TNPSC Thervupettagam

மதச் சுதந்திரத்தின் ஊடும் பாவும்

January 27 , 2020 1827 days 928 0
  • கர்நாடகத்தில் உள்ள குக்கி சுப்ரமண்ய கோயிலில் ஐநூறு ஆண்டுகளாக நடத்தப்படும் பழமையான சடங்கான மடேஸ்நானாவுக்கு 2014 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்தது. இந்தச் சடங்கில் கலந்துகொள்பவர்கள், குறிப்பாகப் பட்டியலினச் சாதியினரும் பழங்குடியினரும் பிராமணர்கள் வாழை இலையில் பாதி சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவைச் சாப்பிட வேண்டும்; அதனால், அவர்களின் சருமத்தில் உள்ள அசுத்தங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
  • தொடக்கத்தில் 2012-ல் முற்போக்கு எண்ணம் கொண்ட மனுதாரர்களின் குழுவொன்று கேட்டுக்கொண்டதன்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்தச் சடங்குக்குத் தடை விதித்தாலும், மாற்றங்களுடன் அதைத் தொடர்வதற்கு அனுமதி அளித்தது. தெய்வத்துக்குப் படைக்கப்பட்ட பிரசாதம் இருக்கும் இலையைப் பக்தர்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ள வகைசெய்யப்பட்டது.

உத்தரவு

  • இந்தப் பிரசாதமானது இவ்வளவு காலமாக ‘எந்தவொரு சமூகத்தினராலும் சுவைக்கவோ அல்லது பகுதியளவில் உண்ணவோ படாமலிருந்தது’. ஆனால், இந்த உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நீதிபதிகளைக் கொண்ட மற்றொரு உயர் நீதிமன்ற அமர்வால் விலக்கிக்கொள்ளப்பட்டதோடு, மடேஸ்நானாவின் ‘மூல வடிவ’த்தில் சிறிய குறையைக் கண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தச் சடங்கு எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்றும் நீதிமன்றம் உறுதிபடக் கூறியது.
  • மேலும், இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு இந்தச் சடங்கை நிறுத்திவைப்பது பக்தர்களின் நம்பிக்கைகளைக் காயப்படுத்துவதோடு அரசமைப்புச் சட்டத்தால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சமய உரிமையை மீறுவதாகவும் அமையும் என்பது நீதிபதிகளின் நம்பிக்கையாக இருந்தது.

விவாதத்துக்குரிய கேள்வி

  • பெண்களின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் சடங்குகள், தீக் கோயிலுக்குள் நுழைவதற்கான பார்சி பெண்களின் உரிமை உள்ளிட்ட இதுபோன்ற பெரும்பாலான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு முன்னால் வரும்போது மதச் சுதந்திரத்துக்கான உரிமைக்கும், தனிநபர்களுக்கு உள்ள கண்ணியம் மற்றும் சமத்துவத்துக்கான உரிமைகளுக்கும் இடையே உள்ள உறவு தொடர்பாக எழுகிற கேள்விகளைக் குறித்த வாதுரைகளையே முதலில் நீதிமன்றம் கேட்கத் தொடங்கும். சபரிமலை தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் தொடர்பாக மத்தியஸ்தரை நியமிக்காமல் அதை விசாரிப்பதற்கு என்று அமர்வு உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஆனாலும், இந்த அமர்வு கூடும்போது அதன் முடிவானது வழக்கமான நடைமுறைகளுக்கு மேலானதாகவே இருக்கும். மிக விரிவான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் அரசமைப்புச் சட்டத்தின் மதச் சுதந்திரம் பற்றிய கூறுகளின் எல்லை மற்றும் பரவல் பற்றி விவரிப்பதாகவும் இருக்கும்.
  • இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, சமநிலை தவறாமை எனும் சிச்கலான கேள்வியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசமைப்புச் சட்டத்துக்குள்ளாக இரண்டு உந்துவிசைகள் ஒன்றுக்கொன்று முரணாக மோதிக்கொள்கின்றன. முதலாவது, சமூக அளவில் எப்போதுமே முக்கியமான பங்கு வகிக்கிற மதம் அல்லது பண்பாட்டு அடிப்படையில் வெவ்வேறு குழுக்களையும் சமூகங்களையும் கொண்ட ஓர் பன்மைத்துவ நாடு என்று இந்தியாவை ஏற்றுக்கொள்கிறது. இதன் அடிப்படையில், மதச் சுதந்திரம் என்பது தனிநபர் உரிமை என்பதையும் (கூறு 25), மத விவகாரங்களில் சமய அமைப்புகள் தங்களை நிர்வகித்துக்கொள்வதற்கான உரிமையையும் (கூறு 26) அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்திருக்கிறது.

ஒற்றுமை

  • இரண்டாவதாக, சமூகமே எல்லாக் காலத்துக்கும் ஒற்றுமைக்கான மூலக் காரணங்களில் ஒன்றாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்வது, ஒடுக்குதலுக்கும் விலக்குதலுக்கும் வழிவகுத்துவிடக்கூடும். எனவேதான், மதம் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதேச்சாதிகார, ஒடுக்கும் தன்மைகொண்ட சமூக நடைமுறைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் தேவை ஏற்பட்டால் அதற்கான வாய்ப்புகளையும் அரசமைப்புச் சட்டம் வெளிப்படையாகவே அளித்திருக்கிறது. இதன்படி, அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 25, 26 இரண்டுமே பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டவை. மேலும், கூறு 25 அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும், சமூகச் சீர்திருத்தச் சட்டங்களை இயற்றுவதற்கான அரசின் அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டது.
  • இந்த இரண்டு உந்துவிசைகளும் அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு கூறுகளில் வெளிப்பட்டிருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் முதன்மை வரைவாளர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணமூர்த்தியின் அவதானிப்பு ஒன்றைப் பேசவைக்கிறது: நமது நாட்டில் மதமும் சமூக வாழ்க்கையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. மடேஸ்நானா உதாரணம் நமக்குக் காட்டுவதுபோல, பரந்து விரிந்த சமூகத்தின் மீது மதரீதியான தடைகள் அடிக்கடி விதிக்கப்படுகின்றன;
  • மத, சமூக மதிப்புநிலைகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தால் வெளிப்படையாகத் தடை விதிக்கப்பட்டுள்ள ‘தீண்டாமை நடைமுறைகள்’ இதற்கான மிகச் சிறந்த உதாரணம். சமூகத்திலிருந்து விலக்கிவைக்கும் நடைமுறை சில சமூகங்களில் பெருமளவு பின்பற்றப்படுகிறது. சமூகங்களின் தலைவர்கள் பணிய மறுக்கும் உறுப்பினர்களை வெளியேற்றவும், அவர்களது முன்னாள் நண்பர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து எந்த வகையிலும் தொடர்புகொள்ளாதவாறு விலக்கிவைக்கவும் அதிகாரம் பெற்றிருக்கின்றனர்.

சமரசத்துக்கான வழி

  • பண்பாடு, மத அடிப்படையிலான சமூகங்களின் தன்னாட்சிக்கு மதிப்பளித்தபடியே சமூகத்தின் பலிபீடத்தில் தனிநபர் உரிமைகளை முற்றிலும் தியாகம் செய்துவிடாமல் அதை உறுதிப்படுத்துவதும் வகையில் இரண்டுக்கும் இடையே நம்மால் எப்படி சமநிலையைப் பராமரிக்க முடியும்? கடந்துவந்த ஆண்டுகளில், உச்ச நீதிமன்றம் சட்ட அடிப்படை ஒன்றை உருவாக்கவும் பல்வேறுபட்ட மத நடைமுறைகளின் மீதான ‘இறையியல்’ தீர்ப்புகளில் அதைக் கிட்டத்தட்ட அனுமதிக்கவும் முயன்றிருக்கிறது.
  • அதன் வாயிலாக, மதத்துக்கு மிகவும் அவசியமான நடைமுறைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பை அனுபவிப்பதற்கு வகைசெய்யப்பட்டிருக்கின்றன. மற்ற சடங்குமுறைகள் அனைத்தும் மதச்சார்பற்றதாகவும், அரசின் தலையீட்டுக்கு உட்பட்டதாகவுமே பார்க்கப்பட்டுள்ளன.
  • மிகவும் அவசியான நடைமுறைகள் என்ற கோட்பாடானது நேர்மையான மத்தியஸ்தர் என்ற வகையில் நீதிமன்றத்தால் நிலையான ஒன்றாகப் பார்க்கப்பட்டுள்ளது. அந்தக் கோட்பாடு தீர்ப்புகளின் வழி செயல்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, ஆனந்த மார்க்கத்தினரின் மத நம்பிக்கைகளில் ஒன்றான தாண்டவ நடனம் அதைப் பின்பற்றுபவர்களால் மிக முக்கியமானது என்று கருதப்பட்டாலும்கூட அதன் சித்தாந்த அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று 2004-ல் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே, பி.பி.கஜேந்திரகட்கர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த காலகட்டத்தில், மூடநம்பிக்கையின் கருத்துருவங்கள் என்ற அடிப்படையில் பல்வேறு சடங்கு நடைமுறைகள் மத நம்பிக்கைக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
  • எனினும், நீதிமன்றம் எல்லா வழக்குகளிலும் இந்தப் பாகுபாட்டைப் பின்பற்றியிருக்கிறதா? நிறைய ஆய்வாளர்கள் இல்லை என்றே வாதிடுகிறார்கள்: மதச்சார்பற்ற நீதிமன்றம் என்ற கருத்தோடு மதத்துடன் தொடர்புடைய நடைமுறைகளை விசாரிக்க அமர்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்குப் பதிலாக, நீதிமன்றம் அடிக்கடி கூறுவதுபோல ‘மிகவும் அவசியமான சடங்கு நடைமுறைகள்’ என்ற சோதனை மட்டுமே உண்மையில் மதங்களின் தன்னாட்சிக்கு மதிப்பளிப்பதற்கும், தனிநபர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் இடையே அவற்றைச் சமரசப்படுத்துவதற்கான ஒரே வழி.

விலக்கிவைப்பதற்கு எதிரான கோட்பாடு

  • இந்தக் காரணங்களால், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு முன்னால் ஏற்கெனவே நடைமுறையிலிருந்து வருவதோடு கடந்த காலங்களில் படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்திருக்கும் சட்ட அடிப்படையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு ஒன்று உள்ளது. நிச்சயமாக அது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்று கூற முடியாது.
  • எனினும், வேறு சில வழிகளும் இருக்கின்றன. முதலாவதாக, வழக்குக்குக் காரணமாக இருக்கும் மத நடைமுறையானது தனிநபர் உரிமையைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறதா என்ற கேள்வியை உதாரணமாகச் சொல்லலாம். மடேஸ்நானா நடைமுறையானது மனித மாண்பை மீறுவது என்பது மிகத் தெளிவானது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாய் உயர் நீதிமன்றம் (இதைப் போன்ற வழக்கில்) ஹாஜி அலி தர்க்காவின் உள்ளே பெண்களை அனுமதிக்காதது நியாயப்படுத்த முடியாத வகையில் சமத்துவ உரிமை மீறல் என்று கூறியது.

நடைமுறை

  • இந்த வழக்கின் விசாரணை, குறிப்பிட்ட நடைமுறையானது உண்மையில் மதம் தொடர்புடையதா, இல்லையா என்பதைப் பற்றியது அல்ல என்றாலும் விலக்கிவைப்பது சரியானதா என்பதைப் பற்றியது. குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மற்றவர்களைக் காட்டிலும் மதிப்பு குறைந்தவர்கள் என்பது சரியா என்ற கேள்வியின் சமிக்ஞையையே இது எழுப்புகிறது. சபரிமலை வழக்கில் - இந்தக் கேள்விகள் எழவில்லை - டி.ஒய்.சந்திரசூட்டின் உடன்பாடான கருத்து, இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட கருத்து இரண்டுமே மேற்கண்ட சோதனை கட்டாயமானது என்பதை ஏற்றுக்கொள்கின்றன. அவர்களுக்கு இடையிலான முரண்பாடு என்பது சபரிமலை விஷயத்தில் மட்டுமே; அங்கு பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையானது விலக்கிவைக்கும் முறையாகுமா, இல்லையா என்பதுதான்.
  • விலக்கிவைத்தலுக்கு எதிரான கோட்பாடு மிகத் தெளிவானது என்பதோடு முக்கியமான உண்மையாகக் கொள்ளப்பட வேண்டியதும்கூட. மத அடிப்படையிலான பெரும்பாலான சமூகங்களில் அதன் தலைவர்களால் விதிமுறைகளும் நடைமுறைகளும் வடிவமைக்கப்பட்டு மேலிருந்து கீழாக வழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டு, சமூகங்களின் ஒப்புதலோடு மீண்டும் அவை நிலைபெறுகின்றன. அதைக் குறித்த மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்கள் வாய்ப்பேயில்லாத ஒன்றைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது: பாகுபாடு காட்டுகிற அந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அந்தச் சமூகத்திலிருந்து வெளியேறும் வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தை நாடுதல்

  • அடிக்கடியும் எப்போதும் நடப்பது இதுதான். இங்குதான் சமூகங்களால் ஒடுக்குதலுக்கும் விலக்குதலுக்கும் ஆளானவர்கள் நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்கள். அதிகாரம் வாய்ந்த சமூகங்கள் அவர்களது அனைத்து உறுப்பினர்களுக்கும் நியாயமான வகையில் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் அளிப்பதிலிருந்து விலகி நிற்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தால் உதவ முடிகிறது.
  • விசாரணையைத் தொடங்கியிருக்கும் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசமைப்புச் சட்டத்துக்குப் பொருள்விளக்கம் அளிக்க வேண்டிய, சிக்கலான, கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணியை எதிர்கொண்டிருக்கிறது. அதன் முடிவை ஒட்டியே மற்றதெல்லாம் நடக்கும். குறிப்பாக, பெண்களின் உரிமைகள். வெகுகாலமாகப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டுவரும் அவர்களின் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்; அதுபோல பொதுவில் பாதிக்கப்பட்டுவரும் பல்வேறு குழுக்களும். அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் கண்ணியத்தையும் சமத்துவத்தையும் அனைவருக்கும் உறுதிசெய்ய வேண்டும். பொதுவெளியில் மட்டும் அல்ல, சமூக அளவிலும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories