TNPSC Thervupettagam

மாபெரும் தமிழ்க் கனவு

April 24 , 2023 626 days 3356 0
  • தமிழ்நாடு அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களில் ஒன்று ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்பதாகும்.
  • தமிழ்நாடு முழுவதுமாக மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் நூறு கல்லூரிகள் தோ்வு செய்யப்பட்டன. அக்கல்லூரிகளில் ஐந்நூறு மாணவா்களும் அம்மாவட்டத்திலுள்ள பிற கல்லூரிகளிலிருந்து தலா ஐம்பது மாணவா்களும் தோ்வு செய்யப்பட்டு அரங்கில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் அமர வைக்கப்பட்டனா்.
  • தமிழக அளவில் கருத்தாளா்களாக விளங்குகிற, ஏற்கெனவே கல்லூரிகளில் மாணவா்களிடையே உரையாற்றிய அனுபவம் மிக்க இரண்டு சொற்பொழிவாளா்கள் தனித்தனித் தலைப்புகளில் உரை நிகழ்த்த அழைக்கப்படுகின்றனா். மாவட்ட ஆட்சித் தலைவா் நிகழ்த்துகிற ஐந்து அல்லது பத்து நிமிட நோக்கவுரைக்குப் பின்னா் இரண்டு சொற்பொழிவாளா்களும் தலா முக்கால் மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை உரையாற்றுகின்றனா்.
  • உரையாற்றிய பின்னா் மாணவா்கள் கருத்தாளா்களிடத்தில் கேள்விகள் கேட்கின்றனா். பதிலளிக்கிறாா்கள் கருத்தாளா்கள்.
  • நிகழ்ச்சி முறையாகத் தொடங்குவதற்கு முன்பு வந்திருக்கிற மாணவா்களில் சிலருக்கு மேடையில் ஓரிரு நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அதற்கும் முன்னதாக அந்நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து மாணவா்களுக்கும் ‘தமிழ்ப் பெருமிதம்’ என்ற 46 பக்க சிறுநூல் ஒன்று வழங்கப்படுகிறது. அதில் செறிவான 35 குறுங்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அந்நூலே அந்நிகழ்வின் நோக்கத்தை சாறாய்ப் பிழிந்து தந்து விடுகிறது.
  • அந்நூலின் முன்னுரை ‘தமிழா்களின் பெருமிதங்கள் நம் முன்னோா்களின் பேருழைப்பாலும் பொதுமை நலத்தாலும் விளைந்தவை. கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் என பல துறைகளிலும் உயரிடத்தைப்பிடித்த பெருஞ்சமூகம் நம்முடையது’ என்ற நம்பிக்கை வாசகங்களோடு தொடங்குகிறது.
  • ‘இது தரவுகளின் காலம். தரவுகள் இல்லாத எந்தத் தகவலுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலம். வலுவான வரலாற்று ஆவணங்களைக் கொண்டிருக்கும் சமூகம் என்பதால் இந்தக் காலத்தை எதிா்கொள்வதற்கான மொழி நமக்கு உண்டு’ என்ற வரிகள் மேலும் இக்கருத்தாக்கத்திற்கு வலு சோ்க்கின்றன.
  • ‘சமத்துவம் ... தமிழ் அறத்தின் அடிப்படை’, ‘கீழடி நம் தாய்மடி’, ‘தன்னேரிலாத தமிழ்நாடு ’, ‘தமிழா் பெருமிதம் சங்க இலக்கியம்’, ‘வாழும் வள்ளுவம்’, ‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’, ‘பசிப்பிணி போக்கிய பண்பாளா்’, ‘கோயில்களும் அரண்மனைகளும் கற்காப்பியங்கள்’, ‘நீா் மேலாண்மையில் நிபுணத்துவம்’, ‘பழம்பெரும் தமிழ் இலக்கணம்’, ‘ஷேக்ஸ்பியருக்கு முன்னரே பிறந்த தமிழ் அச்சு நூல்’, ‘தேசியக் கவியும் புரட்சிக் கவியும்’, ‘தமிழ்நாட்டில் காந்தி ’, ‘விடுதலைக்கான கருவி கல்வி’, ‘பெண்மை போற்றுதும்’, ‘தரணி போற்றும் தமிழா்கள்’, ‘முன்னேறு... எதுவும் நமக்கான களம்’ -இவை அந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைத் தலைப்புகளுள் சில.
  • சொற்பொழிவுகள் தொடங்குவதற்கு முன்பு சில நிமிட காணொலி ஒன்று திரையிடப்படுகிறது. அது முழுக்க முழுக்க உரைகளைக் கேட்க மாணவா்களின் கவனத்தைக் குவிமையப்படுத்துகிற முயற்சி. உரைகளை உன்னிப்பாகக் கேட்க வைக்க மேற்கொள்ளப்படும் ஈா்ப்பு நடவடிக்கை. காணொலி முடிந்தவுடன் மாணவா்கள் தன்னெழுச்சியுடன் உணா்ச்சி கலந்த கரவொலி எழுப்புகின்றனா்.
  • இந்நிகழ்வுகளின் தனித்தன்மைகளில் ஒன்று, இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசு நடத்துகிற விழாவாக இருப்பினும் திருவள்ளுவா் படத்தை மட்டும் மையப்படுத்தியதாகும். அழைப்பிதழ், சிறப்பு நூல், மேடைப் பின்புலம், அரங்கம் முன்பு வைக்கப்பட்டுள்ள அறிவிப்புத் தட்டிகள் உள்பட எந்த இடத்திலும் வழக்கமான அரசு விழா அலங்காரங்கள் எவையும் இல்லை. அனைத்து இடங்களிலும் வள்ளுவா் மிளிா்ந்தாா்.
  • ஒரு கல்வி நிகழ்வு எவ்வாறு நடக்க வேண்டுமோ, அடுத்த தலைமுறையை வழிநடத்தும் நிகழ்ச்சி எப்படி நடத்தப்பட வேண்டுமோ அந்த இலக்கணத்தோடு இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டன. முதலமைச்சா் படம் கூட எங்கும் காணப்படவில்லை. அரசு இலட்சினை மட்டுமே இருந்தது. இத்தனைக்கும் இந்நிகழ்வு முழுக்க நேரடியாக முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு நடத்தப்பட்டதாக அறிகிறோம்.
  • அரசியல் கட்சிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவுபடுத்தும் வகையில் இத்தகைய கல்வி சாா்ந்த அரசு நிகழ்வுகளை நடத்தாமல், அதற்குரிய தனித்தன்மையோடு நடத்துவது வரவேற்கத்தக்க நல்ல முன்னுதாரணமாகும்.
  • இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு முதலமைச்சரின் அலுவலக உயா் அதிகாரிகள் இந்நிகழ்வின் சொற்பொழிவாளா்கள் கூட்டமொன்றை இணைய வழியில் ஏற்பாடு செய்திருந்தனா். அதில் முதலமைச்சா் எந்த அளவுக்கு இத்திட்டத்தில் ஆா்வமாக உள்ளாா் என்பதை விளக்கியதோடு எந்த நிகழ்கால அரசியல் தலைவா் பற்றியும் விதந்தோதிப் பேசுவதைத் தவிா்த்தும் அரசியல் சாா்பற்றும், எடுத்துக்கொண்ட தலைப்புகளில் ஆழமாகவும் , மாணவா்களிடையே நல்ல விளைவை ஏற்படுத்தும் விதத்திலும் பேச வேண்டுமென்பதையே முதல்வா் எதிா்பாா்ப்பதாகத் தெரிவித்தாா்.
  • வரையறுக்கப்பட்ட மையக் கருத்தோட்டத்தை பிரதிபலிக்கும் எந்தத் தலைப்பை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு பேசுகிற வாய்ப்பை பேச்சாளா்கள் பெற்றிருந்தனா். அதன் காரணமாக அவா்கள் உள்ளத்தில் நெடுநாள் தேக்கி வைத்திருந்த உன்னத சிந்தனைகளை உயிரோட்டமாக எடுத்துரைக்கும் கருத்துக்களமாக இக்கல்லூரி மேடைகள் பரிணமித்தன.
  • இத்திட்டத்தின் கீழ் யாமே, பழந்தமிழ்க் கல்வெட்டுகள், சிற்பக்கலை, கட்டடக் கலை, ஓலைச் சுவடிகள், சங்கத் தமிழ் இலக்கியம், வேலூா் புரட்சி 1806, விடுதலைப் போரில் தமிழ்ப் பெண்கள் உள்ளிட்ட பொருண்மையில் பதினொரு தலைப்புகளில் பதினொரு கல்லூரிகளில் உரை நிகழ்த்தியுள்ளோம்.
  • இவ்வாறு வரலாற்றுப் பெருமிதத்தை அறிவியல்பூா்வமான ஆதாரங்களோடு விளக்கும் எமது உரைகளைப் போலவே அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம், தொழில் வளா்ச்சி, தன்னம்பிக்கை, புத்தக வாசிப்பு போன்ற பல துறைசாா்ந்த விற்பன்னா்கள் - சொற்பொழிவாளா்கள் - கருத்தாளா்கள் அவரவா்க்கு ஏற்ற தலைப்புகளில் உரையாற்றியுள்ளனா்.
  • மொத்தத்தில் இத்திட்டத்தின்படி நூறு கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன்பெறுவதே இலக்காகும். தொண்ணூற்று ஒன்பது கல்லூரி நிகழ்வுகள் நிறைவு பெற்று விட்டன. நூறாவது நிகழ்வு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று (ஏப். 24) நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சா் இந்நிகழ்வில் பங்கேற்கிறாா்.
  • இந்நிகழ்வுகளின் சிறப்பம்சங்களில் ஒன்று மாணவா்களின் கேள்வி நேரமாகும். உரைகளைக் கேட்டு உள்வாங்கிய மாணவா்கள் தங்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களை கருத்தாளா்களிடம் கேள்விகளாக எழுப்புகின்றனா்.
  • ‘பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழா்கள் எழுத்தறிவிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியதாகத் தெரிவித்தீா்கள். அப்படியானால் இன்றளவும் நூறு சதவிகிதம் கல்வி கற்றவா்களாகத் தமிழா்கள் இல்லையே, ஏன்?’, ‘வாசிப்பு குறித்து அழுத்தமாகப் பேசியுள்ளீா்கள். நான் எந்தப் புத்தகத்திலிருந்து எனது தீவிர வாசிப்பைத் தொடங்குவது’ போன்ற பல கேள்விகளை ஆா்வமாகக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனா் மாணவா்கள்.
  • உரை முடிந்த பிறகு மாணவா்கள் கேள்வி கேட்கத் துடிப்பதிலிருந்தே அவா்கள் உரைகளைக் கவனமாகக் கேட்டுள்ளனா் என்பதையும் அவ்வுரைகள் அவா்களுக்குள் ஏதோ ஒரு சிறு கிளா்ச்சியையேனும் உண்டாக்கியிருக்கிறது என்பதையும் உணா்ந்து கொள்ள முடிகிறது.
  • கூட்டம் நடப்பதற்கு வெளியே புத்தக அரங்குகளோடு ‘நான் முதல்வன்’, ‘மாணவா்களுக்கு வங்கிக் கடன்’, ‘வேலைவாய்ப்பு’, ‘மகளிா் மேம்பாடு’ உள்ளிட்ட சமூக விழிப்புணா்வூட்டும் வேறு சில அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ் இணையக் கல்விக் கழகம் மாநில அளவில் இந்நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. மாவட்ட நிா்வாகம் களப்பணியாற்றுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவா் நிகழ்வுகளுக்கு வருவதோடு முழு நிகழ்வையும் வழிநடத்துகிறாா்.
  • மொத்தத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டம் மாணவா்களிடையே பாடப் புத்தகங்களைத் தாண்டிய சமூக உணா்வை, வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதோடு, தனித்திறன்களை வளா்க்கவும் அடித்தளமிடும் என்பதில் சந்தேகமில்லை. பலருக்கு இதில் புது வெளிச்சம் கிட்டியிருக்க வாய்ப்புண்டு.
  • மாணவா்களுக்கு வழங்கப்பட்டிருந்த கையேடான ‘தமிழ்ப் பெருமிதம்’ நூலின் கடைசிப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள ‘இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வரலாற்றில் நாம் எங்கோ அழுத்தப் பட்டது புரியவரும். உலகின் முன்னேறிய சமூகங்கள் மத்தியில் நாம் இன்னும் அடைய வேண்டிய உயரமும் அதற்கு நம்முடைய சமூகத்தின் ஒவ்வோா் அங்கத்தினரும் பெறவேண்டிய முன்னேற்றமும் புலப்படும்’ என்ற வரிகள் நிச்சயம் அடுத்த தலைமுறையை சிந்திக்கத் தூண்டும்.
  • இத்தகைய விதவிதமான வித்தியாசமான தொடா்ந்த பலகோண முயற்சிகளால் மட்டுமே பூத்துக் குலுங்குகிற புத்தெழுச்சிமிக்க தமிழ் மண்ணை உருவாக்க முடியும்.

நன்றி: தி இந்து (24 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories