TNPSC Thervupettagam

மூன்று வயதிலேயே கல்வி தேவையா?

July 16 , 2019 1993 days 1103 0
  • தேசிய கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் கல்விக் குழு 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் ஆய்வு செய்து புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையைத் தயாரித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டு, கடந்த மே 31-ஆம் தேதியன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்கிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் ஹிந்தி மொழி கட்டாயம் படிக்க வேண்டும்; மூன்று மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
சில மாநிலங்களில்…..
  • இதற்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதால் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது. ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டு, விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலம் ஹிந்தி கட்டாயம் என்ற நிலை மாறினாலும், மும்மொழிக் கொள்கையில் மாற்றம் இல்லை.
  • ஏற்கெனவே மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை நெருக்கடி நிலை காலத்தின்போது (1975-77) பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டனர். இப்போது அதனை முற்றிலும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு மாற்ற இந்த அறிக்கை வழி செய்கிறது. இந்தக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இனி பிரதமரின் நேரடிப் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ராஷ்ட்ரீய சிக்ஷô ஆயோக்' என்ற அமைப்பை பிரதமரைத் தலைவராகக் கொண்டு அமைக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. இந்தத் தேசியக் கல்வி ஆணையம்தான் இனி கல்வி தொடர்பான அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.
வரைவு அறிக்கை
  • இந்த வரைவு அறிக்கை இளங்கலை, முதுகலை போன்ற கல்லூரிப் படிப்புகளுக்கும்கூட தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. இதனால் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களின் பட்டப்படிப்பு என்னும் கனவு பெரிதும் பாதிக்கும்.
  • தொடக்கக் கல்வியின் நிலை இன்னும் பரிதாபகரமானது. 5 பிளஸ் 3 பிளஸ் 3 பிளஸ் 4 என்ற அடிப்படையில் 3 வயது முதல் 18 வயது வரை 15 ஆண்டுகளில் பள்ளிக் கல்வியை இந்தக் கல்விக் கொள்கை முன்வைக்கிறது. இப்போது 5 வயது முடிந்தபின் முதல் வகுப்பிலிருந்துதான் முறையான பள்ளிக் கல்வி தொடங்குகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி இனி 3 வயதில் இருந்தே முறையான கல்வி தொடங்கும். மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான தேர்வுகள் நடத்தப்படும்.
இடைநிலைக் கல்வி
  • ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வியாகக் கருதப்பட்டு எட்டு பருவத் தேர்வுகள் வாரியத் தேர்வுகளாக நடத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதலே தொழில் கல்வி தொடங்குகிறது. எந்தத் தொழில் என்பதை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பள்ளியில் 15 ஆண்டுகள் படித்து மேல்நிலைப் பள்ளிக் கல்விச் சான்றிதழ் பெற்றாலும் கல்லூரியில் சேர அது தகுதியாகாது. தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரியில் சேர முடியும். ஆறு வயதிலிருந்தே மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க வேண்டும். கூடுதலாக மொழிகளைக் கற்பதற்கு நேரத்தை மாணவர்கள் செலவழித்தால் பிற பாடங்களைப் படிப்பது எப்படி? பள்ளிகள் மொழிகள் கற்பிக்கும் நிறுவனங்கள் அல்ல என்பதை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?
  • ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கு இப்போதைய நடைமுறைகள் எல்லாம் மாற்றப்படுகின்றன. கல்வியியல் (பி.எட்.') கல்லூரிகள் எல்லாம் மூடப்பட்டு பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டுகள் இளநிலைப் பாடப் பிரிவோடு சேர்ந்த பி.எட்.' படித்தால் மட்டும்தான் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். ஆசிரியர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் ஊதிய உயர்வு, பணி உயர்வு இனி இல்லை. தொடர்ந்து நடத்தப்படும் தேர்வுகளில் அவர்களின் திறன் வெளிப்பாட்டின் அடிப்படையிலேயே ஊதிய உயர்வுகளும், பணி உயர்வுகளும் அமையும்.
  • கல்வி மானியம், கல்வி உதவி ஆகியவை இடஒதுக்கீடு அடிப்படையில் இருக்காது; தகுதி, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இருக்கும். தமிழக அரசு பின்பற்றும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எந்தவித உத்தரவாதமும் இதில் இல்லை. படித்து முடித்த மாணவர்களுக்கு இனி பல்கலைக்கழகங்கள் பட்டங்களைத் தராது. கல்லூரிகளே தரும். அதற்கான தகுதிகளை கல்லூரிகளே வளர்த்துக்கொள்ள வேண்டும். தவறினால் அத்தகைய கல்லூரிகள், தனக்கு ஏற்பு அளித்த பல்கலைக்கழகத்துடன் இணைந்துவிட வேண்டும்.
தரம்
  • பள்ளி முதல் கல்லூரி வரை சந்தையில் போட்டியிட்டு தரத்தை நிரூபிக்க வேண்டும். இல்லையானால், அவை மூடப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள் எல்லாம் 1, 2, 3, 4 என தரவரிசைப்படுத்தப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களாகச் செயல்படும். அத்துடன் அந்நியப் பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் அனுமதிக்கப்படும். இந்திய மொழி வளர்ச்சிக்கு எவ்வித வாய்ப்பும் தராத மத்திய அரசு, சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. அந்த மொழியைக் கற்பிப்பதற்கு அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
  • தரம், தகுதி, திறமை பற்றி இந்த வரைவறிக்கையில் மிகவும் பேசப்படுகிறது. குடிமக்களுக்குத் தரமான உணவு, தரமான குடிநீர், தரமான பொருள்கள் கிடைக்க வகை செய்யாத அரசு, கல்வியில் மட்டும் தரம் பார்ப்பது சமூகத்தில் ஏற்றத் தாழ்வைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் நோக்கமேயாகும்.
  • பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் தொழில் கல்வி மற்ற பாடங்களோடு சேர்த்து வழங்கப்படும் என தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. தொழில் கல்வி என்பது அந்தந்த ஊர்களில் நிலவும் தொழிலையே மையப்படுத்தி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விவசாயம் இருக்கும் இடங்களில் மாணவர்கள் விவசாயம் கற்க வேண்டும். தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் மாணவர்கள் அந்தத் தொழிலைக் கற்க வேண்டும். விவசாயி மகன் விவசாயி, தொழிலாளி மகன் தொழிலாளி என்பது தொழில் கல்வியா, குலக்கல்வியா?
  • சமத்துவம் இல்லாத சமுதாயத்தில் சமத்துவம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளும் வகையில் தரம், தகுதி, திறமை என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரம் என்ற பெயரில் சிலருக்கு மட்டும் வாய்ப்பளித்து விட்டு, பலருக்குக் கிடைக்க வேண்டிய சமூக நீதியை மறுப்பதே இந்தத் தொழில் கல்வி முறையாகும். கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கும் பொது-தனியார் துறை கூட்டு செயல்முறை முன்வைக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் என்று குறிப்பிடும்போது தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள் மற்றும் பணம் ஈட்டுவதற்காக வணிக நோக்கோடு நிறுவப்பட்ட பள்ளிகள் குறித்த விளக்கமோ வரையறையோ இல்லை.
தனியார்
  • தனியாரை ஊக்குவிக்கும் வகையில் தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள முழு சுதந்திரம் வழங்குவதாகத் திட்ட வரைவு கூறுகிறது. பள்ளிக் கல்வி மேம்பாடு என்ற அடிப்படையில் யார் வேண்டுமானாலும் பள்ளியில் நுழையலாம் என்பதையும் இது வலியுறுத்துகிறது.
  • இப்போதே நாட்டில் தனியாரின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது. இனி பள்ளியும் தனியாரிடம் போகப் போகிறது. எனவே, அடுத்த தலைமுறைக்கு அரசு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவிடும். தனியார் வேலைவாய்ப்பையே நம்பியிருக்க வேண்டும். இந்தக் கல்விக் கொள்கை முந்தைய கல்வியாளர்களின் கல்விக் கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு அறிக்கை, டாக்டர் லட்சுமணசாமி குழு அறிக்கை, கோத்தாரி குழு அறிக்கை பரிந்துரைகளைப் புறக்கணித்து விட்டு முற்றிலும் புதியக் கல்விக் கொள்கையை முன்நிறுத்துகிறது. பழைய கட்டமைப்புகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு புதிய கட்டமைப்புகளைப் பரிந்துரை செய்கிறது.
  • இந்தியாவில் சுமார் 7 கோடி குழந்தைகள் பத்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியைக் கைவிட்டு விட்டனர் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு கண்டறிந்துள்ளது. மாணவர்கள் மீது சுமத்தப்படும் கல்விச் சுமைதான் இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது கொண்டுவந்துள்ள கல்விக் கொள்கை இன்னும் சுமையை ஏற்றி இடைநிற்றலை அதிகரிக்கவே வழி வகுக்கும்.
  • உலகம் முழுவதும் பின்லாந்து போல கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அங்கே ஆறு வயதில்தான் குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் சேருகின்றனர். ஏழு வயதில்தான் முறையான கல்வி தொடங்குகிறது. ஆனால், மூன்று வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக் கல்விக்குள் நமது தேசிய கல்விக் கொள்கை பிடித்துத் தள்ளுகிறது.

நன்றி: தினமணி (16-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories