TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்ட கடுகு

September 28 , 2017 2623 days 9866 0

மரபணு மாற்றப்பட்ட கடுகு

(சில கேள்விகளும் பதில்களும்)

--------

மு. முருகானந்தம்
மரபணு (Gene) என்றால் என்ன?
மரபணு என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாகக் கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு புரதத்தையோ அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளைக் கொண்டுள்ள “ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA)” ஒரு துணுக்கை குறிக்கும் அலகே மரபணுவாகும்.
என்ன செய்கிறது மரபணு?
  • உடலுக்கும் உயிர் வாழ்க்கைக்கும் தேவையான அனைத்துப் புரதங்களையும் உருவாக்குகிறது.
  • உடலின் உயிருள்ள அணுக்களை உருவாக்கவும், அவற்றைப் பேணுவதற்கும் தேவையான செயல்களைச் செய்கின்றன.
  • உயிரினங்களின் இயல்புகள் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படக் காரணமாகின்றன.
  • உடலின் ஆயிரக்கணக்கான உயிர்வேதியியல் (Bio Chemical Reactions) செயல்களுக்கான தகவல்களைக் கொண்டுள்ளன.
எங்கு இருக்கிறது மரபணு (ஜீன்) ?
நமது உடலின் எல்லா இடங்களிலும் மரபணு இருக்கிறது. நமது தசை, எலும்பு, நரம்பு, கண்மணி போன்ற திசுக்களை செல்களாகப் பகுக்கலாம். செல்களில் உள்ள செல்சுவரைத் தாண்டி உள்ளே சென்றால் உட்கரு (நியூக்ளியஸ்) இருக்கும். அந்த நியூக்ளியஸில் குரோமோசோம்கள் உள்ளன. மனித உட்கருவில் 23 குரோமோசோம்கள் உள்ளன.
இந்த குரோமோசோம்கள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் எண்ணிக்கையில் வேறுபடுகின்றன. குரோமோசோம்கள் டி.என்.ஏ வால் ஆனவை. டி,என்.ஏ முறுக்கப்பட்ட ஏணியைப் போன்ற வடிவமுடையது. இரண்டு இழைகள் ஏணியின் கைகளைப் போன்ற அடினைன் -தையமின் - குவானைன் - சைட்டோசினால் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த டி.என்.ஏ வின் ஒரு சிறு பகுதியே மரபணு எனப்படுகிறது. மரபணுவே ஒரு உயிர் மாடா / மனிதனா / மரமா எனத் தீர்மானிக்கிறது.
மரபணு மாற்றம் என்றால் என்ன?
மரபணுக்கள் புரத உற்பத்தியை வழிநடத்துகின்றன. புரதங்கள் உடலின் வளர்சிதை நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகின்றன. நமக்குப் பசியெடுப்பதும், காயம் ஏற்பட்டால் வலிப்பதும், தூக்கம் வருவதும் இந்தப் புரதங்களாலேயே நடக்கிறது. இதே போன்று தாமரை மலர்வதும் தக்காளி பழுப்பதும் இந்த மரபணுவின் தூண்டுதலின்படியே நடக்கிறது. இந்த மரபணுவை நமது விருப்பத்திற்கிணங்க மாற்றுவது தான் மரபணு மாற்றம் எனப்படுகிறது.
மரபணுப் பொறியியல் என்றால் என்ன?
கணினிப் பொறியியல், வேளாண் பொறியியில், மின் பொறியியல் என்பன போன்று மரபணு குறித்த பொறியியில் துறையே 'Genetic Engineering' எனப்படும் மரபணுப் பொறியியல் ஆகும். மரபணுவை வெட்டுவது, ஒட்டுவது, மாற்றுவது, ஆராய்வது போன்ற பல்வேறு உத்திகளின் தொகுப்பாக, உயிரித் தொழில்நுட்பவியலின் (Biotechnology) ஒரு குழந்தையாகப் பிறந்து வளர்ந்து வரும் ஒரு துறையே மரபணுப் பொறியியலாகும்.
மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள் என்றால் என்ன? (Genetically Modified Organism - GMO)
சில பயிர்களில் நமக்கு வேண்டிய பண்புகளை மரபணு மாற்றத்தின் மூலம் உண்டாக்க முடியும்.
  • குறைந்த நீர்த்தேவை
  • அதிக மகசூல்
  • நீண்டகாலம் தாங்குந்தன்மை
  • குட்டைத்தன்மை / நெட்டைத்தன்மை
  • சில குறிப்பிட்ட சத்துக்கள் மிகுதியாக உள்ள பயிர்கள்
  • பூச்சி / புழு எதிர்த்திறன்.
மேற்கண்ட நன்மைகளை மரபணு மாற்றப் பயிரால் அடையலாம். எ.கா:- பிடி பருத்தி (Bt cotton), பி.டி கத்தரி.
கலப்பினப் பயிர்கள் எவை? (Hybrid crops)
ஒரே இனத் தாவரத்தின் இரண்டு சிற்றினங்களை மகரந்தச் சேர்க்கை மூலம் கலந்து பெறப்படும் புதிய பயிரே கலப்பினப் பயிர் எனப்படும்.
மரபியலின் தந்தை என்று போற்றப்படும் கிரிகோர் மெண்டலின் பட்டாணிச் செடிக் கலப்பு வாய்ப்பாட்டை நினைவு கூறுங்கள்! மெண்டல் செய்தது பயிர்க் கலப்பு ஆகும். ஒரு ஓங்கு பண்புடைய தாவரத்தின் நற்பண்புகளை, மற்றொரு ஓங்கு பண்புடைய தாவரத்துடன் கலந்து விரும்பிய பண்புடைய தாவரத்தைப் பெறலாம்.
விலங்குகளிலும் கலப்பினத்தை உண்டாக்க முடியும். கோவேறு கழுதை என்பது ஆண்கழுதை × பெண் குதிரைக்குப் பிறந்த கலப்பினமாகும்.
எ.கா:-ADTRH1, CoRH2
  • ADT - என்றால் ஆடுதுறை, Co -கோயம்புத்தூர். இவை ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (TNRRT), மற்றும் கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கலப்பின நெல் வகைகளாகும்.
கலப்பினப் பயிருக்கும் மரபணு மாற்றப் பயிருக்கும் வேறுபாடு யாது?
  • கலப்பினப்பயிரில் இனப்பெருக்கம் செய்யத்தக்க ஒரே இனப்பயிர்கள்/விலங்குகள் கலக்கப்படுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்டப் பயிரில் முற்றிலும் தொடர்பற்ற இரு உயிர்களின் மரபணுக்கள் கலக்கப்படுகின்றன.
  • கலப்பினப் பயிர்களின் பெற்றொர்கள், உரிய சூழலில் தாமாக தமக்குள் இனப்பெருக்கம் செய்ய முடியும். ஆனால் மரபணு மாற்ற உயிர்களின் பெற்றோர்கள் இயற்கையாக ஒருபோதும் தமக்குள் இனப்பெருக்கம் செய்யும் தன்மையற்றவை.
  • எடுத்துகாட்டாக,
    • கலப்பின முறை: இந்திய நெல் + ஜப்பானிய நெல்
    • மரபணு மாற்றம்: மீன் + தக்காளி
இந்தியாவில் உள்ள மரபணு பயிர்கள் என்னென்ன?
  • இந்தியாவில் சாகுபடியாகும் ஒரே மரபணு மாற்றப்பயிர் பி.டி பருத்தியாகும். இது 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2007-ல் GEAC (Genetic Engineering Appraisal Committee) பி.டி கத்தரியை வணிக/சாகுபடிக்காக அனுமதித்தது. எனினும் பல்வேறு எதிர்ப்புகளின் காரணமாக இம்முயற்சி தடுக்கப்பட்டது.
  • 2016-ல் GEAC மரபணு மாற்றக் கடுகிற்கும் வணிக ரீதியில் பயிரிட அனுமதியளித்தது, ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
பி.டி. பருத்தி என்றால் என்ன?
பி.டி. பருத்தி (Bt cotton) என்பது, பேசில்லியஸ் துரிஞ்சியன்ஸிஸ் (Bacillus thuringiensis) என்ற பாக்டீரியாவின் மரபணு நுழைக்கப்பட்ட பருத்தியாகும். இந்தப் பாக்டீரியம் உற்பத்தி செய்யும் நில நச்சுக்கள் சில நச்சுக்கள் பல வகை பூச்சிகள்-புழுக்களை கொல்லுந்திறனுடையது, இந்த நச்சுகளுக்குக் காரணமான புரத உருவாக்கத்தைத் தூண்டக் கூடிய மரபணுவை பாக்டீரியாவில் இருந்து வெட்டி பருத்திச் செடியின் மரபணுச் சங்கிலியில் ஒட்டி புதிய பருத்தி உருவாக்கப்பட்டது.
இதனால் இந்தப் பருத்திச் செடியைப் பலவகைப் பூச்சி-புழுக்கள் தாக்குவதில்லை; எனவே நல்ல மகசூலுக்கு வழிவகுத்தது. பூச்சிக்கொல்லியின் பயன்பாடு வெகுவாக  குறைந்தது.
மரபணு மாற்றக் கடுகு பற்றி விவரங்கள்?
  • தற்போது பிரச்சினைக் களத்தில் இருக்கும் கடுகின் பெயர் DMH-11 என்பதாகும். இது தாரா மஸ்டர்டு ஹைபிரிட் (Dhara Mustard Hybrid) என்று விரியும்.
  • இது டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பாகும்.
  • இது ஒரு உள்நாட்டுத் தயாரிப்பாகும்.
மரபணு மாற்றப் பயிர்களின் நன்மைகள் யாவை?
  • நோய்/பூச்சிகளை எதிர்க்கும் திறனுடைய பயிர்களை உருவாக்கலாம்.
  • மேம்பட்ட ஒளிச்சேர்க்கைத் திறனுடைய தாவரங்கள்.
  • நைட்ரஜன் நிலைப்படுத்துதலைக் கூட்ட முடியும்.
  • அளவில் பெரிய சேமிப்புப் பகுதிகளை உருவாக்கலாம் (வேர்/விதை)
  • நோய் எதிர்ப்புப் பொருள், மிகைப்படுத்தப்பட்ட மாவுச்சத்துடையதும் உயிர்ச்சத்துக்களையும் கொண்ட உருளை மற்றும் இன்ன பிற பயிர்கள்
  • உயிரி உரங்கள் மற்றும் உயிர் எரிபொருட்களின் உற்பத்தியைப் பெருக்க முடியும்.
  • பெருகிவரும் மக்கட்தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தியைப் பெருக்க உயர் விளைச்சல் இரகங்களுக்கு மரபணுப்பொறியியல் வழிவகுக்கலாம்.
  • பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள இத்தகைய முன்னேற்பாடுகள் அவசியமாகும்.
  • மலை-பாலை-உவர் நிலம்-தரிசுப் பகுதிகளில் வளரக்கூடிய பயிர்களை உருவாக்க மரபணு மாற்றம் வழிவகுக்கும் எனலாம்.
ஏன் மரபணு மாற்றப் பயிர்கள் எதிர்க்கப்படுகின்றன?
  • மரபணு மாற்றம் என்பது கடவுளின் படைப்பில் கைவைப்பதற்குச் சமம். எதிர்பாராத வகையில் உயிர்க்கொல்லி நோய் (அ) பேருருத்தன்மை  போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும்.
  • மரபணுக்கள் காலங்காலமாக கலக்காமல் தனித்துக் காணப்படுகின்றன. நாம் வலியக் கலந்து, அது வேறுவித விளைவுகளை உண்டாக்கலாம்.
  • மரபணு மாற்ற இனங்களில் உள்ள, மாற்றப்பட்ட மரபணு ஆனது மற்ற உயிர்களிடத்தும், அதை நுகரும் மனிதர்களிடத்தும் நுழையலாம்.
  • ஒரு பகுதியில் மரபணுப் பயிரினை அறிமுகப்படுத்துவது, அந்தப் பகுதிக்கேற்ற மரபுப்பயிரின் அழிவுக்கு வழிகோலலாம்.
  • இந்த நச்சு மரபணுக்கள் பயிர் முழுவதும் வியாபித்து, அவை மண்ணில் மக்கும்போது மண்ணையும் நஞ்சாக்கி, எல்லா வகை சிற்றுயிர்களின் அழிவிற்கும், அதனால் உணவுச்சங்கிலி, உயிரியப் பன்மை சிதைவதற்கும் காரணமாகலாம்.
  • இத்தகையப் பயிர்களை உருவாக்கும் நிறுவனங்கள், வெளிநாடுகள் காப்புரிமையைப் பெறுவதால், நாம் நம் விதைகளை இழந்து, விவசாயக் காலனித்துவ அடிமைகளாக மாறிவிடுவோம்.
  • மரபணு மாற்ற நோய் எதிர்த்தன்மை நிலையானதல்ல. 5-10 ஆண்டுகளில் நோயுயுரிகள் இந்த நஞ்சுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் என்பது மனதிலிருத்த வேண்டிய தகவலாகும்.
துணுக்குகள்
  • உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட முதல் பயிர் புகையிலை.
  • 1982-ல் இந்தப் புகையிலையில் மரபணு மாற்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது.
  • 1995-ல் தக்காளியில் மரபணு மாற்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது.
  • சீனாவில் மரபணு மாற்றப் பப்பாளி பயிரிடப்பட்டது.
  • இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களைச் சாகுபடி செய்யாத மாநிலம் சிக்கிம்.
  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் அதிகம்    பயிரிடப்படுவது சோயா பீன்ஸ்-50%, சோளம்-30%,பருத்தி -14%.
  • 28 நாடுகள் சர்வதேச அளவில் மரபணு மாற்றப்பட்ட           விதைகளைப் பயிரிடுகின்றன.
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யும் நாடு அமெரிக்கா.
இனி என்ன செய்யலாம் ?
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், மால்த்தூசியன் கோட்பாட்டுப்படி (Malthusian Theory Of population) , மக்கள்தொகை பெருக்குச் சராசரியிலும், உணவு உற்பத்தி கூட்டுச்சராசரியிலும் உலகம் உணவு நெருக்கடியை நோக்கி நகர்ந்தது. அப்போது உலகப் பசுமைப்புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் (Norman Borlaug) அவர்கள் தனது கலப்பினப்பயிரால் உலகைக் காத்தார்; அவர் " உலகம் பசியால் சாவதற்குப் பதில் மரபணு மாற்ற தானியத்தைச் சாப்பிட்டாவது சாகலாம்", என்றார்.
 
பருவநிலை மாற்றம், பெருகுகின்ற மக்கட்தொகை, அதிகரிக்கும் உணவுத்தேவை ஆகியவற்றை எண்ணிப்பார்க்கும் போது ஒரு பில்லியன் உயிர்களைக் காப்பாற்றிய உலகின் மனிதரான போர்லாக்கின் கூற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேசமயம் உரிய ஆய்வுகளுடன், உயிர்களைப் பாதிக்காத வகையில் மரபணு மாற்றப் பயிர்களை அறிமுகப்படுத்தலாம்.

-------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories