TNPSC Thervupettagam

பொது சுகாதாரத்தில் சரியும் தமிழகம்

July 1 , 2019 2006 days 1062 0
  • மத்திய அரசினுடைய திட்ட அமைப்பான ‘நிதி ஆயோக்’ வெளியிட்டிருக்கும் ‘சுகாதாரக் குறியீட்டெண் 2019’ தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சிதருவதாக அமைந்திருக்கிறது. நாட்டிலேயே சுகாதாரத் துறையில் பல்லாண்டு காலமாக முன்னணியில் இருந்துவந்திருக்கும் தமிழகம், பல படி கீழே இறங்கியிருப்பதை இந்த ஆய்வறிக்கை அப்பட்டமாக்கியிருக்கிறது.
தரவரிசைப் பட்டியல்
  • மக்கள்தொகை அதிகம் கொண்டதும், அரசியல்ரீதியில் அதிக முக்கியத்துவம் கொண்டதுமான உத்தர பிரதேசம் இந்தத் தரப்பட்டியலில் 61 புள்ளிகளுடன் கீழ்நிலையில் உள்ளது. கேரளம் 74.01 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் கூடுதல் முன்னேற்றங்களுடன் முன்னிலையில் உள்ளன. தமிழ்நாடு தன்னுடைய கடந்த காலப் பெருமைகளை இழந்து, 60.41 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலிருந்து ஒன்பதாவது இடத்துக்குச் சென்றுவிட்டது.
  • அதிலும் 24 மணி நேர பொது சுகாதார மையங்கள் செயல்பாட்டில் சத்தீஸ்கர், அசாம் போன்ற பின்தங்கிய மாநிலங்களுக்கு எல்லாம் பின்னால், 16-வது இடத்தை நோக்கிச் சரிந்திருக்கிறது.
  • தமிழ்நாட்டு பொது சுகாதாரத் துறையில் பெரிய அலட்சியம் ஊடுருவியிருப்பதும், அதன் செயல்பாடுகள் மோசமாகிக்கொண்டிருப்பதும் திடீரென்று நிகழ்ந்திருப்பது அல்ல; ஒவ்வொரு நாளும் 5 லட்சம் வெளிநோயாளிகள், 70 ஆயிரம் உள்நோயாளிகளைக் கையாளும் தமிழக அரசு மருத்துவமனைகளில் இன்று விழுந்துகொண்டிருக்கும் ஓட்டைகள், தமிழகத்தைக் கீழே தள்ளிவிடும் என்பதை நம்முடைய நாளிதழே பல சமயங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
  • மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்திலிருந்த ஐந்து நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழக்க அங்கு ஏற்பட்ட மின் தடையே காரணம் என்ற சர்ச்சை எழுந்தபோது, ‘இந்து தமிழ்’ எழுதிய ‘நோயாளிகளின் உயிரோடு விளையாடாதீர்கள்’ தலையங்கம் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. பல மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள்கூட முன்புபோலக் கிடைப்பதில்லை என்பது நோயாளிகளால் திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டப்பட்டுவருகிறது.
பிரதான பிரச்சினை
  • அலட்சியமும் நிர்வாகச் சீர்கேடுகளும்தான் பிரதான பிரச்சினை. தலைநகர் சென்னையின் பிரதான மருத்துவமனையான ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தண்ணீருக்குப் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். எந்த ஒரு சீர்கேடும் அம்பலத்துக்கு வரும்போதுகூட யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
  • ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்வது ஒன்றே கண் முன்னிருக்கும் ஒரே பிரச்சினை என்று மாநில அரசு கருதிவிட்டால், கீழே அரசு நிர்வாகம் அதோகதி நோக்கிச் செல்வது யாராலுமே தடுக்கப்பட முடியாததாகவே ஆகிவிடும். சுகாதாரத் துறையின் சரிவு கண் முன் வெளிப்பட்டிருக்கிறது; ஏனைய துறைகளின் சரிவுகள் வெளிப்படும் முன்னராவது அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories