TNPSC Thervupettagam

பூமியின் "நுரையீரல்" காப்போம்!

June 8 , 2019 2040 days 1507 0
இயற்கையின் கொடை – கடல்
  • இயற்கை தந்த பிரம்மாண்ட கொடை கடல். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதைக் காக்கும் வகையில், 1992-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் உலக கடல் விழிப்புணர்வு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8-ஆம் தேதி கடைப்பிடிப்பது என முடிவு செய்யப்பட்டது.
  • கடலின் முக்கியத்துவம் காரணமாக, அதை பூமியின் "நுரையீரல்' என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. உலகின் நான்கில் மூன்று பகுதி கடல் பரப்புகளே உள்ளன. ஒரு பகுதி மட்டுமே நிலப்பரப்பு அமைந்துள்ளது. உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 97 சதவீதம் கடல் நீராகும். உவர் நீரைக் கொண்டிருந்தாலும் எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குவதுடன், பூமியின் உயிர் நீராக கடல் நீர் விளங்குகிறது.
  • மழைப் பொழிவு, உணவுப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் போன்றவற்றுக்கு கடலையே மனித இனம் சார்ந்துள்ளது. அது மட்டுமின்றி, மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் 70 சதவீதத்துக்கும் மேலான சுவாசக் காற்றை (ஆக்ஸிஜன்) கடல்தான் தருகிறது. மரங்களைவிட அதிகளவு பிராண வாயு கடல் மூலமே கிடைக்கிறது.
கடல் மாசு
  • பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கு சூழலியல் மண்டலம் சம நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அத்தகைய சமநிலையை ஏற்படுத்துவதில் கடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடல் வழியாக பிற நாடுகளுக்கு பயணங்களும், சரக்குப் போக்குவரத்தும் அதிகளவில் நடைபெறுகிறது. இதனால், கடல் மற்றும் கடலோரச் சூழல் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. கடல் மாசடைவதற்கு 80 சதவீதம் மனித சமுதாயமே காரணம்.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் கடலில் கலக்கிறது. அதே போன்று, தோல், சாயம், ரசாயனம், உரம் உள்ளிட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. கச்சா எண்ணெய், நிலக்கரி போன்றவற்றை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணெய்க் கசிவும், நிலக்கரி கொட்டிச் செல்வதும் நிகழ்கிறது. இதனால் கடல் நீர் பல மடங்கு மாசடைவதுடன், கடல் வாழ் உயிரினங்களும்  பாதிக்கப்படுகின்றன.
 எண்ணெய் மாசு
  • உலகில் ஆண்டுதோறும் சுமார் 265 கோடி லிட்டர் எண்ணெய் கடலில் கலப்பதாகவும், இவற்றில் 50 சதவீதம் கரை ஒதுங்குவதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. கடலின் மேல்மட்டத்தில் பரவும் எண்ணெய்ப் படலமானது, சில மணி நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்குப் பரவி, கடல் நீரின் அடர்த்தியையும், தன்மையையும் மாற்றி விடுகிறது.
  • கடலில் பரவும் எண்ணெய்ப் படலத்தால் சூரிய ஒளி கடலின் கீழ் பரப்புக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய்ப் படலமானது அலைகள், நீரோட்டம், காற்று வீசும் திசை ஆகியவற்றைப் பொருத்து பரவுகிறது. அதுபோல் கரையில் ஒதுங்கும் எண்ணெய் படலத்தால் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
  • கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகும் போது, அவற்றிலிருந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே இரு கப்பல்கள் மோதிக் கொண்டதில் வெளியான எண்ணெய்க் கசிவால் எண்ணற்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அழிய நேரிட்டன.
  • கடந்த 2010-ஆம் ஆண்டு மெக்சிகோ வளைகுடா பகுதியில், கடலில் எண்ணெய்த் துரப்பண பணியின்போது ஏற்பட்ட விபத்தால் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்து, எண்ணற்ற அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்தன.
நெகிழிக் கழிவுகள்
  • எண்ணற்ற நெகிழிக் கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் சூழல் பாதிக்கப்படுகிறது. கடலில் கலக்கும் நெகிழிக் கழிவுகளை கடல் வாழ் உயிரினங்கள் உண்பதால் அவை பாதிப்புக்குள்ளாகின்றன. பின்னர், கடல் உணவுகளைச் சாப்பிடும் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். உலகில் உள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் வீதம், இதுவரை சுமார் 15 கோடி டன் நெகிழிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இதே நிலை நீடித்தால் 2050-இல் கடலில் மீன்களைவிட நெகிழிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கடலை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா 12-ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடலில் உள்ள பவளப் பாறைகள் அழிவதாலும் உலகின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் முக்கிய ஆதாரமாக விளங்குவது பவளப் பாறைகள். ஆழம் குறைந்த கடல் பகுதியின் அடிப்புறத்தில் இருந்து பல லட்சம் பாலிப் உயிரிகள் ஒன்றிணைந்து பவளப் பாறைகளை உருவாக்குகின்றன. பவளப் பாறைகளைச் சார்ந்து எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களும், கடல் தாவரங்களும் வாழ்ந்து வருகின்றன.
  • வளி மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உட்கிரகித்து, "கால்ஷியம் கார்பனேட்'டாக மாற்றுவதால், உலகின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பவளப் பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடலின் தட்பவெப்ப நிலையைக் காத்து சீரான வெப்பநிலையில் பாதுகாக்கவும், சீரான வேகத்தில் அலையைச் செயல்படச் செய்யவும், கடற்பகுதிகளில் இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கவும் பவளப் பாறைகள் அரண் போல் உள்ளன. கடல் மாசு மட்டுமின்றி, சுண்ணாம்பு தயாரிப்பு, உயர் ரக ஆபரணங்கள் தயாரிப்பு, வீடுகள் மற்றும் நட்சத்திர உணவகங்களில் மீன் தொட்டிகளை அலங்கரிக்க சட்ட விரோதமாக வெட்டிக் கடத்தப்படுவதாலும் பவளப் பாறைகள் அழிகின்றன.
  • நிலவாழ் உயிரினங்களைப் பார்ப்பதுபோல், கடல் வாழ் உயிரினங்களின் மதிப்பையும், பரந்து விரிந்த கடலின் பெருமையையும் யாரும் உணர்வது இல்லை. கடலானது நிலப்பகுதியின் குப்பைத் தொட்டியாகவே கருதப்படுகிறது. இதை மனதில் கொண்டு, அடுத்த சந்ததியினருக்கு தூய்மையான கடலை பரிசாக அளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
 

நன்றி: தினமணி (08-06-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories