பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது என்கிற பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.
இந்தியாவின் கோரிக்கை
இது கடந்த பலஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து எழுப்பிவரும் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அஸார், போர்ச்சுக்கல் நாட்டு போலி கடவுச்சீட்டில் இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சதியில் ஈடுபட்டு வந்தவர். 1994-ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்.
1999-ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தகாருக்குக் கடத்தப்பட்டபோது பயணிகளை விடுவிப்பதற்காக சிறையில் இருந்த மசூத் அஸாரை வேறுவழியின்றி இந்தியா விடுவிக்க வேண்டி வந்தது. அதுமுதல் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு பயங்கரவாத சதிகளில் ஈடுபட்டு வருபவர் மசூத் அஸார்.
புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். 2016-ஆம் ஆண்டு பதான்கோட் விமானப் படை தாக்குதல் ஆகியவை மசூத் அஸாரின் திட்டமிடல்தான். 2008 மும்பை தாக்குதலிலும் அவருக்குத் தொடர்புண்டு. 2016 பதான்கோட் தாக்குதலைத் தொடர்ந்தும், 2017 உரி தாக்குதலைத் தொடர்ந்தும் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்தது.
தீவிரவாத தடைக் குழு
ஐ.நா. பாதுகாப்பு சபையின் அல்காய்தா தடை குழுவின் தீர்மானம் 1267-இன் கீழ் மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பத்தாண்டுகளுக்கு முன்பேமும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா முன்வைத்தது.
அந்தப் பட்டியலில் லஷ்கர்-ஏ-தொய்பாவின் உறுப்பினர்களும் அதன் தலைவர் ஹபீஸ் சயீதும் சேர்க்கப்பட்டார்கள். ஆனால், மசூத் அஸார் இடம்பெறவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்திலும், மார்ச் மாதத்திலும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை பிரான்ஸ் கொண்டுவந்தபோதுகூட சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மசூத் அஸார் சீனாவின் ஆதரவு பெற்ற பயங்கரவாதி என்கிற அவப் பெயர் உருவாகிவிட்டிருப்பதைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் சீனா தன்னுடைய பிடிவாதத்தை இப்போது தளர்த்திக் கொண்டிருக்கிறது.
சீனாவின் பிடிவாதம் தளர்ந்து, சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அஸாரை ஐ.நா.
அறிவித்ததற்கு இந்தியா கொடுத்த அழுத்தத்தைவிட, அமெரிக்கா முன்னெடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். மசூத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை சீனா தடுத்தால், இந்தப் பிரச்னையை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் விவாதத்துக்கு கொண்டு செல்லப்போவதாக அமெரிக்கா எச்சரித்ததுதான், சீனாவின் பிடிவாதம் தளர்ந்ததற்கு முக்கியமான காரணம்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் மசூத் அஸார் பிரச்னை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், சீனா வெளிப்படையாக ஒரு சர்வதேச பயங்கரவாதியை ஆதரித்தும் நியாயப்படுத்தியும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கு சீனா தயாராக இருக்கவில்லை.
அதுமட்டுமல்ல, அல்காய்தா தடை குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தோனேஷியா உலகிலேயே அதிகஅளவில் முஸ்லிம்கள் வாழும் நாடு. அந்த நாடே மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு ஆதரவளிக்கும் நிலையில், சீனாவும் பாகிஸ்தானும் பலவீனப்பட்டுவிட்டன. இதுதான் மசூத் அஸார் மீதான நடவடிக்கையின் உண்மையான பின்னணி.
தீர்மானம்
தீர்மானம் முழுமையான வெற்றி என்று கூறிவிட முடியாது.
ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்டிருக்கும் தீர்மானத்தில் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் மசூத் அஸாரின் தொடர்பு குறித்தோ, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவலின் பின்னணியில் அவர் இருப்பது குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.
புல்வாமா தாக்குதல் குறித்த குறிப்பும் கடைசி நேரத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் சீனா ஆட்சேபம் தெரிவிக்காமல் தீர்மானம் நிறைவேற வழிகோலியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அல்காய்தா தடை குழுவின் தீர்மானம் 1267-இன் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த 20 பயங்கரவாதிகளில் மசூத் அஸாரும் ஒருவர் என்பது பாகிஸ்தானுக்குப் பெருமைசேர்ப்பதாக இல்லை. அதே நேரத்தில், இதனால் மட்டுமே மசூத் அஸாரின் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்படும் என்று கருதிவிடவும் முடியாது.
ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சயீது அந்த நாட்டில் சுதந்திரமாக உலவுகிறார் என்பது மட்டுமல்ல, நிதி திரட்டுவது, பிரசாரம் செய்வது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானிய அரசு அந்த நாட்டிலிருந்து செயல்படும் அத்தனை பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளையும் துணிந்து அடக்கவும், ஒடுக்கவும், முடக்கவும் முற்பட்டாலொழிய பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டு விடாது.
மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் சர்வதேச நாடுகளிலுள்ள அவரது சொத்துகள் முடக்கப்பட்டு, அவரது பயணங்கள் தடுக்கப்படும். ஆயுதங்கள் கிடைப்பது தடைபடும்.
ஆனால், பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு இருக்கும்வரை ஹபீஸ் சயீதாக இருந்தாலும், மசூத் அஸாராக இருந்தாலும், எந்த பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும், அவர்களது பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடரத்தான் செய்யும். இந்தியா ஆறுதல் அடையலாமே தவிர, நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிட முடியாது.