TNPSC Thervupettagam

புதிய கொலஸ்ட்ரால் கொள்கை இந்தியாவுக்குப் பொருந்துமா?

July 11 , 2019 1997 days 2693 0
  • உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடிப் பேர் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் காரணமாக மரணமடைகின்றனர்.
  • அதிலும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் மாரடைப்பு ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளைவிட அதிகம்.
  • மாரடைப்பு ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், நீரிழிவு, புகைபிடித்தல், அதீத கொழுப்பு போன்ற பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானது கெட்ட கொலஸ்ட்ரால் (LDL).
  • இதுதான் இதயத்துக்கும் மூளைக்கும் செல்கிற ரத்தக்குழாய்களை அடைத்து, உயிருக்கு ஆபத்து தருகிறது. இந்த கொலஸ்ட்ராலை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை அமெரிக்க இதயவியல் கல்லூரியும், அமெரிக்க இதயநோய்க் கழகமும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு அவ்வப்போது மருத்துவர்களுக்கு அறிவுறுத்துவது வழக்கம். அதன்படி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற மாதம் ஒரு புதிய கொலஸ்ட்ரால் கொள்கையை அவை அறிவித்துள்ளன.
கொலஸ்ட்ரால் வகைகள்
  • நம் ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) 50 மிகி/டெலி-க்கு அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் 100 மிகி/டெலி-க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
  • இந்த விதி அனைவருக்கும் பொதுவானது. ஆனால், மாரடைப்பு வர வாய்ப்புள்ளவர்களுக்கும், ஏற்கெனவே மாரடைப்பு வந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் 70-க்குக் குறைவாகவே இருக்க வேண்டும்.
  • இப்படி கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கு முதலாவதாகக் கவனிக்கப்பட வேண்டியது நம் உணவுமுறையும் வாழ்க்கை முறைகளும்தான். அவற்றில் அது கட்டுப்படவில்லை என்றால் மட்டுமே ‘ஸ்டாடின்’ மாத்திரைகள் சாப்பிடுவதை வழக்கப்படுத்த வேண்டும்.
  • குறிப்பாக, மருத்துவர்கள் பயனாளிகளுக்கு ‘ஸ்டாடின்’ மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்கு முன்பாக ஆரோக்கிய வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற அழுத்தம் தர வேண்டும் என்கிறது இந்த அறிக்கை.
  • அடுத்ததாக, கொலஸ்ட்ரால் பரிசோதனையை வெறும் வயிற்றில்தான் பரிசோதிக்க வேண்டும் எனும் விதி முன்பு இருந்தது. இப்போது அது தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், வெறும் வயிற்றில் பரிசோதித்தாலும் உணவு சாப்பிட்ட பிறகு பரிசோதித்தாலும் ரத்த கொலஸ்ட்ராலில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • எனவே, கொலஸ்ட்ரால் பரிசோதனையை வெறும் வயிற்றிலும் பரிசோதிக்கலாம்; சாப்பிட்ட பிறகும் பரிசோதிக்கலாம். இது பயனாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய வழிகாட்டலாகக் கருதப்படுகிறது.
  • மூன்றாவதாக, ஸ்டாடின் மாத்திரை யாருக்கு, எந்த அளவில் அவசியம் என்பதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இதயத்தில் ஏற்கெனவே பாதிப்பு உள்ளவர்கள், கெட்ட கொலஸ்ட்ரால் 100-க்கு அதிகமாக உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்
    • அதாவது புகைபிடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், பரம்பரையில் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு வந்தவர்கள் ஆகியோருக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க முதன்மைத் தடுப்பாக ஸ்டாடின் மாத்திரை அவசியம் என்கிறது இந்தப் புதிய கொள்கை.
    • ஏற்கெனவே, 2013-ல் அறிவிக்கப்பட்ட கொள்கை முடிவுதான் இது என்றாலும், புதிய கருத்து ஒன்றும் இதில் இணைந்துள்ளது. அதுதான் இந்தக் கொள்கையில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.
இரண்டாம் நிலை மாத்திரைகள் யாருக்கு?
  • அதாவது, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாரடைப்பு, நெஞ்சுவலி அல்லது பக்கவாதப் பாதிப்பு வந்தவர்கள், பரம்பரை வழியில் மாரடைப்பு வந்தவர்கள், கட்டுப்படாத உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீண்ட காலம் நீரிழிவு உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள், ரத்தக்குழாய் அழற்சி உள்ளவர்கள், ஸ்டாடின் மாத்திரை பலன் தராதவர்கள், மன அழுத்தம் மிகுந்தவர்கள் ஆகியோர் ஏற்கெனவே எடுத்துக்கொள்ளும் ஸ்டாடின் மாத்திரையோடு ‘எஜிடிமைப்’ (Ezetimibe) மற்றும் ‘பிசிஎஸ்கே9 தடுப்பான்’ (PCSK9 inhibitors) எனும் இரண்டாம் நிலை மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அந்த அமைப்புகள் வலியுறுத்துகின்றன. அதேநேரத்தில், இவர்களுக்கு இதயத் தமனியில் கால்சியம் அளவு (CAC) பூஜ்ஜியமாக இருந்தால் இந்த மாத்திரைகள் தேவையில்லை எனவும் அறிவித்துள்ளன. இதன்படி, மேற்சொன்னவர்களுக்குப் புதிய மாத்திரைகள் தேவைப்படுமா என்பதை அறிய இனி இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது அவசியமாகிறது.
  • பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், முதன்முறையாக இந்த அமைப்புகள் மாத்திரைகளின் விலை குறித்துப் பேசியுள்ளதுதான். இப்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலைத் தடுப்பு மாத்திரைகளின் விலை மிகமிக அதிகம். மேலும், பயனாளிகள் இவற்றை ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்பதால் எல்லோராலும் தொடர்ந்து பயன்படுத்துவது நடைமுறை சாத்தியமில்லை. எனவே, இவற்றின் விலையைக் குறைக்கச் சொல்லி அமெரிக்க அரசுக்கு அந்த அமைப்புகளே கோரிக்கை வைத்தன. அரசும் அதற்குச் சம்மதித்தது. அந்த மாத்திரைகளைத் தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் அரசின் வேண்டுகோளை ஏற்று சுமார் 60% விலையைக் குறைத்துவிட்டன.
மாற்றம் நம்மிடம் தொடங்கட்டும்
  • இந்தப் புதிய கொள்கை முடிவுகள் அமெரிக்க மக்களிடம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு இது பொருந்துமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
    • அப்படியே இது பொருந்துமானால், இந்தியாவிலும் இந்த மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் இந்த மருந்துகள் கிடைக்க வழிவகுக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நம் நாட்டுப் பயனாளிகள் முழுமையாகப் பலனடைய முடியும்.
  • கொலஸ்ட்ராலைக் குறைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வது தொடர்பாக அவ்வப்போது மாற்றுக்கருத்துகள் வருவது இயல்புதான் என்றாலும் மாத்திரைகளைவிட முக்கியமானது, நம் வாழ்க்கை முறை.
    • வெள்ளை அரிசி, வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை உப்புப் பயன்பாட்டைக் குறைப்பது, முழுதானிய உணவுகளை உண்பது, துரித உணவுகளைத் தவிர்ப்பது, அதிக கொழுப்புள்ள இறைச்சி/எண்ணெய் வகைகளைக் குறைத்துக்கொண்டு மீன், காய்கறி, பழங்கள், நட்ஸ்களை அதிகம் உண்பது, பேக்கரி உணவுகளையும் நொறுக்குத்தீனிகளையும் தவிர்ப்பது, புகைப்பதை நிறுத்துவது, மதுவை மறப்பது, மன அழுத்தம் குறைப்பது, தேவையான ஓய்வெடுப்பது, நடைப்பயிற்சி/யோகா/தியானம் மேற்கொள்வது போன்ற ஆரோக்கிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் கெட்ட கொலஸ்ட்ராலுக்கு உடலில் இடமில்லாமல்போகும்.
  • நல்ல கொலஸ்ட்ரால் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளும். இப்படி மாற்றம் நம்மிடம் தொடங்கும்போது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிர்க்கொல்லிகளை நிச்சயம் தடுக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories