TNPSC Thervupettagam

நீதிமன்றங்களில் தமிழ் படும் பாடு!

July 5 , 2019 2003 days 1326 0
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இனி மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி கோகாய் அறிவித்துள்ளார். தனிநபர் சம்பந்தப்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மட்டுமே இவற்றில் அடங்கும்; அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் தீர்ப்புகள் தற்போது மொழிபெயர்ப்பு வளையத்துக்குள் வராது என்று தெரிகிறது. முதல் கட்டமாக மொழியாக்கப்படும் ஆறு மொழிகளாக இந்தி, அசாமி, கன்னடம், தெலுங்கு, ஒடியா, மராத்தி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
தமிழ் எப்படி விடுபட்டது?
  • செம்மொழியும், நாட்டில் அதிகமானோரால் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் இந்தி, வங்கம், தெலுங்கு, மராத்திக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ள மொழியும், கணினி மூலம் மொழிபெயர்க்கப்படும் செயல்பாட்டில் அதிகப் பயன்பாட்டில் உள்ள மொழியுமான தமிழ் இந்தப் பட்டியலில் இடம்பெறாமல்போனது வருத்தத்துக்குரியது.
  • தமிழ் விடுபட்டுள்ளதற்குக் கூறப்படும் காரணம் விசித்திரமானது. முதல் கட்டமாக அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கையைக் கருதி, இந்த மொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று கூறியிருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கில்லை.
  • அரசமைப்புச் சட்டத்தின் 130-வது பிரிவின்படி, டெல்லி நகரத்திலிருந்து உச்ச நீதிமன்றம் செயல்படும் என்றிருப்பினும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தலைமை நீதிபதி இதர மாநிலங்களிலிருந்தும் செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை டெல்லி தவிர, வேறெங்கும் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையை நடத்தியது இல்லை.
  • சென்னையிலிருந்து 2,150 கிமீ தூரத்திலுள்ள டெல்லிக்குச் சென்று மேல்முறையீடு செய்வது பலருக்கும் இயலாத காரியமே. அதேசமயத்தில் குடியிருப்பு, வீட்டு வாடகை சம்பந்தமான வழக்குகளில்கூட உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம் மாநிலங்களிலிருந்து உடனடியாக மேல்முறையீடுகள் செய்யப்படுகின்றன. அம்மாநிலங்களில் உள்ள வழக்கறிஞர்களே டெல்லிக்குச் சென்று இம்முறையீடுகளை நடத்திவருகின்றனர். இதற்கான முக்கியக் காரணம், டெல்லி நகரம் அவர்களது மாநிலங்களுக்கு அருகில் இருப்பதுதான்.
வழக்காடிகளின் தேவை என்ன?
  • நீதிபதி கிருஷ்ணய்யர் இதுபற்றி ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்குவருகிறது. “டெல்லியைச் சுற்றியுள்ள மாநில மக்களுக்கு வாடகை வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்றமாகவும் அதை அடுத்த வட்டத்திலுள்ள மாநிலங்களுக்கு இது சிவில் மற்றும் கிரிமினல் மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் தென்னிந்திய மக்களுக்கு மட்டுமே இது உண்மையான உச்ச நீதிமன்றமாகவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டார் அவர். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்தியாவிலுள்ள நான்கு மண்டலங்களிலும் உச்ச நீதிமன்ற அமர்வு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கான குரல் பெருகிவருகிறது. இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வழக்காடிகளின் நன்மைக்காக மொழிபெயர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.
  • உண்மையிலேயே எத்தனை வழக்காடிகளுக்குத் தங்களது வழக்குகளை அவர்கள் மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ படித்துப் புரிந்துகொள்ளும் சாத்தியம் இருக்கிறது? 100 முதல் 1,000 பக்கங்கள் வரை எழுதப்படும் தீர்ப்புகளையெல்லாம் பொறுமையாக எத்தனை பேரால் படிக்க முடியும்? தீர்ப்பின் இறுதி வரிகளிலுள்ள தீர்ப்புக் கூறுகளை மட்டுமே பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். ஆகையால், இந்த ஆறு மொழி மொழிபெயர்ப்பு வெறும் கண் துடைப்பாகவே இருக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயம். அதையும்கூட எல்லா மொழிகளுக்கும் சமமாக நம் அமைப்பால் செய்ய முடியாமல்போவது இந்திய துரதிர்ஷ்டம்.
  • உள்ளபடி, சீர்திருத்தங்கள் கீழிருந்து மேலே செல்வதாக இருக்க வேண்டுமே ஒழிய, மேலேயிருந்து கீழே இறங்க முடியாது. மொழி தொடர்பில் நீதித் துறையில் இன்று முக்கியமாக உள்ள மூன்று பிரச்சினைகள் என்னவென்றால், உயர் நீதிமன்றங்களில் கூடுதல் ஆட்சிமொழியாக அந்தந்த மாநில மொழிகள், கீழமை நீதிமன்றங்களில் மாநிலங்களின் மொழியே ஆட்சிமொழியாக இருப்பது மற்றும் அகில இந்திய நீதித் துறைச் சேவை என்ற கோரிக்கையைத் தவிர்ப்பது. இதில் தமிழ்நாடு அனுபவத்தைப் பார்ப்போம்.
ஆட்சிமொழியாகத் தமிழ்... என்னவாயிற்று?
  • 1956-ல் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகத் தமிழ் இருந்தது. அப்போது தமிழார்வம் கொண்ட ஒரு நீதிபதி சிவில் வழக்கொன்றில் தமிழில் தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்றம் தமிழில் தீர்ப்பு எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக அத்தீர்ப்பை ரத்துசெய்தது. பின்னர், 1976-ல் 4பி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சிமொழியாகக் கொண்டுவரப்பட்டது.
  • இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ராஜஸ்தானி வழக்கறிஞர் ஒருவர் போட்ட வழக்கை, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது (1995). அச்சட்டத்திலுள்ள விதிவிலக்கைப் பயன்படுத்தி, பல மாவட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டதன் விளைவாக தலைமை நீதிபதி சுவாமி, நீதிபதிகள் விரும்பும் மொழியில் தீர்ப்பை எழுதலாம் என்று சுற்றறிக்கை விடுத்தார். இதனால், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை ஆட்சிமொழியான தமிழில் எழுதுவது அநேகமாக நிறுத்தப்பட்டது. வக்கீல்களும் தாழ்வுமனப்பான்மையில் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே வாதாடலாயினர்.
  • இதைத்தான் 140 வருடங்களுக்கு முன்னால் மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்: “சுய பாஷை பேசத் தெரியாமல் இருப்பதைப் போல இழிவான காரியம் வேறொன்றிருக்கக் கூடுமா? ஒரு ஐரோப்பியர் தம்முடைய சுய பாஷையில் பேசத் தெரியாதென்று சொன்னால் இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டார்களா?” (பிரதாப முதலியார் சரித்திரம் - 1879)
உயர் நீதிமன்றத்தில் தமிழ்
  • நீதிமன்ற ஆட்சிமொழியாகத் தமிழ் ஆக்கப்பட வேண்டுமென்று மதுரை வழக்கறிஞர் போட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது (2013). மறுபடியும் வழக்கறிஞர் ரத்தினம் போட்ட சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்டு, நீதிபதி ராமசுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது (2014). மூன்று வருடங்களுக்குப் பின் ஒரு தனிநபர் தொடுத்த மூன்றாந்தரப்பு மேல்முறையீட்டை அனுமதித்து, உச்ச நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது (2017). அதனால், வழக்கம்போல் தமிழகத்தில் கீழமை நீதிமன்ற ஆட்சிமொழிக்கான தடை தொடர்கிறது. இதைத் தலைமை நீதிபதி கோகாய் கவனிப்பாரா?
  • இந்திய அரசமைப்புச் சட்டம் 348 (2) பிரிவின் கீழ் மாநில ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அம்மாநில ஆட்சிமொழியை உயர் நீதிமன்றத்திலும் கூடுதல் ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்ற பிரிவு உள்ளது. இதன்படி, இன்று ராஜஸ்தானிலும், உத்தர பிரதேசத்திலும் அந்தந்த மாநில மொழிகள் கூடுதல் ஆட்சிமொழியாக உயர் நீதிமன்றங்களில் பயன்பாட்டில் உள்ளன. 2006-ல் திமுக அமைச்சரவை இதன்படி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் ஆட்சிமொழியாகத் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டதற்கு, சென்னை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அமர்வு சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது.
  • அதை மத்திய அரசுக்கு அனுப்பியபோது, தற்போது நிலுவையிலுள்ள நிரந்தர ஆணைகளின்படி உச்ச நீதிமன்றத்தின் கருத்து கேட்கப்பட்டது. அன்றைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால், தமிழ் மொழி கூடுதல் ஆட்சிமொழியாகக்கூட ஆக்கப்படவில்லை. இதே கதிதான் வங்க மொழிக்கும் ஏற்பட்டது.
  • இதற்கு அவர்கள் கூறிய காரணம், மாநிலத் தலைமை நீதிபதி வெளிமாநிலத்திலிருந்து வருவதனாலும், சில நீதிபதிகளை மற்ற மாநிலங்களில் ஊர் மாற்றம் செய்வதனாலும் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று கருத்து தெரிவித்தது. பின்னர், தலைமை நீதிபதியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சதாசிவம் பதவி உயர்வு பெற்ற பிறகும் அதே நிலைமைதான் தொடர்ந்தது, இன்றும் தொடர்கிறது. வழக்காடிகளின் நலனைப் பற்றி மொழியாக்கம் செய்யப்பட்ட தீர்ப்புகள் அளிக்கப்படும் என்று கூறும் தலைமை நீதிபதி கோகாய் இப்பிரச்சினை பற்றிக் கவனம் செலுத்துவாரா?
ஒரே தேர்வு முறை மாநிலங்கள் மீதான அடி
  • இப்போது ஏற்பாடு எப்படி இருக்கிறது என்றால், மாவட்ட நீதிபதிகள் வரை நியமிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களை மட்டுமே சேர்ந்தது. ஆனால், இப்போது ‘அகில இந்திய நீதிமன்றச் சேவை’ என்று ஒன்றை ஏற்படுத்தப்போவதாக மத்திய சட்ட அமைச்சர் கூறிவருகிறார். ‘ஒரே தேசம், ஒரே மொழி’ என்ற அடிப்படையில், ‘ஒரே தேசம், ஒரே சேவை’ என்று உருவாக்கப்படுவது ஏற்புடையதல்ல. மொழிவாரி மாநிலங்களை அமைத்த பிறகு, அந்தந்த மாநில மொழிகளே அங்கு ஆட்சிமொழிகளாக மாறிவிட்ட பிறகு, நீதிமன்றங்கள் மட்டும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவது ஏற்புடையதல்ல.
  • இத்தகைய முயற்சிகள் மாநில மொழிகள் வளர்வதைத் தடுப்பதோடு, பல்வேறு சமூகங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் உருவாகிவருவதைத் தடுத்து, ஆங்கிலப் புலமை உள்ளவர்களே சட்ட நிபுணர்களாக ஆக முடியும் என்ற பிம்பத்தைத் தொடர்ந்து வளர்க்கும். மேலும், மாநிலங்களின் சுயாட்சியைப் பறிக்கும் செயலாகும்.
  • உயர் நீதிமன்றம் ஒன்றில், ஒரு ஆண்டில் 10,000 வழக்குகள் தொடுக்கப்படுகின்றன என்றால், அதில் 1,000 வழக்குகள் மட்டுமே அந்நீதிமன்றத்திலேயே உள்மேல்முறையீடு செய்யப்படும். அதில் 100 வழக்குகள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதாவது, 10,000-ல் 100 வழக்குகள் மட்டுமே உச்ச நீதிமன்ற நுழைவு வாயிலைத் தொடும். அதிலும் விசேஷ அனுமதி பெற்று மேல்முறையீடுகளாக விசாரிக்கக்கூடிய வழக்குகள் 10 மட்டுமே இருக்கும்.
  • இந்த வழக்கீட்டு முறையில் கீழமை நீதிமன்றங்களையும், உயர் நீதிமன்றங்களையும் ஜனநாயகப்படுத்தும் விதமாக அம்மாநிலங்களின் ஆட்சிமொழியே நீதிமன்றத்தின் ஆட்சிமொழியாகச் செயல்பட வைப்பதே வழியாகும். அதை விட்டுவிட்டு, முகப்பூச்சு அலங்காரம் செய்யும் வேலைகள் நடப்பதும், அந்த முகப்பூச்சும் சில மொழிகளுக்கு மட்டுமே கிடைப்பதும் தவிர்க்கப்படுவது நல்லது.

நன்றி: இந்து தமிழ் திசை (07-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories