TNPSC Thervupettagam

பொதுத் துறை: வரமா, சாபமா?

June 6 , 2019 1992 days 1180 0
  • எதையும் பிரம்மாண்டமாகச் செய்வதுதான் அமெரிக்க நாட்டின் பாணி. ராணுவ போர்க் கருவிகளை, வான ஊர்திகளை உலகமே வியக்கும் வண்ணம் தயாரித்து புகழ் கொண்ட அமெரிக்கா, தனது நாட்டின் விமானம் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றால் உலக நாடுகளின் நம்பிக்கையை இழந்து நிற்கிறது.
விமான விபத்து
  • அக்டோபர் 2018, மார்ச் 2019 -இல் ஏற்பட்ட இரண்டு விமான விபத்துகளே இதற்குக் காரணம். சியாட்டில் நகரத்தில் உள்ள போயிங் குழுமம் போயிங்  737 மேக்ஸ் ஜெட்  என்றதொரு புதிய ரக விமானத்தைத் தயாரித்து வந்தது.  இதன் சிறப்பு கருதி உலக நாடுகள் பல 5,000 விமானங்களை வாங்கின.  இந்த விபத்து காரணமாக இப்போது 370 விமானங்கள் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
  • சுமார் தலா 10 கோடி டாலருக்கு மேல் விலை கொடுத்து வாங்கிய பிற நாட்டு விமான நிறுவனங்கள்  பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.  1,53,000 ஊழியர்கள் பணிபுரியும் இந்த விமானத் தொழிற்சாலை இன்று உலகின் நம்பிக்கையை இழந்து நிற்கிறது.
  • விபத்துக்கான காரணம், விமானத்தின் இயந்திர மென்பொருள் ஒன்று விமானத்தின் முன்புறம் கீழ்நோக்கிச் செல்லும் வகையில் செயலாற்றியது. கண்ட்ரோல் சிஸ்டம் இப்படிச் செய்ததால் தவிர்க்க இயலாத வகையில் விமானம் கீழ் நோக்கிப் பாய்ந்து 346 மனித உயிர்களைப் பலி கொண்டது.  இதனால், விமான உற்பத்தி நிறுவனம் நிலைகுலைந்து நிற்கிறது.
தனியார் துறை
  • விமானம் பறப்பதற்கு எப்படி ஒரு தவறான மென்பொருள் சான்றிதழ் வழங்கப்பட்டது என விசாரணை தொடங்கியுள்ளது.
  • இது ஒரு தனியார் துறை என்பதால் அமெரிக்க அரசுக்குக் கடுகளவுகூட இழப்பு இல்லை.  மக்களின் வரிப் பணமும் பாழாகவில்லை.  ஆனால், நம் நாட்டில் நவரத்தினங்கள் என்று சொல்லப்படும் ஒன்பது பொதுத் துறை நிறுவனங்களைத் தவிர்த்து மற்ற எல்லா அரசு நிறுவனங்களும் சோக வரலாற்றையே தினம் எழுதி வருகின்றன.
  • தமிழ்நாடு அரசின்வசம் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன.  இவை அனைத்தும் நாள்தோறும் ரூ.9 கோடியை இழந்து வருகின்றன.  1967-க்கு முன்னால், நீண்ட தொலைவுப் பேருந்துகளை அரசின் சார்பில்ஆர்.வெங்கட்ராமன் தொடங்கி வைத்துப் பிள்ளையார் சுழி போட்டார்.
  • பின்னர் வந்த திமுக அரசு, 75 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள வழித்தடங்களை தன்வசம் எடுத்துக் கொண்டு பேருந்துகளை தேசியமயப்படுத்தியது.  சாலைப் போக்குவரத்துத் துறையில் புகழ்பெற்ற நிறுவனங்களாக விளங்கிய டி.வி.எஸ்.,  இராமன் அண்ட் இராமன், எஸ்.ஆர்.வி.எஸ்., சத்தி விலாஸ்,  டி.எம்.டி., டி.என்.டி., ஏ.பி.டி. போன்ற நிறுவனங்கள் தொலைந்து போயின.
பேருந்துகள்
  • தற்போது தமிழ்நாடு அரசின்வசம் 21,678 பேருந்துகள் உள்ளன. நாள்தோறும்  2 கோடி மக்கள் பயணிக்கின்றனர். பல லட்சம் மாணவர்கள் இலவசமாகப் பயணம் செய்கின்றனர்.  இதற்காக அரசு 50 சதவீதம் மானியம் தருகிறது.  மீதி 50 சதவீதம்  போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கின்றன.  மாத ஊதியம் பெறும் அரசியல்வாதிகள், தியாகிகள் மற்றும் சிலர் இலவசமாகப் பயணிக்கலாம்.
  • பல்லாயிரம் ஊழியர்கள் பணிபுரியும் இந்தப் போக்குவரத்துக் கழகங்களின்  அசையும், அசையாச் சொத்துகளை வங்கிகளில் அடகு வைத்து ரூ.16,000 கோடி கடன் பெற்றுள்ளன.  இதற்கான வட்டி பல லட்சங்களாகக் குட்டி போடுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.1,700 கோடியைப் பராமரிப்புக்காகச் செலவிட்டிருக்கிறது, அரசு.
  • ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளில் 13,700 சாலை விபத்துகளைச் சந்தித்து விலைமதிப்பற்ற 4,700 மனித உயிர்களை அரசுப் பேருந்துகள் பலி கொண்டுள்ளன.  2018-ஆம் ஆண்டு செப் 5-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணையின்போது ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய ஓய்வூதியத் தொகை ரூ.1,138.68 கோடி நிலுவை பாக்கி இருப்பது வெளிப்பட்டது.
  • இதனைப் பெற தொழிலாளர்கள் போராட்டம் செய்வதும், பேச்சுவார்த்தை நடத்துவதும், சொற்பத் தொகையை அளித்து கால அவகாசம் கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது.  தற்போதுதமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.50 லட்சம் கோடிக்கு மேல் இருக்கிறது.
  • இப்படிப்பட்ட சூழலில், தொடர்ந்து தினசரி இழப்பைச் சந்தித்து வரும் நிறுவனத்தை தனது வறட்டுக் கொள்கைக்காக, போலித்தனமான தேசியமய போர்வையில் ஏன் நடத்த வேண்டும்?  இவை தனியார்வசம் இருந்தால் என்ன? தனியாருக்குத் தாரை வார்க்காதே என்ற கூக்குரலால்,  மக்களின் வரிப் பணம் மட்டுமல்லாது, கடன் சுமையும் விண்ணை முட்டுகிறது.
மார்க்சிஸ தத்துவம்  
  • இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு 1962-இல் மார்க்சிஸம் என்றார்.  அமலுக்கு வந்த எழுபது ஆண்டுகளுக்குள்ளாகவே மார்க்சிஸ தத்துவம்  செயலிழந்து விட்டது.  உலகின் வர்த்தக வரைபடத்தில் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்ட சிங்கப்பூரின் கதாநாயகர் லீ-குவான்-கீ முதலில் பொதுவுடைமைவாதியாக இருந்தவர். அதிலிருந்து விலகி தன் நாட்டை வளப்படுத்தினார்.
  • சீனாவில்கூட திறந்த பொருளாதாரக் கொள்கைகள்தான் இன்று பின்பற்றப்படுகின்றன என்பதை நம் ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சீனாவில் வேளாண் நிலங்களை தனியாரிடமிருந்து மா சே துங் எடுத்துக்கொண்டு, கூட்டுறவுப் பண்ணைகளாக அமைத்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது.  ஆனால், எல்லாத் தடைகளையும் மீறி தனது நோக்கத்தை நிறைவேற்றினார்.
  • அதற்கு அவர் கைக்கொண்ட தொழிலாளருக்கான நெறிமுறைகள் கடுமையானவை.  உழை-உண்; நீ வளர உன் நாட்டை வளப்படுத்து; பணியை ஓய்வின்றி செய்; உரிமை உனக்கு தானாக வரும் என்ற மந்திரத்தை ஓதினார். இதற்கு இடையூறு செய்த எவரையும் கடுமையாக  தண்டிக்கத் தவறவில்லை. இதையடுத்து ஊழலின் ஊற்றுக்கண் அடைபட்டுப் போனது.  நம் நாட்டில் இது சாத்தியமா?  முறைகேடுகள், தவறான திட்டங்கள், ஊழல்கள் எப்படி ஏற்பட்டது என்று விசாரித்தால் உயர்அதிகாரிகளை ஊழியர்கள் சுட்டுவார்கள்; ஆட்சியாளர்களை நோக்கி அதிகாரிகள் கை  காட்டுவார்கள்.
  • இப்படி ஊழலும், ஒழுங்கீனமும் கைகோத்துக்கொண்டு நிறுவனத்தை நடத்தினால் நஷ்டம்தான் வரும். இப்படிப் பல ஆண்டுகளாக இழப்பைச் சந்திக்கும் போக்குவரத்து நிறுவனங்களை தனியாரிடம் அளித்தால் என்ன?  அரசுக்கு வரி வருவாய் பெருகும்.  மக்களின் வரிச் சுமை குறையும்.  கடன் அளவும் சுருங்கும். சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சிலர் அண்மையில் ஏதோ ஒரு காரணத்துக்காக சிக்னல் கருவிகளைச் சேதப்படுத்தினர் என்பதற்காக,  அவர்களைப் பணி நீக்கம் செய்தது நிர்வாகம்.  இதனை ஏற்க மறுத்த அனைத்துத் தொழிலாளர்களும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் விளைவாக, மெட்ரோ ரயில் போக்குவரத்து முடங்கியது.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டம், பெரும் பொருட்செலவில் ஜப்பான் நாட்டின் கடனுததவியோடு முடிக்கப்பட்ட திட்டமாகும்.  இன்றுவரை நஷ்டத்தில்தான் இயங்குகிறது.  இதனை எல்லாத் தரப்பினரும் உணர வேண்டும். நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் நம் மக்களிடத்தில் சுயக் கட்டுப்பாடும், பணி நேர்த்தியும் வளரவில்லை.  கடுமையாக உழைக்கும் மனத்திடம் உயர,  பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை இந்தியா வந்த மலேசியப்  பிரதமர் மகாதீர் முகமது சொன்னார்:
சுதந்திரம்
  • இந்தியாவில் அளவற்ற சுதந்திரம் இருக்கிறது.  இது வரையறுக்கப்பட்ட சுதந்திரமாக இருந்தால் நாடு இன்னும் சிறப்பாக முன்னேறும் என்றார். பொதுவாக பொதுத் துறை நிறுவனங்கள் பல ஏன் நஷ்டம் அடைகின்றன என்பதை ஆய்வு செய்தால், மனிதர்களின் ஊழல்தான் முன் நிற்கும்.  தன்னல மறுப்போடு பணியாற்றவல்ல ஊழியர்கள், உயர் அதிகாரிகள் பெருக வேண்டும்.  அனைத்துத் தரப்பினரும் தாம் செய்யும் தொழிலே தெய்வம் என்று உணர வேண்டும்.
  • மின்னணுத் துறையில், மோட்டார் வாகனத் தயாரிப்பில் முதல் இடத்தில் இருக்கும் ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் எப்படி முன்னேறின?  அங்கே உள்ள தொழிற்சாலைகளில் ஊழியர்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள் என்பதை நம் தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டும், கேட்டும் உணர்ந்து இங்குள்ள அவர்தம் தொழிலாளர்களுக்கு நகல் எடுத்துத் தரவேண்டும்.  எல்லோரும் உண்மையாய் உழைக்க  உறுதி எடுத்தால் வெற்றித் தேவதை மாலையோடு வருவாள்.
  • நம் நாட்டில் மனித சக்தி உலகின் பெரிய சக்தியாகத் திகழ்கிறது. மனிதக் கூட்டத்தின் அடர்த்தியோ மிக அதிகம். ஆனால், நம் நாட்டில், நமது ஊரில், நமது இல்லங்களில் சாதாரண பணிகளைச் செய்யவல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள், முறைசாரா அமைப்புத் தொழிலாளர்கள் எளிதில் கிடைப்பதில்லை.  மின் பழுது நீக்குவோர் கொல்லர்கள், தச்சர்கள், குடிநீர்க் குழாய்கள் சீர் செய்வோர், வீடு, கட்டடம்  பழுதைச் சரி செய்வதற்கு தொழில் வல்லுனர் கிடைப்பதில்லை.
  • தமிழில் கணினி தட்டச்சு செய்வோர்கூட அதிக அளவில் இல்லை.  இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் வலம் வருவதும், அவர்கள் கையில் உள்ள செல்லிடப்பேசியை விரல் நுனிகளால் தடவி மகிழ்வதும் நாம் காணும் இலவசக் காட்சிகள்.
  • நம் அரசோ உழைக்காமலே உண்டு களிக்க இலவச அரிசியைக்  கொடுத்து மனக் கணக்கு போடும்.  இதனால், உழைக்கும் வர்க்கம் சோம்பிப்போய் முடங்கிப்போனது. இதனால்தான்,  இலவசங்களை அரசு கைவிட்டு நாடெங்கினும் நீர்நிலைகளைச் சீரமைக்க வேண்டும்; ஆறு-ஏரி-குளம் தூர்வார இயந்திரங்களை வாங்க வேண்டும்; முடிந்த இடங்களில் அணைகளைக் கட்ட வேண்டும்  என அண்மையில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
  • எந்தத் தொழிற்சங்கமாவது அவரவர் சார்ந்துள்ள தொழிலாளர்களுக்கு தொழில் அறிவைப் பெருக்கவல்ல வகுப்புகள் எடுத்ததுண்டா?  அரசியல் கட்சிகள் அவரவர் கட்சித் தொண்டர்களுக்கு விஞ்ஞானம், மெய்ஞானம் போதித்தது உண்டா? தொழிலாளர் உடல் நலம், மன நலன், குடும்ப நலன் குறித்துத் திட்டங்கள் தயாரித்தது உண்டா?  அவர்களது உறுப்பினர்களைக் கொண்டு ஒரு முன்மாதிரி நிறுவனத்தைத் தொடங்க எண்ணியதுண்டா?  தொழிலாளர்கள் பணி ஓய்வுபெறும் நாளில் நல்ல வீடோ, பெரும் நிதியமோ வழங்கவல்ல திட்டங்களை வகுத்தது உண்டா? தங்கம் செய்யாததை சங்கம் செய்யுமே. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.  சிறு துளி பெரு வெள்ளம் ஆகுமே. எல்லா நிலைச் சங்கங்களும்  இனி ஒரு விதி செய்து ஊழலுக்கும், ஒழுங்கீனத்துக்கும் இடம் கொடோம் என்று முன்வரும் வரை, நாட்டின் உண்மையான வளர்ச்சி கானல் நீர்தான். நன்மை தரவல்ல துறை எதுவாக இருந்தாலும், ஊழலற்ற துறையாகஇருப்பதே மிகச் சரி.

நன்றி: தினமணி (05-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories