- பொது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 2018-19 நிதியாண்டின் இறுதி மாதத்தில் (ஏப்ரல்) ரூ.1,13,865 கோடியாக அதிகரித்திருக்கிறது. மார்ச் மாதத்தில் பொருளாதார நடவடிக்கை அதிகரித்து அது ஏப்ரல் மாத வசூலில் வெளிப்பட்டிருப்பது நல்ல அறிகுறி. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஜூலை 2017-லிருந்து இதுவரை வசூலான மாதத் தொகைகளிலேயே இதுதான் அதிகம். 2018-19 நிதியாண்டில் வசூலான மாத சராசரி அளவு ரூ.98,114 கோடியுடன் ஒப்பிடுகையில் 15% அதிகம். கடந்த மார்ச், ஜனவரி, அக்டோபர் மாதங்களில் மட்டுமே ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.
பொருளாதார வளர்ச்சி
- 2018-19-ல் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டது என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டது. தனியார் நுகர்வு குறைந்தது அதற்கு முக்கியக் காரணம். நிரந்தர வைப்புத்தொகையில் முதலீடு அதிகரித்ததும் ஏற்றுமதி அதிகரித்ததும் பிற காரணங்கள். பொருளாதார வளர்ச்சிவீதம் முதல் காலாண்டில் 2%, இரண்டாவது காலாண்டில் 7.1%, மூன்றாவது காலாண்டில் 6.6% என்று சரிந்தபோது நான்காவது காலாண்டில் எந்த முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் அது நல்லதற்கே. வரி வசூல் அதிகரித்தால், அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையில் துண்டுவிழும் தொகை பற்றிய கவலையும் அரசுக்குக் குறையும்.
- ஏப்ரல் மாதத்தில் வரி வசூல் இப்படி உயர்ந்திருப்பது பல நிபுணர்களுக்கு வியப்பையே அளித்திருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட மந்தம், வரி வசூலிலும் எதிரொலித்திருக்க வேண்டும். வரி வசூல் அதிகாரிகள் கையாண்ட உத்திகளால் வருவாய் அதிகரித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு ஜிஎஸ்டி பதிவுகள், மார்ச் மாதத்தில் மேலதிகமாக இருந்தன. ஆனால், மார்ச் மாதம் 95 லட்சமாக இருந்த ஜிஎஸ்டி 3-பி படிவங்கள் தாக்கல், ஏப்ரலில் 72.13 லட்சமாகக் குறைந்தது. ஜிஎஸ்டி வரிகள் சிலவற்றை ஆணையம், டிசம்பர் மாதம் குறைத்ததால் அவற்றின் நுகர்வு அதிகரித்து வருவாய் உயர்ந்திருக்கக்கூடும்.
விசாரணை
- நிதியாண்டின் இறுதி என்பதால் நிலுவையைச் செலுத்திவிட வியாபாரிகள் முடிவெடுத்ததும், ஜிஎஸ்டியில் பதிவுசெய்துகொண்ட வியாபாரிகளில் கணிசமானவர்கள் கணக்கு தாக்கல் செய்யாதது ஏன் என்று அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியதும் காரணமாக இருக்கலாம்.
- எது எப்படியோ, வரி விகிதங்களின் எண்ணிக்கை குறைவதும், வரிப்படிவங்கள் எளிமைப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியம். சிறிய வணிக நிறுவனங்கள் அதிக முறை படிவங்களைத் தாக்கல் செய்யத் தேவையில்லை, குறைந்த தகவல்களைப் படிவங்களில் நிரப்பினால் போதும் என்பது போன்ற சலுகைகள் வர்த்தகர்களுக்கு உற்சாகத்தைத் தந்து வரி வருவாயை மேலும் உயர்த்தும். இது வியாபாரிகள், நுகர்வோர்கள், அரசு ஆகிய மூன்று தரப்புக்குமே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும்.
நன்றி: இந்து தமிழ் திசை(10-05-2019)