TNPSC Thervupettagam

மாற்றங்கள் எல்லாம் முன்னேற்றமா?

May 7 , 2019 1899 days 1066 0
  • எல்லா மாறுதல்களும் முன்னேற்றத்துக்கான அறிகுறிதானா? நேர்மறை அம்சங்கள் குறித்து முதலில் பார்க்கலாம். 1990-ஆம் ஆண்டு வரை 60 வயது முதியவர்கள் நான்கு சுவருக்குள்ளே முடங்கிக் கிடந்து, நாளிதழ்களைப் படித்து, அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அதுபோல் இல்லை. இப்போது 70 வயது, அதற்கு மேற்பட்டோர்கூடச் சமூக சேவையில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது.
சமூக சேவைகள்
  • சில வயதானவர்கள் ஒன்று சேர்ந்து பொதுப் பூங்கா பராமரிப்பில் முனைந்து செயல்படுவது, பிரபல ஆங்கில ஏட்டின் இணைப்பில் புகைப்படத்துடன் அண்மையில் வெளியானது.
  • சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துவது மட்டுமின்றி, போக்குவரத்து வசதி மேம்படவும் துணை நிற்கிறார்கள். சென்னை ஆவடியில் நிர்வாகத்துடன் வாதாடி, கூடுதலாகப் பேருந்து வசதிகள் பெறக் காரணிகளாக இருந்திருக்கிறார்கள். பெண்களும் இவ்வாறே.
  • இப்போது கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்துவிட்டதால், அவர்களுக்கு நிறைய அவகாசம் கிடைக்கிறது.
பெண்கள்
  • மாற்றுத் திறனாளிகளுக்கும், நலிந்த பிரிவினருக்கும் சிறு தொழில் கற்றுத் தந்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் 80 வயதுப் பெண் ஈடுபட்டிருக்கிறார். நான் வசிக்கும்  அடுத்த தளத்திலேயே, குப்பத்து ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சில பாடங்களுக்கு  70 வயதுப் பெண்  பயிற்சி அளிக்கிறார்.
  • ஆக, அரிமா அமைப்புகளுக்கும், ரோட்டரி சங்கங்களுக்கும் மட்டுமே சமூக சேவை உரித்தானது என்ற கருத்து உடைபட்டுப் போவது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்தான்.
  • இன்றைய இளைஞர்கள் எப்போதும் பொறுப்பில்லாமல் செல்லிடப்பேசியும் கையுமாக அலைகிறார்கள் என்ற மனப்படிமம் அவ்வளவு சரியில்லை.
  • தற்போதைய மாறுதல்களை நன்குணர்ந்து கொண்டு, அதற்கேற்ப புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். சாலையில் மித மிஞ்சிய வேகத்தில் செல்லும் வாகனங்களைக் கட்டுக்குள் வைப்பது, தனியாக வாகனத்தில் போகும் இளம் பெண்ணுக்குப் பாதுகாப்பாக எச்சரிக்கை மணி பொருத்துவது என காலத்தின் தேவைக்கேற்ப கருவிகளின் பயன்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், இவற்றுக்கான செல்லிடப்பேசி செயலிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
மாற்றங்கள்
  • கல்வி, சமூகம், மருத்துவம் போன்றவற்றில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் மகத்தானவை. வாழ்க்கையில் முன்னேற பொறியியல், கணினி போன்ற பாடங்கள்தான் என்ற தடை உடைபட்டு  ஓவியம், இசை என நூற்றுக்கணக்கான வாசல்கள்  திறந்து கிடக்கின்றன.
  • மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய சிகிச்சைகள் நோயாளிகளுக்குச் சாதகமாக இருக்கின்றன. எந்தச் சிக்கலான நோயானாலும், அதை ஆரம்ப நிலையிலேயே கணித்துவிட நவீன மருத்துவ பரிசோதனைக் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், மருத்துவருக்கும் நோயாளிக்குமான நெருக்கமான தொடர்பு போய் விட்டது.
  • வங்கிகளில் கணினி வந்தவுடன், பல வசதிகள் பெருகினாலும் முன்பு வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட தொடர்பு குறைந்து விட்டது. முன்பெல்லாம் வங்கியின் கடைநிலை ஊழியருக்குக்கூட கிளையின் முக்கிய டெபாசிட்தாரரையும், கடன்தாரரையும் தெரியும். இன்று அதிகாரிகளுக்கே தெரியுமா என்பது ஒரு கேள்விக்குறி. காரணம், வாடிக்கையாளரின் வரவுகளையும், பற்றுகளையும் கிளை அல்லாத வேறு மையம் பராமரித்து வருகிறது.
மத்திய அரசு
  • அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் கொள்கைப்படி, வீடு கட்டுவதற்கும், வாங்குவதற்குமான சூழல் மாறிக் கொண்டேயிருக்கிறது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மனிதருக்கும் இன்று சொந்த வீடு சாத்தியமாகி விடுகிறது.
  • அதே சமயம், ஆரம்பித்த பல தளங்கள் அந்தரத்திலேயே நின்று நுகர்வோர்கள் அவஸ்தைப்படுவதையும் கேள்விப்படுகிறோம். 50 ஆண்டுகள்  ஆன பழைய தனி வீட்டை, நாலைந்து தளங்களாக மாற்ற உடன்படிக்கை  கையெழுத்திட்டும், ஒப்பந்தக்காரர் திவாலானதால், சிரமத்துக்குள்ளான மனிதரையும் நன்கு அறிவேன். ரெரா சட்டமும் (வீடு மனை ஒழுங்குமுறை மையம்) திவால் வசூல் சட்டமும் நடைமுறையில் உதவுவதாகத் தெரியவில்லை.
  • சமூக மாற்றத்தில் முக்கியமானவை  விதவை விவாகமும், முதியோர் ஓய்வு இல்லங்களும். எதிர்பாராத காரணத்தால் இளவயதிலேயே விதவையான பெண்கள் மறுமணம் செய்து கொள்கின்றனர்.
  • உடற்கூறு காரணமாகவோ, வேறெதாவது பிரச்னை காரணமாகவோ மணமுறிவு ஏற்பட்டால்கூட இந்தக் கால பெண்கள் முடங்கிக் கிடப்பதில்லை. வேறு துணையை துணிச்சலாக நாடுகின்றனர்.
  • முதியோர் நல இல்லங்களை, காலத்தின் கட்டாயம் என்றே கூறலாம். ஒளிமயமான எதிர்காலத்துக்காக வெளிநாட்டிலோ, வேறு மாநிலத்திலோ பெண்ணோ, பிள்ளையோ வேலைக்குச் சென்றால், வயதான பெற்றோர் சிரமப்படத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அன்றாட காரியங்களே சுமையாகி விடும் நிலையில் உறுதுணையாக இருப்பது முதியோர் இல்லங்களே. இதை வரவேற்பதும் புறக்கணிப்பதும் அந்தந்த தனிக் குடும்பங்களைச் சாரும்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories