TNPSC Thervupettagam

பிளாஸ்டிக்: தீர்வுகளுக்குத் தேவை பண்பாட்டுப் பார்வை!

February 7 , 2019 1970 days 1697 0
  • மும்பையில் பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடை, மாற்றுப்பொருட்கள் உரிய அளவில் இருப்பு இல்லாமல், பிரபலப்படுத்தவும் படாமல் தோல்வி முகத்தை எதிர்கொண்டிருக்கிறது.
  • மும்பையில் கடந்த ஆறு மாதங்களில் 48,000 டன் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்படாதது குறித்த கணக்கு இல்லை. இந்தப் பின்னணியில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை நடைமுறைக்கு வந்துள்ள ஒரு மாதத்தில் நம்பிக்கைக்குரிய மாற்றங்கள் தென்படுவதை வெளிப்படையாகவே உணர முடிகிறது.
பதிப்பாளர்களின் பிளாஸ்டிக் காதல்
  • சென்னை புத்தகக்காட்சி ஜனவரி முதல் வாரம் தொடங்கியது. புத்தகக்காட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடைவிதிக்க வேண்டுமென்ற கோரிக்கை சில ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தாலும், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமலேயே இருந்து வந்தது. பிளாஸ்டிக் பைகள் குறித்த விவாதங்கள் பரவலான பிறகு,  எல்லோரும் துணிப்பைக்குப் பதிலாக விலை குறைந்த செயற்கை இழைப் பைக்கு மாறினார்கள்.
  • ஜவுளிக்கடைகள் முன்பே தொடங்கி வைத்திருந்த இந்தச் செயற்கை இழைப் பைகள் புத்தகக்காட்சியை ஆக்கிரமித்தன. பார்ப்பதற்கு துணியைப் போன்றிருந்தாலும், செயற்கை இழைப் பைகளும் எளிதில் மக்கக்கூடியவை அல்ல.
  • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையின் தொடர்ச்சியாக செயற்கை இழைப் பைக்கும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. ஆனால், புத்தகக்காட்சியில் செயற்கை இழைப் பைகள் கட்டுக்கட்டாக விற்கப்படுவதைப் பல நாட்களுக்குப் பார்க்க முடிந்தது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு புத்தகத்தையும் தனித்தனி பிளாஸ்டிக் பைகளால் பொதியும் வழக்கத்தையும் தொடர்கிறார்கள்.
லாபம் பார்க்கும் நூதனங்கள்
  • பிளாஸ்டிக் தடைக்குப் பிறகு, பல்பொருள் அங்காடிகளிலும் பெரிய காய்கறி-பழக் கடைகளிலும் புதிய முறையில் காசு பறிக்கும் போக்கு ஒன்றும் உருவாகியுள்ளது. தரமற்ற, நீடித்து உழைக்காத துணிப் பைகள் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக விற்கப்படுகின்றன. துணிப்பைகள் தேவை, அவை மக்கக்கூடியவையும்கூட.
  • ஜனவரி மூன்றாவது வாரத்தில் அலுவல் வேலை நிமித்தம் 'இந்தியக் கடலோரக் காவல்படை' கப்பலில் பயணிக்க நேர்ந்தது. அதில் காலை சிற்றுண்டி அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டும் மதிய உணவு மென் அலுமினியப் பெட்டியில் வைத்தும் தரப்பட்டது. நூற்றுக்கணக்கானோருக்கு உணவு தரும்போது, உணவைப் பரிமாறுவதற்கும் வாங்குபவர்கள் கையில் வைத்து உண்பதற்கும் அது வசதியானதுதான். ஆனால், இதுபோன்று செயற்கைப் பொருட்களில் இருந்து விடுபடுவது குறித்து அனைத்துத் தரப்பினரும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
  • பிளாஸ்டிக்குக்கு மாற்று காகிதம் என்பதிலும்கூட பிரச்சினை இருக்கவே செய்கிறது. பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகளை வகை பிரித்து எடுத்துச்செல்ல பழுப்பு நிறக் காகிதப் பை கொடுக்கப்படுகிறது. அதேபோல காகிதக் குவளை பயன்பாடும் பேரளவில் தொடர்கிறது. புதிய காகிதப் பொருட்கள் நேரடியாக மரங்களை அழிக்கின்றன, வேதிக் கழிவை வெளியேற்றுகின்றன; உற்பத்திக்காக இயந்திரப் பயன்பாடு, எரிபொருள் செலவைக் கோருகின்றன. புதிய காகிதப் பைகளுக்குப் பதிலாக செய்தித்தாள் பை போன்ற மறுசுழற்சிப் பைகளைப் பயன்படுத்தலாம். காகிதக் குவளைக்குப் பதிலாக கண்ணாடி, எவர்சில்வர் குவளைகளைப் பயன்படுத்தலாம்.
  • பதப்படுத்தப்பட்ட மந்தாரை இலை, தென்னையோலைத் தொன்னைகளில் உணவு பரிமாறப்படுவது, மண் குவளையில் தேநீர் வழங்கப்படுவது இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் ஒரு பண்பாடாகவே தொடர்கிறது.
  • இந்த நடைமுறை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், இயற்கைக்கும் ஆரோக்கியம் தருவது. ‘இயற்கையில் மறுஉற்பத்தி செய்யக்கூடியதாகவும், மனித உழைப்பைக் கோருவதாகவும் இருக்கும் பொருட்கள் மட்டுமே உலகைச் சுரண்டாமல் இயக்கும், உய்விக்கும்’ என்பது ஜே.சி. குமரப்பா போன்ற இயற்கைப் பொருளியல் அறிஞர்கள் முன்மொழிந்த கொள்கை.
  • மந்தாரை இலைத் தேவைக்காக அந்த மரங்கள் தொடர்ந்து வளர்க்கப்படும், முற்றிலும் வெட்டப்படாது. அதேபோல, குவளை செய்யப் பயன்படும் மண் மீண்டும் மண்ணோடு மண்ணாகச் சேர்ந்துவிடும். இதுபோன்ற மறுஉற்பத்தியே உலகைத் தொடர்ந்து வாழ வைக்கும்.
இயற்கையிலிருந்து அந்நியமாதல்
  • பூக்கடைகளில் விற்கப்படும் உதிரிப்பூக்கள், கட்டப்பட்ட பூக்கள் இன்னமும்கூட பிளாஸ்டிக் பைகளில் வைத்துதான் தரப்படுகின்றன. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் சிறுநகரங்கள், சிற்றூர்களில் இன்னமும் உலவிக்கொண்டுதான் உள்ளன. ‘பிளாஸ்டிக் தடையெல்லாம் பெரிய ஊர்களுக்குத்தான்’ என்ற குரலையும் கேட்க முடிகிறது. படையலுக்கான புதுத் துணிகளைப் பிரித்தபோது, ஒவ்வொரு துணியும் பிளாஸ்டிக்கில் பொதியப்பட்டிருந்தது நெருடலாக இருந்தது.
  • படையல் நிகழ்வுகளின்போது படைக்கப்படும் துணிகளில், சில துணிகள் மட்டும் அடுத்த படையலுக்குப் பாதுகாக்கப்படும். இப்படிப் பாதுகாப்பதற்காக பனையோலையில் பின்னப்பட்ட பெரிய பேழை ஒன்றை வைத்திருப்பார்கள். சிவகங்கை மாவட்டப் பகுதிகளில் இதுபோன்ற பனையோலைப் பேழைகள், பெட்டிகள், சிப்பங்கள் முன்பு பரவலாகக் கிடைத்துக்கொண்டிருந்தன. அவற்றுக்கான மாற்றுப் பொருட்கள் சந்தையில் அதிகரித்துவிட்ட நிலையில், தேவை குறைந்து தற்போது அவை கிடைப்பது அரிதாகிவிட்டது. கிடைப்பவையும் விலை கூடியவையாகவே உள்ளன.
  • இந்தப் பனையோலைப் பேழை ஒவ்வொரு வீட்டிலும் பரம்பரை பரம்பரையாக வருவது, புனிதமாகக் கருதப்படுவது, மனிதர்களுடைய இயற்கைச் சார்பின் வெட்டிவிட முடியாத தொடர் இழையாகப் பின்னிக் கிடப்பது. இத்தனை பிணைப்புகளைத் தாண்டி இன்றைக்கு அந்தப் பேழைகள் விடைபெற்றுவிட்டன.
  • அந்த இடத்தில் மூடியிட்ட பெரிய பிளாஸ்டிக் வாளிகள் உட்கார்ந்துவிட்டன. இயற்கை-தாவரங்களின் நேரடிச் சார்பிலிருந்து நமது சமூகம் புற அளவில் விலகிவிட்டதன் அடையாளமாக மட்டுமே இதைக் கருத முடியாது. இயற்கைச் சார்புகளில் இருந்து மனதளவிலும் நாம் பெரும் தொலைவு விலகி வந்துவிட்டதற்கான தெளிவான அறிகுறிகளாகவே இவற்றைக் கொள்ள வேண்டும்.
  • ஒரு சமூகத்தின் புழங்கு பொருளில் ஏற்படும் மாற்றம், இப்படி வேறு சில அசைவுகளையும் சுட்டியே நிற்கும். என்றைக்கு ஒரு சமூகம் தன் பண்பாட்டின் அடிப்படைச் சார்புகளிலிருந்து அந்நியமாகிறதோ, அச்சமூகம் தன் அடிப்படைக் கூறுகளைத் தொலைப்பதற்கான தொடக்கமாக அதைக் கொள்ளலாம். பிளாஸ்டிக் மீதான பிடிமானத்தில் இருந்து நாம் விலக முடியாமல் இருப்பதற்கான அடிப்படைக் கூறுகளை இந்தப் பின்னணியில் தேடும்போது விடை கிடைக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories