TNPSC Thervupettagam

முதுமை எழுப்பும் சவால்!

July 11 , 2019 1964 days 1487 0
இளையோர் மற்றும் முதியோர்
  • சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பொருளாதார ஆய்வறிக்கை, மக்கள்தொகை அடிப்படையிலான புதியதொரு போக்கைப் பதிவு செய்கிறது. ஒருபுறம் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுபோல, இன்னொருபுறம் முதியோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதுதான் பொருளாதார ஆய்வறிக்கை வழங்கும் தகவல்.
  • இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதியினர் சுமார் முப்பது வயதுக்கும் கீழே உள்ளவர்கள் என்றால், முதியோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்திருக்கிறது.
  • 011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 6%-ஆக இருந்த முதியோரின் விகிதம், 2041-க்குள் 25%-ஆக அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. அப்படி அதிகரிக்கும் நிலையில், அதற்குத் தகுந்தாற்போல ஆட்சியாளர்கள் திட்டமிட்டாக வேண்டும்.
சராசரி ஆயுள்காலம்
  • மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், ஆயுளை நீட்டிப்பதும் சாதனைகள்தான். ஆனால், இந்தச் சாதனைகள் புதிதாகப் பல பிரச்னைகளையும் சவால்களையும் எழுப்பும் என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
  • இந்தியாவில் தனிமனித சராசரி ஆயுள்காலம் 50 வயதையொட்டி இருந்த காலம் எப்போதோ மலையேறிவிட்டது. அறுபதைக் கடந்து எழுபதையும் தாண்டிப் பலரும் முதுமையிலும் இளமையாக வலம்வரும் நிலைமையை நாம் அடைந்திருக்கிறோம் என்பது மிகப் பெரிய சாதனை.
  • அதற்கேற்றாற்போல, ஓய்வு பெறும் வயதையும் அதிகரித்தாக வேண்டும். ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும்போது, போதுமான மருத்துவ வசதிகள், முதியோர் பாதுகாப்பு, ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட ஓய்வுகாலப் பயன்களை அதிகரிப்பதும் அவசியமாகிறது.
கிராமப்புற மற்றும் நகர் வாழ் முதியோர்கள்
  • இந்தியாவைப் பொருத்தவரை, நகரங்களைவிட கிராமப்புறங்களில் வாழும் முதியோரின் நிலைமை பல விதத்திலும் பாதுகாப்பானதாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போதுமான நவீன மருத்துவ வசதிகள் கிராமப்புற முதியோருக்குக் கிடைப்பதில்லை என்கிற குறையைத் தவிர, அவர்களில் 75% பேர் பாதுகாப்பாகவும், தங்கள் உறவினர்களால் மரியாதையுடன் பேணப்பட்டும் வாழ்கிறார்கள் என்று தெரிகிறது.
  • இந்திய நகரங்களில் வாழும் முதியோரில், ஆறு பேரில் ஒருவர் போதுமான ஊட்டச்சத்தோ, தேவைக்கேற்ற உணவோ பெறுவதில்லை. மூன்று பேரில் ஒருவர் போதுமான மருத்துவ வசதி இல்லாமலும், தேவைக்கேற்ற மருந்துகள் பெறாமலும் இருக்கிறார்கள். இரண்டு பேரில் ஒருவர் குடும்பத்தினராலும், சுற்றத்தினராலும் மரியாதையுடனும் கெளரவத்துடனும் நடத்தப்படுவதில்லை. இவை பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகளிலிருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள்.
  • நகரமயமாக்கலின் காரணமாக, அதிக அளவில் மகளிர் பணிக்குச் செல்லும் சூழல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பு, கூட்டுக் குடும்ப முறை அருகி வருவது என்கிறார்கள் சமூகவியலாளர்கள். தங்களது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியைத் தங்களுடைய குழந்தைகளுக்காக உழைத்து ஓய்ந்து போயிருக்கும் முதியோரில் பெரும்பாலோர் கூட்டுக் குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள்.
  • அவர்களால் தங்களது வயோதிகத்தில் தனிமை வாழ்க்கை வாழ முடிவதில்லை. தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தேவையற்றவர்களாகி விட்டிருப்பதாக நினைத்து வேதனையில் வயோதிகத்தைக் கழிக்கிறார்கள்.
குழந்தைகளால் வெளியேற்றப்படும் பெற்றோர்கள்
  • இன்னோர் ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல் இது. இந்திய நகரங்களில் பத்து வயோதிகத் தம்பதியரில் ஆறு தம்பதிகள் தங்களுடைய குழந்தைகளால் வெளியேற்றப்பட்டு அல்லது புறக்கணிக்கப்பட்டு, தனித்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.
  • குழந்தைகளின் படிப்புக்காகவும், திருமணத்துக்காகவும் தங்களது உழைப்பையும், சேமிப்பையும் கரைத்துவிட்ட நிலையில், முதுமையில் எல்லா நம்பிக்கையையும் இழந்து புகலிடம் இல்லாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். வேடிக்கை என்னவென்றால், அவர்களில் ஒருவர்கூட தங்களுடைய குழந்தைகளைக் குற்றப்படுத்தவோ, குறைகூறவோ தயாராக இல்லை என்பதுதான். மேலைநாடுகளைப்போல, 18 வயதானால் குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியேறித் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் பழக்கம் இந்தியாவில் இல்லை.
  • தங்களது படிப்பு முடித்து, திருமணமாவது வரையிலும்கூடப் பெற்றோரின் பராமரிப்பில்தான் பெரும்பாலான குழந்தைகளின் வாழ்க்கை கழிகிறது. அதுவரையில், அவர்களது எல்லா வசதிகளையும், தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் நிறைவேற்றித் தருகிறார்கள். அதே அளவிலான பாசத்தையும் பரிவையும் வயதான காலத்தில் பெற்றோருக்கு அந்தக் குழந்தைகள் காட்டுவதில்லை.
  • கால மாற்றத்தையும் சமுதாய மாற்றத்தையும் தவிர்த்துவிட முடியாது. மேலைநாட்டுக் கலாசாரத்தை நோக்கி இந்திய சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தாய்மொழிக் கல்வி கற்றுத்தந்த பண்பாட்டுக் கூறுகள் இல்லாத, பொருளாதாரம் சார்ந்த ஆங்கிலக் கல்வியை ஏற்றுக் கொண்டதன் விளைவை நாம் எதிர்கொண்டாக வேண்டும்.
  • இந்தியர்களின் ஆயுள்காலம் அதிகரித்து வருவதால் முதியோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மனிதவள மேம்பாட்டுத் துறையும், மகளிர் நல மேம்பாட்டுத் துறையும், பிற்படுத்தப்பட்டோர் நல மேம்பாட்டுத் துறையும், மகளிர் - குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையும் போல, முதியோர் நலம் பேணவும், அதிகரித்து வரும் முதியோர் பிரச்னையை எதிர்கொள்ளவும் முதியோர் நல மேம்பாட்டுத் துறை மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு முதியோர் இல்லங்கள் அல்ல தீர்வு!

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories