பலமுறை பட்டும் திருந்தாத பாகிஸ்தான் திருந்துவது எப்போது?
February 28 , 2019 2107 days 1542 0
130 கோடி மக்களும் தங்களது சொந்தங்களுடனும், குழந்தைகளுடனும் கொஞ்சி மகிழ, சில லட்சம் எல்லை சாமிகளாக 24 மணி நேரமும் கண்விழித்து காத்துவரும் தியாகத்திற்கும், வீர தீரத்திற்கும் ஒட்டுமொத்த தேசமே தலை வணங்குகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர்.
இதில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு, இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இதையடுத்து பயங்கரவாதத்தின் மீது பயங்கர தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்த நமது அசகாய சூரர்களான ஆகாய வீரர்கள், பொருத்தது போதும், அதர்மத்தை அழிக்க காண்டீபம் எடு என எல்லை தாண்டி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்பட்டும் வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது 26 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் போர் விமானம் மிராஜ் 2000 வகை விமானங்கள் 12-ஐ பயன்படுத்தி வெடிகுண்டு மழை பொழிந்து பாலக்கோட், முசாபராபாத், சகோட்டி என 3 முக்கியப் பங்கரவாத முகாமை துல்லியமாகத் தாக்கி முற்றிலுமாக துவசம் செய்துவிட்டு எல்லை திரும்பி இருக்கிறார்கள்.
1947-இல் காஷ்மீருக்கான போர் முதல் கார்கில் போர் வரை பல போர்களை நம் மீது தொடுத்து பிறகு புறமுதுகு காட்டி ஓடியது பாகிஸ்தான்.
1977-இல் நடந்த போரில் சுமார் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்களை சிறைபிடித்து இஸ்லாமாபாத் வரை தன்வசமாக்கிய நமது எல்லைச்சாமிகளிடம் பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைந்தது மட்டுமல்லாமல், மன்னிப்பு கடிதத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு பிழைத்துச் சென்றதை வரலாறு மறுக்காது.
அந்நாள் முதல் இந்நாள் வரை பட்டு திருந்தாத பாகிஸ்தான், உலக நாடுகளின் மத்தியில் நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று வேஷம் போடும் பாகிஸ்தான், இனியாவது தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். மாற்றிக்கொள்ளுமா என்பது இமாலயக் கேள்வியாக உள்ளது.
சமீபத்திய இருதரப்பு தாக்குதல்களால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் தாக்குதலை உற்று நோக்கியுள்ள உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் பயங்கரவாத அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், விமானி ஒருவரைப் பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில், விமானி அபிநந்தன் மாயமானதாக இந்திய தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிடியில் விமானி அபிநந்தன் உள்ளது உண்மைதான் என்று இந்திய வெளியுறவுத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும், ஐ.நா.வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்றும், மசூத் அஸார் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா பள்ளத்தாக்குப் பகுதியை இணைக்கும் எல்லையில் இன்று காலை 6 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் கோழைகளுக்கு தக்க பதிலடி தந்து திருப்பி அனுப்பியுள்ளனர் நமது வீரர்கள்.
இந்நிலையில், இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம், பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் நேரில் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டத்தில், இந்திய எல்லைகளைப் பாதுகாக்கும் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்படையைச் சேர்ந்த வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன், அபிநந்தனை பகடையாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் விடுக்கும் எந்தவித அழுத்தத்திற்கும் பணிந்து போகாமல், சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு மூலம் மீண்டும் ஒரு எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டது.
பட்டும் திருந்தாமல் உலக அரங்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என வேஷம் போடும் பாகிஸ்தான், இந்திய வீரர்களால் அழிக்கப்படிருப்பது பயங்கரவாதிகள் தானே தவிர, பாகிஸ்தான் மக்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளாமல், நாங்களும் திருப்பித் தாக்குவோம்; தாக்குதல் நடத்துவதற்காக எங்களது வீரர்களுக்கு முழு அதிகாரமும் கொடுத்து உள்ளோம் என்று அர்த்தமற்ற முறையில் கொக்கரிக்கிறது.
இந்தியா எந்த ஒரு சமயத்திலும், பாகிஸ்தானில் உள்ள அப்பாவி மக்களையோ, வீரர்களையோ அழிப்போம் என்று சொன்னதே கிடையாது.
ஆனால், பாகிஸ்தானோ பயங்கரவாதிகள் வேறு ராணுவ வீரர்கள் வேறு என்பதை உணராமல், தனது பயங்கரவாத முகத்தை உலக நாடுகளுக்குக் காட்டி வருகிறது.
இந்தியா சமீபத்தில் நடத்திய தாக்குதல் ஒன்றும் திடீர் என்று நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்பதை பாகிஸ்தான் முதலில் உணர வேண்டும்.
பாகிஸ்தான் ஆதரவோடு எல்லையில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் பதான்கோட் ராணுவ முகாமை தாக்கினார்கள்.
நாடாளுமன்றத்தை தாக்கிவிட்டுச் சென்றார்கள். இப்படி அவர்கள் நடத்திய ஒவ்வொரு தாக்குதலையும் பொறுத்துக்கொண்டு அதற்கான ஆதாரத்தையும் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது.
ஆனால், அதற்கு பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எந்த நாடும் போரையும், அதனால் ஏற்படும் விளைவையும் விரும்பாது. இந்தியாவும் அதை விரும்பவில்லை என்பதை உணர்த்தும் விதமாக, இதுவரை அண்டை நாடுகள் மீது சிறு துரும்பைக் கூட வீசாத இந்திய வீரர்கள், பொருத்தது போதும் என்று பயங்கரவாதிகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தினர்.
அதிகாலையில் நடத்தப்பட்டதால், பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால், இத் தாக்குதலை சில நாடுகளும் வரவேற்றுள்ளன.
பலமுறை பட்டும் திருந்தாத பாகிஸ்தான் இனியாவது திருந்திக்கொள்ள வேண்டும். திருந்துமா பாகிஸ்தான்?
நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கு இன்று ஒரு கட்சி, நாளை வேறு கட்சி வரலாம் என்பதால், இந்த நேரத்தில் நாம் நமது எல்லைச்சாமிகளின் வீர, தீர தியாகத்தை தேவையில்லாமல் அரசியலாக்கிக் கொச்சைப்படுத்தாமல் மெச்சப்பட வேண்டும்.