TNPSC Thervupettagam

பொழுதெனும் பெருஞ்செல்வம்

March 1 , 2019 2136 days 1593 0
  • புலரும் ஒவ்வொரு காலைப்பொழுதிலும், ஏதேனும் ஓர் இலக்கியத் தொடர், அல்லது கவிதைத் தெறிப்பு வந்து என்னுள் மின்னல் வெட்டும்.
  • பின்னர் சிந்தனை அதிர்வுகள் மெல்லப் பரவும்.
  • அன்றைய நாள் முழுக்க, அனுபவச் செழுமையோடு சுயசிந்தனைக்கும் விரைந்த செயல்பாட்டுக்கும் அது துணைநிற்கும்.
  • சில சமயங்களில் ஓரிரு நாள்களுக்கும் மேலாக, அது விரிவதும் உண்டு.
  • சுவாசம் போலப் பரவி உயிரணுக்களில் நிறையும் அந்த அனுபவம், இலக்கிய அனுபவ எல்லை கடந்து வாழ்வனுபவமாக முகிழ்ப்பதைத் துய்ப்பதில் ஒரு தனிச்சுகம்.
  • இப்படி ஒரு கணத்தில்தான், கானாமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா என்றும் பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா என்றும் பாரதி மகிழ்ந்து கூத்தாடியிருக்கவேண்டும்.
  • அதிசயம்போல் எழுகிற சில பாடல் வரிகள் சமயங்களில் துயரங்களையும் தந்துவிடுவதுண்டு. பின்னர், அதுவே அதற்கு மருந்தாகிப் புதிய விருந்து சமைப்பதும் உண்டு.
  • துன்பம், இன்பம், இளமை, செல்வம், தோல்வி, முதுமை எல்லாமும் ஒரு கணத்தோற்றம் என்று உயிர்பெற்ற தமிழர் பாட்டில் உரத்துமொழிந்து உரமேற்றினார் மகாகவி பாரதி, இந்த வாழ்க்கை என்பது என்ன?
  • தோற்றம், மறைவு என்ற இரு சொற்களுக்கு இடையில் தரப்பெறும் கோடிட்ட இடத்தை நிரப்புவது. அவ்வளவுதானே!
  • அதனை இன்பமாக, துன்பமாக, வெறுமையாக ஆக்கிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இது பொதுப்பார்வை.
  • இன்று நம்மைச்சுற்றி நாலாபக்கமும் பார்க்க, ஏன் பல சமயங்களில் நம்மையே பார்க்க, ஒன்று தெரிகிறது.
  • நம் அனைவரது கைகளிலும் செல்லிடப்பேசிதான் இருக்கிறது.
  • உண்மையில், நாம்செல்லிடப்பேசிகளின் கைகளில் சிக்கி இருக்கிறோம்.
  • சுவாசம்போல் இடையறாது எழவேண்டிய சிந்தனையைத் தன்பால் ஈர்த்து, தடையறாது தன்னையே பார்த்துக் கொள்ளச் செய்வதில் செல்லிடப்பேசி நம்மை வென்றுவிடுகிறது.
  • நம் உயிரனைய பொழுதுகளை ஒன்றுக்கும் பயனின்றிச் சக்கையாக்கிக் கொன்று விடுகிறது. நாம் கணந்தோறும் அந்தக் கருவிமுன் செயலற்று ஒடுங்கி ஒன்றி நிற்கிறோமோ என்று தோன்றுகிறது.
  • பெரும்பாலும் இளையோர்க்கான இலக்கியப் பயிலரங்குகளில் நான் கேட்டுத் தொடங்கும் வினா இதுதான். காலம் பொன் போன்றது எனும் பொன்மொழி சரியா? சரிதான் என்கிற பதில் சரமாரியாக எழும்.
  • ஒரு கண அமைதிக்குப் பின் இன்னொரு வினாவை எழுப்புவேன்.
  • பொன்னை இழந்தால், மீளவும் தேடிப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது மாற்றாக, புதியதாய் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், காலத்தை?
  • பெற முடியாது என்பதை அவர்கள் உணரும் கணத்தில் இன்னொரு கேள்வியையும் எழுப்புவேன்.
  • இழந்தால் பெற முடியாதது, எதுவோ? முடிப்பதற்குள் ஒரு சிலரிடமிருந்து பதில் வெளிப்படும். காலம் உயிர்போன்றது. அது உயிருணரும் காலமாக நிறைந்து விரியும்.
  • உயிரினும் இனிய பொழுதுகளை எப்படியெல்லாம் தொலைக்கிறோம் என்று நமக்கு முன்னே பட்டியலிட்டுக் காட்டிப் பரிதவித்த ஆன்மாக்கள்தாம் எத்தனை எத்தனை?
  • அரிதாய்க் கிடைத்த மானுடப் பிறப்பை வறிதாய்ப் போக்கி, சென்றது குறித்தே சிந்தை செய்து களித்தோ, கவலைப்பட்டோ அழித்த பொழுதுகள் எத்தனை எத்தனை?
  • இறந்த காலம் என்றும் வருங்காலம் என்றும் வகுத்துக் கழித்த நம் வாழ்நாளில் அழித்து ஒழித்தது நிகழ்காலத்தைத்தானே.
  • உண்மையில் காலம் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. இருப்பது. கணந்தோறும் நிகழ்வது. அஃதறியாமல் பொழுதுபோக்கு எனும் புதுத்தொடரை உண்டாக்கி, அதனை டைம் பாஸ் என்று ஆங்கிலத்திற்கும் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் நாம்.
  • அதனால் இழப்பு, பொழுதுக்கு அல்ல, நம் வாழ்வுக்குத்தான் என்று உணர்ந்தவர்கள் பல்வேறு வழிகளில் நமக்குக்காலந்தோறும் உணர்த்தி வந்திருக்கிறார்கள்.
  • சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் என்றால், இந்தப் பாட்டுத் தொடரின் பொருளை இனியேனும் உணர்தல் கூடாதா என்றுதான் ஏக்கம் கொள்ள வேண்டியிருக்கிறது.
  • இந்தத் தொடர், திருவாசகத்தில் எங்கிருக்கிறது என்பதையும் அந்தச் சின்னத்திரை வழியாகத்தான் பலரும் தேடித் தெரிந்துகொள்கிற நிலை.
  • இது வளர்ச்சிதான்; மாற்றம் கொண்ட முன்னேற்றம்தான். ஆனால், நூலைத்தேடி, அதன் உள்ளே முறைப்படி வளரும் வரிகள் உள்புகுந்து உரிய இடத்தை அடைகிறபோது, எழும் மெய்ஞ்ஞான அதிர்வுகளை, இந்தத் தொடர் பிறந்த சிந்தனைத் தடங்களை உணர்கிறபோது பெறும் விழுமிய சிந்தனைகளை இந்த அவசரத்தேடல் அழித்துவிடுகிறது என்பதை அனுபவித்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
  • இப்போக்கு நுனிப்புல் மேயும் பசுவின் செயல் ஒத்தது.
  • அடிக்கரும்பைக் கடித்துச் சுவைக்கும் அனுபவம் தொலைத்தது.
  • வேர்ப்பண்புகளை இதனால் விரைந்து தொலைத்துவிடுகிறோம் என்பதையும் மறக்கடித்துவிடுவது.
  • அவசர யுகம் என்று நாமே இதற்கொரு நாமகரணம் சூட்டி, நம்மைத் தொலைத்துவிடுகிறோம்.
  • இது எவ்வளவு பெரிய பொய்?
  • நம் முன்னோருக்கு இருந்த அதே காலமும் பொழுதும்தான் நமக்கும் வாய்த்திருக்கிறது.
  • அவர்கள் தவமாய்ப் புரிந்து அனுபவித்த அந்தப் பொழுதுகளை, நாம் அவமாய்க் கழித்து அழித்துவிட்டு அல்லலுறுகிறோம்.
  • இத்தனை பரபரப்பும், பதற்றமும், அவசரமும் இதற்குமுன்னர் எவ்வாறு இல்லாமல் இருந்தன என்பதை எண்ணிப் பார்த்தால் உண்மை புரியும்.
  • மணி எத்தனை என்று கடிகாரம் பார்த்த காலம்போய், செல்லிடப்பேசி பார்க்கத் தொடங்குவதிலிருந்து முடங்குகிறது நம் பொழுது.
  • கட்செவி நம் கண்ணையும் செவியையும் கருத்தையும் கவர்ந்துவிடுகிறது. முகநூலில் நம் முகம் புதைந்துவிடுகிறது.
  • எத்தனை லைக் என்று எண்ணுவதில் நமது நொடிகள் கழிய, புதிய கருத்துகளை அறிவதில் எழுகிற ஆர்வத்தால் நம் காலமும் கடமையும் அதன்மீதான கருத்தும் கரைந்து விரைந்து இல்லாது ஒழிந்து போகின்றன.
  • மீளவும் நம்மை எழுப்பிக் கூவும் அலுவலக அல்லது அன்றாடப் பணியின் அழைப்பால்தான் யதார்த்த உலகிற்கு மீள்கிறோம்.
  • இழந்த பொழுதுகளை ஈடுகட்ட விரையும் வாகனங்களால் சாலைகளில் நிகழும் விபத்துகள் எத்தனை? சமூகத்தில் நிகழும் வருத்தங்கள் எத்தனை?
  • இரவு-பகல் எதுவும் உணராமல், எதிரில் வருபவர் இருப்பவர் யாரென்றும் அறியாமல், நுகரும் எதனையும் இன்னதென்றறியாமல், செல்லிடப்பேசி திரையே கதியெனக்கிடக்கும் இளைய தலைமுறை பற்றி எதுவும் சொல்லத் தெரியாமல் பெரியவர்கள் கைபிசைந்து நிற்கும் அவலத்திற்கு மாற்று எது என்று சொல்லத் தெரியவில்லை.
  • இது தேவையற்றதென விலக்கவும் முடியவில்லை.
  • சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்தும்? என்ற கேள்விக்கு, இந்தச் சின்னஞ்சிறுதிரையே சிறைப்படுத்தும் என்பதைப் பதிலாக்கித் தந்திருக்கிறது காலம்.
  • சிலந்தி வலை, யானையைச் சிறைப்படுத்தும் நிலைப்பாடு ஒத்தது இது. தினந்தோறும் இலவசமாய்க் கிடைக்கும் பதிவிறக்கம் செய்யும் வசதிகளை, கட்டணமின்றி பேசும் வசதிகளை அனுபவித்தே தீரவேண்டும் என்கிற ஆவல் வெறியாகி, அவற்றுக்காகத் தன்பொழுதுகளை வலிந்து தொலைக்கும் போக்கு நாளுக்கு நாள் மிகுந்துவருகிறது.
  • அதிலும் பச்சிளங்குழந்தைகள் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீளத்தெரியாமல் அவதிப்படுவதும், அதிலிருந்து மீட்கமுடியாமல் பெரியவர்கள் அல்லலுறுவதும் நம் அன்றாட அவலம். அதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் இந்தக் கருவிகொண்டுதான் எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
  • கண்டவர்களும் அவசரமாக ஒரு விருப்பத்தைக் குறியிட்டுவிட்டு, அல்லது பிறருக்குப் பகிர்ந்தளித்துவிட்டு வசதியாய் மறந்துவிடுவதையும் பார்க்கிறோம்.
  • அதைவிடவும் அதில் வருகிற செய்திகளை உண்மை என்று நம்பிப் பின்பற்றுவதும், பரபரப்புண்டாகப் பரப்பிவிடுவதுமாகிய செயல்களால் ஏற்படும் சமூகத் தீமைகளைத் தவிர்க்கவும் முடியாமல் திண்டாடுகிறோம்.
  • வேடிக்கை என்னவெனில், இந்தத் திரைதனில் உலாவரும் பகுதிகளைத் தேடி எடுத்து ஒளிபரப்புவதையும், வெளியிடுவதையும் பெரிய ஊடகங்கள் செய்துவருவதுதான்.
  • அதில் பல சுவைமிகு தகவல்களும், புலனாய்வுத் தடயங்களும் கிடைப்பது உண்மைதான்.
  • ஆனால், புனிதமெனப் போற்றிப் பாதுகாத்த அந்தரங்கத்தின் ஆன்மாவைக் குலைத்ததுதான் அதிகம்.
  • யாராலும் யாரையும் நம்ப முடியாத அவலத்தை இப்போக்கு நிலைநிறுத்தி வருகிறது.
  • பின்விளைவுகள் அறியாமல் தன்னையே முன்னிறுத்திப் படம் பிடிப்பதும் செய்திகளை உள்ளிடுவதும் பயனற்ற விளம்பர மோகத்தில் வீழ்ந்து பொழுதழிப்பதும், இக்கருவியை, உயிர்க்கொல்லி வரிசையில் இருத்திப் பார்க்க வைத்துவிடுகிறது.
  • இப்படியெல்லாம் இது குறித்துச் சிந்திப்பதிலேயே இந்த இளங்காலை கழிந்துவிட்டதே என்று காகம் கரைந்து எழுப்புகிறது.
  • கடிகாரம் தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.
  • உயிரினும் இனிய பொழுதுகள் கொள்ளைபோகச் சம்மதியோம் என்றும், இந்தச் சின்னஞ்சிறு கருவிக்கு அடிமையாய் இனி இருந்திடோம் என்றும் உறுதிகொள்ளச் சொல்கிறது பாரதியின் கவித் தொடர்.
  • பொழுதெனும் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? என்று இன்றுபுதிதாய்ப் பாடி எழுகிறேன்.
  • உங்களையும் எழுப்ப விழைகிறேன்.   எழுக மானுடமே!

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories