TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படுமானால்...

May 9 , 2019 2067 days 1385 0
  • இயற்கைக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளையும் மனித இனம் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை. உலகத்திலுள்ள மொத்தத் தாவர வகைகள் - உயிரினங்களில் எட்டில் ஒரு பங்கு அழிவை எதிர்கொள்வதாகப் பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதற்குக் காரணம், உயிரிய வேற்றுமைக்கு (பயோ டைவர்சிட்டி) மனித இனம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்.
  • ஐ.நா.வின் சார்பின் பல்வேறு நாடுகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழு கடந்த திங்கள்கிழமை  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அறிக்கை
  • 130 நாடுகள் அடங்கிய அந்தக் குழுவில் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. பாரிஸில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, பூமியின் நிலப்பரப்பில் 75% இடத்தையும், கடல் சூழலில் 40% அளவிலும், உள்நாட்டு நதிகள், நீர் நிலைகள் போன்றவற்றில் 50% அளவிலும் மனித இனம் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. அதிகரித்த நகர்மயமாக்கல், காடுகள் அழிக்கப்படுதல், விவசாய நிலபரப்பு அதிகரித்தல் ஆகியவற்றால் இயற்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
  • உயிரிய வேற்றுமை குறித்த அந்த அறிக்கையின்படி, உடனடியாக இயற்கையைப் பாதுகாக்கும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம்தான் பேரழிவு ஏற்படுவதைத் தடுக்க முடியும். சர்வதேச அளவில் மட்டுமல்லாமல், கிராம அளவிலிருந்து இதற்கான முயற்சியை மேற்கொண்டால் மிகப் பெரிய இயற்கைப் பேரழிவிலிருந்து பூவுலகைக் காப்பாற்றிவிட முடியும் என்கிறது அந்த அறிக்கை.
  • உலகில் ஏறத்தாழ 80 லட்சம் உயிரினங்களும், தாவர வகைகளும் காணப்படுகின்றன. அவற்றில் 55 லட்சம் பூச்சி வகைகளைச் சேர்ந்தவை. இவற்றில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் சுமார் 10 லட்சம் உயிரினங்களும் தாவர இனங்களும் அழிவை எதிர்கொள்ளக் கூடும் என்று கருதப்படுகிறது.
நிலப் பரப்பு
  • இதற்கு மிக முக்கியமான காரணம், பூமியின் நிலப்பரப்பும், கடலும்  அளவுக்கு அதிகமாக மனித இனத்தால் பயன்படுத்தப்படுவதுதான். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவையும் காரணங்கள். உயிரினங்கள் தங்களது வாழ்விடங்களிலிருந்து வேறு வாழ்விடங்களுக்கு மாற்றப்படுவது அல்லது அகற்றப்படுவது அல்லது துரத்தப்படுவது அவற்றின் அழிவுக்குக் காரணமாகின்றன.
  • கடந்த 16-ஆவது நூற்றாண்டிலிருந்து குறைந்தது 680 முதுகெலும்புள்ள விலங்கினங்கள் அழிந்துவிட்டிருக்கின்றன. உணவுக்காகவும் விவசாயத்துக்காகவும் பயன்படும் வளர்ப்பு மிருகங்களில் 9% அழிந்திருக்கின்றன. பல உயிரினங்கள் மனித இனத்தால் அவற்றின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிவை எதிர்கொள்கின்றன. புதைபடிவ எரிபொருள் (ஃபாஸில் ஃபூயல்), நீர், உணவு, நிலம் ஆகியவற்றில் 2,000-க்கும் அதிகமான மனித இன ஆக்கிரமிப்பு நிகழ்வதால் இயற்கையின் மீது கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
மண் வளம்
  • உணவுப் பயிர்களின் உற்பத்தி கடந்த அரை நூற்றாண்டில் 300% அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், மண் வளம் குறைந்துவிட்டிருப்பதால் விளைநிலப் பரப்பில் 23% அளவில் உற்பத்திக் குறைவு காணப்படுகிறது. பூமியின் மொத்த நிலப்பரப்பில் சுரங்கங்கள் ஒரு சதவீத அளவில்தான் செயல்படுகின்றன என்றாலும், அவற்றின் எதிர்வினைகள் உயிரிய வேற்றுமை மீது பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் நிலத்தடி நீரின் பரப்பிலும், உயிரினங்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது.
  • கடல் நீர் உள்பட உலகிலுள்ள நீர் வளம் அனைத்துமே மாசுபடுத்தப்படுகிறது என்கிறது அறிக்கை. ஆண்டுதோறும் 30 முதல் 40 கோடி டன் அளவிலான தொழிற்சாலை நச்சுக் கழிவுகள் நீரில் கலக்கின்றன என்கிறது அந்தக் குழுவின் ஆய்வு. கடந்த 40 ஆண்டுகளில் நெகிழியால் ஏற்படும் மாசு 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.
  • கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக கடல் நீரின் அளவு மூன்று மி.மீ. அதிகரித்திருக்கிறது. 1900-ஆம் ஆண்டு முதல் எடுத்துக்கொண்டால், கடல் நீரின் சராசரி மட்டம் 16 முதல் 21 செ.மீ. அதிகரித்திருக்கிறது. அதேபோல, புவி வெப்பம் 7 டிகிரி அதிகரித்திருக்கிறது. உலகில் வாழும் உயிரினங்களுக்கான வாழ்வாதாரம் 20% குறைந்திருக்கிறது.
  • அதேபோல, நீர் - நிலவாழ் உயிரினங்கள் 40%, பவழப் பாறைகள் 30%, மூன்றில் ஒரு பங்கு நீர் வாழ் உயிர்கள் ஆகியவை அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான செய்தி, இயற்கையைப் பேணும் ஆர்வலர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை குறித்த புள்ளிவிவரம்.
  • கடந்த 2002-க்கும் 2013-க்கும் இடையில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளில் குரலெழுப்பிய ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
  • இயற்கைக்கு எதிரான போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பவர்களின் உயிருக்கு சுயநல சக்திகள் அரசின் உதவியுடன் முற்றுப்புள்ளி வைப்பதை அந்த அறிக்கை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது.
ஆய்வு
  • எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டு அந்த அறிக்கை குற்றப்படுத்தவில்லை. சர்வதேச அளவில் உயிரிய வேற்றுமையின் பாதிப்புக்கான காரணங்களை 15,000 அறிவியல்பூர்வமான தரவுகளுடனும், பல்வேறு அரசுகளின் தகவல் உதவியுடனும் அந்தக் குழு ஆராய்ந்தது. உலகிலுள்ள 50 நாடுகளைச் சேர்ந்த 145 வல்லுநர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை,  மனித இனத்துக்குத் தெரிவிக்கும் செய்தி இதுதான் - உயிரிய வேற்றுமையும், பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்படுமானால், அதன் தொடர் வினையாக மனித இனமும் அழிவை எதிர்கொண்டாக வேண்டும்!

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories