TNPSC Thervupettagam

புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்!

February 18 , 2019 2139 days 1636 0
  • காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ல் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
  • விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிக்கொண்டிருந்த வீரர்கள் சென்ற பேருந்துகள் மீது, ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள் நிரம்பிய காரை பயங்கரவாதி ஓட்டிச் சென்று மோதியதில் இந்தக் கொடூரம் நடந்திருக்கிறது.
  • பாகிஸ்தானில் தடையேதும் இல்லாமல் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் பயங்கரவாத அமைப்பு இதற்குப் பொறுப்பேற்றிருக்கிறது.
  • இந்தியாவைச் சீண்டுவதற்கும் இந்திய மக்களிடையே பிளவு ஏற்படுவதற்கும் செய்யப்பட்ட முயற்சி இது என்பதில் சந்தேகமில்லை.
  • 78 பேருந்துகளில் 2,500-க்கும் மேற்பட்ட வீரர்களை சாலை வழியாகக் கொண்டுவரத் திட்டமிட்ட பாதுகாப்புப் படையினர், பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகபட்ச கவனம் செலுத்தாதது குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன.
  • பயங்கரவாதிகள் ஊடுருவல், தாக்குதல் குறித்து அரசையும் பாதுகாப்புப் படையினரையும் எச்சரிக்க வேண்டிய உளவுப் பிரிவுகள் அதில் தவறிவிட்டனவா என்றும் கேள்வி எழுகிறது.
  • பாகிஸ்தான் தூதரை அழைத்துக் கண்டித்திருக்கும் இந்தியா, ‘மிகவும் வேண்டப்பட்ட நாடு’ என்ற அந்தஸ்தை விலக்கிக்கொண்டிருப்பதுடன், அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 200% வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
  • இத்தகைய பதில் நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டவைதான் என்றாலும் இதனால் பிரச்சினைகள் தீராது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
  • ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்கா, தாலிபான்களுடன் பேச பாகிஸ்தானையே நம்பியிருக்கிறது.
  • இந்நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாக வல்லரசு நாடுகள் வரக்கூடிய சூழல் இல்லை. மும்பை தாக்குதலில் தொடர்புடைய மசூத் அசாரை, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க ஐநா சபையில் முட்டுக்கட்டை போடும் சீனத்தின் நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • மேலும், இதுபோன்ற தாக்குதல்களுக்குப் பிறகு இந்திய அரசு எடுத்த முந்தைய நடவடிக்கைகளால் என்ன பலன்கள் ஏற்பட்டன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  • பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு அவர்கள் விரும்பும் வகையிலேயே எதிர்வினையாற்றக் கூடாது.
  • அதேசமயம், பயங்கரவாதிகள் தடையின்றிச் செயல்பட தங்களுடைய மண்ணை அளிப்பதுடன், அவர்களுக்கு எப்படி அரணாகச் செயல்படுகிறது பாகிஸ்தான் என்பதை சர்வதேச அரங்கில் விவரித்து, பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும்.
  • மசூத் அசார் தங்களுடைய மண்ணில் சுதந்திரமாக நடமாடவும், பயிற்சி தரவும், தாக்குதல் திட்டங்களைத் தீட்டவும், செயல்படுத்தவும் பாகிஸ்தான் இடம்தருகிறது என்பதில் சந்தேகமே கிடையாது.
  • மத்திய அரசின் உளவு அமைப்பும் காஷ்மீர் மாநில உளவு அமைப்பும் இணைந்து செயல்பட வேண்டும்.
  • மிக முக்கியமாக, காஷ்மீர் மக்களிடையே பதற்றம் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிற மாநிலங்களில் வாழும் காஷ்மீரிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். பயங்கரவாதிகளும் அவர்களுக்கு உதவுவோரும் தனிமைப் படுத்தப்பட வேண்டும். உள்நாட்டில் அமைதி காக்கப்பட வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories