற நிகழ்வுகளால் பருவமழைகள் பெய்கின்றன. நீர்நிலைகள் நிரம்புவதும், ஏரி குளங்கள் பெருகுவதும், கண்மாய்களில் நீர்சேர்வதும்...இதைக் கொண்டுதான் விவசாயம். மனிதர்கள், உயிரினங்கள் தாகம் தீர்த்துக்கொள்வதும் ஒரு சுழற்சியான செயல்பாடுகள்.
  • காலம் காலமாக நாட்டு மக்களின் தொடர் வாழ்க்கையில் இதெல்லாம் அந்தந்தப் பருவத்தில் நடந்துகொண்டு வந்தன. ஆனால், கடந்த 10,15 ஆண்டுகளாகத்தான் இயற்கையில் எண்ணற்ற முரண்பாடுகள். இந்த முரண்பாடுகளை உருவாக்கிக் கொண்டதும் மனித இனம்தான்.
தமிழகம்
  • தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 910 மி.மீ. மழை  பதிவாகும்; இதில் 160 மி.மீ. மழை கோடைக் காலத்திலும், 320 மி.மீ. மழை தென்மேற்குப் பருவ மழை காலத்திலும் பதிவாகும்; வடகிழக்குப் பருவ மழை காலத்தில் அதிகபட்சமாக 430 மி.மீ.  மழை பதிவாகும்.
  • தமிழகம்,  புதுச்சேரி, கேரளம், தெற்கு ஆந்திரம், தென் கர்நாடகத்தின் உள் பகுதிகள், ராயலசீமா ஆகியவற்றில் வடகிழக்குப் பருவமழை பெய்யும் பருவம் 2019-ஆம் ஜனவரி 1-ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. இதனால், இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் குடிநீர்ப் பிரச்னை, விவசாயம் உள்ளிட்ட அனைத்துப் பயன்பாடுகளும் கேள்விக்குறியாகியுள்ளன.
  • தமிழ்நாட்டில் குடிநீர், பாசனம் மற்றும் இதரத் தேவைகளுக்கு ஆண்டொன்றுக்கு 350 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழகத்தில் 14,908 ஏரிகள் உள்ளன. இவற்றில் 1,821 ஏரிகளில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. இந்த ஏரிகளின் நீர்வரத்துப் பாதைகள் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.
  • 89 அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து 192 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 முக்கிய அணைகளில்  104 டிஎம்சி நீர் மட்டுமே தற்போது உள்ளது. வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் 19 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது . திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை முதலிய 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது என்றாலும் அதுவும் தற்காலிக ஆறுதல்தான்.
2018 ஆம் ஆண்டில்
  • 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 790 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமாகப் பெய்யும் மழையின் அளவைவிட 14% குறைவு.
  • தென்மேற்குப் பருவமழை காலத்தில் 280 மி.மீ. மழை பதிவாகியுள்ளது; இது இயல்பைவிட  12% குறைவு.  வடகிழக்குப் பருவமழை காலத்தில் பதிவான மழை அளவு 330 மி.மீ. இது இயல்பைவிட  24% குறைவு.
  • வடகிழக்குப் பருவமழை காலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் 50%-க்கும் குறைவாக மழை பதிவாகியுள்ளது.  தருமபுரி மாவட்டத்தில் 59%-க்கும் குறைவாக  மழை பதிவாகியுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் 40 முதல் 50% வரை மழை குறைவாகப் பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 11% மழை அதிகமாகப் பதிவாகியுள்ளது.
  • இதன் விளைவாக, வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, விவசாயப் பயிர்கள் நாசம், பஞ்சம், பட்டினி முதலான இடர்ப்பாடுகள் மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு இமயமென காத்திருக்கின்றன. இந்த இன்னல்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசுகள் இப்போதே திட்டமிட வேண்டும்.
முந்தைய ஆண்டுகளில்
  • 2016-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் 62%,  2017-ஆம் ஆண்டு 9%, 2018-ஆம் ஆண்டு 24% என குறைவாக மழை பதிவாகியுள்ளது. பருவமழை குறைவாகப் பெய்த 2016-ஆம் ஆண்டில் தமிழகத்தில் வறட்சி கோரத்தாண்டவமாடியது. குடிநீருக்கே மக்கள் ஆலாய்ப் பறந்தனர்.
  • அது மட்டுமின்றி, அந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த  அனைத்தும் கருகின. இதனால் உற்பத்தி பாதிக்குப் பாதியாகக்   குறைந்தது.
  • இதே போன்று 2017-ஆம் ஆண்டும் இருந்தது. ஓரளவு பருவமழை பெய்தாலும் விவசாயிகள் துணிச்சலாக உற்பத்தி செய்யத் தயங்கினர். கடந்த ஆண்டைப் போல விளைவித்த பயிர்கள் கருகிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
  • 2018-ஆம் ஆண்டும் தொடர்ந்து விவசாயிகள்  வேண்டா வெறுப்பாகவே விவசாயத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்றாண்டுகளில் நெல் உற்பத்தி, தானியங்கள் உற்பத்தி, கரும்பு உற்பத்தி என விவசாயிகள் எதிலும் முழு மனதுடன் ஈடுபடவில்லை என்பதே உண்மை.
  • மேலும், தமிழகத்தில் பயிரிடப்படும்  ஆண்டுப் பயிர்களான மிக முக்கியமாக கரும்பும், மஞ்சளும் ஆகும்; நீண்ட  காலப் பயிர்கள் தென்னை மற்றும் மாந்தோட்டங்கள்; இவற்றில் தென்னையும், மாமரங்களும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா  புயலால் பெருமளவு அழிந்து விட்டன.
  • தமிழகத்தில் பெருமளவில் விவசாயிகளின் பொருளாதார நம்பிக்கை கரும்பு விவசாயம்தான். அதிலும், கடந்த 10 ஆண்டு களில் மழையின்மை, உற்பத்தி இல்லாமை, கரும்பு ஆலைகளின் தவறான நிர்வாகம் போன்றவற்றால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பயிரிடல்
  • மேலும், பல சூழல்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலைகளுக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்குப் பணம் வரவில்லை; கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ரூ.460 கோடி அளவுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கரும்பு பயிரிடும் நிலப்பரப்பு குறைந்துள்ளது.
  • உதாரணமாக, கூட்டுறவு  ஆலை களின் முறையாக நல்ல முறையில் செயல்படும் மோகனூர்  சர்க்கரை ஆலை பகுதியில் கரும்பு பயிரிடும் நிலப்பரப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. 2008 -2009-ஆம் ஆண்டு கரும்பு  அரைவைப் பருவத்தில் 9,983 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டது;  ஆனால், கடந்த 2017 - 18-ஆம் ஆண்டில் 2,633 ஏக்கரில் மட்டும்தான் கரும்பு பயிரிடப்பட்டது.
  • அதிலும், இந்த 2,633 ஏக்கரில் கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட பயிரின் கட்டைக் கரும்பு 2,243 ஏக்கர்; புதிதாக கரும்பு பயிரிடப்பட்டது 390 ஏக்கரில் மட்டும்தான். ஓர்ஆலையிலேயே இந்த நிலை என்றால், தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு  மற்றும் 3 பொதுத்துறை, 23 தனியார் ஆலைகளின் நிலையைக் கூற வேண்டியதில்லை. பல கரும்பு ஆலைகள் மூடப்பட்டு விட்டன.
  • தமிழகத்தில் இயங்கும் 700-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளுக்கு மூலப் பொருளான மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் சேலம்-நாமக்கல்-தருமபுரி-கரூர்-கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். தற்போது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கு பயிர் செய்யும் பரப்பளவு 10-இல் 1 பங்கு குறைந்துவிட்டது. இதனால், ஜவ்வரிசி ஆலைகள் வட மாநிலங்களிலிருந்து மக்காச்சோள மாவு கொள்முதல் செய்து ஜவ்வரிசி தயாரிக்கின்றன. புயல், தேவையில்லாத பருவத்தில் பேய் மழை, கடும் வறட்சி.... இப்படி எண்ணற்ற திடீர், திடீர் பாதிப்புகள், பருவநிலை மாற்றங்களால் சொல்ல முடியாத சோகக் கதைகள் தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வில் தொடர்கின்றன.
  • தண்ணீர் பிரச்னை மிகக் கடுமையாக இருக்கப் போகிறது; உலகம் முழுவதும் மக்கள் தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகளின் பெருக்கம், ஓட்டல் போன்ற விடுதிகளின் பெருக்கம்  ஆகியவற்றால் தண்ணீரின் தேவை அடுத்த பத்தாண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும், உலக அளவில் தென்னாப்பிரிக்கா, பிரேசில், சிங்கப்பூர், கம்போடியா, இந்தியா, சீனா, ஈரான், உள்ளிட்ட 11 நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிக அளவில் இருக்கும் என்று தெரிகிறது. இந்தப் புள்ளிவிவரத்தை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். காவிரி பிரச்னை, தெலுங்கு-கங்கைப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை, பவானி ஆற்றுப் பிரச்னை, பாலாறு பிரச்னை என அண்டை மாநிலங்களோடு ஏற்கெனவே உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories