TNPSC Thervupettagam

புத்தகங்களைப் பரிசளியுங்கள்!

June 25 , 2019 1980 days 1043 0
  • திருமணம் அல்லது இல்ல நிகழ்ச்சிகளில் நீங்கள் தரும்  பரிசுப் பொருள் அல்லது அன்பளிப்பு என்பது, அன்பு கலந்த உணர்வின் வெளிப்பாடு;  அன்பளிப்பாகத் தரப்படும் பொருள்களைவிட, அன்பளிக்கும்-பரிசளிக்கும் செயலே முக்கியத்துவம் வகிக்கிறது. நடைமுறையில் பல திருமணக்கூடங்களில், அவசர கதியில் மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு கவரை அவர்கள் கையில் திணித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவசரமாகச் செல்வதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அந்த அளவுக்கு அன்பளிப்பு என்பது  ஒரு சம்பிரதாயமாக-சடங்காக மாறியிருக்கிறது.
  • விழாவில் பெற்ற பரிசுப் பொருள்கள் பலவும்கூட பிரித்துப் பார்க்கப்பட்டு, உதட்டின் பிதுக்கலோடு பத்திரப்படுத்தப்படுவதுண்டு. அவற்றுள் சில, வேறு உறையில் மாற்றப்பட்டு, மற்றொரு நிகழ்ச்சிக்கு அன்பளிப்பாகச் சென்று சேர்வதும் உண்டு. ஆனாலும் இன்னொரு புறம், மாறிவரும் நுகர்வு கலாசாரத்தின் பின்னணியில், இளைய சமுதாயத்தினரை நம்பி பரிசுப் பொருள்களுக்கு என்றே பிரத்யேகமாக ஏராளமான அங்காடிகள் முளைத்திருக்கின்றன.
நிகழ்ச்சிகள்
  • திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தங்களது  பங்களிப்பாகவும் பிறருக்கு உதவும் எண்ணத்துடனும் பணத்தை பெரும்பாலானோர் அன்பளிப்பாகத்  தரும் வழக்கம் எப்போது தொடங்கியதோ தெரியவில்லை; ஆனாலும் இன்றளவும்  நிலைத்து நிற்கிறது.
  • பொதுவாக பரிசுப் பொருளை பெறும் நபர், அவரது வயது, தொழில், அவருடன் உள்ள நெருக்கம் அல்லது உறவு, அவரது விருப்பங்கள்  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்படும் அன்பளிப்புகள், நினைவில் நிற்பது மட்டுமின்றி பயனுள்ளவையாகவும் அமையும்; ஆனாலும், இவை அனைத்துக்கும் விதிவிலக்காக  அமையும் ஒரே அன்பளிப்பு புத்தகங்கள் மட்டுமே. புத்தகங்களைவிட இன்னொரு சிறந்த அன்பளிப்பு இருக்குமா என்பது சந்தேகமே.
  • அதிலும், நீங்கள் படித்து ரசித்த ஒரு புத்தகத்தை பிறருக்கு அன்பளிப்பாகத் தரும்போது ஏற்படும் மனதிருப்திக்கு ஈடு இல்லை. பல பரிசுப் பொருள்கள், வெகு சில காலத்தில் அவற்றின் பயன்பாட்டினை இழக்கும். ஆனால், புத்தகங்கள் அவற்றின் மதிப்பை இழப்பதில்லை.
  • சில ஆண்டுகள் கழித்து மறுவாசிப்பின் மூலம் படிப்பவருக்கு புத்துணர்வையும் மகிழ்ச்சியையும் புத்தகங்கள் கொடுக்கக் கூடியவை. தவிர, சில வீடுகளில் காலத்தை வென்ற சில நூல்கள் தலைமுறை தாண்டி, அடுத்த தலைமுறைக்கும் பயன்படும். புத்தகம் வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்கள், அவருக்கேற்ற பொருத்தமான  புத்தகத்தை அதுவரை பார்க்கவில்லை என்றுதான் பொருள்; நீங்கள் தரும் புத்தகம், அவர் விரும்பக்கூடிய ஒரு புத்தகமாக அமைந்துவிட்டால், ஒரு நல்ல பழக்கத்தை அவர் உருவாக்கிக் கொள்ள நீங்கள் காரணமாக அமைவீர்கள்.
  • அந்த வகையில் அவர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஆவீர்கள். அதே போன்று, புத்தகங்களைப் போன்ற நல்ல வழித்துணை கிடைப்பது அரிது. ரயில், விமான நிலையங்களில் காத்திருக்கும் நேரம், பயணம் செய்யும் நேரம், தனித்துப் பயணிக்கும்போது, தொழில்  நிமித்தமாக தங்கியிருக்கும் போது எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில், புத்தகங்கள் நல்ல துணையாக அமையும். சில நூலாசிரியர்கள், அவர்களின் எழுத்துகள் மூலம் நமக்கு நண்பர் போன்றவர்கள்; சில நூலாசிரியர்கள்  வழிகாட்டிகள்  போன்றவர்கள்.  புத்தகங்களைப் பரிசளிக்கும்போது, ஒரு நல்ல நண்பரையோ, வழித் துணையையோ, வாழ்வின் வழிகாட்டியையோ அறிமுகம் செய்கிறீர்கள்; பரிசாக அளிக்கிறீர்கள் என்று பொருளாகும்.
  • மேலும், புத்தகத்தின் விலையைவிட அதன் தரம்தான் உயர்வானதாகக் கருதப் படும்; மிகச் சிறிய நூல்கூட, பெரிய தாக்கத்தினை ஏற்படுத்த வல்லது அல்லவா? நல்ல புத்தகம் ஒன்றை பரிசாகப் பெற்றவர், அதை ஒரு பெரும் பொக்கிஷமாகப் போற்றுவார். பரிசாக அளித்தவரை, அவரது நட்பு வளையத்துக்குள் நெருக்கமாக வைத்திருப்பார். நீங்கள் தரும் புத்தகங்கள், வீட்டில் சிறு நூலகம் அமைக்கும் எண்ணத்தை ஒருவருக்கு ஏற்படுத்துமானால் அவருக்கு மட்டுமல்ல, ஒரு சமுதாயத்துக்கே பெரும் தொண்டாற்றியவர் ஆகிறீர்கள்.
அன்பளிப்பு
  • நீங்கள் பரிசளித்த புத்தகத்தினை, பரிசு பெற்றவர்  படிக்கவே இல்லை என்றாலும், அவர் குடும்பத்தினரோ, வேறு எவரோ வாசிக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில்  அது பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
  • வயதில் இளைய, குறிப்பாக சிறுவர்களுக்கு அன்பளிப்பாகத் தரப்படும் புத்தகங்கள் பெரும் மதிப்புடையவை. ஏனெனில், அவர்களது கற்பனை வளத்தினை புத்தகங்கள் தூண்டும்; அவர்களிடம் மறைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர உதவும். ஒரு சிறுவன் புத்தகம் வாசிக்கும் பழக்கத்துக்கு நீங்கள் காரணமானால், ஒரு நல்ல குடிமகனை உருவாக்க உதவுகிறீர்கள்.
  • இன்னொரு தளத்தில் கல்வியை அரசு இலவசமாகக் கற்பித்தாலும், புத்தகம் வாங்கிப் படிப்பது என்பது பல எளிய குடும்பத்தினருக்கு எட்டாக்கனிதான். எனவே, தெரிந்தவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ள எளியோர், கிராம நூல் நிலையம், கல்விக்கூடம் என  நீங்கள் புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவது பேருதவியாக இருக்கும்.
  • புத்தக அன்பளிப்பு என்பது, ஒரு நண்பருக்கு, ஓர் இளைஞனுக்கு, சிறுவனுக்கு, ஒரு கிராம நூல்நிலையத்துக்கு, பள்ளிக்கூடத்துக்கு மட்டும் நேரடியாகப் பயன்படுவது அன்று. அதற்கும் அப்பால், சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர்கள், அந்த நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள்  எனப் பலருக்கும் ஒரு சேர உதவுகிறது.  மேலும், எவருக்கேனும் பரிசளிக்க  ஒரு புத்தகம்  வாங்கும்போது,  உங்களுக்கும் ஒரு புத்தகம் நிச்சயம் வாங்குவீர்கள்.
  • எனவே, புத்தக அன்பளிப்பு என்பது, தனி மனிதன் மற்றும் சமுதாயம் என்ற இரு தளங்களில் பயன்தர வல்லது. புத்தகங்களையே பரிசளியுங்கள்!

நன்றி: தினமணி (25-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories