TNPSC Thervupettagam

பேசாத வார்த்தை...பேசிய வார்த்தை...

May 14 , 2019 2069 days 1468 0
  • நீ பேசாத வார்த்தைக்கு நீ எஜமானன், நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமானன் என்பது எல்லோரும் அறிந்த வாக்கு. ஆனால், இதை இந்தத் தேர்தல் காலத்தில் எந்த அரசியல்வாதியும் நினைவில் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தியாவின் 17-ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் பணி மேற்கொண்டுள்ள அதிகாரிகளுக்குக் கடுமையான வேலைப்பளுவையும் ஆயாசத்தையும் கொடுக்கும் மிக நீண்ட காலத் தேர்தல் நடைமுறை இதுவாகும்.
தேர்தல் பணி
  • தேர்தல் பணிப் பொறுப்புகளால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டதைப் போல, விமர்சனங்கள் நிறைந்த தேர்தல் பிரசாரங்களால் வாக்காளர்களாகிய பொதுமக்களும் அதிர்ந்து போயிருக்கிறார்கள் என்பதே உண்மை. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் எதுவானாலும் சரி, ஆண்டுகொண்டிருக்கும் கட்சி ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க முற்படுவதும், ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதும் பொதுவான நடைமுறைதான்.
  • ஆனால், இந்தத் தேர்தலுடன் உலகமே அழிந்துவிடும் என்பது போலவும், இந்த முறை ஜெயிக்காவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்பது போலவும், நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் இப்போது மேற்கொண்டுவரும் பிரசார பாணி காரணமாக,  நாகரிகத்தை எதிர்பார்க்கும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். கட்சிகளின் பெருந்தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும்  இந்தத் தேர்தலை ஏதோ இந்தியா-பாகிஸ்தான் யுத்தமாகக் கருதுவது போன்று அவர்களது பிரசாரங்கள் வெளிப்படுகின்றன. தேர்தல் ஆணையமும், நீதிமன்றங்களும் எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் பரவாயில்லை என்று பரஸ்பரம் சேற்றை வாரி இறைக்கும் வகையில்தான் பிரசாரம் அமைந்துள்ளது.
  • தேர்தல் காலத்தில் முன்பெல்லாம் ஒரு கட்சியின் மூத்த தலைவர்கள் சற்றேனும் நாகரிகமாகப் பேசுவதும், அந்தக் கட்சியின் மூன்றாவது நான்காவது நிலைப் பேச்சாளர்கள் வாய்க்கு வந்ததைப் பேசுவதும் வழக்கமாக இருந்தது. இப்போது தலைவர்களே தரம் தாழ்ந்து பேசுவதை என்னவென்று சொல்வது? இந்தத் தருணத்தில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு,  பிறகு இவர்களெல்லாம் ஒருவரைவரை ஒருவர் சந்திக்கும் தருணம் வாய்த்தால் இவர்களது மனசாட்சியே இவர்களை உறுத்தாதா? ஆகாய விமானத்திலோ ரயிலிலோ அருகருகில் பயணப்படநேர்ந்தால்  முகத்தையா திருப்பிக் கொள்வார்கள்? இத்தனை பேசுகின்ற இவர்கள், இந்தத் தேர்தலில் ஒருவேளை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஏற்கெனவே தாங்கள் யாரைத் திட்டித் தீர்த்தார்களோ அவர்களுடனே கூட்டணி அமைத்து பதவியைப் பங்கு போட்டுக்கொள்ள மாட்டார்களா? ஏதோ ஒரு கட்சியினர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதாகவே வைத்துக்கொண்டாலும் கூட,  எதிர்க்கட்சியினரின் பூரண ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நாட்டின்  நிர்வாகத்தையோ, நாடாளுமன்ற அமர்வுகளையோ அவர்களால் சுமுகமாக நடத்திவிட முடியுமா? ஏதேனும் ஓர் இயற்கைப் பேரிடரோ, எதிரி நாட்டுடன் யுத்தமோ ஏற்பட்டுவிட்டால் அப்போது எல்லாக் கட்சியினரும் இணைந்து செயல்பட்டால்தானே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும்.
ஒற்றுமை
  • இப்போது பரஸ்பரம் வசை பாடிவிட்டுப் பிறகு திடீரென்று எப்படி இவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படும்? தேர்தல் வெற்றிக்காக ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தால், எதிர்வரும் நாள்களில் ஏதேனும் ஓர் அரசியல்வாதியின்  குடும்பத்தில் ஏற்படக்கூடிய சுக-துக்க நிகழ்வுகளுக்கு மற்ற கட்சியினர்கள் அனைவரும் சென்று வாழ்த்துவதோ, ஆறுதல் கூறுவதோ சாத்தியப்படுமா? அனைவரும் மனிதர்களாகத்தானே பிறந்தோம்.
  • யாரும் அவரவர் தாயின் வயிற்றிலிருந்து அரசியல்வாதியாகவே வெளிப்படவில்லையே. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என இரண்டும்  நடைபெறுவதால் பிரசாரக் களம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. அவரவருக்குத் தெரிந்த வரையில் அடுக்கு மொழியிலும், கவிதை நடையிலும் ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொள்கின்றனர்.
  • இதில் வேடிக்கை என்னவென்றால், தாம் சார்ந்த கட்சிக்காக நன்கு ஜனரஞ்சகமாகப் பிரசாரம் செய்யக்கூடிய மூத்த திரைப்பட நடிகர் ஒருவர், தேர்தல் பிரசாரங்கள் தொடங்கும் முன்பாகவே பொது மேடை ஒன்றில் சக நடிகை ஒருவரை (அடுக்குமொழி வசனம் பேசுவதாக நினைத்துக் கொண்டு) அவதூறாகப் பேசியதால் அவர் மீது கட்சி நடவடிக்கை பாய, அவரால் பிரசாரத்துக்கே போக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறையான நமது மக்களவைத் தேர்தலை குறைசொல்ல வழியில்லாதபடி நடத்தி முடிப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு மட்டுமல்ல, நம் அனைவரின் பொறுப்பும் ஆகும்.
  • இதனை நமது நாட்டின் அரசியல்கட்சிகள் கண்ணியமாகவும்,  பரஸ்பர மரியாதையுடனும் எதிர்கொள்வதன் மூலம் உலக அரங்கில் நமது மதிப்பு மேலும் உயரும். ஆனால், நடைமுறையோ வேறுவிதமாக இருக்கிறது. துக்ளக் ஆசிரியராக இருந்த மறைந்த சோ ராமசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாசகரின் கேள்விக்குப் பதில் அளித்தபோது, நம் அரசியல்வாதிகள் நாகரிக எல்லையை மீறுவதில்லை;
  • ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த எல்லையைத் தள்ளி வைக்கின்றனர் என்று கூறினார். அவர் கூறியது இன்றும் அரங்கேறிவருகிறது. இந்தத் தேர்தலில் செய்யப்பட்ட பிரசாரங்களின் நாகரிக எல்லையைக் கண்டுவிட்டோம். இனிவரும் தேர்தல்களிலாவது அந்த  எல்லை மேலும் தள்ளிவைக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே, ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பைக் கொண்ட ஏராளமானோரின் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பாகும்.

நன்றி: தினமணி (14-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories