TNPSC Thervupettagam

மறைந்து தாக்கும் மர்மம்

November 9 , 2024 78 days 102 0

மறைந்து தாக்கும் மர்மம்

  • இதயத்தின் இயக்கத்துக்கு ‘ரத்த அழுத்தம்’ தேவை என்கிறோம். ரத்தம் உடலுக்குள் ‘உலா’ செல்ல வேண்டுமானால், இந்த இயக்க விசை இல்லாமல் முடியாது என்கிறோம். இப்படி இதயத்துக்கு உதவும் நண்பனாக இருக்கும் ரத்த அழுத்தம் பின்னர் எப்படி எதிரியாக மாறுகிறது? அதையும் பார்த்துவிடலாம். ரத்தம் என்பது உடல் முழுவதும் பயணிக்கும் ஓர் உயிர் திரவம். நார்மல் ‘பி.பி.’ என்பது அதில் பயணிக்கும் ஒரு பயனாளி. ஆனால், ரத்தக் கொதிப்பு (Hypertension) என்பது அதில் மறைந்துகொண்டு பயணிக்கும் எதிரி.
  • எதிரி எப்போது துப்பாக்கியால் தாக்குவான் என்பதை நம்மால் சொல்ல முடியாது அல்லவா? அப்படித்தான், ரத்தக் கொதிப்பும். எந்த நேரத்திலும் இதனால் ஆபத்து வரலாம். இதயம்தான் இதற்கு முதல் இலக்கு. அடுத்ததாக, மூளை, சிறுநீரகம், கண்.

இதயத்துக்கு எதிரி:

  • தோட்டத்துக்குத் தண்ணீர்விட ரப்பர் குழாய் வாங்குகிறீர்கள். வாங்கிய புதிதில் அதைச் சுருட்டி வைக்க முடியும். நாள்பட்டால் அதைச் சுருட்ட முடியாது; கடினமாகிவிடும். இதுபோன்றுதான், நம் ரத்தக் குழாய்களும். நார்மல் ‘பி.பி.’
  • உள்ளவர்களுக்கு ரத்தக் குழாய்கள் இயல்பாக இருக்கும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தக் குழாய்கள் இறுகிவிடும். இது ரத்தக் குழாய்களின் நுண் ரத்தச் சுழற்சியைப் (Micro circulation) பாதிக்கும். இந்தப் பாதிப்பு நீடிக்குமானால், இதயத் தமனி ரத்தக் குழாய்கள் சோம்பேறி ஆகிவிடும். இதயத் தசைகளுக்கு ரத்தம் செலுத்துவதைக் குறைத்துக்கொள்ளும்.
  • வேகமாக ஓடும்போது, மாடிப்படி ஏறும்போது நெஞ்சு கனக்கும். இதை ‘ஆஞ்சைனா நெஞ்சு வலி’ (Angina) என்பார்கள். ரத்தக் கொதிப்பு இதயத்தைக் குறி வைத்துவிட்டது என்பதைத் தெரிவிக்கும் முதல் அறிகுறி இதுதான். ரத்தக் கொதிப்பு மட்டுமல்ல, புகைப்பது, உடல் எடை அதிகரிப்பது, மது அருந்துவது, நீரிழிவு, வயது மூப்பு, ரத்தத்தில் அதிகக் கொழுப்பு, காற்று மாசு போன்ற காரணிகளாலும் ரத்தக் குழாய்கள் கடினமாகிவிடுகின்றன; நெகிழ்வுத் தன்மையை இழந்துவிடுகின்றன; ரத்தத்தை இதயத்துக்குச் செலுத்தச் சிரமப்படுகின்றன. ‘ஆஞ்சைனா’வை வரவேற்கின்றன.
  • அதே வேளை இதயமும் இந்தக் கடினமான ரத்தக் குழாய்களுக்கு ரத்தத்தை அனுப்பக் கஷ்டப்படுகிறது. இதனால், இதயம் விரிவடைந்து, அதன் பலம் குறைந்துவிடுகிறது. ஒல்லியான ஒருவர் பளு தூக்கும் போட்டிக்குச் சென்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான், பலம் இழந்த இதயம் உடலுக்குள் ரத்தத்தைச் செலுத்த முடியாமல் தோற்று விடுகிறது.
  • இதையே ‘இதயச் செயலிழப்பு’ (Heart Failure) என்கிறோம். திடீர் இறப்புக்கு முன்பணம் கட்டும் ஆபத்து இது. அடுத்து, ரத்தக் கொதிப்பு நாள்படும் போது, பாலீஷ் போடப்பட்ட தரைபோல் இருக்கிற ரத்தக் குழாயின் உள்சுவர் ராணுவ பூட்ஸ் கால்கள் நடந்த தரை மாதிரி சொரசொரப்பாகிவிடுகிறது. இதன் விளைவால், அங்கே சிறு சிறு உள்காயங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
  • இந்தக் காயங்களில் ரத்தக் குழாய்களுக்கு உள்ளேயே லேசாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கலவரம் நடக்கும் இடத்தில் காவல் படை குவிக்கப்படு வதைப்போல, தட்டணுக்கள் அங்கே குவிக்கப்படு கின்றன. இவை நுண் ரத்தக் கட்டிகளாகிக் காயத்துக்கு மருந்து பூசுகின்றன. இந்த நேரத்தில் கொலஸ்டிராலும் கூடுதலாக இருந்தால், அந்தக் காயத்தில் அது உட்கார்ந்து கொள்கிறது. ஆபத்து அப்போதுதான் ஆரம்பிக் கிறது.
  • நம் மோசமான வாழ்க்கை முறைகள் தொடர்ந்தாலோ, கூடிய ‘பி.பி.’யைக் குறைக்கத் தவறினாலோ, மருந்துப் பூச்சாக வந்த தட்டணுக்கள், கொலஸ்டிரால், கால்சியம் மூன்றுமே கைகோக்கும். அதனால், இந்தக் காயங்களின் அடிப்புறத்தில் ‘பிளேக்’ (Plaque) என்னும் ரத்த உறைகட்டி உருவாகும். இது சாலையில் நிற்கும் பேரிகார்டு போன்று இதயத்துக்கு ரத்தம் செல்லும் வழியை அடைக்கும்; அடுத்து ஒரு மோசமான ஆபத்தையும் கொண்டுவரும்.
  • அதாவது, இந்த ரத்த உறைகட்டி எப்போது வேண்டுமானாலும் உடைந்து இதயத்துக்குச் செல்லலாம். அப்போது அங்குள்ள இதயத் தமனி ரத்தக் குழாயை அடைக்கலாம். மாரடைப்பு (Heart Attack) ஏற்படலாம். நெஞ்சுவலி வந்தவர்களுக்கு, ‘ஆஞ்சியோகிராம்’ செய்த அனுபவம் இருந்தால், இதயத்தில் ‘இரண்டு அடைப்பு’, ‘மூன்று அடைப்பு’ இருந்ததாகச் சொல்லியிருப்பார்கள். அந்த அடைப்பு இதுதான்.

மூளைக்கும் மோசம் செய்யும்!

  • இதயத்தில் நடப்பது போன்று மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயிலும் அடைப்பு ஏற்படலாம். அப்போது பக்க வாதம் (Stroke) வரலாம். ரத்த அழுத்தம் கட்டுப்பாடில்லாமல் போகும்போது அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், மூளையில் மெலிதாக இருக்கிற ரத்தக் குழாய்கள் வெடித்து விடும். இதன் விளைவாக, ரத்தக் கசிவு உண்டாகும். அப்போது மூளையின் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கோமா ஏற்படலாம். இதேபோன்ற ரத்தக் கசிவு கண்ணில் ஏற்படுமானால் பார்வை பறிபோகலாம்.

சிறுநீரகமும் தப்ப முடியாது:

  • ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தத் தவறும்போது சிறுநீரகத்தையும் அது பாதிக்கும். எப்படியெனில், சிறுநீரகத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் ரொம்பவும் மெல்லிசாக இருக்கும். அங்கே ‘பி.பி.’ மிதமிஞ்சிய நிலைக்குச் செல்லும்போது ரத்தக் குழாய்கள் கடினமாகிவிடும். கடினமான ரத்தக்குழாய்களால் சிறுநீரகத்துக்குப் போதிய ரத்தத்தைக் கொடுக்க முடியாமல் சிரமப்படும். இதனால், சிறுநீரகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் செயல்பாட்டை இழக்கும். ‘சிறுநீரகச் செயலிழப்பு’ (Renal Failure) எனும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிடும்.
  • இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டாலும் ‘பி.பி.’ அதிகரிக்கும். ஆக, கோழி வந்ததால் முட்டை வந்ததா, முட்டை வந்ததால் கோழி வந்ததா என்பதுபோன்று, ‘பி.பி.’ கூடியதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதா, சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் ‘பி.பி.’ அதிகரித்ததா என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.

உறக்கம் கெடும்:

  • உறக்கம் குறைந்தால் ‘பி.பி.’ அதிகரிக்கும் என்பது ஒரு புறம் இருக்க, ‘பி.பி.’ அதிகமாக அதிகமாக, அது உறக்கத்துக்குத் துணை செய்யும் ‘மெலட்டோனின்’ உள்ளிட்ட சில ஹார்மோன்களின் செயல்பாடுகளையும் பாதிக்கும். அப்போது உறக்கத்தைத் தூண்டும் ‘சர்காடியன் ரிதம்’ (Circadian rhythm) என்னும் உறக்கச் சுழற்சியை அது மாற்றி அமைத்துவிடும்.
  • இதனால், பல இரவுகளில் உறக்கம் குறையும். உறக்கம் இல்லாத இரவுகளால் மறுபடியும் ‘பி.பி.’ கூடும். இப்படி ஒரு சுழற்சியாக ரத்தக் கொதிப்பு படாத பாடு படுத்தும். இதையும் சொல்லிவிடுகிறேனே. இன்பம் தரும் தாம்பத்தியத்துக்கு ரத்தக் கொதிப்பு இடையூறு செய்யும். ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறையும். பெண் களுக்குப் பாலுறவில் ஆர்வம் குறையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories