TNPSC Thervupettagam

மருத்துவர்களின் மாண்பினைக் காப்போம்!

July 1 , 2019 2006 days 1072 0
  • இந்தியாவில் மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய மருத்துவர்களில் 75% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் வாய் மொழி தாக்குதல் உள்பட ஏதேனும் ஒரு வகையிலான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமியை நோயாளியின் கணவர் வெட்டிக் கொன்றதாக வழக்குப் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்கம்
  • மேற்கு வங்கத்தில் ஒரு கும்பலால் மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இந்தப் போராட்டம் காரணமாக மேற்கு வங்க அரசு பணிந்து நடவடிக்கை எடுத்தது.
  • மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அண்மையில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டார். மருத்துவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க தமிழகத்தில் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசும் இது போன்றதொரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இத்தகைய சட்டங்கள் அவசியம் என்றாலும், இவை மட்டுமே மருத்துவர்களின் மீதான தாக்குதலைத் தடுத்து விடுமா என்ற கேள்வியும் எழுகிறது. "நோய்நாடி நோய்முதல் நாடி...' என்பதுபோல், மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு அடிப்படையான காரணங்கள் என்ன என்பது ஆராயப்பட வேண்டும்.
  • மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான இடைவெளி மதில் சுவர்போல் உயர்ந்து, "பரஸ்பர நம்பிக்கையின்மை' என்ற அகழி அகலமாகி, ஆழமாகியுள்ளது. இதற்கான காரணங்களைக் களையாமல் மருத்துவர்களின் மீதான தாக்குதல்களை சட்டங்களால் மட்டுமே தடுத்துவிட முடியாது.
  • உலகிலேயே மருத்துவர்கள் தாக்கப்படும் நிகழ்வு இந்தியாவில்தான் அதிகம். அதற்குக் காரணம், உலகிலேயே இந்தியாவில்தான் மருத்துவம் அதிகமாக தனியார்மயமாகியுள்ளது, வணிகமயமாகியுள்ளது. மருத்துவர்கள் மனங்களில் வணிகச் சிந்தனை கோலோச்சுகிறது.
  • இந்தியாவில்தான் மருத்துவத்துக்கான மொத்த செலவில், தங்கள் சொந்தப் பணத்திலிருந்து 75%-க்கு மேல் மக்கள் செலவிடும் நிலை உள்ளது. மருத்துவத்துக்காக செலவு செய்து ஆண்டுதோறும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் 6 கோடி பேர் செல்லும் கொடுமை நடைபெறுகிறது. விவசாயிகளின் தற்கொலைகளுக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று மருத்துவச் செலவு. மருத்துவமனைகளில் நிலவும் முறைகேடுகளும், அரசு மருத்துவமனைகளில் நிலவும் ஊழல்களும், அலட்சியப் போக்குகளும், புறக்கணிப்புகளும், தரமற்ற சிகிச்சை முறைகளும், கட்டண வசூல்கள் உள்ளிட்ட பல்வேறு சீரழிவுகளும் புற்றுநோயைப்போல் பரவியுள்ளன.
நோயாளிகளின் தேவைகள்
  • நோயாளிகளின் தேவைகளை மருத்துவமனைகள் நிறைவு செய்யவில்லை. நோயாளிகளின் மீதான அன்பும், அக்கறையும், உதவும் மனப்பாங்கும் குறைந்து வருகிறது. அதிகாரப் போக்கு அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் சுய மரியாதையும், கண்ணியமும் பல நேரங்களில் கேள்விக்குறியாகிறது. சாமானிய மனிதர்களிடமிருந்து மருத்துவர்கள் அந்நியமாகி வருகின்றனர்.
  • "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்' என்பதைப் பல மருத்துவர்கள் உணரவில்லை.
  • நோயாளிகளை சக மனிதர்களாகக் கருதாமல், வாடிக்கையாளர்களாகக் கருதும் வணிகப் பார்வை மேலோங்கியுள்ளது. இவை மருத்துவர்கள், மருத்துவத் துறையின் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
  • இந்த நிலைக்கு மருத்துவர்களை மட்டுமே குறைகூற முடியாது. இன்றைய பொருளாதாரக் கொள்கைகள், மருத்துவத் துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கமே இதற்கு அடிப்படைக் காரணம். இதைப் பற்றிய புரிதல் இல்லாமையும், இந்த நிலையை மாற்ற மக்களின் பக்கம் நிற்காத போக்கும், பிரச்னைகளை மேலும் சிக்கலாக்குகின்றன.
மருத்துவர்கள்
  • மருத்துவர்களை, தங்களின் மருத்துவர்கள் எனப் பார்க்காமல் ஆளும் வர்க்கத்தின் கரங்களாக மக்கள் பார்க்கின்றனர். மக்களின் மருத்துவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள மருத்துவர்கள் தவறி விட்டனர். மருத்துவத் துறை சீர்கேடுகளைச் சரி செய்ய அவர்கள் முயலவில்லை. அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள்-மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை, முறைகேடுகளை, கட்டமைப்புக் குறைபாடுகளை, மருந்துகள் தட்டுப்பாடு போன்றவற்றைப் போக்குவதற்கான கோரிக்கைகளை மருத்துவர்கள் முன்வைப்பதில்லை. மக்களுக்கு தரமான இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த மருத்துவர்கள் முயற்சி செய்வதில்லை.
  • இத்தகைய போக்கு, ஆளும் வர்க்கத்தின் அங்கமாக மருத்துவர்களை அடையாளப்படுத்துகிறது. இதன் காரணமாக, ஆட்சியாளர்கள் மீது வர வேண்டிய கோபம், அடிமட்டத்தில் மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள மருத்துவர்கள் மீது வெளிப்படுகிறது. மருத்துவம் தனியார்மயமானதும், பொதுசுகாதாரத் துறையை வலுவிழக்கச் செய்ததும், மருத்துவக் காப்பீடு அடிப்படையிலான மருத்துவ முறையை உருவாக்கியதும், பெரும்பான்மை மக்களின் மருத்துவம் பெறும் உரிமைகளைப் பறித்து வருகின்றன.
  • அரசு மருத்துவமனைகளை தனியார்மயப்படுத்தப்படுவதும், வணிகமயப்படுத்தப்படுவதும் மக்களை மிகவும் பாதித்துள்ளது. இந்தக் கடினமான சூழலில் மக்களின் துயரங்களை மருத்துவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் . அவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
  • "அர்ப்பணிப்பு' என்ற வரலாற்றுப் புகழுக்குச் சொந்தக்காரர்கள் நமது மருத்துவர்கள். வங்கத்தில் உணவுப் பஞ்சமும், கொடிய நோய்களும் பரவியபோது நிவாரணப் பொருள்கள்-மருந்துகளுடன் தமிழகத்திலிருந்து மருத்துவர்கள் கமலாம்பாள், சந்திரசேகர் போன்றோர் சென்று உதவியுள்ளனர்.
மருத்துவக் குழு
  • சீனா மீதான ஆக்கிரமிப்புப் போரை ஜப்பான் நடத்தியபோது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள் அடிப்படையில் இந்தியாவிலிருந்து டாக்டர் துவாரகநாத் கோட்ணீஸ் தலைமையில் 9 பேர் கொண்ட மருத்துவக் குழு அங்கு சென்று சேவை செய்தது. இதற்கான ஏற்பாடுகளை பண்டித ஜவாஹர்லால் நேரு செய்தார்.
  • சீன-இந்திய உறவின் சின்னமாக, சீன மக்களால் மிகவும் போற்றத்தக்கவரான கோட்ணீஸ் அங்கேயே உயிரிழந்தார். இதே போன்று சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் டாக்டர் கேப்டன் லட்சுமி செகல் சேர்ந்து சேவை செய்தார். தேவதாசி முறை ஒழிப்புக்காக டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி போராடினார். இத்தகைய வரலாற்றுப் புகழ் மிக்க மருத்துவர்களை, இன்றைய மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும். சூரத்தில் பிளேக் நோய் தாக்கியபோதும், சுனாமி, வெள்ளம் போன்ற பாதிப்புகள் வந்தபோதும், நமது மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் சேவை செய்தனர்.
  • கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டபோது, தங்களது உயிர் குறித்துக் கவலைப்படாமல் நமது மருத்துவர்கள் சேவை செய்தனர். நிபா வைரஸ் காய்ச்சலால் இறந்த 12 நோயாளிகளின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய உறவினர்களே தயங்கியபோது, அதைச் செய்தவர் டாக்டர் கோபாலகுமார்தான். மருத்துவமனைகளின், மருத்துவத் துறையின் சீர்கேட்டுக்கெல்லாம் மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் மட்டுமே மக்கள் காரணமாக்குவது சரியல்ல.
  • இன்றைய சமூக அமைப்பே அதற்குக் காரணமென உணர வேண்டும். மருத்துவர்களின் மீதான தாக்குதல்கள் அவர்களை மட்டும் பாதிக்காது, இந்தச் சமூகத்தையே பாதிக்கும். தனி நபர்கள் மீதான தாக்குதல்கள், புரையோடிப்போன நமது மருத்துவத் துறையின் பிரச்னைகளைத் தீர்க்க உதவாது.
  • பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், நமது மருத்துவர்கள் கடுமையான உடல், உள உளைச்சலுக்கு இடையே பணியாற்றுகிறார்கள் என்பதை உணர வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப மருத்துவமனைகளோ, மருத்துவர்களோ, ஊழியர்களோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லை. நமது மருத்துவர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். ஒப்பந்த, வெளிக்கொணர்வு முறைகளில் பலர் பணிபுரிகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் ஊதியம் மிகவும் குறைவு. பணிப் பாதுகாப்பும் இல்லை. புதிய சட்டங்கள், விதிமுறைகளால் சிறிய கிளினிக்குகள், மருத்துவமனைகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றை நடத்தும் மருத்துவர்கள் கடும் பொருளாதார பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சராசரி வாழ்நாள்
  • நமது மருத்துவர்களின் சராசரி வாழ்நாள், இந்தியர்களின் சராசரி வாழ்நாளைவிடக் குறைந்துள்ளது. இளம் வயதிலேயே மருத்துவர்கள் இறக்கிறார்கள். மருத்துவர்களின் கடுமையான வாழ்க்கை நிலைமைகளே இதற்குக் காரணம். நமது மருத்துவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும்கூட இன்றையை நிலையில் தரமான சிகிச்சைகள் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ கிடைக்கவில்லை என்பதை உணர வேண்டும். அதற்கு மருத்துவம் தனியார்மயமானதுதான் காரணம்.
  • அனைவருக்கும் முழுமையான தரமான இலவச சிகிச்சைகள், நலவாழ்வு கிடைக்க வேண்டும். அதுவே, மருத்துவர்களின் மாண்பைக் காத்திடும். அதற்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.

நன்றி: தினமணி(01-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories