TNPSC Thervupettagam

மசோதாக்கள் புத்துயிர் பெறுமா?

July 9 , 2019 1997 days 1176 0
  • கடந்த 16-ஆவது மக்களவையின் இறுதியில் முத்தலாக் தடை மசோதா உள்ளிட்ட ஆட்சேபணைக்குரிய பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், தவிர்க்க இயலாத சில அரசியல் காரணங்களால் அவை சட்ட வடிவம் பெறாமல் கிடப்பில் போடப்பட்டன. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஒருசில மசோதாக்கள்கூட மாநிலங்களவையில் முடங்கின.
பட்ஜெட்
  • பொதுத் தேர்தலை முன்னிட்டு 16-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதும், இந்த மசோதாக்களும் காலாவதியாகின. அதேசமயம், மக்களவையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி, பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பேற்றுள்ளதால்,  நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் காலாவதியான மசோதாக்களுக்கு மீண்டும் புத்துயிரூட்டப்படுமா என்ற எண்ணம் எழுந்துள்ளது. 16-ஆவது மக்களவையின் இறுதியில் திருநங்கைகள் மசோதா, வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு மசோதா ஆகியவற்றை பாஜக அரசு அறிமுகம் செய்தது.
  • சட்ட வரையறையில் நிலவும் சில முரண்களைக் களையும் வகையில், இந்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தது. சட்ட வரையறைக்குட்பட்டு, தங்கள் நலனையும் பேணி, தங்களுக்கும் சமூகத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டுமென திருநங்கைகள் ஏற்கெனவே பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
  • அடிமட்ட சமூக இயக்கங்களின் கோரிக்கையை ஏற்று, வாடகைத் தாய் சட்ட ஒழுங்குமுறை மற்றும் ஆள்கடத்தல் மசோதாக்களின் மீது மத்திய அரசு முனைப்புக் காட்டியது. இந்த மசோதாக்கள் சில ஆட்சேபணைகளையும், எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. உதாரணமாக, திருநங்கைகள் மசோதாவை எடுத்துக் கொண்டால், வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த பாலின அடையாளத்தின் சுய நிர்ணய உரிமை என்கிற உத்தரவில் முரண்படுகிறது.
விதிகள் 
  • தவிர, பாலின மாற்று அறுவைச் சிகிச்சையிலும் இந்த மசோதா சந்தேகத்துக்குரிய விதிகளைக் கொண்டுள்ளது. இதேபோன்று, அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஓரினச்சேர்க்கையாளர்களும் சக குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றமே அங்கீகாரம் அளித்த போதிலும், வாடகைத் தாய் ஒழுங்கு மசோதாவின் வரம்பு எல்லைக்குள் தனி நபர் ஓரினச்சேர்க்கையாளர் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை, வரையறுக்கப்படவில்லை. தவிர, இரு பாலினத்தினரிடையே பாரபட்சமான வயது கட்டுப்பாட்டைத் திணித்து, வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறைக்கு முற்றிலும் தடை விதிக்காமல், பெண்களுக்கு எதிரான ரகசியச் சுரண்டலுக்கு வித்திட்டு, கருப்புச் சந்தைக்கு வழிகோலியிருக்கிறது.
மசோதாக்கள்
  • இந்த மூன்று மசோதாக்களிடையேயும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. முதலாவதாக, இந்த மூன்று மசோதாக்களும் தனிநபரின் உடல், கண்ணியம், சுய மரியாதை மற்றும் பாலின அடையாளம் ஆகியவற்றுடன் ஒட்டி உறவாடுகின்றன. இரண்டாவதாக, சமூகத்தில் கடைக்கோடியிலுள்ள மிகவும் பாதிப்புக்குள்ளான விளிம்பு நிலை உறுப்பினர்களின் உரிமைகள் மீது அக்கறை கொண்டுள்ளன. மூன்றாவதாக,, பாதிக்கப்பட்டவர்களின் எண்ண ஓட்டங்களைக் கேட்டறியாமல், கலந்தாலோசிக்காமல் மசோதாக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • நான்காவதாக, மாநில அரசுகளின் குறுக்கீட்டில் இருந்து இதுபோன்ற சமூகத்தினரின் உரிமைகளுக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும் அளிக்காமல், அதன் கட்டுப்பாட்டையும், ஆதிக்கத்தையும் இந்த மசோதாக்கள் நீட்டித்திருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அண்டை நாடுகளிலிருந்து  அடக்குமுறையால் புலம்பெயர்ந்த (முஸ்லிம்கள் நீங்கலாக) இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தம், பார்சி மதத்தினருக்கு துரிதமாகக் குடியுரிமை அளிக்கும் நோக்கத்தில், குடியுரிமை (திருத்தம்) மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க மத்திய பாஜக அரசு முயன்றது.
  • இதை அடிப்படைக் கொள்கைக்கு முரண்பாடாகவே கருதத் தோன்றுகிறது. ஏனெனில், பாகிஸ்தானின் அகமதிய மற்றும் பலோச் பிரிவை இதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். மற்ற அடையாளங்களைப் போல், அண்டை நாட்டிலும் பல விதமான பிரிவினர் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் அவ்வப்போது சில விரும்பத்தகாத நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர்.
  • அந்த வகையில், இந்தியாவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்றத்துக்குச் சென்று, பல ஆண்டுகாலம் நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலில் இணைந்திருக்கும்.
  • அதேவேளையில், மசோதாவின் மதச்சார்பற்ற நிலைப்பாட்டுக்கு எதிரான தன்மை காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற கடுமையான போராட்டங்களால், அதைக் கைவிட வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. அண்மையில் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டதால், மருத்துவர்கள் வெகுண்டெழுந்து நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற பல்வேறு நடைமுறைச் சவால்களை எதிர்கொண்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்களின் நலனைக் காக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.
பொதுத்தேர்தல் 
  • பொதுத்தேர்தல் என்பது அடுத்து வரும் அரசுக்கு சிறப்பான, மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய சட்டங்களை இயற்ற அதிகாரம் அளிக்கிறது. அதேபோல், மசோதாக்களைத் தாக்கல் செய்து சட்ட வடிவம் அளிக்கவும் உரிமை இருக்கிறது. எனினும், ஜனநாயக நாட்டில் அந்த இலக்கை அடைவதில் சில தடைகள் இருக்கும். எனவே, அரசின் கொள்கைகளால் நேரடியாக தாக்கங்களை எதிர்கொள்ளப் போகிறவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கை, மதிப்பைக் கௌரவிக்க வேண்டியது குடியாட்சியின் கடமை என்றால் அது மிகையல்ல.

நன்றி: தினமணி (09-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories