TNPSC Thervupettagam

பொதுநலச் சிந்தனையே சிறப்பு

July 20 , 2019 1998 days 1357 0
  • காகங்கள், புறாக்கள், வாத்துகள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. புலிகள் என்றால் இப்படித்தான் நடந்து கொள்ளும், குதிரையின் குணம் இப்படித்தான் இருக்கும் என்று நமக்குத் தெரியும். ஒரே இனத்தில் அவை வேறு வேறு குணாதிசயங்கள் கொண்டவை இல்லை. ஆனால், மனிதர்கள் அனைவருக்கும் ஒரே குணமா உள்ளது? எத்தனை எத்தனை முரண்பாடுகள்?
  • பொதுவாக, மனிதர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். மற்றவர்களிடமிருந்து தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் கவர்ந்து கொள்பவர்கள் ஒரு ரகம்; இவர்கள் சுயநலத்தின் மொத்த உருவமாக இருப்பார்கள். தன் தேவைகளுக்காக பிறரை அட்டையைப்போல உறிஞ்சுவார்கள். தன்னைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்வைப் பற்றியும் கவலைப்படாமல் தன் முன்னேற்றம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்பவர்கள். இவர்கள் தண்ணீரில் போடப்பட்ட பஞ்சைப் போன்றவர்கள்.
பொதுக் காரியங்கள்
  • முழுவதுமாக ஒதுங்கிக் கொள்ளாமல், பொதுக் காரியங்களில் பட்டும், படாமலும், ஒட்டியும், ஒட்டாமலும் இருப்பவர்கள் இரண்டாவது ரகம். இவர்கள் நல்ல காரியங்கள் நடைபெறும்போது சற்று நேரம் தலையைக் காட்டுவார்கள்; ஈடுபாட்டுடன் எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் தண்ணீரில் போடப்பட்ட கல்லைப் போன்றவர்கள்.
  • ஒரு சிலர் மட்டுமே வித்தியாசமானர்கள். சமூகத்தில் எல்லா நிலைகளிலும் தாங்கள் கற்றதை, பெற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். தன்னை வாழ வைக்கும் சமுதாயத்துக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் கொண்டவர்கள். இவர்கள் தண்ணீரில் போடப்பட்ட சர்க்கரை போன்றவர்கள். சர்க்கரை தண்ணீரில் கரைந்து அதை இனிப்பாக்குகிறது. இனிமையான இந்த மனிதர்களால்தான் இந்தச் சமுதாயம் தள்ளாடாமல் நிற்கிறது.
  • சாலையில் ஒருவர் அடிபட்டுக் கிடந்தால்கூட 'நமக்கேன் வம்பு' என ஒதுங்கிப் போகிறோம். "யாரோ செய்யட்டுமே', "யாராவது செய்வார்கள்' என்று ஒவ்வொருவரும் நினைத்து ஒதுங்கிக் கொண்டால் நிலைமை என்னவாகும்? "நான்', "எனது' என்ற சுயநல வட்டத்துக்குள்ளேயே முடங்கிப் போகிறோம். பொது நலனுக்காக ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப்போட முன்வருவதில்லை. ஆனால், ஓடி, ஓடி எல்லாவற்றையும் தன் தலை மீது இழுத்துப் போட்டுக்கொண்டு சேவை செய்பவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாமல்லவா?
உதாரணம்
  • ஓர் உதாரணம் இதை நன்கு விளக்கும். அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கே உரிய பல பிரச்னைகளில் பொதுப் பராமரிப்பு என்று ஒன்று உண்டு. ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பராமரிப்புச் செலவு பல ஆயிரங்கள் ஆகும். ஆனாலும், அது வசதி படைத்தவர்களுக்கு யானையின் வாய் தவறும் ஒரு சிறு கவளம் போன்றதே. ஆனால், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேமித்து, வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கியவர்களுக்கு கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தும். அதுவும் தற்போதைய தண்ணீர்த் தட்டுப்பாடு சமயத்தில் ஏராளமான மனக் கசப்புகள், விரோதங்கள்-இவை எல்லாம் தவிர்க்க முடியாததாகி விட்டன. "பணத்தைத் தண்ணீராக செலவழிக்காதே' என்று சொல்வார்கள். இப்போதோ நாம் தண்ணீரைப் பணத்தைப் போல பார்த்துப் பார்த்துச் செலவழிக்கிறோம். காசு கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலையில் தண்ணீருக்கே ஆயிரம் ஆயிரமாக செலவாகிறது.
  • ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்த வேண்டுமா அல்லது அருகில் வேறு ஓர் ஆழ்துளை கிணறு தோண்டலாமா என்று யோசிக்கின்றனர். லாரி தண்ணீருக்காகப் பலமுறை தொலைபேசியில் கெஞ்ச வேண்டும். பணத்தை எல்லோரிடமும் வசூலிக்க வேண்டும். யார் முன்னின்று இதையெல்லாம் செய்வது? 10 குடியிருப்புவாசிகள் இருந்தால், அதில் உள்ள பெரும்பாலோர் பலவித  யோசனை சொல்வார்கள். ஆனால் எடுத்துக்கட்டி வேலை செய்ய ஒருவரும் முன்வர மாட்டார்கள். ஒரு நல்ல மனிதர் முன் வந்தால் அந்த மனிதர் பாடு திண்டாட்டமாகி விடுகிறது. தான் செய்யப்போகும் வேலைக்கு மற்ற குடியிருப்புவாசிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
  • புதிய ஆழ்துளைக் கிணறு தோண்ட ஆகும் செலவை முன்கூட்டியே கணக்கிட்டு, எழுத்து மூலம் ஒப்புதல் பெற்று ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் பணம் பெற வேண்டும். குடியிருப்புவாசிகள் 10 எல்லாவற்றையும் எதிர்க்கும், கணக்கு கேட்கும் குடைச்சல் பேர்வழி ஒருவராது இருப்பார். "என் குடியிருப்பு காலியாக உள்ளது; புதிய ஆழ்துளைக் கிணறுக்கு நான் ஏன் பணம் தர வேண்டும்' என ஓர் உரிமையாளர் கேட்டு பணம் தராமல் இருப்பார். உடனே, "பணம் கொடுக்காதவருக்கு தண்ணீர் விடக் கூடாது' என கண்டனக் குரல்கள் ஒலிக்கும். பொது வேலையை எடுத்துச் செய்ய முயன்றவருக்கோ தர்மசங்கடம்.
  • புதிய ஆழ்துளைக் கிணறுபோடும் பொறுப்பை ஏற்ற நபர், தானே அலைந்து அலுவலக பணிச் சுமையுடன் சேர்த்து  அனைத்துப் பணிகளையும் செய்தார். அவருடைய அர்ப்பணிப்பு உணர்வையும், அலைச்சலையும் நேர்மையையும் மற்றவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பொதுப் பணி
  • எப்போதும் நியாயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிறைய சொல்லடிதான் கிட்டும். மேலும், பொது பணிக்காக   சொந்தப் பணத்தை செலவு செய்வோருக்கு மன வலியும், வேதனையும் மட்டுமே மிஞ்சும்.
  • இதையெல்லாம் பார்க்கும்போது அடுக்குமாடிக் குடியிருப்பே வேண்டாம்; சொந்தமாக ஓர் ஓலை குடிசையே போதும் என்று தோன்றி விடுகிறது. பாரதி பாடியதைப் போல காணி நிலமும், ஒரு சின்ன வீடும்...பத்து தென்னை மரங்களும் போதும். குடியிருப்போர் நலச் சங்கங்களிலும் இதே நிலைதான். ஆண்டுக்கு ஆண்டு தலைவர், செயலர், பொருளாளர் மாறலாம். ஆனால், அவர்களின் செயல்கள் குறித்த விமர்சனங்கள் தொடரும். இத்தகையோரின் செயல்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தால் மனச்சோர்வு ஏற்படுவது இயல்பு. ஆனாலும், "போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்' என்று பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களும் உள்ளனர்.
  • சாலையில் அல்லது நம் தெருவில் ஒரு பெருச்சாளி (அ) வேறு ஏதாவது செத்துக் கிடந்தால் நாம் என்ன செய்வோம்? மூக்கை மூடிக்கொண்டு சட்டென அப்பகுதியைக் கடந்து விடுகிறோம். யாராவது அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லோரும்  தன் சுயம், தன் உடல், தன் இலக்கு, தன் உயர்வு என்று மட்டுமே இருக்கிறோம். தன் உரிமைகள் பற்றிய தெளிவு இருக்கும் அளவுக்கு தன் கடமைகள் பற்றிக் கவலை இல்லை.
  • இப்போது இளைஞர்களே ஒன்றுகூடி பல சமுதாய அறப்பணிகளைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஏரியைத் தூர் வார வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய அந்த விநாடியில் இருந்து வேலை முடியும் வரை அந்த இளைஞர்கள் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள்? எவ்வளவு அலைச்சல் இருந்திருக்கும்?. இத்தனை பெரிய வேலையை அந்தச் சின்ன தோள்கள் சுமப்பது குறித்து நாம் அவர்களைப் பாராட்ட வேண்டுமேயொழிய குறை சொல்லக் கூடாது.
  • ஒரு முறை குழந்தை நெருப்பில் சுட்டுக் கொண்டால், அதற்குப் பின் நெருப்புப் பக்கமே போகாது. அதே போன்று விமர்சனங்களைக் கேட்டு "நமக்கேன் இந்த வேலை' என்று பலரும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆகவே, தன்னலம் கருதாமல் பொதுச் சேவை செய்பவர்களைப் பாராட்டுவோம். பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பதைப் போல சிறு குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். "நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இருவரும் ஊதி ஊதி தின்னலாம்' என்றாராம் ஒருவர். இதுதான் இன்றைய உலகம்.
சிறு பஞ்ச மூலம்
  • கணக்காக இருப்பவர்களைக் காலம் கவனித்துக் கொள்ளும். நாம் ஊருக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, செய்பவர்களைத் தூற்றாமல் இருப்போம்.

குளம் தொட்டு, காவு பதித்து,

வழி சீத்து உளம் தொட்டு உழுவயல் ஆக்கி,

வளம் தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு

என்று இவை பாற்படுத்தான்  ஏகும் சுவர்க்கம் இனிது.

        - சிறு பஞ்ச மூலம்

  • "குளம் வெட்டுதல், மரம் நடுதல், மக்கள் வழி நடக்கும் வழி உண்டாக்குதல், தரிசு நிலத்தைக் கழனியாக்குதல், கிணறு தோன்றுதல் இவைகளைச் செய்தவன் சுவர்க்க லோகத்திற்குச் செல்வான்'  என்பது இப்பாடலின் பொருள். இவற்றையெல்லாம் செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை, முன் எடுத்துச் செய்பவர்களின் முயற்சியை விமர்சிக்க வேண்டாம்.
  • சுயநல எண்ணம் இல்லாதவர்கள், சக மனிதர்களை, தான் சார்ந்த சமுதாயத்தை, இந்த உலகை உக்கிரமாக நேசிக்கிறார்கள். அதனால் அவர்களுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது. பிறருடைய அவச்சொல்லை கேட்கும்போது அவர்களின் மனதில் இருள் சூழலாம். ஆனால், ஆத்மாவின் சத்தியத்தை நிலைப்படுத்திக் கொண்டால் எல்லா எதிர்ப்புகளும் மறைந்து விடும். எது நல்லது, எது தீயது என்று பகுத்துணரும் அறிவு உடையவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.
  • வாழ்க்கை பல விதங்களில் ஓடிப் புழுதியையும் மண்ணையும் நம் மீது வாரி இறைக்கும் நாம் ஒவ்வொரு முறையும் அதை உதறி அதனையே படியாக்கி மேலே ஏறி வர வேண்டும். நம் வெற்றி நமக்கு மட்டுமன்றி பிறருக்கும் பயன்பட்டால் அது மேன்மையானது. நமது திறமைகளையும், ஆற்றல்களையும், சக்தியையும் பலரது அமைதிக்காகவும், நன்மைக்காகவும் செலவிட்டால் அதுவே இந்த மனிதப் பிறவியின் சிறப்பு.

நன்றி: தினமணி (20-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories