TNPSC Thervupettagam

பாதுகாப்பான பணியிடமும் தொழிலாளர் உரிமைதான்!

May 2 , 2019 2081 days 1228 0
  • சென்னையில் பழக் கிடங்கு ஒன்றில் பழப் பெட்டிகள் சரிந்து 4 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். நான்கு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு 3 தொழிலாளர்களையும், 12 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு 1 தொழிலாளியையும் உயிரோடு மீட்டிருக்கிறது தீயணைப்புத் துறை. நல்லவேளையாக, நான்கு பேருமே உயிர்பிழைத்திருக்கிறார்கள். இப்படியான விபத்துகள் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது நடப்பதில்லை. தொழிலகங்களில் நடக்கும் விபத்துகளால் தொழிலாளர்கள் பலியாவதும் படுகாயமடைவதும் நாள்தோறும் நம்மைச் செய்திகளாகக் கடந்துகொண்டே இருக்கின்றன.
  • ஐநா அவையின் அங்கங்களில் ஒன்றான சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘எதிர்காலப் பணிகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான முக்கியத்துவம்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை, உலகின் பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னமும் பாதுகாப்பற்றதும் உயிராபத்து நிறைந்ததுமான சூழலில் பணியாற்றிவருவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பலி
  • ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 4 கோடி பேர் பணியிடங்களில் விபத்துகளால் பாதிக்கப்படுகிறார்கள். 2.78 கோடி பேர் பணியிடங்களில் நடக்கும் விபத்துகளாலும் பணிசார்ந்த நோய்களாலும் இறக்கின்றனர். அவர்களில், 2.4 கோடி பேர் பணிசார்ந்த நோய்களால் இறப்பவர்கள். பணியிடங்களில் நடக்கும் விபத்துகளால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் இறக்கிறார்கள். பணியிடப் பாதிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆசிய நாடுகளில் நடக்கின்றன. பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நான்கிலிருந்து ஐந்து மடங்கு அதிகம்.
  • எந்திரங்கள், ரசாயனங்கள் தொடர்பாகக் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகளும் விபத்துகளைத் தடுத்திருக்கின்றன என்றாலும் நாம் வாழும் காலம் வேறொரு சவாலைத் தற்போது எதிர்கொண்டிருக்கிறது. உளவியல் நெருக்கடிகள், பணிசார்ந்த மன அழுத்தம், இதய நோய்கள் போன்றவை உலகம் முழுவதுமே ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கழுத்து வலி மற்றும் முதுகு வலியில் 20 சதவீதமும் கேட்புத் திறன் பாதிப்பில் 25 சதவீதமும் பணியிடச் சூழலின் பாதிப்புகளால் ஏற்பட்டவை.
இலக்கை எட்டுவோமா?
  • 2030-ம் ஆண்டுக்கான நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகளில் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு - கண்ணியமான பணியிடச் சூழல் ஆகியவையும் இலக்குகளாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான பணியிடச் சூழல்களை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைகள் பலவற்றையும் 1948-ல் இயற்றப்பட்ட தொழிற்சாலைச் சட்டம் உள்ளடக்கி இருக்கிறது. ஆனால், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்திருக்கும் சமீபத்திய செயல்திட்டங்களின்படி அச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாக மொத்தச் சட்டத்தையும் தலைகீழாக மாற்றிப்போடும் முயற்சிகளிலேயே பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்றுவந்தது.
  • இதுவரை தொழிலாளர் நலம் தொடர்பாக மத்திய அரசு இயற்றிய 44 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அந்தந்த மாநிலங்களும் தங்களது தேவைக்கேற்ப சட்டங்களை இயற்றிக்கொண்டுள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்துவதாகச் சொல்லி ஊதியம், தொழிலக உறவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல்கள் என்று நான்கு சட்டத் தொகுப்புகளை அறிமுகப்படுத்துவதில் பாஜக அரசு ஆர்வம்காட்டியது. ஊதியம் பற்றிய சட்டத் தொகுப்பு நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவாக முன்வைக்கப்பட்டது. இன்னும் அது நிலைக் குழுவின் விவாதத்தில் இருக்கிறது. சமூகப் பாதுகாப்பு பற்றிய வரைவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி நிறுவனம் இரண்டையும் கலைத்துவிட்டுப் புதிய அமைப்பை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தது. தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பையடுத்து அந்த வரைவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
நான்கில் அடக்கும் முயற்சி
  • ஓய்வூதியம், ஆயுள் காப்பீட்டுத் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகப் புதிய வரைவு வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. 50 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாராத் தொழிலாளர்களிடமிருந்து பாஜகவுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலையான வேலைவாய்ப்பற்ற அவர்கள் தமது மாதாந்திரப் பங்களிப்பை எப்படிச் செலுத்த முடியும் என்று யாரும் யோசிக்கவே இல்லை. கடைசியில், தேர்தல் நெருங்கியதும் தொழிலாளர்நலச் சட்டத் தொகுப்பு முயற்சிகளையெல்லாம் மறந்தேவிட்டார்கள். அம்முயற்சியின் நோக்கம், அதிக எண்ணிக்கையிலான சட்டங்களை எளிமைப்படுத்துவது அல்ல. இந்தியாவில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கிருக்கும் தொழிலாளர்நலச் சட்டங்களை ஒரு தொந்தரவாகக் கருதுகின்றன என்பதாலும்தான்.
  • தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரப் பணியிடச் சூழலை உறுதிப்படுத்த, தொழிலாளர்நலச் சட்டங்களைக் காலத்துக்கேற்ப மேம்படுத்த வேண்டும். அதற்கு முன் நடைமுறையில் இருப்பதைப் பின்பற்ற வேண்டும். 1948-ன் தொழிற்சாலைச் சட்டத்தில் சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பாகத் தனி அத்தியாயங்களே இருக்கின்றன. ஆனால், அச்சட்டப் பிரிவுகள் பெரும்பாலான தொழிலகங்களில் பின்பற்றப்படுவதே இல்லை. வருமான வரித் துறையினரைப் போல தொழிலாளர்நலத் துறைக்கும் சோதனை போடும் அதிகாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தொழிலாளர்நலத் துறை அதிகாரிகளும் அவ்வப்போது தொழிலகங்களை எட்டிப்பார்க்கவும் செய்கிறார்கள். அப்படியும் சட்டப் பிரிவுகள் பின்பற்றப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்?

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories