TNPSC Thervupettagam

பாரதியும் பெண்ணியமும்

March 8 , 2019 2135 days 1844 0
  • இராஜரிஷி ஜனகரின் சபையில் வேதாந்த விவாதங்கள் நடைபெற்றபோது அங்கே பெண் ரிஷியான கார்க்கியும் இடம்பெற்றிருந்தார். பல்வேறு மகான்களும் ரிஷிகளும் இந்த வெகு நுட்பமான விவாதத்தில் பங்கேற்று ஆத்ம விசாரத் தத்துவங்களை விளக்குகின்றனர்.
பெண்
  • இறுதியில் ரிஷி கார்க்கி யாக்ஞவல்கியரின் கருத்தை ஏற்று அவரை அங்கீகரிக்கிறார். ரிஷி கார்க்கியின் அங்கீகாரத்தை மிகப் பெரும் பேறாகவே யாக்கியவல்கியர் ஏற்கிறார். ஒரு பெண் தன்னோடு விவாதிப்பதா, அவரின் அங்கீகாரம் என்பது பெரிதா என்ற ஆணாதிக்க மனப்பான்மை அப்போது அங்கே ஏற்படவில்லை. அத்வைதம் எனும் தத்துவத்தை ஏற்படுத்தித் தந்த ஆதிசங்கரர், மண்டனமிஸ்ரர் உடனான தன்னுடைய வாதத்திற்குத் தீர்ப்புச் சொல்லும் நடுவராக மகாகவி பாரதியை ஏற்றுக் கொண்டதில் அறிவில் சிறந்த பெண்ணின் பெருமை நிறைந்திருக்கிறது.
  • இதுபோன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்கள் கொண்டது நம் வரலாறு. சில தலைமுறைகளுக்கு முன் வரை பெண்களின் மதிப்பும் உயர்வும் எவ்விதத்திலும் ஆண்களைக் காட்டிலும் தாழ்வாக இல்லை. பெண்களின்  புகழை பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் காண்கிறோம். இப்படிப் பெருமையோடு வாழ்ந்த சமூகத்தில் பெண்களுக்குத் தாழ்வு ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
  • இந்நிலை தோன்றியதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. ஆணாதிக்கச் சூழலுக்கு எதிராக குரல் கொடுத்த ஆண்களை வரலாறு அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
  • அவர்களுள் தமிழகத்தில் முதன்மையானவராகப் பெண்ணின் பெருமைகளை, உரிமைகளை உரக்கக் கூறிய பெருமை மகாகவி பாரதிக்கு உண்டு. மகாகவி பாரதியின் பெண்ணுரிமைப் பாடல்கள் எத்தனையோ இருந்தபோதிலும் இந்தப் பாடல் நுட்பமானது. பெண்களை மையமாகக் கொண்டது நம் தேசம் எனும் நுட்பம் இந்தப் பாடலின் சிறப்பு.
சான்று
  • இது பாரதி பெண்மையைப் போற்றியதற்கும் கொண்டாடியதற்கும் பெண்ணை முதன்மைப்படுத்தியதற்கும் சான்று.
  • காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழைமையைக் காட்டிலும் மாட்சி பெறச்செய்து வாழ்வோம் என பெண்ணின், புதுமையை ஏற்பதற்கான துணிவு, பழைமையான அறங்களைக் காப்பதற்கான வலிமை, எதனையும் முன்னெடுத்துச் செல்வதில் அவளுக்குள்ள ஆற்றல் இவற்றைப் பிரதிபலிக்கிறார்.
  • புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுர்மறை மாந்தர் வாழ்ந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம் என்று நம் தேசத்தில் வாழ்ந்த புராதனப் பெண்களின் வரலாற்றை, பெருமைகளை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்கிறார்.
சமூக சீர்கேடுகள்
  • பெண்கள் அறிவை வளர்த்தால் வையகம் பேதமை யற்றிடுங் காணீர் என்கிறார். பெண்களுக்கு எதிரான எத்தனையோ சமூக சீர்கேடுகள் அந்நாளில் நிலவியது என்றாலும் மகாகவி பாரதியின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது பெண்கள் கல்வி பெற முடியாமல் இருந்த சூழல். அதனால்தான் அவருடைய கவிதைகள், கட்டுரைகள் பெண்ணின் அறிவாற்றலை, அறம் சார்ந்த அவளது வலிமையை மீண்டும் மீண்டும் பேசுகின்றன.
  • பெண்ணின் அறிவும் அறமுமே முன்னேற்றத்துக்கும் அதன் வழியே புராதனமான இந்தத் தேசத்தின் மேன்மைக்கும் அவசியம் என்று கருதினார் மகாகவி பாரதி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் ஞானச் செருக்கும் பெண்ணின் தேவை என்பதையும் இவற்றைக் கொண்ட பெண்களைச்செம்மை மாதர் என்று அவர் போற்றுவதும் இதன் அடிப்படையில்தான்.
பெண்ணியம்
  • அறம் சார்ந்த செயல்பாடுகளையும் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்வது பெண்ணின் சுதந்திரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் தேவையானது என்பதுதான் மகாகவி பாரதி கற்றுத் தந்த பெண் விடுதலை; பெண் உரிமை. அதேநேரத்தில் தற்போது அதிகமாகப் பேசப்படும் பெண்ணியம் என்ற கருத்தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.
  • பெண்ணின் பார்வையில் இந்த உலகம் என்பதாக முதலில் பெண்ணியம் கருதப்பட்டது. பின்னர் பெண்களுக்கான உரிமைகள் பற்றிப் பேசத் தொடங்கியது. சமத்துவமின்மைக்கான காரணங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், சமத்துவமின்மையை எதிர்க்கும் செயல்பாடுகள் என்று பெண்ணியம் எனும் சொல்லுக்கு வெவ்வேறு விதமாக வரையறைகளை நாளுக்கு நாள் தேவை கருதி மாற்றிக் கொண்டே போகிறார்கள்.
  • ஒரு கோட்பாடு என்பதை வரையறுக்கக்கூட இயலாத ஒரு கருத்தாக்கம் எந்த விதத்தில் நமக்குப் பயன் தரப் போகிறது? மேலை நாடுகள் அறிவியலில் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்த போதிலும் ஆண், பெண் என்ற உறவில் பெரும் தடுமாற்றத்தோடுதான் எப்போதும் இருந்து வருகின்றன.
உரிமைகள்
  • பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதில் தொடங்கி வாக்குரிமை வரை அனைத்துக்கும் அவர்கள் போராடும் சூழலில் நம் தேசத்தில் பெண்களுக்கு இவை தேவையா என்பது போன்ற சிந்தனையோ கேள்வியோகூட எழுந்ததில்லை.
  • பெண்ணியம் பற்றிய புரிதலும் உலகம் முழுவதும் வேறுபட்டதாகவே அமைந்திருக்கிறது.  தமிழகத்தை அல்லது இந்தியாவைப் பொருத்தவரை பெண்ணியம் எனும் கருத்தாக்கம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. பெருமளவில் சமூகம் இத்தகைய கருத்தாக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியா குடும்ப அமைப்பை நம்பும் நாடு.
  • இந்தக் குடும்ப அமைப்பின் தலைவியாக இருப்பவள் பெண். ஆண் இல்லாத ஒரு குடும்பத்தைப் பெண்ணால் தெளிவாக வழிநடத்திச் செல்ல முடியும். ஆனால், பெண் இல்லாமல் போனால் அது குடும்பம் என்னும் அமைப்பிலிருந்து மாறுபட்டு விடும் சூழல்தான் இன்றுவரை நிலவுகிறது. அதனால், இத்தகைய உரிமை பற்றிப் பேசும் கருத்தாக்கங்கள் நம் நாட்டில் வெகுஜன மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
  • நம்முடைய சமூக அமைப்பு அறம் எனும் அடிப்படையை இன்றும் பேணுகிறது. குடும்பத்தினருக்கான கடமைகள், பொறுப்புகள் ஆகியவை முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன.
  • தனி மனித சுதந்திரம் விருப்பம் பற்றி மேலை நாடுகள் பேசும் நிலையில் குடும்பம் பேணுவது என்னும் கொள்கையில் இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி இருக்கிறது. குடும்பம் சார்ந்த சிந்தனை பெண்ணியம் என்ற கருத்தாக்கம் தரும் சிந்தனையை ஏற்க மறுக்கிறது என்பதே இங்கு நிதர்சனமான உண்மை.
  • தனி மனித விருப்பம், சுதந்திரம் ஆகியவற்றைப் பெண்ணியக் கோட்பாடு அடிப்படையாகக் கொண்டிருக்க பொறுப்புணர்வு, கூட்டுவாழ்க்கை முதலானவற்றை நம் தேசம் அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இங்கே இந்தக் கருத்தாக்கங்கள் வெற்றி பெறவில்லை.
  • அதே நேரத்தில் பெண்களுக்கான மரியாதை, அங்கீகாரம் ஆகியவை கிடைக்கப்பெற வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல; சமூகத்தை மாற்றியமைக்க முயற்சி செய்வதாகும்  என்று சார்லட் எடுத்துரைக்கிறார். இதற்கு நாம் மீண்டும் மகாகவி பாரதியிடம் செல்லலாம். அறம் பற்றிப் பேசும் மகாகவி பாரதி, ஒரு பெண் இந்தத் தேசத்தை உருவாக்குகிறாள். அவளது குழந்தைகள்தான் இந்தத் தேசத்தின் எதிர்காலம். எதிர்காலம் சிறப்புற வேண்டுமெனில் தாயாக இருக்கும் பெண். தன் மக்களை அதற்கேற்ப சிந்தனைத் திறத்தோடு வளர்க்க வேண்டும்.
தலைமுறைகள்
  • ஒரு தலைமுறைப் பெண்கள் நினைத்தால் ஒரு மிகச் சிறந்த சமுதாயத்தை உருவாக்கிவிட முடியும். தொன்று தொட்டு நம் பெண்கள் இதனை உணர்ந்து மிகச் சிறந்த தலைமுறைகளை உருவாக்கினார்கள். இன்றைய சமூகத்தின் சீர்கேடுகளைக் களைய வேண்டுமானால், பெண்களை மரியாதையோடு பார்க்கும் ஆண் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும். ஆண்-பெண் ஒழுக்கத்தோடு வளர்க்கப்பட வேண்டியது சமூகத்தின் தூய்மைக்கும் வளர்ச்சிக்கும் அவசியம் என்பதை வலியுறுத்தி, அது நமது தேசத்தின் மதிப்புமிக்க தாய்மார்கள் கையில் இருக்கிறது என்று நம்பிக்கையோடு கூறியிருக்கிறார்.
  • கலிய ழிப்பது பெண்க ளறமடா என்று எல்லாக் கொடுமைகளையும் மூடத்தனங்களையும் அழித்தொழித்து அறத்தை நிலைநாட்டும் ஆற்றல் இந்தியப் பெண்களுக்கே உரித்தான இயல்பு என்று பெருமிதத்தோடு மகாகவி பாரதி பாடுகிறார். உயிரைக் காக்கும் சேர்த்திடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா என்று போற்றியவர் வழியில் ஆரோக்கியமான சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் செயலில் பாரதப் பெண்கள் ஈடுபடுவார்கள் என நம்புவோம்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories