- ஏப்ரல் 1950-இல் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் 1951-ஆம் ஆண்டு முடிவதற்குள் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு நிறைவடையும் என அறிவித்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அது கேட்டு அதிர்ந்து போனார் அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்.
பிரதமர்
- பிரதமர் நேருவை அவர் உடனடியாக நேரில் சந்தித்து விளக்கினார்: தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தை மதிக்கிறேன். ஆனால், முதல் ஜனநாயகப் பரிசோதனை என்பதால் செய்ய வேண்டிய தேர்தல் முன்னேற்பாடுகள் ஏராளம்; லட்சக்கணக்கில் தேர்தல் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்; வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடி. அவர்களில் எழுத, படிக்கத் தெரியாதவர்கள் 85 சதவீதம்.
- கால அவகாசம் தேவை என்றார் சுகுமார் சென். இதைத் தொடர்ந்து 1951-ஆம் ஆண்டு அக்டோபர் 25 முதல் 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரை முதல் பொதுத் தேர்தலை பல கட்டங்களாக நடத்த பிரதமர் நேரு ஒப்புதல் அளித்தார்.
இந்தியாவிலேயே கேரள மாநிலம் கோட்டயம் தொகுதியில்தான் மிகவும் அதிகமாக 5 சதவீதம் பேர் வாக்களித்து அனைவரையும் வியக்க வைத்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் தொகுதியில் மிகக் குறைவாக 18 சதவீதம் பேர் வாக்களித்தனர். இந்தியா முழுவதும் பதிவான சராசரி வாக்குப்பதிவு விகிதம் 60 சதவீதம்.
பழங்குடியின மக்கள்
- ஒடிஸாவின் காட்டுப்பகுதி பழங்குடி இனமக்கள் வில், அம்புகளுடன் கூட்டமாக வந்து அதிக அளவில் வாக்களித்தனர். அந்த மலைப் பகுதியில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. மதுரையில் 110 வயதான கிழவர், தன் இரு பேரன்கள் தன்னைத் தாங்கி வர வாக்களித்துச் சென்றது, அன்றைய முக்கியச் செய்தியானது. 90 வயதைத் தாண்டிய நடக்க இயலாத பெரியவர், மகாராஷ்டிர மாநில கிராமத்தில் வாக்குப் பெட்டியின் முன்பு மயங்கி விழுந்து மரணத்தைத் தழுவினார்.
- அஸ்ஸாம் கிராமம் ஒன்றில் 90 வயது முஸ்லிம் ஒருவர், தான் நேருவுக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொன்னார். அங்கு நேரு போட்டியிடவில்லை என்பதைக் கேட்டதும், நான் வேறு எவருக்கும் வாக்களிக்க மாட்டேன் என்று கூறி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். ஹைதராபாத் வாக்காளர் பட்டியலின்படி முதலில் வந்து வாக்களித்தவர் ஹைதராபாத் நிஜாம் மன்னரே. இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்குச் சான்றளிக்கும் செயல் இது என்று பத்திரிகைகள் பாராட்டின.
- ஹிமாசலப் பிரதேசத்தில் தேர்தல் பயிலரங்கத்துக்கு வருவதற்கு சில அலுவலர்கள் 6 நாள்கள் நடந்து வந்தனர்; கோவேறு கழுதை மீது இரண்டு அதிகாரிகள் நான்கு நாள்கள் சவாரி செய்து வந்தனர்; சாக்குத் துணியில் வாக்குச்சீட்டுகளைச் சுமந்து சென்றனர்--இவை அனைத்தும் அமெரிக்கப் பெண் புகைப்படக் கலைஞர் கொடுத்த அறிக்கையில் காணும் தகவல்கள்.
- அடர்த்தியான மலைப்பிரதேசப் பகுதிகளில் வாக்காளர் வந்து போக, புதிதாக சாலைகள் அமைக்க வேண்டியிருந்தது. ஆறுகளைக் கடக்க சில இடங்களில் பாலங்கள் கட்டப்பட வேண்டியிருந்தது. இந்துமாக் கடலில் இருந்த சில தீவுகளுக்கு, வாக்காளர் பட்டியல்களை எடுத்துச் செல்ல, கடற்படைக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.
மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த பெண் வாக்காளர்கள் பலர், தங்கள் பெயரைச் சொல்ல மறுத்தனர். இவரது அம்மா, இவரது மனைவி என்றே பதிவு செய்து கொண்டனர். பழங்குடி மக்களின் இந்தச் செயல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்னுக்கு கோபமூட்டியது.
சின்னங்கள்
- அத்தகைய பெண்களின் பெயரைக் கேட்டுப் பதிவு செய்யுமாறு அந்தப் பகுதி தேர்தல் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.கட்சிகளுக்கு சின்னங்கள் பயன்படுத்துவது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு கட்சிக்கு ஒரு ஜோடி காளை மாடு; இரண்டாவது கட்சிக்கு குடிசை; மூன்றாவது கட்சிக்கு யானை; நான்காவது கட்சிக்கு அகல் விளக்கு; ஐந்தாவது கட்சிக்கு சிங்கம். படிப்பறிவில்லாத மக்கள் பார்த்து, புரிந்து கொள்ளக்கூடிய பொருள்களே கட்சிகளின் சின்னங்களாக ஒதுக்கப்பட்டன.
- ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒவ்வொரு கட்சிக்கும் தனி வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு, கட்சியின் சின்னம் அதன் மேல்புறம் இடம்பெற்றது. தான் விரும்பும் சின்னம் இடம்பெற்ற வாக்குப் பெட்டியில் தன் வாக்குச்சீட்டை வாக்காளர் போடுவது எளிதாயிற்று.
- முதல் பொதுத் தேர்தலிலேயே ஆள் மாறாட்டத்தைத் தடுக்க அழியாத மையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர். அது, வாக்காளர் விரலில் ஒரு வாரம் அழியாமல் இருந்தது. மொத்தம் 3 லட்சத்து 89 ஆயிரத்து 816 குப்பி மை பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
திரைப்படம்
- தேர்தல் நடைமுறையை மக்கள் தெரிந்து கொள்ள திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அது 3,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது. வானொலி மூலமும் நாள்தோறும் விளக்கங்கள் ஒலிபரப்பப்பட்டன.
மேடைப் பேச்சுகளும், சுவரொட்டி விளம்பரங்களும் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தன. அன்றைய கல்கத்தா தெருவில் நடமாடும் பசுக்களின் முதுகில்கூட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
- இதனைப் பார்த்த ஒரு பிரிட்டிஷ் பார்வையாளர், அழகு மிகுந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிலைகள் மீதுகூட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றனவே. இது முந்தைய தலை முறையினரின் பெருமையைப் பாதிக்காதா? அறியாமல் இதனைச் செய்கிறார்களே என்று தன் கவலையைப் பதிவு செய்திருக்கிறார்.
- பிரதமர் நேருவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தனித் தனியாகக் களத்தில் நின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் பழம்பெரும் தேச பக்தர் ஜே.பி.கிருபளானி, சோஷலிச சிந்தனை-சொல்லாற்றல்-செயலாற்றல் மிக்க ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி, அரசியல் சட்ட மேதை அம்பேத்கர், இடதுசாரி சிந்தனையுடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் முதல் தேர்தலில் போட்டியிட்டவர்களில் முக்கியமானவர்கள்.
- அத்துடன் பிரிவினைவாத நோக்கத்தை அல்லது பிராந்திய நலனை முன்னிறுத்திய பஞ்சாபின் அகாலி தளம், பிகாரில் ஜார்க்கண்ட் கட்சி, பழைமை வாதத்தையும், மத வாதத்தையும் வளர்க்கும் இந்து மகாசபையும் ஆளும் கட்சியை அகற்றும் களத்தில் நின்றன.
- அறிவார்ந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக அமைந்தன. தனி நபர் விமர்சனங்களும், தரக்குறைவான பேச்சும் அன்று இல்லை. திரளாகக் கூடிய தலைவர்களின் முகங்களைப் பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர். பேச்சுகளை ரசித்தனர். முடிவைத் தாங்களே எடுத்தனர். வாக்குப்பதிவு தினத்தன்று விற்பனைப் பொருளாகவாக்குகள் மாறவில்லை.
தேர்தல் முடிவுகள்
- தேர்தல் முடிவுகள் வெளியாகின. நாடாளுமன்றத்தின் 489 இடங்களில் 364-இல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சட்டப்பேரவைகளுக்கான 3,280 இடங்களில் 2,247-ஐ காங்கிரஸ் வென்றது. தேர்தல் முடிவுகளில் சில வியப்பை விட, அதிர்ச்சியையும் தருவதாக அமைந்தன.
- ஆளும் காங்கிரஸ் அமைச்சராகப் பதவி வகித்த 28 பேர் தோல்வி அடைந்தனர். தோல்வியைத் தழுவியவர்களில் பம்பாயில் மொரார்ஜி தேசாயும், ராஜஸ்தானில் செல்வாக்கு மிக்க ஜெய் நாராயண் வியாஸும், மதராஸ் மாகாணத்தில் நேர்மைக்கும், நிர்வாகத் திறனுக்கும் பெயர்பெற்ற பி.எஸ்.குமாரசாமி ராஜாவும் அடங்குவர். இதைவிட வியப்புக்கும் வேதனைக்கும் உரியது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிதாமகன் எனப் போற்றப்படும் பி.ஆர்.அம்பேத்கரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்; அதிகம் அறியப்படாத காங்கிரஸ் வேட்பாளரான ஒரு சாதாரண பால் வியாபாரி கஜ்ரோல்கர் என்பவரிடம் அம்பேத்கர் தோல்வி அடைந்தார்.
- தேர்தல் முடிவுகளைப் பார்த்த பின்பு, வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை பற்றி சிலருக்கு எழுந்த சந்தேகம் முழுமையாக அகன்று விட்டது. எழுத்தறிவற்ற வாக்காளர் மீது எனக்கிருந்த மதிப்பு உயர்ந்துவிட்டது என்றார் ஜவாஹர்லால் நேரு.
தேர்தல் முடிந்தபின், அமெரிக்காவைப் போல, ஆசியாவில் ஆட்சி நடத்துவதற்கு ஆளப்படுபவர் சம்மதத்தைப் பெறும் அரிய முயற்சியை, இந்தியாவைவிட வேறு எங்கும் இத்தனை பிரம்மாண்டமானதாக நான் கண்டதில்லை எனப் புகழ்ந்தார் அமெரிக்க தூதர் செஸ்டர் பௌல்ஸ்.
- தேர்தல் நடைமுறையை அறிய இந்தியா வந்திருந்த துருக்கி அரசின் பார்வையாளர், தேர்தல் நடைமுறையைக் கண்டு வியந்து மகிழ்ந்தேன். துருக்கிக்கு வந்து வழிகாட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்-ஐ கேட்டுக்கொள்வேன். இந்தச் சிறப்புமிக்க வரலாற்றுச் சாதனைக்கு ஒட்டுமொத்த இந்திய மக்களே காரணம் எனப் பாராட்டினார்.
- தலைமைத் தேர்தல் ஆணையரையோ, தேர்தல் நடைமுறைகளையோ, அரசு அதிகாரிகள் அரசுக்குச் சார்பாகச் செயல்படுகிறார்கள் என்றோ எதிர்க்கட்சிகள் எதுவும் குற்றஞ்சாட்டவில்லை. இதுவும் அன்று நடந்தது.
வியக்கத் தகுந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல், நம் ஜனநாயகத்துக்கு வலிமையான, உறுதியான அடித்தளமாக அமைந்தது.
- அந்த அசைக்க முடியாத அடித்தளத்தின் மீது இன்று வரை அழகு மிக்க 16 அடுக்குமாடிகளை எழுப்பியுள்ளது இந்தியா. 17-ஆவது மாடியும் உருவாகி வருகிறது. கவின்மிகு இந்த இந்திய மாளிகையைக் கண்டு இன்று உலகமே நம்மை வியந்து பாராட்டுகிறது.
நன்றி: தினமணி (09-05-2019)