TNPSC Thervupettagam

முதல் ஊடகவியலாளர் தேவரிஷி நாரதர்!

May 20 , 2019 2063 days 1706 0
  • நாட்டின் பல மாநிலங்களில் வைகாசி மாதம் தேய்பிறை இரண்டாம் நாள் நாரதர் ஜெயந்தி மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில் ஊடகத்தினர் கௌரவப்படுத்தப்படுகின்றனர். ஏதேனும் ஒரு மூத்த ஊடகவியலாளர் மூலமாக தேசிய கண்ணோட்டத்துடன் ஊடகத்துக்கு வழிகாட்டுதலும் நடைபெறுகிறது.
  • "லிபரல்' எனக் கூறிக்கொள்ளும், உடன் பணியாற்றும் ஊடகத்தினரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர் என்பதுதான் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஊடகத்தினரில் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. இது நம் நாட்டின் ஒரு விசித்திரமே.
  • அதாவது, தன்னைத்தானே "லிபரல்', "லிபரலிஸ்ட்'டுகள் என கூறிக்கொள்பவர்கள், ஊடகவியலாளர்கள், சிந்தனையாளர்கள் மிகவும் குறுகிய மனதினராகவும் மேலும் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாகவும் உள்ளனர். தேசவிரோத, பிரிவினைவாத எண்ணங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் கூட்டங்களுக்கு ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகச் செல்கிறார்கள். அதைத்தான் "லிபரலிஸ்ட்'  என்பதற்கு அடையாளமாகக் கருதுகின்றனர். அதனால், தேசிய எண்ணம் கொண்டவர்களின் கூட்டங்களுக்குச் சென்று எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வற்குத் தயங்கி, தயக்க உணர்வின் காரணமாக எதிர்க்கின்றனர்.
  • தேவரிஷி நாரதர் முதல் ஊடகவியலாளர். இது சங்கத்தினுடைய (ஆர்எஸ்எஸ்) கண்டுபிடிப்பு என்று ஒருசிலர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தலாம். இருந்தபோதிலும் இதையறிந்தால் அவர்கள் ஒருக்கால் வியப்படையலாம். வைகாசி மாதம் தேய்பிறை இரண்டாம் நாள் நாரதர் ஜெயந்தி. இந்தியாவின் முதல் வார இதழ் "உதந்த மார்தண்ட'வின் முதல் பதிப்பில் முதல் பக்கத்தில் முதல் ஊடகவியலாளர் தேவரிஷி நாரதரின் ஜெயந்தியன்று இந்தப் பத்திரிகை வெளியிடப்படுகிறது' என அதன் ஆசிரியர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது சங்கம் (ஆர்எஸ்எஸ்) தொடங்குவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு (99 ஆண்டுகள்) முன்னர் நிகழ்ந்தது.
ஊடகம் – செயல்
  • ஊடகத்தின் முதல் முக்கியமான செயல், தகவல்களை சென்றடையச் செய்வது. தகவல்கள் சென்றடையச் செய்யும் ஊடகங்கள் மாற்றங்களால் அச்சு, மின்னணு, வலைதளம், சமூக ஊடகம் போன்ற பல்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளன. பழங்காலத்தில் தகவல்கள், செய்திகள், தகவல் தொடர்பு முக்கியமாக வாய்வழியாகவே இருந்தது. கொண்டாட்டங்கள், தீர்த்த யாத்திரைகள், வேள்விகள் நிமித்தமாக மக்கள் ஒன்று கூடும்போது  தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்கள். தேவரிஷி நாரதர் எங்கும் எப்போதும் சஞ்சாரம் செய்து ஒவ்வோர் இடத்தின் நிகழ்கால மற்றும் கடந்த காலத் தகவல்களை மக்களிடம் சென்றடையச் செய்தார். அவர் எதிர்காலத்தைக்கூட கணித்தார்.
  • அதனால், கடந்த கால மற்றும் நிகழ்காலத்துடன் அவ்வப்போது எதிர்காலத் தகவல்களைக்கூட மக்களுக்கு தெரிவித்து வந்தார். இந்தச் செயலை அவர் பாரபட்சமின்றி உலக நன்மைக்காக மற்றும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே செய்தார். ஒரு முன்மாதிரி ஊடகவியலாளராக அவருடைய மூவுலக (தேவ, மனித, அசுர) சஞ்சாரம் பாரபட்சமின்றி சமநோக்கில் இருந்தது. நாரதர் மெத்தப் பயின்ற கல்வியாளர், அறிஞர் மற்றும் பக்திமான். அவரால் இயற்றப்பட்ட பக்தி சூத்திரம் புகழ் பெற்றது. நாரதரால் இயற்றப்பட்ட வேறு நூல்களும் உள்ளன.
ஆன்மீகம்
  • பாரதிய மனங்களில் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்தியர்களின் வாழ்க்கையின் அடிப்படை ஆன்மிகம்தான்.
  • "திறமையுடன் இறையுணர்வும் அவசியமானது; அப்போதுதான் அது உலகுக்கு நன்மை பயக்கும்' எனப் பெரும் புகழ் பெற்ற மகான் சுவாமி ராமதாஸின் பாடல் கூறுகிறது. அதற்காகத்தான் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் உப தேவதை உண்டு. இது பாரதத்தின் மரபு. அதனால்தான் கல்வியைப் பெற விநாயகர் அல்லது சரஸ்வதியை வணங்கி செயலைத் தொடங்குகிறோம். இந்தக் கோணத்தில் தேவரிஷி நாரதரை "உதந்த மார்தண்ட' பத்திரிகையின் ஆசிரியர் நினைவுகூர்ந்தது பாரதிய மரபுப்படி இயல்புதான்.
  • அனைவருக்கும் அவரவர் கடமை, களம், பொறுப்புகள், பங்களிப்புகள் உள்ளன. இன்றைய ஊடக உலகில் இது மிகவும் அவசியம். மனிதன் ஒருமுறை இந்த மாபெரும் உயிர் சக்தியிலிருந்து விடுபட்டு, தனியாக தொடர்பற்று ஆகிவிட்டால் அப்போது நெறியிலிருந்து விலகத் தொடங்கி விடுகிறான். இயந்திரம், கருவி, தானியங்கி இயந்திரம் மற்றும் "சிப்' போன்ற தொழில்நுட்ப அறிவின் வளர்ச்சியுடன் மனிதனின் தொடர்பு வேகமும் அதிகரித்தது. இதனால், மனிதன் பயன் பெற்றான். இதனுடனே மனிதனின் வேகமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால், மனிதன் இயற்கையிடமிருந்து, தன் இயல்பிலிருந்து, தன்னுடைய மனித சமுதாயத்திடமிருந்து, அது மட்டுமல்ல தன்னிடமிருந்தேகூட விடுபட்டு விலகி தொலைவிற்குச் சென்றுவிட்டான்.
  • இதன் விளைவாக, சுற்றுச்சூழலுடன் மட்டுமல்ல மேலும் மனித இனத்தோடுகூட மனிதனின் நடத்தை அதிக கொடூரமாக மற்றும் வன்முறையாக ஆகிக்கொண்டே சென்றுவிட்டது. இதன் காரணமாக, இன்பங்களில் மட்டும் திளைப்பது மற்றும் தன் சுயநலத்தை மட்டுமே உரைகல்லாக ஆக்கிக்கொண்டே சென்று அதன் விளைவாக அவனுடைய நெறியிலிருந்து வழுவத் தொடங்கினான்.
தர்மம்
  • எங்கும் வியாபித்துள்ள ஒருங்கிணைந்த உணர்வுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் அந்த நோக்கமே நெறியின் ஆதாரம். இந்தியாவில் இதுதான் தர்மம் ("ரிலீஜியன்'அல்ல) என்று கூறப்பட்டது. தர்மம் தன்னை மற்றவற்றுடன் பிணைக்கிறது. சமுதாயத்தில் செய்தியை, தகவல்களை அளிப்பதை மட்டும் செய்வதாக ஊடகம் இருக்கக் கூடாது; சமுதாயம் சரியான திசையில் சிந்தனை செய்ய உந்துதலாக ஊடகம் இருக்க வேண்டும்; இதுவும் ஊடகத்தின் கடமை ("தர்மம்') ஆகிறது.
  • சமுதாயத்துக்கு வெளியே தனியான ஒன்று அல்ல ஊடகம். சமுதாய நலனுக்குத் தேவையானவை ஊடகம் மூலமாக சமுதாயத்துக்கு அளிக்கப்பட வேண்டும். "எது விற்கிறதோ அதைத்தான் நாங்கள் அளிப்போம். எது நடக்கிறதோ அதைத்தான் நாங்கள் கொடுப்போம்'---இப்படி ஒரு எண்ணத்தை ஊடகங்கள் கொள்வது சரியல்ல. இரண்டு சொற்கள் உள்ளன,  "ப்ரேயஸ்' மற்றும் "ஷ்ரேயஸ்'. "ப்ரேயஸ்'--அதுதான் நேசம். நேசிப்பதை மட்டுமே கொடுப்பது என்பது அவசியமில்லை. மற்றொருபுறம் "ஷ்ரேயஸ்'--அது நன்மை பயக்கக்கூடியது; போற்றுதலுக்குரியது; அது நேசத்துக்குரியதாக இல்லாமலும்கூட இருக்கலாம்.
  • அதனால் நேசிப்பதை மட்டும் சொல்வது போதுமானது இல்லை. சமுதாயத்தின் ஆர்வத்தை வளர்க்கும் முயற்சியை ஊடகங்கள் செய்ய வேண்டும். நல்ல தகவல்கள் மூலமாக நன்மையானதை நோக்கி சமுதாயம் செல்ல ஊடகங்கள் வழிகாட்ட வேண்டும். ராமாயணம், மகாபாரதம் போன்ற பல தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக ஊடகங்கள் இதைச் செய்துள்ளன. "பஞ்சாப் கேசரி' பத்திரிகையின் முதல் ஆசிரியர் லாலா ஜகத்நாராயண், பஞ்சாபில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்ததற்கிடையில் அச்சமின்றி சமுதாய நன்மைக்காகச் செயல்பட்டதால் அவர் உயிரையே இழக்க நேர்ந்தது. இதன்பிறகு அவர் இடத்துக்கு வந்த ரமேஷ், அதேபோன்று அச்சமின்றிச் செயல்பட்டார்.
நெருக்கடி நிலை
  • 1975-இல் நெருக்கடி நிலையின் இருண்ட காலகட்டத்தில் அரசு அடக்குமுறைக்கு அஞ்சாமல் ஜனநாயகத்தை நிலைநாட்ட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' உரிமையாளர்  ராம்நாத் கோயங்கா செயல்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்கள் ஊடக உலகில் காணக் கிடைக்கின்றன. 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத பிரதிநிதி சபை அமர்வில் நடந்த ஆலோசனை குறித்து வாரப்  பத்திரிகை ஒன்றில், ஆர்.எஸ்.எஸ். மீது வழக்கம்போல புனையப்பட்ட, ஆதாரமற்ற இரண்டு கதைகள் வெளியிடப்பட்டிருந்தன. அதைப் பார்த்து வியப்பு ஏற்பட்டது. அதாவது, கதையில் எங்குமே அதை எழுதியவரின் பெயர் இல்லை; நிருபரின் பெயர்கூட இல்லை.
  • தன் அலுவலகத்தில் அமர்ந்து இதுபோன்ற உள்நோக்கம் கொண்ட செய்திகள் எழுதுவதால், சமுதாயத்துக்கு ஏதாவது நன்மை நேர்ந்ததா என்றால் இல்லை. இது போன்ற நேரங்களில் நாரதரின் நினைவு மீண்டும் எழுகிறது. அவர் எங்கும் தர்மத்தை நிலைநாட்ட தகவல்களை அடிப்படையாக முதன்மையாகக் கொண்டிருந்தார். நாரதர் ஜெயந்திக்கும்கூட இதுதான் சிறப்பு. தகவல்கள் மூலமாக சமுதாயத்துக்கு வழிகாட்டி, விழிப்புணர்வு செய்துகொண்டே சமுதாயத்தை சரியான திசையில் கொண்டுசெல்வது, சமுதாயத்தின் எண்ணச் செயல்முறைக்கு (சிந்தனைத் திறன்) சரியான வழிகாட்டுதல் தருவது ஆகியவை ஊடகத்தின் கடமையாகும்.

நன்றி: தினமணி(20-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories