TNPSC Thervupettagam

பேரிடர் பெருநஷ்டம்!

March 21 , 2018 2451 days 4713 0
பேரிடர் பெருநஷ்டம்!

 - அமாணிக்கவள்ளி கண்ணதாசன்

- - - - - - - - - - - - - - - -

  • ”இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் வாழும் முறையை நமக்குக் காட்டினார். இடர் என்னும் இடுக்கண் வந்தால் நகுதல் என்னும் சிரித்தலை மேற்கொள்ளலாம். ஆனால், பேரிடர்கள் என்றால் நாம் அதனைக் கண்டு சிரிக்க முடியாது. கொழுந்து  விட்டு எரியும் பிரச்சினையைக் கண்டு நம்மில் பெரும்பாலானோர்க்கு அழத்தான் தோன்றும். அப்படித்தான் அண்மையில் தேனி மாவட்டம் குரங்கணியில் நிகழ்ந்த காட்டுத் தீவிபத்து அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. மின்னல், காய்ந்த சருகுகள் உராய்தல், உருளும் கற்களின் உராய்வு ஆகியன காட்டுத் தீ ஏற்பட இயற்கையான காரணங்களாக அமைகின்றன. சட்டத்திற்குப் புறம்பாக மரங்களை வெட்டுதல், காட்டின் இடையே வழி உண்டாக்குதல் ஆகியன மனிதனால் உருவாகும் காரணங்களாக இருக்கின்றன.  1952 ஆம் ஆண்டு தேசிய காடுகள் கொள்கையானது காடுகளைச் சுற்றி வாழ்வோர், தேச நலத்திற்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனக் கூறுகின்றது. ஆனால், அவ்வாறு ஈடுபடாமல் இருந்தால் காட்டுத் தீ என்பது கானல் நீராக அல்லவா இருந்திருக்கும்!
  • பேரிடர்கள் என்பது நாம் நினைப்பது போல் புயல், வெள்ளம், நில நடுக்கம், வறட்சி மட்டும் அல்லாமல் நிலச்சரிவு, புவி வெப்பமடைதல், எரிமலை வெடிப்பு, சூறைக் காற்று, பெரும் விபத்துகள், கடல் அரிப்பு, தொற்றுநோய் என்று பலவும் இதில் அடங்கும்.   பேரிடர் என்பது வளமான நல்ல சமூகத்தினைச் சடுதியில் பேரழிவுக் குழியில் தள்ளிப் பிறரைக் காட்டிலும் பின்தங்கச் செய்வதாகும்.  மேலும் பேரிடரால் சமுதாயத்தின் நடவடிக்கை தடைபடும் என்று ஐக்கிய நாடுகளின் அவையும் தெரிவித்துள்ளது.
  • இயற்கையின் கோரத்தாண்டவம் ஒரு புறம் என்றால் மனிதனின் அலட்சியம், கவனக்குறைவு, சுயநலம், சோம்பேறித்தனம், விழிப்புணர்வின்மை போன்றனவும் பேரிடர் நிகழக் காரணமாகின்றன. பாதிப்பினை முன் கூட்டியே உணர்ந்து பாதிப்பினை தணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், மறு சீரமைப்பு என்பது மலைக்கக் கூடிய விஷயமாக உள்ளது.
  • 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பூஜ் என்னும் இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் எட்டினை எட்டிப் பார்த்தது உலகையே நடுங்க வைத்தது. 700 கிலோ மீட்டர் வரை பரவிய நிலநடுக்கமானது வரலாற்றுச் சிறப்புமிக்க சுவாமி நாராயணன் கோயிலினை சேதமடையச் செய்ததினை நாம் மறந்திருக்க மாட்டோம்.
  • நாம் நினைப்பது போல் நிலநடுக்கங்கள் மனிதனின் மகத்தான பொக்கிஷ சக்தியான உயிரினை உறிஞ்சுவதில்லை. மாறாக இடிந்து விழும் கட்டிடங்களே அந்நிலைக்கு ஆளாக்குகின்றன. நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் நம்முடைய இந்தியா தன் படையினர் உதவியுடன் “ ஆபரேஷன் மைத்ரி” எனப்படும் காக்கும் நடவடிக்கையின் மூலம் உதவியினை அளித்தது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.
  • இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளுள் தமிழ்நாடு பாதிப்பு குறைந்த மண்டலத்தில் அமைந்துள்ளது. அதிக  பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக வடகிழக்கு இந்தியப் பகுதி மற்றும் கட்ச்  பகுதி, காஷ்மீர், பஞ்சாப், மேற்கு மற்றும் மத்திய இமயமலைப் பகுதிகள் ஆகியன அமைந்துள்ளன. இதற்குத் தீர்வே இல்லையா? மண்ணின் தரத்தினை நன்றாக பரிசோதித்துக் கட்டிடம் கட்டுதல் இப்பிரச்சனைக்கு ஓரளவு பலனைத் தரும்.
  • 2004 ஆம் ஆண்டு சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் கடற்கோளாய் மாறி நம்மை கதிகலங்கச் செய்தது என்றால் அது மிகையல்ல. அவ்வமயம் சுனாமி என்ற சொல்லை சொல்லாத ஆளில்லை எனலாம். சுனாமி என்ற ஜப்பான் சொல்லுக்குத் துறைமுக அலைகள் என்று பொருள். கடற்கோளினால் ஏற்படும் அலைகள் 15 மீட்டருக்கும் மேலும் உயரும். அது மட்டுமல்லாது அலைகளின் வேகம் சுமார் 300 கிலோ மீட்டருக்கு மேல் அமைந்து உயிரினைச் சுருட்டிக் கொள்ளக் கூடியவை. சுனாமியினால் ஏறக்குறைய 1,50,000  நபர்கள் இறந்தனர். இந்தியாவில் மட்டும் சுமார் 15000  நபர்கள் இறந்தனர் என்பது நம்மில் பலருக்கும் தாங்கவொண்ணாச் சோகத்தினை ஏற்படுத்தியது.
  • செய்திகளில் காஷ்மீரில் நிலச்சரிவு என்ற செய்தியினை அடிக்கடி கேட்டிருக்கின்றோம். இதற்கு என்ன காரணம் தெரியுமா? இயற்கை மட்டுமின்றி மனிதனும் இதற்குக் காரணம்தான். எவ்வாறு? நில நடுக்கம் மற்றும் அதிக மழை ஒருபுறம் காரணம் என்றால் பனிச்சறுக்கு விளையாட்டு, வெடிபொருட்கள் வெடித்தல் ஆகிய மனிதத் தவறுகளும் இவற்றிற்குக் காரணமாகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மனிதர்கள் இயற்கையைச் சூறையாடியதே மாபெரும் காரணம். பெரும்பாறைகள்  கீழ்நோக்கி நகர்ந்து வருவதே  நிலச்சரிவு எனப்படுகின்றது.  நிலச்சரிவினால் தப்பிக்க இயலாத நிலை வர நேரிடின் என்ன செய்வது? கழுத்தின் பின்புறம் இரு கரங்களையும் இணைத்து அமர்ந்த நிலையிலோ அல்லது மண்டியிடுதல் நிலையிலோ இருத்தல் நலம் பயக்கும்.
  • புயலுக்குப் பிடித்த மாநிலங்கள் எவை என்றால் ஆந்திரப்பிரதேசமும் ஒடிசாவும் என்று அழுகின்ற குழந்தை கூட தன் அழுகையை நிறுத்தி விட்டுச் சொல்லும். ஆம்! வட கிழக்குப் பருவகாலம் சில நேரங்களில் மாபெரும் வருத்தத்தினை நமக்கு கொடுத்து விட்டுச் செல்லும். தென் மேற்குப் பருவகாலம் மட்டும் சளைத்ததா என்ன? மும்பையினை வெள்ளத்தில் மூழ்கடிக்கத்தான் செய்கின்றது. ஆம்! வர்த்தக தலைநகரம் வருத்தத்தில் வாடுகின்றது. இல்லை.. இல்லை.. நனைந்து மூழ்குகின்றது.

 

  • 1999 ஆம் ஆண்டில் ஒடிசாவில் ஏற்பட்டப் புயலானது 20 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்களைச் சூறையாடியது. அதன் பின் ஒன்றும் புயலின் ஓட்டம் ஓய்ந்து விட வில்லை. லைலா, ஜல், தானே, நிலம், பைலின், ஹெலன், லெஹர், மாதி, ஹூட் ஹூட் என்று புதுப் புதுப் பெயர்களில் புயல்கள் பூமிப்பந்தினைப் புரட்டிப் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
  • பிறந்த குழந்தைகளுக்கு வைக்கக் கூடிய அளவிற்கு புயலின் பெயர்கள் வசீகரமானதாக உள்ளதே ...எப்படி? பெயர் வைக்கும் அந்தப் பின் புலத்தினைத் தெரிந்து கொள்வோமா? முதலில் கரீபியன் தீவுகளில் இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. அந்தத் தீவுகள் குறித்த  சிறப்பான செய்தி என்னவென்றால் ஒவ்வொரு நாளையும் ஒரு புனிதரின் பெயரிட்டு அழைப்பார்கள். புயல் வரும் நாள் எந்தப் புனிதரின் நாளோ அந்தப் புனிதரின் பெயர் புயலுக்கு வைக்கப் பெறுவது வழக்கமானது.  பின் 1953 ஆம் ஆண்டு வானிலை ஆராய்ச்சியாளர்கள் புயல்களுக்குப் பெண்களின் பெயர் வைக்கும் பழக்கத்தினை அறிமுகப்படுத்தினார்கள்.
  • பெண்ணுரிமையாளர்களின் போராட்டத்தினால் அந்நடைமுறை 1977 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்டது.  1978 ஆம் ஆண்டு முதல் ஆண்களின் பெயர்களும் இடம் பெற்றன. உண்மையில் பெண்ணுரிமைப் போராளிகள் ஆண்களுக்காகவே போராடி ’பெயர்’ வாங்கித் தந்தார்களோ? அது சரி! வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு யார் பெயர் வைப்பார்கள்? இந்தியா என்கிறீர்களா? அதுதான் இல்லை... இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம், தாய்லாந்து, ஓமன், மியான்மர், மாலத்தீவு, ஆகிய நாடுகள் இணைந்து புயலுக்கான பெயர் பட்டியலைத் தயாரித்துள்ளன.  ஒரு விஷயம் தெரியுமா? எந்தப் புயல் அதிகமான உயிர்ச் சேதத்தினை ஏற்படுத்துகின்றதோ அதன் பெயர் அதன் பின்னர் வைக்கப்படுவதில்லை. ஆம்! குழந்தையாய் நினைத்து நாம்  பெயர் வைத்தால் அது பேயாய் மாறினால் நாம் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
  • 1984 ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மெத்தில் ஐசோ சயனைடின் கசிவு என்றாலே இன்றும் பாதிக்கப்பட்டவர் கண்களில் மட்டுமல்லாமல் படிப்பவர் கண்களிலும் நீர் கசியத்தான் செய்யும். அது மட்டுமா? 2004 ஆம் ஆண்டு பிஞ்சுக் குழந்தைகள் கும்பகோணத்தில் சாம்பலானது மனிதத் தவறுகளுக்கு மகத்தான எடுத்துக்காட்டுகளாகி விட்டது. 1999 ஆம் ஆண்டில் ஜே.சி. பந்த் தலைமையில் அமைக்கப்பட்டப் பேரிடர் மேலாண்மைக்கான உயர் மட்டக் குழு, முழுமையான இணைந்து பங்கேற்றல் மூலம் தீர்வு காணும் நடைமுறையினை வலியுறுத்தியது.
  • 1989 ல் கலிபோர்னியாவின் லோமா பிரிட்டா மற்றும் 1994 ல் நார்த் ரிட்ஜ் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் உலகளவில் தாக்கத்தினை ஏற்படுத்தின. சீனாவின் ஹூவாங்கோ ஆறும் யாங்கட்சீ ஆறும் தன் வெள்ளப் பெருக்கினால் பல உள்ளங்களை வேதனையடையச் செய்கின்றன. நம் பிரம்மபுத்திரா பகுதியில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சீற்றம் மற்றும் ஹெயிட்டி பகுதியின் வெள்ளச் சீற்றம் பலத்த சேதங்களை ஏற்படுத்தின. இந்தியாவில் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா கரையோரப் பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. ஏரி, குளங்களைத் தூர் வாருதல், மழைநீர் சேமிப்பு ஆகியன நம்மூரில் வெள்ளப் பெருக்கினை தடுக்க உதவும்.
  • 1967, 1973, 1980, 1987 ஆகிய ஆண்டுகளின் வறட்சி ஏற்படுத்திய வருத்தம்  இன்றைய தலை முறைக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மூத்த தலைமுறையினர் மிக கசப்பான அனுபவமாய் அதனை இன்றும் அசை போடுவார்கள். மாரியல்லது காரியமில்லை என்பது உண்மைதான் என்பதினை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். நீண்ட காலமாக  10 சதவிகிதத்திற்கும் குறைவாக மழை பெய்தால் வறட்சி என இந்திய வானிலைத் துறை வரையறுக்கின்றது. நம் இந்தியாவின் 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்போ வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது.  1973 ஆம் ஆண்டு விவசாய உற்பத்தி பெருக்க வறட்சி பாதிப்புப் பகுதி திட்டம் உருவாக்கப்பட்டு மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. வறட்சி அதிகமானால் வேறென்ன? அடுத்த கட்டம் பாலைவனம்தான்!
  • பாலைவனங்களின் பரவலினை அறிய ஒரு குறியீடு பயன்படுகின்றது.  அதுதான்  தாவரங்களின் இயல்பான வேறுபாட்டுக் குறியீடு ஆகும். அப்படி என்றால் ....? செயற்கைக் கோள் உதவியோடு தாவரங்களின் பரவல் அளவினை அடிப்படையாகக் கொண்டு நிலப்பரப்பின் பசுமையைக் குறிக்கும் ஓர் எண்ணாகும். மேலும், மத்திய அரசால் பாலைவனங்களை மேம்படுத்துவதற்காக 1977 ஆம் ஆண்டு பாலைவன மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள வெப்பப் பாலைவனங்களுக்கும், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர் பாலைவனங்களுக்கும் வரப்பிரசாதமாய் அமைந்தது.
  • பேரிடரால் நன்மையும் ஏற்படுகின்றது என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா? எரிமலை வெடிப்பதினால் காடுகள் அழிப்பு, விமானப் போக்குவரத்து பாதிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எரிமலை வெடிப்பதினால் உருவாகும் பொருள்கள் தொழிற்சாலைகளுக்கு உள்ளீட்டு பொருட்களாகவும், வேதிப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. மேலும் எரிமலையிலிருந்து வெளிப்படும் துகள்களினால் மண்ணின் வளமானது அதிகரிக்கின்றது. அது மட்டுமா? எரிமலையிலிருந்து வெளிப்படும் வெந்நீர் ஊற்றானது புவி வெப்ப ஆற்றல் தயாரிக்கப் பயன்பட்டு ஆற்றல் மேலாண்மைக்கும் உதவுகின்றது.
  • மக்கள் தொகைப் பெருக்கமும் பேரிடர் மேலாண்மைக்கு மிகப்பெரும் சவாலாய் உள்ளது. மெக்கா அருகில் மினா பகுதியில் ஏற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள் நெரிசல் சம்பவம் பெருந்திரளான மக்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்துவதில் உள்ள இடர்பாட்டினை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. நெரிசலில் அந்த இடத்தின் நிலைமையை மேலும் மோசமாக்காமல் இருப்பதே பேரிடர் மேலாண்மையின் சிறந்த செயலாக அமையும்.
  • பல நேரங்களில் பேரிடர்களை ஆராய்ச்சி செய்வோர்க்கும், திட்டமிடுவோர்க்கும், பாதிக்கப்பட்டோர்க்கும் இடையேயுள்ள புரிதலில் மிகுந்த இடைவெளி காணப்படுகின்றது. இந்த இடைவெளி குறைந்து பேரிடர் சார்ந்த அறிவுப் பரவலே நிலைமையைச் சமாளித்திட உதவும். பள்ளிப் பாடத்திட்டமும் பேரிடர் மேலாண்மை குறித்துப் போதித்துத் தற்போது அதற்குப் பேருதவி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. முன் கூட்டிய திட்டமிடலும், வந்த பின் எச்சரிக்கையுடன் விரைவாகச் செயல்படுதலும் பல்வித பிரச்சினைகளைக் குறைக்கும்.
  • 2005 ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலமாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிரதமரைத் தலைவராக கொண்டு துவக்கப்பட்டது. மாநில அளவில் முதல்வரும், மாவட்ட அளவில் ஆட்சியரும் தலைவராகக் கொண்டு மாநில மற்றும் மாவட்ட ஆணையங்கள் அமைக்கப்பட்டு மேலாண்மை செய்யப்படுகின்றது. பேரிடர் அபாய மேலாண்மை திட்டம் மத்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால்  2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றது. பேரிடருக்குப் பின் அளிக்கப்படும் நிவாரணத்தினை முன்னராக அளித்திடல் வேண்டுமென்பது நம் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை கொள்கையில் ஒன்றாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • பேரிடர்களை மேலாண்மை செய்தல் சமூகத்தின் அவசரமானதாகவும் அவசியமாகவும் ஆகின்றது.  நம் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 80 சதவிகிதத்திற்கும் மேலான  பகுதி ஏதாவது ஒரு இயற்கைப் பேரிடருக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.   பேரிடர் மேலாண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தல் என்பது மட்டும் அடங்காது. பேரிடர் வரும்முன் அதன் அறிகுறிகளைக் கணித்து எப்பொழுது வரும் என்று அறிதல், எச்சரிக்கை அறிவிப்பினை சரியான நேரத்தில் விடுத்தல், உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டறிதல் மற்றும் காத்தல்,  மீண்டும் நல்வாழ்வை நோக்கிய மறு சீரமைப்பு எனும் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகும். பேரிடர்களை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கத்தோடு தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், காவல்துறை, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் சமூகமும் இணைந்து செயலாற்றுகின்றது. அதனுடன் செயலில் வேகமும் விவேகமும்தான் நம்முடைய உடனடித் தேவை என்பதினை உணர வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்பொழுது இருக்கின்றோம்.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories