TNPSC Thervupettagam

முத்தையாவின் நூல்கள்

May 4 , 2019 2079 days 1597 0
  • சென்னை மாநகரத்தின் வரலாற்றை முதன்முதலில் தொகுத்தவரான எஸ்.முத்தையா ஏப்ரல் 20 அன்று சென்னையில் காலமானார். இணையம் பரவலாகியிராத காலத்தில் சென்னையின் வரலாற்றைத் தேடித் தேடித் தொகுத்தவர் அவர். அதற்காகவே தன் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்டார். 1930-ல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த அவர், இலங்கையில் தன் இளமைக் காலத்தைக் கழித்தார்.
  • அங்கே பத்திரிகையாளராகப் பணியாற்றியவர், சென்னைக்கு வந்து ‘டிடிகே மேப்ஸ்’ நிறுவனத்தில் சுற்றுலாக் கையேடுகளைத் தயாரிக்கும் பணியை ஏற்றார். இதற்காக சென்னை நகரம் தொடர்பான ஆராய்ச்சியைத் தொடங்கியதுதான், சென்னையின் வரலாற்றைத் தொகுப்பதில் அவருக்கு ஆர்வத்தைக் கிளறிவிட்டது. அதுவே அவரது பிந்தைய வாழ்வின் முக்கியப் பணியாகவும் மாறியது. முத்தையா 20-க்கு மேற்பட்ட ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானவை:
Madras Rediscovered
  • சென்னையைப் பற்றி முத்தையா எழுதிய முதல் நூல் Madras Discovered. தான் சேகரித்திருந்த தகவல்களைக் கொண்டு சென்னையின் வரலாற்றை அறிமுகப்படுத்தும் கையேடாக 1981-ல் இந்த நூலை எழுதினார். இந்த நூலின் நான்காம் பதிப்பு ‘மெட்ராஸ் ரீடிஸ்கவர்டு’ என்ற தலைப்பு மாற்றத்துடன் வெளியானது. இந்த நூலின் எட்டாவது பதிப்பை வெஸ்ட் லேண்ட் இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.
Tales of old and new Madras
  • 1989-ல் வெளியான இந்த நூல் ஒரு கடற்கரைப் பட்டினமாக இருந்த சென்னை, உலகின் மிகப் பெரிய மாநகரங்களில் ஒன்றாக உருவான 350 ஆண்டு கால வரலாற்றைப் பத்தாண்டுகளுக்கு ஒன்றாக 35 கதைகள் வழியாகச் சொல்கிறது.
  • சென்னையின் வரலாற்றைச் சொல்லும் இந்தக் கதைகளில் சென்னையின் மொழி, அரசியல், விளையாட்டு, இதழியல், குற்றங்கள் எனப் பல துறைகள் பேசப்பட்டுள்ளன. சென்னையின் 375-வது ஆண்டை ஒட்டி 2014-ல் வெஸ்ட் லேண்ட் வெளியிட்ட பதிப்பில் மேலும் மூன்று கதைகள் சேர்க்கப்பட்டன.
Madras the Gracious City
  • அரிதான ஒளிப்படங்கள் பல இடம்பெற்றுள்ள நூல். சென்னை நகரில் உருவான மாபெரும் கட்டிடங்களின் வரலாறு, நகரத்தின் பழங்காலக் கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட இந்தோ சாரசெனிக் உள்ளிட்ட கட்டிடக் கலைகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் இந்த நூலின் முதல் பதிப்பு 1990-ல் வெளியானது.
Madras, its past and present
  • 1995-ல் வெளியான இந்நூல் ‘மெட்ராஸ் தி கிரேஷிய சிட்டி’ என்ற நூலின் துணைப் பதிப்பாகும். இதுவும் சென்னை நகரின் பழங்காலக் கட்டிடங் களைப் பற்றிய தகவல்களையும் ஒளிப்படங்களையும் உள்ளடக்கியது.
Madras Miscellany
  • சென்னை மாநகரத்தின் வரலாற்றை ‘தி இந்து’ நாளிதழின் ‘மெட்ரோ பிளஸ்’ இணைப்பிதழில் திங்கட்கிழமை தோறும் ‘மெட்ராஸ் மிஸ்ஸலனி’ என்ற பத்தித் தொடரை முத்தையா எழுதினார். முதல் 10 ஆண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2011-ல் நூலாக வெளியானது. நபர்கள் (People), இடங்கள் (Places), பல விஷயங்களின் கலவை (Potpourri) என மூன்று பிரிவுகளை இந்த நூல் கொண்டுள்ளது.
  • சென்னை நகரின் வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த பெரும்பாலான விஷயங்களை முத்தையா இதில் பதிவுசெய்திருக்கிறார். ‘மெட்ராஸ் மிஸ்ஸலனி’ பத்தியை 1999-ல் தொடங்கித் தன் இறுதி நாட்கள்வரை 20 ஆண்டுகாலத்துக்கு முத்தையா தொடர்ந்து எழுதினார். மொத்தம் 973 பத்திகள்.
Madras (Chennai): A 400 Year Record of the First City of Modern India, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு
  • முத்தையாவின் பங்களிப்பில் உருவான நூல்களில் தலையாயது இது. 400 ஆண்டுகளை நெருங்கும் சென்னையின் வரலாறு மூன்று விரிவான பாகங்களாக வெளியாகியிருக்கின்றன. ‘அசோசியேஷன் ஆஃப் பிரிட்டிஷ் ஸ்காலர்ஸ்’ அமைப்பின் சார்பில் 16 ஆண்டுகளில் 50 வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடன் இந்த நூல்கள் உருவாகியிருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு மேல் சென்னையின் வரலாற்றைப் பதிவுசெய்யும் பணியில் ஈடுபட்டு வந்த முத்தையா, இந்த நூல் தயாரிப்பை மேற்பார்வையிட்டு எடிட் செய்தார்.
  • சென்னை நகரின் வரலாறு பற்றி மட்டுமல்லாமல் வேறு பல விஷயங்களைப் பற்றியும் பல நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார். சிம்ப்ஸன்ஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் வரலாறு, ஏம்.எம்.எம் அருணாச்சலம் போன்ற தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories