TNPSC Thervupettagam

மண்ணை நேசிப்போம், மக்களைக் காப்போம்!

May 24 , 2019 2044 days 1376 0
  • சிறந்த மண் வளமும், நீர்வளமும் உள்ள காவிரி டெல்டாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் விவசாயமே இந்தப் பகுதி மக்களுக்கும், வணிகர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. அதே நேரத்தில், மண் வளத்துக்குக் கீழே உள்ள கனிம வளங்களும் கண்டறியப்பட்டு அவற்றை எடுப்பதற்கான சூழல்களும் உருவாக்கப்பட்டன. குறிப்பாக,கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான பணிகள் கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
நிலத்தின் தன்மை
  • கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும்  குழாய்களை முறையாகப் பராமரிக்காததன் விளைவாக வெவ்வேறு இடங்களில் எண்ணெய் மற்றும் வாயுக் கசிவுகள் ஏற்படுவதால் நிலத்தின் தன்மை மாறி வருகிறது. இது மக்களிடையே ஒருவித அச்சத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெயைப்போல் மற்றொரு வளமாகிய நிலக்கரி படுகையில் மீத்தேன் எடுக்கக்கூடிய திட்டத்தை  நடைமுறைப்படுத்த கடந்த 2010-ஆம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • கடந்த 2013-ஆம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக மேற்கண்ட திட்டத்தைச் செயல்படுத்த நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையை ("ஹெல்ப்'- "ஹைட்ரோகார்பன் எக்ஸ்ப்ளோரேஷன் லைசன்ஸிங் பாலிசி') மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
  • இதன் மூலம் ஒற்றை அனுமதி என்ற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷெல், டைட் கேஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருள்களை எடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் வட்டாரங்களைத் தேர்வு செய்யவும், லாபத்தில் பங்கு என்கிற நடைமுறையை மாற்றி வருமானத்தில் பங்குஎன்கிற புதிய நடைமுறையையும் கொண்டதாக இந்த ஒற்றை அனுமதி மாற்றியமைக்கப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை நிலவளத்தையும், நீர்வளத்தையும் பாதிக்கக்கூடிய மரபுசாரா திட்டங்களாகிய மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு கடந்த 2013-இல் இடைக்காலத் தடையும், 2015-இல் நிரந்தரத் தடையும் அமலில் இருக்கக்கூடிய சூழலில், திறந்தவெளி அனுமதி முறையில் முதல் சுற்றில் தரைப் பகுதியில் கடலூர் மாவட்டம் தியாகவள்ளியிலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் வரையுள்ள நிலப்பரப்பில் 731 சதுர கி.மீ. பகுதியை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும், மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரை 1,794 சதுர கி.மீ. மற்றும் பரங்கிப்பேட்டை முதல் நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் வரை 2,674 சதுர கி.மீ. பகுதியை வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த சூழலில் அனுமதி கேட்டு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விண்ணப்பித்துள்ளனர்.
ஒற்றை அனுமதி முறை
  • மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட்1-ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த 2016-க்கும் முந்தைய கச்சா எண்ணெய் எடுக்கக்கூடிய இடங்களுக்கும் இந்த ஒற்றை அனுமதி முறை விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில்  திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியக்குடி மற்றும் கடலூர் மாவட்டம்  புவனகிரி எண்ணெய் வட்டாரங்களில் "டைட் கேஸ்' எனப்படும் மரபுசாரா எண்ணெய் எடுப்பு முறைக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதியன்று சுற்றுச்சூழல் துறை அனுமதிக்காக ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது, டெல்டா பகுதிகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • "ஹைட்ரோ ப்ராக்கிங்' முறையில் மேற்கண்ட வாயு எடுக்கும் நடைமுறைக்கு அமெரிக்காவின் ப்ளேட் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மேற்கண்ட இரு திட்டங்களுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த அறிவுறுத்தியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்தும் கடிதம் அனுப்பியுள்ளது.
மற்ற பகுதிகளில்
  • கடலூர் மாவட்டம் புவனகிரி, நாகப்பட்டினம் மாவட்டம் பெரியக்குடி என்ற பெயர்களில் அறியப்படும் இந்த வயல்கள், காவிரி உப வடிநிலப் பகுதிகளில் உள்ளன. இது போல் இன்னும் 30 வயல்கள்ஓஎன்ஜிசி- இன் பரிசீலனையில் உள்ளன எனவும் தெரிகிறது. இப்போது அவர்களால் உடனடியாக பணி ஆரம்பிக்கத் தேர்ந்தெடுத்துள்ள இரு வயல்களில் புவனகிரி வயல் சிதம்பரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. வடமேற்கே உள்ளது.
  • திருவாரூரிலிருந்து சுமார் 20 கி.மீ. வடமேற்கே பெரியக்குடி வயல் உள்ளது. அரசே இந்த இரண்டு இடங்களில் ஓ.என்.ஜி.சி.யை  வைத்து வெள்ளோட்டம் பார்க்கிறது எனச் சந்தேகப்பட வேண்டியுள்ளது.
  • இது தொடர்பான மத்திய அமைச்சரவையின் அறிக்கை,  இந்தச் திசையில் என்ன செயல்பாடுகளை ஆதரிக்கப் போகிறது என்பதைத் தெளிவாக்குகிறது. மேற்கண்ட திட்டங்களைப் பற்றிய தங்களுடைய கருத்துருக்களை தமிழக அரசு உடனடியாக வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு நியமித்த ஆய்வுக் குழுவின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்திலும் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.
  • மேலும், டெல்டா மாவட்டங்களின் நீர் மற்றும் நில வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கைக்கான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டும். காவிரி டெல்டா பகுதி பிரச்னை என்பது தமிழகத்தின் உணவு பிரச்னையாகப் பார்க்கப்பட வேண்டும்; அதைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்றுவதற்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதுவே இன்றைய அவசரத் தேவையாகும்.

நன்றி: தினமணி(24-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories